உபன்யாசம் முடிந்ததும், நாராயணனைப் பலர் சூழ்ந்து கொண்டனர். இது வழக்கமாக நடப்பதுதான்.
"ரொம்ப நன்னா இருந்தது சுவாமி" என்று பாராட்டுபவர்களிடமிருந்து, புத்திசாலித்தனமான சந்தேகங்கள் கேட்பவர்கள் வரை தினமும் ஒரு பத்துப் பதினைந்து பேரின் பேச்சுக்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, தேவைப்பட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு மேடையை விட்டு அவர் இறங்கப் பதினைந்து நிமிடங்களாவது ஆகி விடும்.
"ரொம்ப நன்னா இருந்தது சுவாமி" என்று பாராட்டுபவர்களிடமிருந்து, புத்திசாலித்தனமான சந்தேகங்கள் கேட்பவர்கள் வரை தினமும் ஒரு பத்துப் பதினைந்து பேரின் பேச்சுக்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, தேவைப்பட்டால் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு மேடையை விட்டு அவர் இறங்கப் பதினைந்து நிமிடங்களாவது ஆகி விடும்.
அன்றும் அப்படித்தான். ஆனால் எல்லோரும் போன பிறகு, மேடை ஓரமாக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார்.
"சொல்லுங்கோ!" என்றார் நாராயணன்.
"உங்ககிட்ட கொஞ்ச நேரம் தனியாப் பேசணும். இப்ப பேசினா உங்களுக்கு நேரமாயிடும்னு நினைக்கிறேன். உங்களை எங்க வந்து பாக்கலாம்?" என்றார் அவர்.
"இப்பவே பேசலாமே. உங்களுக்குத் தனியாப் பேசணும்னா ரூமுக்குள்ள போய்ப் பேசலாம்" என்று அவரை மேடைக்குப் பின்னால் அழைத்துச் சென்றார் நாராயணன்.
உள்ளே போய் உட்கார்ந்ததும், "சாமிக்கு நல்ல ஞானம்!" என்று ஆரம்பித்தார் அவர்.
"என்னை சாமின்னெல்லாம் சொல்லாதீங்க. நான் ஒரு சாதாரண மனுஷன். வயத்துப் பொழப்புக்காக அரசாங்கத்தில வேலை செய்யறேன். சாயந்திர நேரத்தில நான் படிச்சும், கேட்டும் தெரிஞ்சுண்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கறேன். அவ்வளவுதான். நீங்க ஒரு பெரிய மனுஷர் மாதிரி இருக்கீங்க. ஆனா இவ்வளவு பணிவாப் பேசறீங்க. உங்களைத்தான் நான் ஸ்வாமின்னு கூப்பிடணும்!" என்றார் நாராயணன்.
"உங்களை மாதிரி எனக்குப் பணிவா, பதவிசாப் பேச வரலே சாமி. நான் ரொம்ப கோவக்காரன்."
"சுவாமிங்கற வார்த்தை வேண்டாம். என்னை நீங்க சார்னே கூப்பிடலாம். பொதுவா நாம அப்படித்தானே பேசிக்கிறோம்! நீங்க கோவக்காரர்னு சொன்னீங்க. உங்க பேர் என்னன்னு கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே?"
"என் பேரு சாந்தமூர்த்தின்னு சொன்னா நீங்க சிரிக்க மாட்டீங்களே!" என்றார் சாந்தமூர்த்தி, சிரித்துக் கொண்டே.
"உங்களால கோபப்படவே முடியாதுன்னு நான் நினைக்கிறேன்!" என்றார் நாராயணன்.
"நான் ஒரு தொழிற்சாலையை நடத்திக்கிட்டிருக்கேன். எங்கிட்ட நூறு பேரு வேலை செய்யறாங்க. ஏதாவது தப்பு நடந்தா எனக்கு ரொம்பக் கோவம் வந்துடும். எங்கிட்ட வேலை செய்யறவங்களைக் கண்டபடி பேசிடுவேன். மானேஜர்லேருந்து கீழ்மட்டத் தொழிலாளி வரையிலும் எல்லார்கிட்டயும் கோபப்பட்டிருக்கேன். அதனால சில நல்ல ஆட்கள் என்னை விட்டுப் போயிட்டாங்க. சில சமயம் கஸ்டமர்கள்கிட்டக் கூடக் கடுமையாப் பேசி, சில வியாபார வாய்ப்புகளை இழந்திருக்கேன்."
"இவ்வளவு அமைதியாப் பேசறவர் ஒரு கோபக்காரர்னு என்னால நம்ப முடியல. சரி. இதுக்கு நான் என்ன செய்யணும்? நான் விதுர நீதி, தர்மோபதேசம் இது மாதிரி ஏதாவது சொன்னா நீங்க மாறிடுவீங்களா?"
"உடனே மாற முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க உபன்யாசத்தை அடிக்கடி கேட்டா காலப்போக்கில் மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு."
"ரொம்ப சந்தோஷம். ஆனா நீங்க எங்கிட்ட வேற ஏதோ கேக்க வந்தீங்கன்னு நினைக்கிறேன்."
"ஆமாம். ஒரு சந்தேகம்தான். ஆனா இதை எல்லார் முன்னாலயும் கேக்க விரும்பல. நீங்க ஒரு பதில் சொல்ல, நான் மறுபடியும் கேள்வி கேக்க, நான் பொறுமையிழந்து உங்ககிட்டக் கோவமாப் பேசிடுவேனோன்னு பயந்துதான் உங்ககிட்டத் தனியாய் பேச நினைச்சேன்."
