நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வெள்ளி விழா தம்பதிக்குத் தமிழிலும், ஆங்கிலத்திலும் விதவிதமாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
தன் அருகில் நின்றிருந்த கணவன் நாகராஜனைப் பெருமையுடன் பார்த்தாள் புவனா.
கல்யாணம் ஆகும்போது அவளுக்கு வயது 20, நாகராஜனுக்கு 25.
கல்யாணம் ஆகி ஒரு வருடத்தில் கார்த்திக்கும், மூன்றாவது வருடத்தில் செல்வியும் பிறந்து விட்டார்கள்.
காலம் வேகமாக ஓடி விட்டது. நாகராஜன் வேலையில் வேகமாக முன்னேறி, அவனுடைய நிறுவனத்தின் பொது மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டான்.
சொந்த வீடு, சொகுசுக்கார், வருடம் தவறாமல் உல்லாசப் பயணம் என்று வாழ்க்கை இன்பமாக ஓடியது புவனாவுக்கு.
கார்த்திக் படிப்பை முடித்து விட்டு வேலைக்குப் போய் விட்டான். செல்வியும் படிப்பை முடித்து விட்டு, மேற்படிக்கு அமெரிக்கா செல்லத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள்.
நாகராஜனின் நீண்ட நாள் நண்பன் சந்துரு "குடும்ப வாழ்க்கை எப்படி நடத்தணும்கறதுக்கு நீ ஒரு உதாரணமா இருக்கடா!" என்று சொன்னபோது, புவனாவுக்குப் பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் நாகராஜன் அலுவலகத்துக்குச் சென்றபோது, அவனது உதவியாளர் பிரேமா "என்ன சார்! சில்வர் ஜூப்லி எல்லாம் அமர்க்களமா நடந்ததா?" என்றாள்.
"ஓ! நீ ஏன் வரல?" என்றான் நாகராஜன்.
"அதான் சொன்னேனே சார்! என் ஹஸ்பெண்ட் நேத்து ராத்திரி ஜெர்மனிக்குக் கிளம்பிப் போனார். அவர் கிளம்பும்போதே மணி பத்து. அதுக்கப்பறம் எங்க வரது?"
"ஐ மிஸ்ட் யூ!" என்றான் நாகராஜன்.
"உண்மையாவா?" என்றாள் பிரேமா, சிரித்துக் கொண்டே.
"எனக்கு ஒரு முக்கியமான கால் இருக்கு. அரைமணி நேரத்துக்கு யாரும் என்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு பியூன் கிட்ட சொல்லிடு" என்றான் நாகராஜன்.
"நான் இருக்கலாமா?"
"நீதானே நோட்ஸ் எடுக்கணும்!"
பிரேமா வெளியில் சென்று பியூனிடம் ஏதோ சொல்லி விட்டு உள்ளே வந்து கதவைப் பூட்டினாள்.
கதவைப் பூட்டி விட்டு அவள் திரும்புவதற்குள் நாகராஜன் அவள் அருகில் வந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 15
பிறனில் விழையாமை
குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன்.
பொருள்:
பிறன் மனைவியை விரும்பாதவனே அறவழியில் இல்வாழ்க்கை நடத்துவதாகக் கருதப்படுவான்.
No comments:
Post a Comment