About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, September 22, 2017

101. எங்கிருந்தோ வந்தார்!

அது ஒன்றும் அவ்வளவு பெரிய குடியிருப்பு இல்லை. நான்கு அடுக்குகளில் மொத்தம் 24 வீடுகள்தான். ஆயினும் சுந்தருக்கு அந்தக் குடியிருப்பில் நான்கைந்து பேரைத்தான் ஓரளவுக்காவது தெரியும். பலரின் முகம் கூடத் தெரியாது. அவன் அப்பாவுக்கு இன்னும் நான்கைந்து பேரைத் தெரிந்திருக்கலாம்.

மாடிப்படிகளிலும், லிஃப்டுகளிலும் சந்திக்கும் சில முகங்கள் பரிச்சயமானவையாகத் தோன்றும். சில சமயம் புன்முறுவல்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவது உண்டு. பேசுவது என்பது மிக அரிது. குடியிருப்பில் அவ்வப்போது எழும் பிரச்னைகளைக் கூட விவாதிப்பதில்லை. அவற்றைக் குடியிருப்பு சங்கச் செயலரிடம் சொல்வதோடு சரி!

இந்த நிலையில், அந்தக் குடியிருப்பில் வசிக்கும், சுந்தர் அவ்வப்போது பார்த்திருக்கும் ஒரு பெரியவர் அவனை வழியில் நிறுத்திப் பேசியது அவனுக்கு வியப்பாக இருந்தது.

"ஏம்ப்பா, நீ எஞ்சினீரிங் படிச்சுக்கிட்டிருந்தே போலிருக்கே?" என்றார் அவர்.

"ஆமாம் சார்!" என்றான் சுந்தர், 'இவருக்கு எப்படி இது தெரியும்?' என்ற கேள்வியை மனதில் எழுப்பியபடி.

"ராமலட்சுமி எஞ்சினீரிங் காலேஜிலதானே படிச்சுக்கிட்டிருந்தே?"

"உங்களுக்கு எப்படி சார்..?"

"நான் மெயின் ரோட் பக்கம் நடந்து போகும்போது, நீ அந்த காலேஜ் பஸ்ல ஏறிப் போனதை ரெண்டு மூணு தடவை பாத்திருக்கேன்" என்றவர், தொடர்ந்து "படிப்பு முடிஞ்சு போச்சா?" என்றார்.

"முடிஞ்சுடுச்சு சார்" என்றான் சுந்தர்.

"வேலைக்குப் போறியா?"

"இன்னும் இல்லை..." என்றான் சுந்தர் சற்று சங்கடத்துடன்.

"கேம்பஸ்ல வேலை கிடைக்கலையா?" என்றார் பெரியவர் விடாமல்.

"நான் படிச்சது மெக்கானிகல் எஞ்சினீரிங். கேம்பஸ்ல கிடைச்ச வேலையெல்லாம் சாஃப்ட்வேர்லதான். எனக்கு எஞ்சினீரிங் வேலைக்குப் போறதிலதான் விருப்பம்."

"நல்ல வேலை கிடைக்கும். கவலைப்படாதே!" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார் அவர்.

தைத் தன் பெற்றோர்களிடம் சொன்ன சுந்தர் "அப்பா! உனக்கு அவரைத் தெரியுமா?" என்றான்.

"பாத்திருக்கேன். மூணாவது மாடியில இருக்காரு. பேரு வெங்கடாசலம். ஆனா அவர்கிட்ட பேசினது இல்லை. அவர் எதுக்கு உன்னை விசாரிச்சார்? சும்மாவா?" என்றார் அவன் அப்பா.

"வம்புதான். வேற என்ன?" என்றாள் அவன் அம்மா. "உனக்கு சீக்கிரம் ஒரு வேலை கிடைச்சு, இவங்க மாதிரி ஆசாமிகள் மூஞ்சியில எல்லாம் கரியைப் பூசணும்!" என்று வாழ்த்தினாள்(!)

ரண்டு நாட்கள் கழித்து, அழைப்பு மணி அடித்தது. சுந்தர்தான் கதவைத் திறந்தான்.

வெங்கடாசலம் நின்று கொண்டிருந்தார்.

"அப்பா இல்லியே!" என்றான் சுந்தர்.

"இல்லியா? பரவாயில்லை. ஆனா நான் பேச வந்தது உன் விஷயமாத்தான். உள்ள வரலாமா?"

"வாங்க சார், உக்காருங்க!"

"ப்ரோடெக் இன்னோவேஷன்ஸ்'னு ஒரு கம்பெனி இருக்கே தெரியுமா?"

"தெரியுமே! ரொம்ப நல்ல கம்பெனி ஆச்சே அது?"

"அதுல வேலை கிடைச்சா போவியா?"

சுந்தர் திகைப்புடன் "எப்படி சார்? அங்கே வேலை கிடைக்கிறது சுலபம் இல்லியே!" என்றான்.

"என்னோட சொந்தக்காரப் பையன்தான் அங்க ஜெனரல் மானேஜரா இருக்கான். பேரு கிருஷ்ணன். உன்னைப் பத்தி அவன்கிட்ட ஃபோன்ல பேசினேன். பையனை வரச் சொல்லுங்க பாக்கலாம்னான். 'பாக்கறதெல்லாம் இல்லை. பையன் நமக்குத் தெரிஞ்சவன். நீ வேலை கொடுக்கறதாச் சொன்னாதான் அவனை வரச் சொல்லுவேன்'னேன். சிரிச்சுக்கிட்டே 'நீங்க ஒரு ஆளை அனுப்பி வச்சா, அவருக்கு நான் வேலை கொடுக்காம இருப்பேனா?'ன்னான். அதனால உனக்கு வேலை நிச்சயம்!"

அவர் பேச்சைக் கேட்டபடி உள்ளிருந்து சுந்தரின் அம்மா வெளியில் வந்தாள்.

"சார்! நான் உங்ககிட்ட பேசினது கூட இல்லை. எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்யறதா சொல்றீங்களே!" என்றான் சுந்தர் உணர்ச்சி மிகுந்தவனாக.

"நாம எல்லாரும் ஒரே இடத்தில இருக்கோம். ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்யக் கூடாதா என்ன? முன்ன ஒரு தடவை கிருஷ்ணன் எங்கிட்ட, 'மாமா! எங்க கம்பெனியில தெரிஞ்சவங்க மூலமா வர ரெஃபரன்ஸை வச்சுத்தான் வேலைக்கு ஆள் எடுப்போம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பையன்களா இருந்தா சொல்லுங்க'ன்னு சொல்லியிருந்தான். உன்னைப் பார்த்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது. நாளைக்கு உன்னை வரச் சொல்லியிருக்கான். போய்ப் பார்த்து வேலையில சேர்ந்திடு" என்று எழுந்தார்.

"கொஞ்சம் காப்பி குடிச்சுட்டுப் போங்களேன்" என்றாள் அவன் அம்மா.

"இப்பத்தாம்மா வீட்டில குடிச்சேன். வயசான காலத்தில அதிகமா காப்பி குடிக்கக் கூடாது" என்றார் அவர் சிரித்தபடி.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சார்" என்று சுந்தர் தடுமாற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தபோதே அவர் எழுந்து சென்று விட்டார்.

"எவ்வளவு நல்ல மனுஷன்! அக்கறையோடதான் உன்கிட்ட விசாரிச்சிருக்காரு. நான் அவசரப்பட்டு வம்புக்கு அலையறவர்னு சொல்லிட்டேனே" என்று வருந்தினாள் அவன் அம்மா.

"நாம அவருக்கு எந்த உதவியும் செஞ்சதில்லை. அவரை எத்தனையோ தடவை வழியில பாத்திருக்கேன். வயசில பெரியவர்ங்கறதுக்காக விஷ் பண்ணினது கூட இல்ல. ஆனா அவரா வலுவில வந்து இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்காரே! என்னால நம்பவே முடியல!" என்றான் சுந்தர்.


அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்:  
நம்மிடமிருந்து எந்த உதவியும் பெறாத ஒருவர் முன் வந்து நமக்கு ஒரு உதவி செய்தால், அவருக்கு இந்த உலகையும், வானுலகையும் கொடுத்தால் கூட, அது அந்த உதவிக்கு ஈடாகாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Thursday, September 14, 2017

100. துவர்ப்பு வாழை

நாகம்மையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்க மாட்டார்கள். அவளுடன் வாக்குவாதம் செய்தால், அவள் வாயிலிருந்து வரும் சுடுசொற்களை யாராலும் தாங்க முடியாது.

நாகம்மையின் பேச்சைத் தாங்க முடியாமல் அவள் மாமியார் நிரந்தரமாகவே தன் இன்னொரு பிள்ளையிடம் போய் விட்டாள். 