"இவ்வளவு முன் யோசனையோடு செயல்படற உங்களால உங்க கோபத்தைக் கண்டிப்பாக் கட்டுப்படுத்திக்க முடியும்."
"முன்யோசனையோட செயல்படறது என்னோட வியாபார அனுபவத்தினால் வந்தது. ஆனா எனக்கு எப்ப கோவம் வரும்னு எனக்கே தெரியாது. நான் சொல்றதை நீங்க மறுத்துப் பேசினா கூட, எனக்குக் கோவம் வரலாம். சரி. நான் கேக்க வந்த சந்தேகம் இதுதான். இன்னிக்கு உங்க உபன்யாசத்தில ஒரு விஷயம் சொன்னீங்க. மத்தவங்களைக் கடுமையாப் பேசினா அதனால நமக்குப் பல இழப்புகள் ஏற்படும். அதோட நாம செஞ்ச புண்ணியத்தினால நமக்கு கிடைக்கக் கூடிய மோட்சம் கூடக் கிடைக்காமப் போகும்னு சொன்னீங்க."
"ஆமாம். மத்தவங்க மனசைக் காயப்படுத்தற மாதிரி பேசறது மிகப் பெரிய பாவம். அது நாம பண்ற புண்ணியங்களோட பலன்களைக் கூட நமக்குக் கிடைக்காம பண்ணிடும். சாஸ்திரங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. அதில என்ன சந்தேகம் உங்களுக்கு?"
"இதோட லாஜிக் எனக்குப் புரியல. நான் ஒரு கஸ்டமர்கிட்ட அவர் மனம் புண்படும்படியாப் பேசிடறேன். அதனால அவர்கிட்டேயிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய வியாபாரம் எனக்கு கிடைக்காமப் போயிடுது. இது எனக்கு ஒரு இழப்பு. நான் கடுமையாப் பேசினதோட பலனை நான் அனுபவிச்சுட்டேன். அப்புறம் இது ஏன் என்னோட புண்ணியத்தை பாதிக்கணும்? ஒரு தப்புக்கு ரெண்டு தடவை தண்டனையா?"
நாராயணன் கொஞ்சம் யோசித்தார்.
"உங்க ஃபேக்டரில எப்பவாவது ஸ்ட்ரைக் நடந்திருக்கா?"
"ஃபேக்டரின்னா ஸ்ட்ரைக் இல்லாம இருக்குமா? ஒரு தடவை நடந்திருக்கு."
"ஸ்ட்ரைக் பண்ணின நாட்களுக்கு நீங்க சம்பளம் கட் பண்ணிட்டீங்க இல்ல?"
"பின்னே? சம்பளத்தோட லீவுன்னு உண்டு! சம்பளத்தோட ஸ்ட்ரைக்னு உண்டா என்ன?"
"ஸ்ட்ரைக் பண்ணினவங்களுக்கு வேற ஏதாவது தண்டனை கொடுத்தீங்களா?"
"ரெண்டு பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டேன். மீதி பேருக்கெல்லாம் ஒரு வருஷம் இன்க்ரிமெண்ட் கட் பண்ணிட்டேன்."
"ஸ்ட்ரைக் பண்ணினத்துக்கு தண்டனையா அவங்க சம்பளத்தை இழந்தாங்க. சரி. ஏன் அவங்களுக்கு வேலை போகணும், இன்க்ரிமெண்ட் போகணும்?"
சாந்தமூர்த்தி யோசித்தார்.
"எல்லாச் செயல்களுக்கும் உடனடிப் பலன், நீண்ட காலப் பலன்னு ரெண்டு உண்டு. ஒரு விபத்தில் காயம் பட்டா, அந்தக் காயம் சில நாள் இருக்கும். அப்புறம் ஆறிடும். ஆனா, அந்த விபத்தினால நம்ம உடம்புக்கு வேற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அது நமக்கு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தெரியும். மத்தவங்களை சுடுசொற்களால காயப்படுத்தினா அவங்களோட அதிருப்தி, அதனால நமக்கு ஏற்படற பாதிப்புகள் இவை உடனடிப் பலன். நாம செய்யற புண்ணியத்தோட பலனை நாம இழக்கறது நீண்டகாலப் பலன். இப்ப லாஜிக் சரியா இருக்கா?" என்றார் நாராயணன்.
சாந்தமூர்த்தி சற்று நேரம் யோசித்து விட்டு, "சரி. இப்ப இதோட மறு பக்கத்தை எடுத்துப்போம். நாம மத்தவங்ககிட்ட இனிமையாப் பேசினா, அதனால நமக்கு உடனடிப் பலன் கிடைக்கறதோட நீண்ட காலப் பலனும் கிடைக்கும்னு சொல்லலாமா?"
"நிச்சயமா?"
"அது என்ன பலனா இருக்கும்?"
"இம்மையில அதாவது இந்த உலகத்தில நமக்கு இன்பம் கிடைக்கிறது உடனடிப் பலன். மறுமையிலும் அதாவது மோட்ச உலகத்திலும் நமக்கு இன்பம் கிடைக்கிறது நீண்டகாலப் பலன்" என்றார் நாராயணன்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 10
இனியவை கூறல்
குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்
பொருள்:
சிறுமை இல்லாத இனிய சொல் இம்மையில் மட்டுமின்றி, மறுமையிலும் நமக்கு இன்பம் பயக்கும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment