About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, April 2, 2018

144. பெண்ணே நீ வாழ்க!

"பி எச் டி பண்றதுன்னா நல்ல கைடு இருக்கணும். அப்பத்தான் ஒன்னோட ஆராய்ச்சியும் நல்லா அமையும். ஒன்னோட பி எச் டிக்கும் நல்ல மதிப்பு இருக்கும்" என்று பலரும் அறிவுறுத்தியதால் சங்கீதா டாக்டர் பரமேஸ்வரனை அணுக முடிவு செய்தாள். சரித்திரப் பேராசிரியரான பரமேஸ்வரன் அகில இந்திய அளவில் பெயர் பெற்றவர்.

"நிறைய பேர் அவர் கீழேதான் பி எச் டி பண்ணனும்னு விரும்பறதால, நல்ல அகாடமிக் பேக்ரவுண்ட் இருக்கிற சில பேரை மட்டும் இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டு அவங்கள்ள சில பேரைத்தான் அவர் தேர்ந்தெடுப்பாரு. நீ ஒரு பிரைட் ஸ்டூடண்ட்ங்கறதால உனக்கு வாய்ப்பு இருக்கு. முயற்சி பண்ணிப்பாரு" என்றார் அவள் படித்த கல்லூரியின் முதல்வர்.

சங்கீதா விண்ணப்பித்த சில நாட்களிலேயே அவளை இன்டர்வியூவுக்கு வரச்சொல்லி பரமேஸ்வரனிடமிருந்து அழைப்பு வந்தது.

ங்கீதாவின் விண்ணப்பத்தை ஒருமுறை வேகமாகப் படித்த பரமேஸ்வரன், "எந்த டாபிக்ல ரிஸர்ச் பண்ணப் போறீங்க?" என்றார்.

"'சோழர்கள் பல்லவர்களிடையே உள்ள கலாச்சார ஒற்றுமைகளும், வேறுபாடுகளும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி பண்ணலாம்னு இருக்கேன் சார்!"

"இன்ட்ரஸ்டிங்! இந்த ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது?"

"காஞ்சிபுரத்தில சில கோவில்களுக்குப் போயிருந்தேன். அந்தக் கோவில்களில் பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள் ரெண்டு பேருமே திருப்பணிகள் செஞ்சிருக்காங்க. அங்கே இருக்கும் கட்டடங்கள், சிற்பங்கள்ள ரெண்டு கலாச்சாரங்களும் கலந்து இணைஞ்சிருக்கு. அதையெல்லாம் பார்த்தபோது இந்த எண்ணம் தோணிச்சு. இதுல ஆராய்ச்சிக்கு எந்த அளவுக்கு ஸ்கோப் இருக்குன்னு நீங்கதான் என்னை எஜுகேட் பண்ணி எனக்கு வழி காட்டணும்."

"பிரில்லியண்ட்! ஒங்க அப்ரோச் எனக்குப் புடிச்சிருக்கு. பொதுவா பி எச் டி பண்றவங்க ஏதாவது ஒரு ரொட்டீன் டாபிக்கை எடுத்துக்கிட்டு ஒப்புக்கு ஒரு பேப்பரை எழுதிப் பட்டம் வாங்கிட்டுப் போயிடணும்னு பார்ப்பாங்க. ஆனா நீங்க பார்த்த ஒரு விஷயத்தை நீங்க படிச்ச படிப்போடு ரிலேட் பண்ணி ரிஸர்ச் பண்ண நினைக்கிறீங்க. உங்களுக்கு கைடா இருக்கறதுக்கு நான் பெருமைப்படணும்."

சங்கீதாவுக்குப் புல்லரித்தது. பரமேஸ்வரன் அவள் அணுகுமுறையைப் புகழ்ந்ததுடன் அவளை மாணவியாக ஏற்கவும் இணங்கி விட்டார்!

"ரொம்ப நன்றி சார்! நீங்க என்னை மாணவியா ஏத்துக்கிட்டது என்னோட அதிர்ஷ்டம்" என்றாள் மகிழ்ச்சி  பொங்க.

"ஆனா சங்கீதா, நீங்க எனக்கு ஒரு குருதட்சிணை கொடுக்கணுமே!" என்றார் பரமேஸ்வரன் சிரித்துக்கொண்டே.

"என்ன சார் அது?" என்றாள் சங்கீதா, பணம் ஏதாவது கேப்பாரோ என்று பயந்தபடி.

"ஒன்னை மாதிரி அழகான பெண் என் மாதிரி ஆணுக்குக் கொடுக்கறதுக்கு ஒரு விஷயம்தானே இருக்க முடியும்?" என்றார் பரமேஸ்வரன் அவளை உற்றுப் பார்த்தபடி.

சங்கீதாவுக்கு உடல் முழுவதும் சூடு பரவியது. இத்தனை நேரம் மரியாதையாக அழைத்துக் கொண்டிருந்தவர் இப்போது ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டதையும் கவனித்தாள்.

"சார்! வாட் டூ யு மீன்?"

"ரொம்ப சிம்ப்பிள். எங்கிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும். அவ்வளவுதான்!"

"சார்! நீங்க பேசறது சரியில்ல. நான் கல்யாணமானவை."

"அதுதான் அப்ளிகேஷன்லியே சொல்லி இருக்கியே! கவலைப்படாதே! யாருக்கும் தெரியாது."

சங்கீதாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விருட்டென்று எழுந்தாள்.

"ஒரு நிமிஷம்" என்றார் பரமேஸ்வரன்.

ஆனால் சங்கீதா நிற்கவில்லை.

வேறொரு பேராசிரியரை வழிகாட்டியாகக் கொண்டு சங்கீதா தன் பி எச் டியை முடித்து விட்டாள். ஆயினும் பரமேஸ்வரனிடம் அவளுக்கு ஏற்பட்ட அனுபவம் அவள் மனதின் அடியில் நெருப்புத் துண்டு போல் அமர்ந்து அவளைச் சுட்டுக்கொண்டே இருந்தது.

'இப்படிப்பட்ட அயோக்கியர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடமாடுகிறார்களே! எத்தனை பெண்கள் வேறு வழியில்லை என்று நினைத்து  அவனுடைய விருப்பத்துக்கு இணங்கியிருப்பார்களோ!' என்று நினைத்து மனம் புழுங்கிக்கொண்டே இருந்தாள்.

பரமேஸ்வரன் தன்னிடம் நடந்து கொண்டது பற்றி அவளால் வெளியே சொல்ல முடியாது. ஆனாலும் அவனுடைய சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும்!

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

பல நாட்கள் யோசனை செய்தபிறகு ஒரு எண்ணம் தோன்றியது.

'பெண்ணே நீ வாழ்க' பத்திரிகையின் ஆசிரியை மாலினி, சங்கீதா கொடுத்த கட்டுரையைப் படித்துப் பார்த்தாள்.

"இது உண்மையாகவே நடந்ததா?" என்றாள்.

"ஆமாம்" என்றாள் சங்கீதா.

"முனைவர் பட்டம் - ஒரு பெண்ணின் அனுபவம்' என்கிற தலைப்பில  நீங்க எழுதியிருக்கிற கட்டுரையை ஒரு உண்மைச் சம்பவம்ன்னு சொல்லி என்னால வெளியிட முடியும். ஆனா இதில பாதிக்கப்பட்ட பெண்ணோட பேரும் இல்லை. அந்தப் பேராசிரியரின் பேரும் இல்லை. இதைப் பிரசுரிக்கறதனால என்ன பயன் இருக்கும்னு நினைக்கிறீங்க?"

"மேடம். அந்தப் பெண் நான்தான். ஆனால் என் பெயரை வெளியிடுவது எனக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்ங்கறது உங்களுக்குத் தெரியும். அந்தப் பேராசிரியரின் பெயரை நான் குறிப்பிட்டு எழுதினா, அவர் அதை மறுப்பார். உங்க பத்திரிகை மேலயும், என் மேலயும் மான நஷ்ட வழக்குப் போடுவார். எங்கிட்ட இதை உண்மைன்னு நிரூபிக்க ஆதாரம் எதுவும் இல்லை."

"நீங்க சொல்றதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனா இதை வெளியிடறதனால என்ன பயன்னுதான் யோசிக்கிறேன்."

"மேடம்! நான் குறிப்பிட்டிருக்கிற அந்தப் பேராசிரியர் யார்னு உங்களால ஊகிக்க முடியுமா?"

"பரமேஸ்வரன்ங்கறது என்னோட யூகம்!"

"கரெக்ட். எப்படி ஊகிச்சீங்க?"

"கட்டுரையில நீங்க குறிப்பிட்டிருக்கிற ரெண்டு விஷயங்களை வச்சுத்தான். அவர் அகில இந்திய அளவில பெயர் பெற்றவர்னு சொல்லி இருக்கீங்க. ரெண்டாவது உங்களை ஒரு சரித்திர மாணவின்னு சொல்லி இருக்கீங்க. இந்த ரெண்டு விஷயங்களை வச்சுப் பார்க்கும்போது அவரோட பேருதான் எனக்கு முதல்ல நினைவு வந்தது."

"நீங்க புரிஞ்சுக்கிட்ட மாதிரி, இதைப் படிக்கிற வாசகர்களும் இது யாருன்னு புரிஞ்சுப்பாங்க இல்ல?"

"எஸ். ஐ திங்க் ஸோ! அட் தி ஸேம் டைம் தன்னைப் பத்திதான் எழுதியிருக்கோம்னு அவரால சொல்ல முடியாது. அப்படிச் சொன்னா, அது அவருக்குத்தான் பாதகமா அமையும். ஓகே! நான் இதைப் பிரசுரிக்கிறேன்!"

"தாங்க்ஸ் மேடம்!" என்றாள் சங்கீதா.

ரண்டு வாரங்களுக்குப் பிறகு சங்கீதாவுக்கு 'பெண்ணே நீ வாழ்க' ஆசிரியர் மாலினியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

"மிஸஸ் சங்கீதா! உங்க கட்டுரைக்கு நிறைய ரெஸ்பான்ஸ் வந்திருக்கு. அவரால பாதிக்கப்பட்ட பல பெண்கள் கடிதம் மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் தங்களோட அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிட்டிருக்காங்க. நாம அவரோட பேரைக் குறிப்பிடாட்டாலும் அது பரமேஸ்வரன்தான்னு நிறைய பேர் புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. யூனிவர்சிட்டி வைஸ் சான்சலர் கூட அப்செட் ஆகியிருக்கார்னு கேள்விப்பட்டேன்.  இன்னொரு ஆச்சரியமான விஷயம். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் இந்தியா முழுக்க ரீச் ஆகியிருக்கு. அடுத்த மாசம் டெல்லியில நடக்கற சரித்திர ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டுக்கு பரமேஸ்வரன் தலைமை வகிக்கிறதா இருந்தது. இப்ப ஒரு காரணமும் சொல்லாம வேற ஒருத்தர் தலைமை வகிக்கப் போறதா அறிவிப்பு வந்திருக்கு. நீங்க அவருக்குக் கொடுத்த அடி அவ்வளவு வலுவா அவர் மேல விழுந்திருக்கு. கங்கிராசுலேஷன்ஸ்!" என்றாள் மாலினி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல்.

பொருள்:  
எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவரானாலும், சற்றும் ஆராயாமல் பிறர் மனைவியிடம் ஆசை வைத்தால் அவர் நிலை என்னாகும்?

2 comments:

  1. ஐயா வணக்கம், எல்லா நாளும் தன்
    நன்னாள் ஆகட்டும்.
    மிக நல்ல கதைகள், உங்கள் பணி செவ்வென தொடரட்டும். நன்றி

    ReplyDelete