அவள் சகோதரிகள் கூட அவளிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

அவள் தங்கை சிவகாமி ஒருமுறை அவளைப் பற்றித் தன் இன்னொரு சகோதரியிடம் "நம்ப அப்பா அம்மா அவளுக்கு நாகம்மைன்னு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க. பாம்பு விஷத்தைக் கக்கற மாதிரிதானே பேசறா அவ!" என்று சொல்லியிருக்கிறாள்.

நல்லவேளை! இது நாகம்மையின் காதுகளுக்கு எட்டவில்லை. எட்டியிருந்தால் தன் தங்கை சொன்னது எவ்வளவு உண்மை என்று இன்னொரு முறை நிருபித்திருப்பாள்!

அவள் கணவன் சண்முகம் அவள் பேச்சைச் சகித்துக்கொண்டு, வேறு வழியின்றி அவளுடன் குடித்தனம் நடத்தி வந்தான்.

அவர்களுடைய 12 வயது மகள் சுமதி மட்டும்தான் தன் தாய்க்கு ஈடு கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பவள். "ஏம்மா இப்படி சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருக்கே?" என்று அம்மாவைப் பலமுறை கடிந்து கொண்டிருக்கிறாள்.

"உனக்கு என்னடி தெரியும்? எனக்கு புத்தி சொல்ல வந்துட்ட!" என்று பதிலடி கொடுப்பாள் நாகம்மை.

ன்று சுமதி பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தபோது நாகம்மை தன் கணவனைப் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டிருந்தாள்.

"ஏங்க, எத்தனை வருஷமா கடைக்குப் போயி காய், பழம் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துக்கிட்டிருக்கீங்க! இன்னும் பழமாப் பாத்து வாங்க உங்களுக்குத் தெரியலியே! எப்படித்தான் உங்க அம்மா உங்களை இப்படித் துப்பு இல்லாதவரா வளத்தாங்களோ தெரியல!"

"என்னம்மா விஷயம்?" என்றாள் சுமதி.

"இங்க பாரு உங்கப்பா வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்திருக்கிற லட்சணத்தை! வாழைப்பழம் வாங்கிட்டு வரச் சொன்னா வாழைக்காய் வாங்கிக்கிட்டு வந்திருக்காரு. இதைச் சாப்பிட முடியாது. பொறியல்தான் பண்ண முடியும்"

"அப்ப பொறியல் பண்ணிடு!" என்றாள் சுமதி.

"எரிச்சலைக் கிளப்பாதேடி. பாதிப்பழமா இருந்தா, பொறியலும் பண்ண முடியாது, பழமா சாப்பிடவும் முடியாது."

"அப்ப ரெண்டு நாள் வச்சிருந்து, பழுத்தப்பறம் சாப்பிடு!" என்றாள் சுமதி.

"ரெண்டு நாள் கழிச்சு சாப்பிடறதுக்கா இன்னிக்கு வாங்கிக்கிட்டு வரச் சொன்னேன்?"

"இல்லை நாகம்மை! போன தடவை வாங்கின பழமெல்லாம் சீக்கிரமே அழுகிப் போயிடுச்சுன்னு குத்தம் சொன்னே! அதுதான் கொஞ்சம் காவெட்டா வாங்கிக்கிட்டு வந்தேன்" என்றான் சண்முகம்.

"அதுக்காக இவ்வளவு காயாவா வாங்கறது? கடிக்கவே முடியலை அவ்வளவு காயா இருக்கு. வாயெல்லாம் துவர்க்குது" என்றாள் நாகம்மை.

"ஏம்மா வாழைப்பழம் காயா இருந்தா துவர்ப்பா இருக்கும்னு சொல்றியே, அதுமாதிரிதானே, நீ சண்டை போடற மாதிரி பேசறது மத்தவங்களுக்கு வருத்தமா இருக்கும்?" என்றாள் சுமதி, தான் பள்ளியில் படித்த குறளை நினைவு கூர்ந்தவளாக.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பொருள்:  
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் கடிய சொற்களைப் பயன்படுத்துவது பழத்தை விட்டு விட்டுக் காயைப் பறிப்பது போன்றதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                    காமத்துப்பால்






















Tuesday, September 5, 2017

99. ஜிராக்ஸ் கடை

காலையில் எழுந்ததுமே ராமநாதனை எரிச்சலூட்டும் சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.

தினமும் அவர் பேப்பர் படிக்கத் துவங்கும்போதே காப்பி வந்து விடும். ஆனால் இன்று அவர் பேப்பர் படித்து முடித்த பிறகும் காப்பி வரவில்லை.

"நான் எழுந்து இவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஒரு வாய்க் காப்பிக்கு வழியில்லை!" என்று கத்தினார் பேப்பரைத் தூக்கிப் போட்டபடியே.

"டிகாக்‌ஷன் இறங்கவே இல்லை. நான் என்ன செய்யறது?" என்றாள் அவர் மனைவி பொன்னம்மாள். சற்று நேரம் கழித்துக் காப்பியைக் கொண்டு வைத்தவள், "கோவமாப் பேசறதைக் கொஞ்சம் குறைச்சுக்கங்க" என்றாள்.

"காப்பியை இவ்வளவு நேரம் கழிச்சுப் போட்டுட்டு எனக்கு உபதேசம் வேறயா?" என்று பாய்ந்தார் ராமநாதன்.

பொன்னம்மாள் ஒன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டாள். அவள் சொன்னதைக் கேட்டு விட்டு பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று அவருக்கு தாமதமாகத்தான் தோன்றியது.

அலுவலகத்திலும் பல எரிச்சலூட்டும் சம்பவங்கள். அவருக்குக் கீழே பணியாற்றியவர்களை வார்த்தைகளால் பொரிந்து தள்ளி விட்டார்.

"தப்பித் தவறி உள்ளே போயிடாதே. மனுஷன் கடிச்சுக் குதறிடுவாரு" என்று அவரது உதவியாளர் இன்னொருவரிடம் சொன்னது அவருக்குத் தெரியாது!

மாலை வீடு வந்த பிறகும் எரிச்சலுடன்தான் இருந்தார்.

"ஆஃபீஸ்ல இன்னிக்கு எல்லார் மேலயும் எரிஞ்சு விழுந்தீங்களா?" என்றாள் மனைவி.

"டென்ஷன் இருந்தா கோவம் வரத்தான் செய்யும். உனக்கு என்ன தெரியும்?"

"என்ன கோவமா இருந்தாலும் பேச்சிலே கடுமையைக் குறைச்சுக்கலாம் இல்லியா?"

"நீ எனக்கு புத்தி சொல்ற அளவுக்கு நான் இல்ல. போய் வேலையைப் பாரு."

சற்று நேரம் கழித்து "வெளியில போயிட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் ராமநாதன். ஜிராக்ஸ் எடுக்க அருகில் இருக்கும் கடைக்குத்தான் போனார். வேண்டுமென்றேதான் மனைவியிடம் சொல்லவில்லை. 

'எங்கே போறீங்க?' என்று அவள் கேட்க மாட்டாள். எங்கே போயிருக்கிறார், எப்போது வருவார் என்று தெரியாமல் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருக்கட்டும்!

ஜிராக்ஸ் கடையை நடத்தி வந்த இளைஞன், தான் ஒருவனாகவே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். ஜிராக்ஸ், லாமினேஷன் போன்ற பணிகள் செய்வதைத் தவிர, பேனா போன்ற சில பொருட்களையும் விற்பனை செய்து வந்தான்.

பேனா, பென்சில், பேப்பர் என்று பல்வேறு பொருட்களை வாங்க வந்தவர்கள் சிலரும், ஒரு தாள் முதல், பல பக்கங்கள் கொண்ட புத்தகங்கள் வரை ஜிராக்ஸ் எடுக்க வந்திருந்தவர்கள் சிலரும் என்று ஐந்தாறு பேர் கடையில் நின்று கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவரும் தன்னை முதலில் கவனிக்க வேண்டும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருக்க, அந்த இளைஞன் அனைவரையும் சமாளித்துக் கொண்டிருந்தான்.

"சார் இந்தாங்க. அஞ்சு பேனாதானே கேட்டீங்க? அம்பது ரூபா? சாரி சார். அஞ்சு ரூபா பேனா இல்லை. பத்து ரூபா  பேனாதான் இருக்கு...சார் இவ்வளவு பேஜ் எடுக்க டைம் ஆகும். கொடுத்துட்டுப் போங்க. எட்டு மணிக்கு வாங்க எடுத்து வைக்கிறேன்...ஏ-ஃபோர் ஷீட் தானே சார்?... இந்தாங்க. சார். ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்."

"ஏம்ப்பா எவ்வளவு நேரம் நிக்கறது? ஒரு பேஜ் ஜிராக்ஸ் எடுத்துட்டு என்னை அனுப்பக்கூடாது?" என்று கத்தினார் ராமநாதன்.

இளைஞன் சிரிப்புடன் அவர் பக்கம் திரும்பினான். "சாரி சார். அவங்கள்ளாம் உங்களுக்கு முன்னால வந்தவங்க" என்றவன் இன்னொருவரைப் பார்த்து "சார்! பெரியவருக்கு ஒரு பேஜ் மட்டும் எடுத்துக் கொடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு, "சார் கொடுங்க" என்று அவரிடமிருந்து பேப்பரை வாங்கி ஜிராக்ஸ் எடுத்து அவரிடம் கொடுத்தான்.

அவர் பத்து ரூபாயை நீட்டினார்.

"சில்லறை இல்லையே சார்! பரவாயில்லை. அப்புறம் இந்தப் பக்கம் வரும்போது கொடுங்க" என்று சொல்லி விட்டு அடுத்தவரிடம் திரும்பினான்.

ராமநாதன் வீட்டுக்குத் திரும்பும்போது அந்த இளைஞனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார்.

'இவ்வளவு அழுத்தத்திலும் எப்படி அவன் சிரித்த முகத்துடன் இனிமையாகப் பேசுகிறான்? காலை முதல் மாலை வரை இப்படித்தான் இருப்பானோ? எப்படி அவனால் முடிகிறது?'

அவனுடைய அழுத்தமான சூழ்நிலையோடு ஒப்பிடும்போது அவரது டென்ஷன் எதுவுமே இல்லை என்று தோன்றியது. காலையில் காப்பி போடக் கொஞ்சம் நேரமாகி விட்டது என்பதற்காக மனைவியைக் கடிந்து கொண்டோமே என்று நினைத்துக் கொண்டார்.

'இனிமேல் மனைவி சொன்னது போல் பேச்சில் கடுமையைக் குறைத்துக்கொண்டு கொஞ்சம் பொறுமையாகப் பேசிப் பழக வேண்டும்?'

வீட்டுக்குப் போனதும் "ஜிராக்ஸ் எடுக்கப் போயிருந்தேன்" என்றார் மனைவியிடம்.

"நீங்க எங்கே போனா எனக்கென்ன?" என்றாள் மனைவி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது.

பொருள்:  
இன்சொல் பேசினால் இனிய பயன்கள் கிடைக்கும் என்று உணர்ந்த எவரும் கடுஞ்சொற்களைப் பேச மாட்டார்கள்.
பொருட்பால்                                                                                                      காமத்துப்பால்


























Friday, September 1, 2017

98. சாந்தமூர்த்தியின் கோபம்!

உபன்யாசம் முடிந்ததும், நாராயணனைப் பலர் சூழ்ந்து கொண்டனர். இது வழக்கமாக நடப்பதுதான்.

"ரொம்ப நன்னா இருந்தது சுவாமி" என்று பாராட்டுபவர்களிடமிருந்து, புத்திசாலித்தனமான சந்தேகங்கள் கேட்பவர்கள் வரை தினமும் ஒரு பத்துப் பதினைந்து பேரின் பேச்சுக்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, தேவைப்பட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு மேடையை விட்டு அவர் இறங்கப் பதினைந்து நிமிடங்களாவது ஆகி விடும்.

அன்றும் அப்படித்தான். ஆனால் எல்லோரும் போன பிறகு, மேடை ஓரமாக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார்.

"சொல்லுங்கோ!" என்றார் நாராயணன்.

"உங்ககிட்ட கொஞ்ச நேரம் தனியாப் பேசணும். இப்ப பேசினா உங்களுக்கு நேரமாயிடும்னு நினைக்கிறேன். உங்களை எங்க வந்து பாக்கலாம்?" என்றார் அவர்.

"இப்பவே பேசலாமே. உங்களுக்குத் தனியாப் பேசணும்னா ரூமுக்குள்ள போய்ப் பேசலாம்" என்று அவரை மேடைக்குப் பின்னால் அழைத்துச் சென்றார் நாராயணன்.

உள்ளே போய் உட்கார்ந்ததும், "சாமிக்கு நல்ல ஞானம்..." என்று ஆரம்பித்தார் அவர்.

