About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, March 30, 2018

143. நடந்ததை நினைத்து...

"ஏம்ப்பா, முப்பது வயசு ஆகப் போகுது. இன்னும் ஏன் பிரம்மச்சாரியா இருக்கே?"

"இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு கேளு? அவன் பிரம்மச்சாரியா இருக்கான்னு உனக்கு எப்படித் தெரியும்?"

"உஸ்ஸ்... மெதுவாப் பேசு. முதலாளி காதுல விழப் போவுது!"

ஊழியர்கள் பேசிக் கொண்டது 'முதலாளி' என்று குறிப்பிடப்பட்ட கணபதியின் காதில் விழுந்தது. 'கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை சரி. ஆனால் நீ பிரம்மச்சாரிதானா?' என்ற கேள்வி தங்கள் முதலாளிக்கும் பொருந்தும் என்பதால்தான் பேசிக் கொண்டவர்களில் ஒருவனுக்கு தங்கள் பேச்சு முதலாளியின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது.

"ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்று அவனிடம் பலர் பல வருடங்களாகக் கேட்டு வருகிறார்கள். அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வந்திருக்கிறான் கணபதி.

ருபத்தைந்து வருடங்களுக்கு முன், அவனுக்கு இருபது வயதாக இருந்தபோது, மதுரையில் ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான் கணபதி. கடுமையான உழைப்பாலும், நேர்மையான நடத்தையாலும், ஆழமான விசுவாசத்தாலும் முதலாளியின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று, ஐந்து வருடங்களில் மானேஜர் என்ற நிலைக்கு உயர்ந்தான்.

முதலாளிக்கு அடுத்த நிலை என்பதால் அவனுக்குக் கிடைத்த கௌரவம், மரியாதை எல்லாம் அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. இந்தச் சிறிய வயதில் இவ்வளவு உயர்வா என்று மற்ற ஊழியர்களுக்கு வியப்பும், பொறாமையும் ஏற்பட்டன.

தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய முதலாளியை தெய்வமாக மதித்துப் போற்றி வந்தான் கணபதி.

அவனை விடப் பதினைந்து வயது மூத்தவரான அவன் முதலாளி திருமணமாகி ஓரிரு மாதங்களிலேயே மனைவியைப் பறி கொடுத்தவர். இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் வியாபாரத்திலேயே கவனம் செலுத்தி வந்தார்.

அவருடைய நாற்பத்தைந்தாவது வயதில் இருபத்தைந்து வயதுப் பெண் ஒருத்தியை திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.

முதலாளி தனியாக இருந்தபோது அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் கொண்டிருந்த கணபதி, அவர் திருமணம் செய்து கொண்டதும், அவர் வீட்டுக்குச் செல்வதைக் கூடிய வரையில் தவிர்த்து வந்தான். எப்போதாவது போனாலும், வாசலிலேயே நின்று பேசி விட்டு வந்து விடுவான்.

ஒருநாள், முதலாளி கடையிலிருந்து கிளம்பி அவசரமாகப் பக்கத்து ஊருக்குப் போய் விட்டார். எப்போதும் இரவு ஒன்பது மணிக்குக் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குப் போகும்போது, கடையில் இருக்கும் பணத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டு போய் விடுவார். அன்று வெளியூர் செல்லும்போது, "நான் வரத்துக்கு லேட்டாகும். நீ கடையைப் பூட்டிட்டு பணத்தை வீட்டில கொடுத்துட்டுப் போயிடு" என்று சொல்லி விட்டுப் போனார்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் முதலாளியின் வீட்டுக்கு கணபதி பணத்துடன் போனான்.

கதவைத் திறந்த முதலாளியின் இளம் மனைவி "உள்ளே வா" என்றாள்.

"இல்லை. பணத்தைக் கொடுக்கத்தான் வந்தேன். இங்கேயே வாங்கி எண்ணிப் பாத்துக்கங்க" என்றான் கணபதி.

"வாசப்படியில நின்னு யாராவது பணத்தை வாங்குவாங்களா, அதுவும் ராத்திரி வேளையில?" என்றாள் முதலாளியின் மனைவி.

கணபதி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான்.

அதற்குப் பிறகு அந்த விபரீதம் எப்படி நிகழ்ந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அரை மணி நேரம் கழித்து அவன் கிளம்பியபோது, "இது மாதிரி அடிக்கடி வா!" என்றாள் அவள்.

அடுத்த நாள் முதலாளியைப் பார்த்தபோது, கணபதியால் அவர் முகத்தைப் பார்த்துப் பேச முடியவில்லை. 'கடையில துணி எடுத்துப் போடற ஒரு சாதாரண ஆளா இருந்த என்னை இவ்வளவு உயரத்தில தூக்கி வச்ச இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணிட்டேனே!' என்று மனதுக்குள் புலம்பினான்.

அதற்குப் பிறகு அங்கே அவனால் அதிக நாட்கள் வேலை செய்ய முடியவில்லை. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, திருச்சியில் இருக்கும் தனது தூரத்து உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி நான்கைந்து நாட்கள் விடுமுறை கேட்டு வாங்கிக் கொண்டு கிளம்பினான் கணபதி.

தனி ஆளாக இருந்ததால் அவனிடம் அதிகப் பொருட்கள் இல்லை. இருந்தவற்றை ஒரு பெட்டியில் போட்டுக் கொண்டு கிளம்பினான். அவன் இருந்த அறைக்கு மூன்று மாத வாடகை முன்பணமாகக் கொடுத்திருந்ததால் வாடகை பாக்கி எதுவும் இருக்காது.

பத்து வருடங்கள் வேலை செய்ததில் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தான். திருச்சிக்குப் போய் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் தங்கினான். தன் உறவினர் இறந்து விட்டதால் அவர் குடும்பத்துக்கு உதவியாக அங்கேயே இருக்க வேண்டி இருப்பதால் இனி தன்னால் வேலைக்கு வர இயலாது என்று முதலாளிக்குப் பணிவாக ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.

பிறகு முதலாளி தன்னைத் தேடி வந்தாலும் கண்டு பிடிக்க முடியாதபடி கடலூருக்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஊரைத் தேர்ந்தெடுத்து அங்கே குடியேறினான். கையில் இருந்த பணத்தை வைத்துச் சிறிய அளவில் துணி வியாபாரத்தைத் தொடங்கினான்.

பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அவன் வியாபாரம் பெருகிக் கடை பெரிதாகி விட்டது. இந்தப் பதினைந்து வருடங்களில் அவனுக்குப் பெண் கொடுக்கப் பலர் முன்வந்தனர். ஆனால் அவன் பிடி கொடுக்கவில்லை. திருமணம் என்றாலே முதலாளியின் மனைவியும் அவளுடன் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்ட தகாத உறவும்தான் நினைவுக்கு வந்தன.

"இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறே?" என்று பலரும் கேட்டார்கள்.

அவனுக்குத் தெரியவில்லை. சாகும் வரை இப்படியேதானே இருந்தாக வேண்டும்?

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்துதொழுகு வார்.


பொருள்:  
தன்னை முழுவதுமாக நம்பியவரின் மனைவியிடம் தகாத உறவு கொண்டவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Proprietor's Wifethe English version of this story.

          பொருட்பால்                                                                                  காமத்துப்பால்
















Thursday, March 29, 2018

142. மனம் போன போக்கிலே

முதன் முதலில் ஜெயந்தியைப் பார்த்ததும் குருவுக்குத் தோன்றிய எண்ணம் 'இவள் எனக்கு மனைவியாக வந்திருக்கக் கூடாதா?' என்பதுதான். ஜெயந்தி, குருவின் அலுவலக நண்பன் ஜெகதீஸ்வரனின் மனைவி!

திருமணத்துக்குப் பின் ஜெகதீஸ்வரன் ஜெயந்தியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு, அவனுடைய அலுவலக நண்பர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்துச் சொல்ல அவன் வீட்டுக்குச் சென்றனர். அப்போதுதான் குருவுக்கு இந்த எண்ணம் தோன்றியது. நண்பனின் மனைவியைப் பற்றி இப்படி நினைக்கலாமா என்ற கண்டனம் மனதின் ஒருபுறத்தில் எழுந்தாலும், அந்த எண்ணம் தனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியதை அவன் உணர்ந்தான்.

அவர்கள் அனைவருக்கும் ஜெயந்தி காப்பி கொடுத்தபோது, காப்பிக் கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டை அவன் முன்னே நீட்டிய, வளையல் அணிந்த அவள் கரத்தைப் பற்ற வேண்டும் போலிருந்தது.

அதற்குப் பிறகு நண்பனைப் பார்க்கிற சாக்கில், ஜெயந்தியைப் பார்ப்பதற்கென்றே ஜெகதீஸ்வரன் வீட்டுக்கு மூன்று நான்கு முறை சென்று வந்தான் குரு. தவறான சிந்தனை என்று தெரிந்தும், ஜெயந்தியின் மீது அவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பை அவனால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.

லுவலக வேலையாக ஜெகதீஸ்வரன் இரண்டு நாட்கள் வெளியூருக்குப் போக வேண்டி இருந்தது.

"புதுப் பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டா போகப் போறே?" என்றான் குரு.

"ஆமாம். அதனால என்ன? நாங்க இருக்கறது அபார்ட்மெண்ட்தானே? ஏதாவது உதவி வேணும்னா பக்கத்து ஃபிளாட்கள்ள இருக்கறவங்க செய்வாங்க. அதோட, ஜெயந்தி தைரியமான பொண்ணு" என்றான் ஜெகதீஸ்வரன்.

ஜெகதீஸ்வரன் ஊருக்குச் சென்ற அன்று இரவு குருவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஜெயந்தியைப் போய்ப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. 'சும்மா போய்ப் பார்த்துப் பேசி விட்டு வரலாம். அவளுடன் நட்பை வளர்த்துக் கொண்டால், அவளுக்கும் என் மீது ஈர்ப்பு ஏற்படலாம்' என்று நினைத்தான்.

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் ஜெயந்தியின் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

ழைப்பு மணி அடித்ததும் ஜெயந்தி வந்து கதவைத் திறந்தாள். அவள் உடுத்தியிருந்த கருப்பு நிறப் புடவையும், விரித்த கூந்தலும் குருவுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தின.

"நீங்களா?" என்றாள் ஜெயந்தி கதவைப் பிடித்தபடி. கதவைத் திறந்து அவனை உள்ளே வரச் சொல்லவில்லை.

"ஆமாம்" என்றான் குரு, அசட்டுச் சிரிப்புடன். "ஜகத் ஊருக்குப் போயிட்டான் இல்ல?"

"அதான் மத்தியானமே போயிட்டாரே!" என்றாள் ஜெயந்தி, நகராமல் நின்றபடி.

ஜெயந்தி என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் வருகையை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறாளா அல்லது சந்தேகப்படுகிறாளா?

அவன் மௌனமாக இருந்ததைப் பார்த்து, "என்ன விஷயம்?" என்றாள் ஜெயந்தி.

என்ன சொல்லப் போகிறோம் என்று நினைத்தபோது, அவன் உடல் குப்பென்று வியர்த்தது.

'என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? இன்னொருவன் மனைவி மீது - அதுவும் நண்பனின் மனைவி மீது - ஆசைப்பட்டு, அவள் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறேன்! எவ்வளவு கேவலமான செயல் இது!

'ஜெகதீஸ்வரனுக்கு என் மனதில் இருக்கும் எண்ணம் தெரிந்தால், அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

'ஜெயந்தி என் மீது சந்தேகப்பட்டால் என்ன செய்வாள்? ஒருவேளை சத்தம் போட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்களை வரவழைப்பாளோ? அப்படிச் செய்தால் அவர்களிடம் நான் என்ன சொல்ல முடியும்?

'நான் தவறான நோக்கத்துடன் இங்கே வந்ததாகக் கருதப்பட்டுப் பலர் முன் நான் அவமானப்பட நேர்ந்தால், என் வாழ்க்கை என்ன ஆகும்?

'அப்படி எதுவும் நடக்காவிட்டாலும், நான் தவறான நோக்கத்துடன் வந்திருப்பதாக ஜெயந்தி நினைத்தால், மறுபடியும் நான் இந்த வீட்டுக்கு வர முடியுமா? ஜெகதீஸ்வரனின் நண்பனாகத் தொடரத்தான் முடியுமா?

'என்ன ஒரு முட்டாள்தனமான காரியம் செய்ய இருந்தேன்!'

குரு ஒரு அடி பின் வைத்துத் தள்ளி நின்றான். "ஜகத் ஊருக்குப் போயிருக்கான். நீங்க தனியா இருக்கீங்க. இங்கே எல்லாம் பாதுகாப்பா இருக்கா, உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்" என்றான்.

"எனக்கு இங்கே ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க என் மேல இத்தனை அக்கறை எடுத்துக்கிட்டு இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்றாள் ஜெயந்தி, புன்னகை செய்தபடி.

அவள் சிரிப்பைப் பார்த்ததும், 'எத்தனை பெரிய இழுக்கிலிருந்து கடைசி நிமிடத்தில் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்!' என்று நினைத்துக் கொண்டான் குரு.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்.

பொருள்:  
அறவழியைப் பின்பற்றாமல் கீழ்மை அடைந்தவர்களில், இன்னொருவர் மனைவி மீது ஆசை வைத்து அவர் வீட்டு வாயிலில் போய் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.

Read 'At the Doorstep of Disgracethe English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


Wednesday, March 28, 2018

141. தவற விட்ட பஸ்!

கடைசி பஸ் போய் விட்டது!

நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கக் கூடாது.

நிகழ்ச்சி முடியும் வரை உட்கார்ந்திருக்காமல் சற்று முன்பேயாவது கிளம்பி வந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு முட்டாள்தனமான ஆர்வத்திலும், நம்பிக்கையிலும் நிகழ்ச்சி முடியும் வரை உட்கார்ந்திருந்து விட்டாள்.

வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கிருஷ் கேட்டான், "வெளியூருக்குப் போய் நாட்டியக் கச்சேரி பாக்கணுமா?" என்று.

"நம்ம ஊர்ல இது மாதிரி கச்சேரில்லாம் நடக்குமா?" என்றாள் ஸ்ருதி. "நீங்களும் வந்தா நல்லா இருக்குமே!" என்றாள் தொடர்ந்து.

"நாளைக்கு கிளாஸுக்குத் தயார் பண்ணிக்கணுமே! அதோட ரெண்டு மணி நேரம் உக்காந்து டான்ஸ் பாக்கறதெல்லாம் என்னால முடியாது. அதான் பஸ் இருக்கே, ஜாக்கிரதையாப் போயிட்டு வந்துடு. கடைசி பஸ் ஒன்பது பத்துக்கு. மிஸ் பண்ணிடாதே!" என்றான் கிருஷ் .

"அப்படி மிஸ் பண்ணிட்டா, என் ஃபிரண்ட் வீட்டில தங்கிட்டுக் காலையில வந்துடறேன். கச்சேரிக்கே அவளோடதானே போறேன்? ஃபோன் பண்றதுன்னா பிரின்சிபால் வீட்டுக்குத்தான் ஃபோன் பண்ணி உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லணும். அவங்களுக்குத் தொந்தரவா இருக்கும்! அதனால ஃபோன் வரலைன்னு கவலைப்படாதீங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் ஸ்ருதி.

கிருஷ் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தான். நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி இருந்தது அந்தக் கல்லூரி. கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்குக் குடியிருப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் கல்லூரி ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு சிற்றூர் அது. சினிமா, ஷாப்பிங் என்று வார இறுதியில் ஸ்ருதி, கிருஷ் இருவரும்  நகரத்துக்கு வருவார்கள். ஆனால் இப்போதுதான் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஸ்ருதி மட்டும் தனியே கிளம்பி வந்திருக்கிறாள். நகரத்தில் இருந்த அவள் தோழியுடன் நடனக் கச்சேரிக்குப் போய் விட்டுக் கடைசி பஸ்ஸில் ஊருக்குத் திரும்பி விடுவது என்று திட்டம்.

ஆனால் அவள் தோழி அவசரமாக வெளியூர் போய் விட்டாள். நடன நிகழ்ச்சிக்கு அவளை அழைத்துப் போக அவள் வீட்டுக்குப் போனபோதுதான் ஸ்ருதிக்கு இது தெரிந்தது.

எனவே, தோழி வீட்டில் தங்கும் யோசனையும் செல்லாத நோட்டு போல் பயனற்றதாகி விட்டது.

என்ன செய்வது, தனியாக ஏதாவது ஓட்டலில் சென்று தங்குவது உசிதமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது, "என்ன ஸ்ருதி, எப்படி இருக்கே!" என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.

சுதாகர்! கல்லூரியில் அவளுடன் படித்தவன்.

"ஊருக்குப் போகணும். பஸ் போயிடுச்சு!" என்றாள் அவள் பதட்டத்துடன்.

"எனக்கும் அதே பிரச்னைதான். கவலைப்படாதே! நான் பாத்துக்கறேன்" என்றான் சுதாகர் சிரித்தபடி.

ஸ்ருதியின் மனதில் பய உணர்வுகள் தோன்றின.

கல்லூரியில் சுதாகர் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தான். தனக்கு இஷ்டமில்லை என்று ஸ்ருதி பலமுறை சொன்ன பிறகும் கூட அவளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தான். எப்படியும் ஸ்ருதியைத் தன் வசப்படுத்தி விடுவதாகத் தன் நண்பர்கள் சிலரிடம் அவன் சொல்லி வந்ததாக அவளுக்குச் செய்தி கிடைத்தது. 

ஒரு கட்டத்தில், 'போலீசில் புகார் செய்து விடுவேன்' என்று அவள் மிரட்டிய பிறகுதான், அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொண்டான்.

"என்ன செய்யலாம்?" என்றாள் ஸ்ருதி, கவலையுடன். "பெண்கள் பாதுகாப்பாகத் தங்கறதுக்கு இந்த ஊர்ல நல்ல ஹோட்டல் ஏதாவது இருக்கா?"

"இது சின்ன ஊர். இந்த ஊர்லயே பாதுகாப்பான இடம் இந்த பஸ் ஸ்டாண்ட்தான்! ராத்திரி முழுக்க இங்கேயே உக்காந்துக்கிட்டிருக்கறதுன்னா சொல்லு. நானும் உனக்குக் காவலா இங்கேயே இருக்கேன்" என்றான் சுதாகர்.

இரவு முழுவதும் அங்கே உட்கார்ந்திருக்க முடியுமா என்று யோசித்த ஸ்ருதி, தனது முட்டாள்தனமான செய்கையினால் பஸ்ஸைத் தவற விட்டதை நினைத்து மீண்டும் தன்னை நொந்து கொண்டாள்.

"கவலைப்படாதே. இங்கே எனக்குத் தெரிஞ்சவங்க வீடு இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு விடறேன். நீ அங்கேயே தங்கிக்கலாம்" என்றான் சுதாகர்.

"நீ?" என்றாள் ஸ்ருதி

"நான் எங்கேயாவது ஒதுங்கிப்பேன். லேட் ஆயிடுச்சு வா!" என்றான் சுதாகர்.

போகலாமா, வேண்டாமா என்று சில நொடிகள் குழம்பிய ஸ்ருதி, அரை மனதுடன் அவனுடன் கிளம்பினாள்.

ஒரு ரிக்‌ஷாவை அழைத்து, ரிக்‌ஷாக்காரரிடம் போக வேண்டிய இடத்தைச் சொன்னான் சுதாகர். இருவரும் ரிக்‌ஷாவில் ஏறிக் கொண்டனர்

சற்று தூரம் முக்கிய சாலையில் சென்ற பின், சட்டென்று ஒரு இருண்ட சந்தில் திரும்பியது  ரிக்‌ஷா. ஸ்ருதியின் மனதில் மீண்டும் அச்சம் எழுந்தது.

காலை ஐந்து மணிக்கு அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த அந்த வயதான பெண்மணி சுதாகரைப் பார்த்துத் தலையசைத்தாள்.

உள்ளே அமர்ந்திருந்த ஸ்ருதி அவனைப் பார்த்ததும் எழுந்தாள். "சீக்கிரமே வந்துட்டியே!" என்றாள்.

"ஆமாம். நீ சீக்கிரம் கிளம்பி ஊருக்குப் போக வேணாமா? கிளம்பு. முதல் பஸ்ஸிலியே ஏத்தி விட்டுடறேன்" என்றான் சுதாகர்.

அந்த வயதான பெண்மணியைப் பார்த்து, "வரேம்மா! ராத்திரி தங்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!" என்றாள் ஸ்ருதி.

"இது ரொம்பச் சின்ன வீடும்மா. உன்னை மாதிரி வசதியான குடும்பத்துப் பொண்ணு இங்க வந்து ஒரு ராத்திரி தங்கினதுதான் பெரிய விஷயம்" என்றாள் அந்தப் பெண்மணி.

"வேற வழி? இதை விட்டா அவ ராத்திரி பூரா பஸ் ஸ்டாண்டிலதான் உக்காந்திருக்கும்படியா இருந்திருக்கும்!" என்றான் சுதாகர்.

பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, ஸ்ருதி "சாரி, சுதாகர்! காலேஜில் நீ எங்கிட்ட நடந்துக்கிட்டதை நினைச்சு ராத்திரி நான் கொஞ்சம் பயந்தேன். ஆனா நீ இவ்வளவு கண்ணியமா நடந்துக்கிட்டு எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கே. நீ ரொம்ப மாறிட்டே!" என்றாள் ஸ்ருதி.

"நான் மாறல ஸ்ருதி. நீதான் மாறிட்ட!"

"என்ன சொல்றே?"

"அப்ப நீ கல்யாணம் ஆகாத பொண்ணா இருந்தே. இப்ப நீ இன்னொருத்தரோட மனைவியா மாறிட்டே! இன்னொருத்தரோட மனைவிகிட்ட எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நான் நடந்துக்கிட்டேன்" என்றான் சுதாகர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 141
பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பொருள்:  
ஒருவரால் பின்பற்றப்பட வேண்டிய அறம் என்ன, தேடப்பட வேண்டிய பொருள் எது ஆகியவற்றை உணர்ந்தவர்களிடம், இன்னொருவருடைய மனைவியை விரும்பும் அறியாமை இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Missed the Busthe English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














Friday, March 23, 2018

140. குறை ஒன்று உண்டு கண்ணா!

"அசோசியேஷன் மீட்டிங்குக்கு நான் எதுக்கு வரணும்?" என்றான் கண்ணன்.

"எல்லாரையும் பாத்துப் பழகறதுக்கு இது ஒரு சந்தர்ப்பம்" என்றாள் அவன் மனைவி வசந்தி.

"நீ மட்டும் போயிட்டு வா."

"ஒரு அஞ்சு நிமிஷம் வந்து உக்காந்துட்டுப் போயிடுங்க."

அரைமனதாக ஒப்புக் கொண்டான் கண்ணன்.

அந்தக் குடியிருப்பில் அவர்கள் சமீபத்தில்தான் வீடு வாங்கிக் கொண்டு குடி போயிருந்தார்கள். வசந்தி அங்கிருந்த பலரிடமும் பழகிப் பரிச்சயமாகி விட்டாள். 

ஆனால் கண்ணன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூடப் பேசியதில்லை. வெளியே போகும்போது யாராவது பார்த்துப் புன்னகை செய்தாலோ, தலையாட்டினாலோ கூட, கவனிக்காமல் எங்கேயோ பாத்தபடி போய்க் கொண்டிருப்பான்.

கண்ணன் உயிரியல் துறையில் பட்ட மேற்படிப்புப் படித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளனாகப் பணி செய்து வந்தான்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஏதாவது படித்துக் கொண்டோ மடிக்கணினியில் வேலை செய்து கொண்டோ இருப்பான். வசந்தி ஏதாவது கேட்டால் பதில் சொல்வான். அவனாக அதிகம் பேச மாட்டான்.

சில சமயம் பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ வந்த சுவையான விஷயத்தை வசந்தி அவனுடன் பகிர்ந்து கொண்டால், கேட்டுக் கொள்வான். அது கூட அவள் திருப்திக்காகத்தான் செய்கிறானே தவிர, அவனுக்கு அவற்றில் ஈடுபாடு இல்லை என்பதை வசந்தி உணர்ந்திருந்தாள். சினிமா, ஷாப்பிங், உறவினர்கள் வீடு என்று எங்காவது போக வேண்டும் என்று வசந்தி சொன்னால், அவளுடன் போவான்.

தன் கணவன் யாருடனும் பழகாமல் ஒதுங்கியே இருப்பது வசந்திக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. அலுவலகத்திலும் அப்படித்தான் என்று அவனுடைய நண்பன் சீனு சொல்லி இருக்கிறான். கண்ணனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொள்ள சீனு மட்டும்தான் உண்டு. ஏதோ ஒரு நண்பராவது இருக்கிறாரே என்று நினைத்துக் கொள்வாள் வசந்தி.

அந்தக் குடியிருப்பில் இருந்த 72 வீடுகளுக்கும் பொதுவான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அசோஸியேஷனின் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் கண்ணனை அழைத்தாள் வசந்தி.

சோசியேஷன் கூட்டம் அரைமணியிலேயே முடிந்து விட்டது. இப்போது செயலாளராக இருப்பவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக விரும்பினார். புதிதாக ஒரு செயலாளரைத் தேர்ந்தெடுக்கத்தான் கூட்டம் அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் செயலாளராகப் பொறுப்பேற்க யாரும் முன்வராததால் கூட்டம் சீக்கிரமே முடிந்து விட்டது.

வீட்டுக்கு வந்ததும், "ஏங்க? நீங்க ஏன் செகரெட்டரியா பொறுப்பேத்துக்கக் கூடாது?" என்றாள் வசந்தி.

"என்ன ஒளறர? நான் எப்படி இதெல்லாம் பாத்துக்க முடியும்?" என்றான் கண்ணன்.

"ஏன் முடியாது? நீங்க நிறையப் படிச்சவரு. புத்திசாலி. எதையும் நல்லா யோசிச்சு செய்யக் கூடியவரு. இது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமான வேலை இல்ல. சில பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் சரி பண்ணிட்டா அப்புறம் எல்லாம் ஒழுங்காப் போகும். உங்களால இந்தப் பிரச்னையை எல்லாம் சுலபமாத் தீர்த்து வைக்க முடியும்."

"உனக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யார்கிட்டயும் அதிகமாப் பழக மாட்டேன். என்னால எப்படி இந்தப் பொறுப்பை ஏத்துக்க முடியும்?"

"நீங்க எல்லார்கிட்டயும் பழகணும்கறதுக்காகத்தான் நான் உங்களை இந்தப் பொறுப்பை எடுத்துக்கச் சொல்றேன். உங்களுக்குத் தெரியாதது இல்ல. இவ்வளவு படிச்சிருக்கிற நீங்க மத்தவங்களோட பழகாம ஒதுங்கி இருக்கிறது ஒரு குறை இல்லையா? இந்தக் குறையை நீங்க போக்கிக்க வேண்டாமா? நீங்க செகரெட்டரியாப் பொறுப்பு எடுத்துக்கிட்டா எப்படியும் பல பேரோட பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அதுக்கப்பறம் உங்ககிட்ட இருக்கிற இந்தக் குறை உங்களை அறியாமலே உங்களை விட்டுப் போயிடும்" என்றாள் வசந்தி.

ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்த கண்ணன் "ஓகே பாஸ்! உங்க உத்தரவுப்படியே செய்யறேன்" என்றான். சிரித்துக் கொண்டே. மாற்றம் அவனிடம் அப்போதே துவங்கி விட்டதாக வசந்திக்குத் தோன்றியது.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 
கல்லார் அறிவிலா தார்

பொருள்:  
உலகத்தோடு பொருந்தி நடந்து கொள்ளும் கலையைக் கற்காதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள் என்றே கருதப்படுவர். ('உலகம்' என்ற சொல் உலகில் உள்ள உயர்ந்தவர்களையே குறிக்கும் என்பது தொல்காப்பிய இலக்கணம் ('உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.') எனவே இந்தக் குறளுக்கு 'உலகில் உள்ள உயர்ந்த மனிதர்களோடு பொருந்தி வாழ்தல்' என்றே பெரும்பாலும் பொருள் கூறப்பட்டிருக்கிறது. நான் இங்கே பொதுவாக உலகில் மற்றவர்களுடன் பழகுவது என்று எளிமையாகப் பொருள் கொண்டிருக்கிறேன். இன்றைய உலகில், உயர்ந்தவர்கள் யார் என்று கண்டறிவதே கடினமான செயல் அல்லவா?)

Read 'Vasanthi's Suggestionthe English version of this story.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்






















Monday, March 19, 2018

139. சீட்டுப் பணம்

"என்னங்க இது? அனாதையாத் திரிஞ்சிக்கிட்டிருந்த பையனுக்கு நீங்க வேலை கொடுத்துப் பிழைப்புக்கு வழி பண்ணினீங்க. அவனும் இத்தனை வருஷமா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். இப்ப உங்ககிட்ட சொல்லிக்காம வேலையை விட்டு நின்னுட்டு, உங்களுக்குப் போட்டியா அவனே தொழில் ஆரம்பிச்சிருக்கான். அவனைச் சும்மா விடலாமா?" என்றாள் சுந்தரி.

சபாபதி பதில் சொல்லவில்லை.

"இப்படி நன்றியில்லாம நடந்துக்கிட்டதுக்கு..."

"வேணாம். அவனை சபிக்கிற மாதிரி எதுவும் சொல்லிடாதே! அவன் நல்லா இருந்துட்டுப் போகட்டும்" என்றார் சபாபதி.

"நமக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவங்களை நாலு வார்த்தை சொல்லித் திட்டினாத்தானே மனசு ஆறும்?" என்றாள் சுந்தரி.

"நல்லவங்களா இருக்கறதுக்கு அடையாளம் நல்ல வார்த்தைகளையே பேசறதுதான்" என்றார் சபாபதி.

"என்னங்க நீங்க பேசறது? தப்புப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்காம வேணும்னா விட்டுடலாம். ஆனா நம்ப வயித்தெரிச்சல் தீர ரெண்டு வார்த்தை சொல்றது கூடவா தப்பு?"

"தப்புதான்."

"நீங்க சொல்றது விசித்திரமா இருக்கு. சில பேரு தங்களோட கோபத்தைக் காட்ட வசவுச் சொற்களைப் பயன்படுத்துவாங்க. ஆனா கண்ணியமாப் பேசறவங்க இந்த மாதிரி சொற்களைப் பயன்படுத்த மாட்டாங்க. 'அவன் நல்லா இருப்பானா?' 'அவன் நாசமாத்தான் போவான்' என்கிற மாதிரி ஏதாவது சொல்லுவாங்க. இதுதானே உலக வழக்கம்?"

"கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தறது நமக்கு நாமே கொடுத்துக்கற தண்டனை."

"எப்படிச் சொல்றீங்க?"

"முனிவர்கள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிச்சு கடுமையா தவம் பண்ணி சில சக்திகளைப் பெறுவாங்க. ஆனா அவங்க யாருக்காவது சாபம் கொடுத்தா அவங்க தவ வலிமை குறைஞ்சுடும்னு புராணக் கதைகள்ள படிச்சிருக்கோம். சாபம் கொடுக்கறதுங்கறது மத்தவங்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடிய சொற்களைப் பேசறதுதானே? இது மாதிரி தீய சொற்களை முனிவர்கள் பயன்படுத்தினா அவங்க தவ வலிமை குறைஞ்சிடும்னா என்ன அர்த்தம்? அவங்களோட ஒழுக்கமும், கட்டுப்பாடும் கட்டுக்குலைஞ்சு போச்சுன்னுதானே? இது அவங்க தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கற தண்டனையில்லாம வேற என்ன?"

சுந்தரி பதில் சொல்லவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, மாதாந்திரச் சீட்டு நடத்தி வந்த ஒருவர் சீட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகச் செய்தி வந்தது. சுந்தரியும் அவரிடம் சீட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கட்டியிருந்தாள். செய்தி கேட்டதும் முதலில் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து, ஏமாற்றி விட்டு ஓடிப் போனவன் மீது ஆத்திரம் வந்தது. "அவன் நாச..." என்று ஆரம்பித்தவள் "அவன் நல்லா இருக்கட்டும்!" என்று வாக்கியத்தை மாற்றிக் கொண்டாள்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல்.

பொருள்:  
வாய் தவறிக் கூடத் தீய சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களுக்கு ஏற்புடையதல்ல.

Read 'I Wish Him Well' the English version of this story.
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்





















Saturday, March 17, 2018

138. பயிற்சியில் துவங்கிய பழக்கம்

என் நண்பன் முருகேஷ் மதுரையில் ஒரு மருத்துவமனையில் குடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்ததுமே மதுரைக்குச் சென்று அவனைப் பார்க்க விரும்பினேன். ஆயினும் அலுவலகப் பணியினால் உடனே மும்பையிலிருந்து கிளம்பி மதுரைக்குச் செல்ல முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து நான் மதுரைக்குச் சென்றபோது முருகேஷ் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குப் போயிருந்தான். அவன் வீட்டுக்குச் சென்றபோது படுக்கையில் படுத்திருந்த உருவத்தைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

முருகேஷா இவன்? என்னதான் நான் முருகேஷப் பார்த்துச் சில வருடங்கள் ஆகி விட்டன என்றாலும் இப்படியா அடையாளம் தெரியாமல் மாறியிருப்பான்! ஒரு எலும்புக்கூடு படுத்திருப்பது போல் படுத்திருந்த அவன் தோற்றத்தைக் கண்டதும் துக்கம் என் நெஞ்சை அடைத்தது.

நான் அந்தப் பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன், ஒரு மாதப் பயிற்சிக்காக டில்லியில் இருந்த நிறுவனத்தின் பயிற்சிக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டேன். அங்குதான் முருகேஷைத் சந்தித்தேன். சந்தித்த சில நிமிடங்களிலேயே நாங்கள் இருவரும் நெருக்கமாகி விட்டோம்.

பயிற்சியின் இறுதி நாளில் எங்களுக்கு ஒரு உயர்தர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. விருந்துக்கு முன் மது வழங்கப்பட்டது. அதற்கு முன்பே மது அருந்தப் பழகிக் கொண்டவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மதுவருந்தத் தொடங்கினர்.

நான், முருகேஷ் போன்ற மதுப் பழக்கம் இல்லாத ஒரு சிலர் மட்டும் தனித்து நின்றோம். எங்கள் பயிற்சி அதிகாரி, "சும்மா குடிங்க! இது மாதிரி உயர்ந்த சரக்கெல்லாம் வெளியில கிடைக்காது. எப்பவாவது குடிச்சா ஒண்ணும் ஆயிடாது. நான் கூட இது மாதிரி பார்ட்டிகள்ள மட்டும்தான் குடிப்பேன். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?" என்றார்.

அவர் பேச்சைக் கேட்டு மதுவைச் சுவைக்கத் தொடங்கியவர்களில் முருகேஷும் ஒருவன்.

முருகேஷும் நானும் வெவ்வேறு ஊர்களில் பணி செய்து வந்ததால் எங்களால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிந்ததில்லை. ஆயினும் இருவரும் தொடர்பில்தான் இருந்தோம்.

எனக்குப் பதவி உயர்வுகள் கிடைத்துத் துணைப் பொது மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டேன். ஆனால் முருகேஷ் இன்னும் ஒரு கீழ்நிலை அதிகாரியாகத்தான் இருந்தான்.

அன்று டில்லி ஓட்டலில் தொடங்கிய மதுப்பழக்கம் முருகேஷை உடும்பு போல் பற்றிக்கொண்டு விட்டது. ஒரு நாள் கூட அவனால் மது அருந்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

நான் அவனை நேரில் பார்க்கும்போதெல்லாம் மதுப்பழக்கத்தை விடச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறாள். ஆனால் அவனால் மதுப் பழக்கத்தை விட முடியவில்லை.

குடிப்பழக்கம் அவன் குடலைச் சிதைத்த நிலையில்தான் அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

"என்னடா இப்படி ஆயிட்டே?" என்றேன்.

பின்புறமிருந்து ஒரு விசும்பல் கேட்டது. முருகேஷின் மனைவி பானுமதி!

"நீங்க, நான், இன்னும் எத்தனையோ பேரு சொல்லியும் கேக்காம குடிச்சுக் குடிச்சு உடம்பைப் பாழாக்கிக்கிட்டு இப்படிப் படுக்கையில் கிடக்கறாரு பாருங்க!" என்றாள் அவள்.

"இனிமேலாவது இந்தப் பழக்கத்தை விடுடா!" என்றேன் நான்.

முருகேஷ் மௌனமாகத் தலையாட்டினான்.

"மறுபடியும் குடிச்சா உயிரே போயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. என் மேல பரிதாபப்பட்டாவது அவரைக் குடிக்காம இருக்கச் சொல்லுங்க" என்றாள் பானுமதி.

"இனிமே குடிக்க மாட்டேன்" என்றான் முருகேஷ்.

"உங்களால முடியுமா?" என்றாள் பானுமதி அவனிடம். தொடர்ந்து, என்னிடம் "எங்களுக்குக் குழந்தைங்க இல்லாதது ஒரு விதத்தில நல்லதுன்னு தோணுது. இவரு குடிக்கு ஆகிற செலவு போக மீதி இருக்கிற பணத்தில நாங்க ரெண்டு பேரு குடித்தனம் நடத்தறதே பெரும்பாடா இருக்கு. இதில குழந்தைங்க வேற இருந்தா அவங்களுக்கு என்னால ரெண்டு வேளை சோறு போடக் கூட முடிஞ்சிருக்காது. அப்புறம் படிக்க வைக்கறதெல்லாம் எங்கே? இன்னொரு விதத்தில பாத்தா, குழந்தைங்க இருந்திருந்தா எனக்குக் கொஞ்சம் ஆதரவா இருந்திருப்பாங்கன்னு தோணுது" என்றாள் வருத்தத்துடன்.

"டேய்! மூணு மாசம் லீவு போட்டுட்டு நீங்க ரெண்டு பெரும் மும்பைக்கு வந்து என்னோட இருங்க. ஒரு மாறுதலா இருக்கும். என்னோட இருந்தா உன் குடிப்பழக்கத்தையும் உன்னால விட முடியும்" என்றேன் நான். என்னால் வேறு என்ன செய்ய முடியும்?

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்..


பொருள்:  
நல்லொழுக்கம் நன்மைகள் விளைவதற்கு அடிப்படையாக அமையும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத்தான் தரும்.

Read 'An Evening That Changed the Lifethe English version of this story.
 பொருட்பால்                                                                                   காமத்துப்பால்






















Friday, March 16, 2018

137. பணமோசடி

"என்ன திடீர்னு ஆஃபீஸ்ல ஒரே பரபரப்பு?" என்றான் கோவர்த்தனம். பொதுவாக அவன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன்.

"ஏதோ மோசடி நடந்திருக்காம்" என்றான் கணேசன். அவன் இப்போதுதான் ஜெனரல் மானேஜர் அறைப்பக்கம் போய் நோட்டம் பார்த்து விட்டு வந்திருந்தான்.

"என்ன மோசடி?"

"நம்ப சப்ளையரோட அக்கவுன்ட்டுக்குப் போக வேண்டிய மூணு லட்ச ரூபாய் வேற ஏதோ அக்கவுன்ட்டுக்குப் போயிருக்கு."

"அது எப்படி முடியும்? சீஃப் அக்கவுன்டன்ட்தானே பாங்க் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் பண்ணுவாரு?"

"யாரோ அவரோட பாஸ்வேர்டைப் பயன்படுத்திப் பணத்தை வேற அக்கவுன்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. சப்ளையருக்கு தொடர்ச்சியா நிறைய பேமெண்ட் நடந்துக்கிட்டிருக்கறதால இந்த ஒரு பேமெண்ட் வரல்லேங்கறதை அவங்க கண்டு பிடிச்சு நம்பகிட்ட கேட்டு, நாம கணக்கெல்லாம் செக் பண்ணி பாங்க்ல போய் விசாரிச்சு இப்படி ஒரு மோசடி நடந்துருக்குங்கறதைக் கண்டு பிடிக்கவே மூணு மாசம் ஆயிடுச்சு. போலீஸ்ல புகார் கொடுத்து ரெண்டு மூணு வாரம் ஆயிடுச்சாம். ஆனா மேனேஜ்மேன்ட்ல விஷயத்தை ரகசியமா வச்சிருந்திருக்காங்க. இன்னிக்குத்தான் ரெண்டு போலீஸ் அதிகாரிங்க நம்ம ஆஃபீசுக்கு வந்திருக்காங்க" என்று விளக்கினான் கணேசன்.

"யார் அக்கவுன்ட்டுக்குப் பணம் போயிருக்குன்னு கண்டு பிடிச்சு அவங்களைப் புடிச்சுடலாமே!" என்றான் கோவர்த்தனம்.

"அது புதுசா ஓப்பன் பண்ணின அக்கவுன்ட்டாம். ரெண்டு மூணு தடவையா பணத்தை வித்ட்ரா பண்ணிட்டு அக்கவுன்ட்டைத் துடைச்சு வச்சுட்டுப் போயிட்டான் போலருக்கு! ஐடி ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப் எல்லாமே போலியாம்!" என்றான் கணேசன்.

"நம்ப ஸ்டாஃப் யாரையாவது சந்தேகப்படறாங்களா?" என்றான் கோவர்த்தனம்.

கணேசன் இதற்கு பதில் சொல்வதற்குள் பியூன் வந்து கோவர்த்தனத்திடம், "சார்! ஜி.எம் உங்களைக் கூப்பிடறாரு" என்று சொல்ல, கோவர்த்தனம் எழுந்து ஜெனரல் மானேஜரின் அறைக்குச் சென்றான்

ஜி.எம் அறையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். கோவர்த்தனம் உள்ளே போனதும், ஜி.எம் அவனிடம், "கோவர்த்தனம்! பத்து வருஷம் முன்னால விநாயகா என்டர்ப்ரைசஸ்ங்கற கம்பெனியில நீங்க ஒர்க் பண்ணினீங்களா?" என்றார்.

கோவர்த்தனம் அதிர்ச்சி அடைந்தவனாக "ஆமாம் சார்!" என்றான், மென்று விழுங்கியபடி.

"நீங்க இங்க வேலைக்குச் சேர்ந்தபோது கொடுத்த அப்ளிகேஷன்ல அந்த கம்பெனியில வேலை செஞ்சதா சொல்லலியே, ஏன்?" என்றார் அவர்.

"எப்படிச் சொல்லுவான்? அங்கே அவன் ஐம்பதாயிரம் ரூபா கையாடல் பண்ணி மாட்டிக்கிட்டு வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆனதைப் பெருமையாவா சொல்லிக்க முடியும்?" என்றார் போலீஸ் அதிகாரி. உடனேயே அவனைப் பார்த்து "சொல்லுடா! இந்த மூணு லட்ச ரூபா மோசடியைப் பண்ணினது நீதானே?" என்றார்.

கோவர்த்தனத்துக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. பத்து வருடம்  முன்பு, இளம் வயதில் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிறையத் தோற்றுக் கடன் வாங்கி, கடனை அடைக்க முடியாமல் ஏதோ ஒரு வேகத்தில் ஆஃபீஸ் பணத்தை எடுத்து மாட்டிக்கொண்டதும், பிறகு அம்மாவின் நகைகளை விற்றுப் பணத்தைக் கட்டி விட்டதால், அந்த நிறுவனம் போலீசில் புகார் கொடுக்காமல் அவனை வேலையை விட்டு அனுப்பியதும் மனதில் படக்காட்சிகள் போல் வேகமாக வந்து போயின.

"இது எப்படி எங்களுக்குத் தெரியும்னு யோசிக்காதே. இங்கே வேலை செய்யற ஒவ்வொருத்தரோட பின்னணியையும் நாங்க ஆராய்ஞ்சுக்கிட்டிருக்கோம். நீ இங்கே வேலைக்குச் சேர்ந்து பத்து வருஷம் ஆகுது. ஆனா நீ படிப்பை முடிச்சு 12 வருஷம் ஆகுது. ரெண்டு வருஷம் வேலை தேடிக்கிட்டிருந்ததா சொல்லி நீ இவங்களை நம்ப வச்சிருக்கே. ஆனா நாங்க சந்தேகப்பட்டு விசாரிச்சு உன் பழைய வேலை விவரங்களைக் கண்டு புடிச்சுட்டோம். சொல்லு. மூணு லட்ச ரூபாயை என்ன பண்ணினே?" என்றார் அந்த அதிகாரி.

கோவர்த்தனம் ஜி.எம்மைப் பார்த்து, "சார்! நான் ஒரு தடவை தப்பு செஞ்சது உண்மைதான். ஆனா அதுக்கப்பறம் ஒரு சின்னத் தப்புக் கூடச் செய்யக் கூடாதுன்னு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இந்த கம்பெனியில இந்தப் பத்து வருஷத்திலே நான் ஒரு தப்பு கூடப் பண்ணினதில்ல சார். இந்த பாங்க் ட்ரான்ஸ்ஃபர் மாதிரி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியவும் தெரியாது சார்! என்னை நம்புங்க!" என்றான், கெஞ்சும் குரலில்.

ஜி.எம் பதில் சொல்லாமல் போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தார்.

"இப்ப எங்களுக்கு உன் மேலதான் சந்தேகம். அதனால உன்னை அரெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்" என்றார் போலீஸ் அதிகாரி.

"சார்!" என்றான் கோவர்த்தனம், ஜி.எம்மைப் பார்த்து.

ஜி.எம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

கோவர்த்தனம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கோவர்த்தனம் விடுதலை செய்யப்பட்டான்.

கோவர்த்தனம் விடுதலையாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனத்தின் வீட்டுக்கு அவன் அலுவலக நண்பன் கணேசன் வந்தான். அவன் முகத்தைப் பார்க்கவே கோவர்த்தனத்துக்கு அவமானமாக இருந்தது.

"டேக் இட் ஈஸி! அதுதான் உன் மேல் குத்தம் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சே!" என்றான் கணேசன்.

"பத்து வருஷத்துக்கு முன்னால நான் பண்ணின தப்பு என்னை இன்னும் விரட்டிக்கிட்டு வருதே! எவ்வளவு அவமானம்! உன் மூஞ்சியைப் பார்க்கக் கூட எனக்கு சங்கடமா இருக்கு" என்றான் கோவர்த்தனம்.

"பரவாயில்ல, விடு!" என்றான் கணேசன்.

"நான் அப்படி ஒரு தப்பைப் பண்ணினதாலதானே இப்ப என்னை சந்தேகப்பட்டாங்க? ஒரு தடவை பண்ணின தப்பு இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் சரிவையும் கொடுத்திருக்கு பாரு! ஆனா எனக்கு ஒரு வருத்தம்."

"என்ன?"

"ஒரு தடவை தப்பு பண்ணினேன். அதுக்கு தண்டனைதான் இந்தப் பழியும் அவமானமும். சரி. ஆனா இந்தப் பத்து வருஷமா நேர்மையா நடந்துக்கிட்டிருக்கேனே, அந்த நேர்மைக்கு ஒரு பலனும் கிடையாதா?"

"ஏன் கிடையாது? நிச்சயமா உண்டு" என்றான் கணேசன்.

"தத்துவம் எல்லாம் வேண்டாம். என் நேர்மைக்கு எனக்கு என்ன பலன் கிடைச்சிருக்கு?"

"கிடைச்சிருக்குப்பா! அதைச் சொல்லத்தான் வந்தேன். ஆனா நீ, நான் வந்தவுடனேயே புலம்ப ஆரம்பிச்சுட்டே! உன் மன பாரம் கொஞ்சம் இறங்கினப்பறம் நான் சொல்ல வந்த நல்ல விஷயத்தைச் சொல்லலாம்னு காத்துக்கிட்டிருக்கேன்."

"என்ன நல்ல விஷயம்?"

"பணத்தைக் கையாடினது நீ இல்லைன்னு தெரிஞ்சுட்டாலும், உன் பழைய வேலையைப் பத்திச் சொல்லாம மறைச்சுட்டேன்னு ஜி.எம் உன் மேல கோபமாத்தான் இருந்தாரு. ஆனா இத்தனை வருஷமா கம்பெனியில நேர்மையா, கடினமா உழைச்ச உனக்கு தண்டனை கொடுக்கக் கூடாதுன்னு  நெனச்சு உன்னை மறுபடியும் வேலையில சேத்துக்கறதுன்னு முடிவு பண்ணி இருக்காரு. உன் சஸ்பென்ஷனை ரத்து பண்ணி மறுபடியும் வேலையில சேரச் சொல்லி கம்பெனியிலிருந்து உனக்குக் கடிதம் அனுப்பிச்சுட்டாங்க. அநேகமா நாளைக்கே அந்தக் கடிதம் உனக்கு வரலாம்" என்றான் கணேசன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி.

பொருள்:  
ஒழுக்கத்தினால் ஒருவருக்கு மேன்மை கிடைக்கும். ஒழுக்கம் தவறுபவருக்கு வேண்டாத பழி வந்து சேரும்.

Read 'Accusation and Acquittal' the English version of this story.
    பொருட்பால்                                                                                   காமத்துப்பால்