"என்னை சாமின்னெல்லாம் சொல்லாதீங்க. நான் ஒரு சாதாரண மனுஷன். வயத்துப் பொழப்புக்காக அரசாங்கத்தில வேலை செய்யறேன். சாயந்திர நேரத்தில நான் படிச்சும், கேட்டும் தெரிஞ்சுண்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கறேன். அவ்வளவுதான். நீங்க ஒரு பெரிய மனுஷர் மாதிரி இருக்கீங்க. ஆனா இவ்வளவு பணிவாப் பேசறீங்க. உங்களைத்தான் நான் ஸ்வாமின்னு கூப்பிடணும்!" என்றார் நாராயணன்.

"உங்களை மாதிரி எனக்குப் பணிவா, பதவிசாப் பேச வரலே சாமி. நான் ரொம்ப கோவக்காரன்."

"சுவாமிங்கற வார்த்தை வேண்டாம். என்னை நீங்க சார்னே கூப்பிடலாம். பொதுவா நாம அப்படித்தானே பேசிக்கிறோம்! நீங்க கோவக்காரர்னு சொன்னீங்க. உங்க பேர் என்னன்னு கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"என் பேரு சாந்தமூர்த்தின்னு சொன்னா நீங்க சிரிக்க மாட்டீங்களே!" என்றார் சாந்தமூர்த்தி சிரித்துக்கொண்டே.

"உங்களால கோபப்படவே முடியாதுன்னு நான் நினைக்கிறேன்" என்றார் நாராயணன்.

"நான் ஒரு தொழிற்சாலையை நடத்திக்கிட்டிருக்கேன். எங்கிட்ட நூறு பேரு வேலை செய்யறாங்க. ஏதாவது தப்பு நடந்தா எனக்கு ரொம்பக் கோவம் வந்துடும். எங்கிட்ட வேலை செய்யறவங்களைக் கண்டபடி பேசிடுவேன். மானேஜர்லேருந்து கீழ்மட்டத் தொழிலாளி வரையிலும் எல்லார்கிட்டயும் கோபப்பட்டிருக்கேன். அதனால சில நல்ல ஆட்கள் என்னை விட்டுப் போயிட்டாங்க. சில சமயம் கஸ்டமர்கள்கிட்டக் கூடக் கடுமையாப் பேசி, சில வியாபார வாய்ப்புகளை இழந்திருக்கேன்."

"இவ்வளவு அமைதியாப் பேசறவர் ஒரு கோபக்காரர்னு என்னால நம்ப முடியல. சரி. இதுக்கு நான் என்ன செய்யணும்? நான் விதுர நீதி, தர்மோபதேசம் இது மாதிரி ஏதாவது சொன்னா நீங்க மாறிடுவீங்களா?"

"உடனே மாற முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க உபன்யாசத்தை அடிக்கடி கேட்டா காலப்போக்கில் மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு."

"ரொம்ப சந்தோஷம். ஆனா நீங்க எங்கிட்ட வேற ஏதோ கேக்க வந்தீங்கன்னு நினைக்கிறேன்."

"ஆமாம். ஒரு சந்தேகம்தான். ஆனா இதை எல்லார் முன்னாலயும் கேக்க விரும்பல. நீங்க ஒரு பதில் சொல்ல, நான் மறுபடியும் கேள்வி கேக்க, நான் பொறுமையிழந்து உங்ககிட்டக் கோவமாப் பேசிடுவேனோன்னு பயந்துதான் உங்ககிட்டத் தனியாய் பேச நினைச்சேன்."

"இவ்வளவு முன் யோசனையோடு செயல்படற உங்களால உங்க கோபத்தைக் கண்டிப்பாக் கட்டுப்படுத்திக்க முடியும்."

"முன்யோசனையோட செயல்படறது  என்னோட வியாபார அனுபவத்தினால் வந்தது. ஆனா எனக்கு எப்ப கோவம் வரும்னு எனக்கே தெரியாது. நான் சொல்றதை நீங்க மறுத்துப் பேசினா கூட, எனக்குக் கோவம் வரலாம். சரி. நான் கேக்க வந்த சந்தேகம் இதுதான். இன்னிக்கு உங்க உபன்யாசத்தில ஒரு விஷயம் சொன்னீங்க. மத்தவங்களைக் கடுமையாப் பேசினா அதனால நமக்குப் பல இழப்புகள் ஏற்படும். அதோட நாம செஞ்ச புண்ணியத்தினால நமக்கு கிடைக்கக் கூடிய மோட்சம் கூடக் கிடைக்காமப் போகும்னு சொன்னீங்க."

"ஆமாம். மத்தவங்க மனசைக் காயப்படுத்தற மாதிரி பேசறது மிகப் பெரிய பாவம். அது நாம பண்ற புண்ணியங்களோட பலன்களைக் கூட நமக்குக் கிடைக்காம பண்ணிடும். சாஸ்திரங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. அதில என்ன சந்தேகம் உங்களுக்கு?"

"இதோட லாஜிக் எனக்குப் புரியல. நான் ஒரு கஸ்டமர் கிட்ட அவர் மனம் புண்படும்படியாப் பேசிடறேன். அதனால அவர்கிட்டேயிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய வியாபாரம் எனக்கு கிடைக்காமப் போயிடுது. இது எனக்கு ஒரு இழப்பு. நான் கடுமையாப் பேசினதோட பலனை நான் அனுபவிச்சுட்டேன். அப்புறம் இது ஏன் என்னோட புண்ணியத்தை பாதிக்கணும்? ஒரு தப்புக்கு ரெண்டு தடவை தண்டனையா?"

நாராயணன் கொஞ்சம் யோசித்தார்.

 "உங்க ஃபேக்டரில எப்பவாவது ஸ்ட்ரைக் நடந்திருக்கா?"

"ஃபேக்டரின்னா ஸ்ட்ரைக் இல்லாம இருக்குமா? ஒரு தடவை நடந்திருக்கு."

"ஸ்ட்ரைக் பண்ணின நாட்களுக்கு நீங்க சம்பளம் கட் பண்ணிட்டீங்க இல்ல?"

"பின்னே? சம்பளத்தோட லீவுன்னு உண்டு! சம்பளத்தோட ஸ்ட்ரைக்னு உண்டா என்ன?"

"ஸ்ட்ரைக் பண்ணினவங்களுக்கு வேற ஏதாவது பனிஷ்மென்ட் கொடுத்தீங்களா?"

"ரெண்டு பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டேன். மீதி பேருக்கெல்லாம் ஒரு வருஷம் இன்க்ரிமெண்ட் கட் பண்ணிட்டேன்."

"ஸ்ட்ரைக் பண்ணினத்துக்கு தண்டனையா அவங்க சம்பளத்தை இழந்தாங்க. சரி. ஏன் அவங்களுக்கு வேலை போகணும், இன்க்ரிமெண்ட் போகணும்?"

சாந்தமூர்த்தி யோசித்தார்.

"எல்லாச் செயல்களுக்கும் உடனடிப் பலன், நீண்ட காலப் பலன்னு ரெண்டு உண்டு. ஒரு விபத்தில் காயம் பட்டா, அந்தக் காயம் சில நாள் இருக்கும். அப்புறம் ஆறிடும். ஆனா அந்த விபத்தினால நம்ம உடம்புக்கு வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அது நமக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். மத்தவங்களை சுடுசொற்களால காயப்படுத்தினா அவங்களோட அதிருப்தி, அதனால நமக்கு ஏற்படற பாதிப்புகள் இவை உடனடிப்பலன். நாம செய்யற புண்ணியத்தோட பலனை நாம இழக்கறது நீண்டகாலப் பலன். இப்ப லாஜிக் சரியா இருக்கா?" என்றார் நாராயணன்.

சாந்தமூர்த்தி சற்று நேரம் யோசித்து விட்டு, "சரி. இப்ப இதோட மறு பக்கத்தை எடுத்துப்போம். நாம மத்தவங்ககிட்ட இனிமையாப் பேசினா, அதனால நமக்கு உடனடிப் பலன் கிடைக்கறதோட நீண்ட காலப் பலனும் கிடைக்கும்னு சொல்லலாமா?"

"நிச்சயமா?"

"அது என்ன பலனா இருக்கும்?"

"இம்மையில அதாவது இந்த உலகத்தில நமக்கு இன்பம் கிடைக்கிறது   உடனடிப்பலன்.  மறுமையிலும் அதாவது மோட்ச உலகத்திலும் நமக்கு இன்பம் கிடைக்கிறது நீண்டகாலப் பலன்" என்றார் நாராயணன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 10             
இனியவை கூறல்   
குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்

பொருள்:  
சிறுமை இல்லாத இனிய சொல் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நமக்கு இன்பம் பயக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்