"முப்பது வருஷமா அரசியல்ல இருக்கீங்க. உங்க மேல யாரும் ஒரு தப்புக் கூடச் சொன்னதில்லை. எல்லாக் கட்சித் தலைவர்களும் உங்களை வந்து பார்த்துத் தங்களோட மரியாதையைத் தெரிவிச்சுட்டுப் போறாங்க. உங்களைப் பத்தி ஒரு சின்னப்பய இப்படி எழுதிட்டானே!" என்றான் அருள்மொழி.
"என்ன எழுதிட்டான்?" என்றார் பெரியசாமி.
"நீங்க அரசியல்லேருந்து ஒய்வு பெறப் போறதா அறிவிச்சீங்க இல்ல, அதைக் கிண்டல் பண்ணி, 'பூனை சந்நியாசம் வாங்கிட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு இது' அப்படின்னு எழுதி இருக்கான்,"
"அப்படீன்னா?"
"என்னங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறீங்க?"
"இப்படிப்பட்ட உதராணங்கள் இந்தக் காலத்தில யாருக்கும் புரியாதே! அதனால அதுக்கு விளக்கம் கொடுத்திருப்பானே, அதைக் கேட்டேன்!"
"அதானே பாத்தேன்! உங்களுக்குப் புரியாத விஷயம்னு ஏதாவது இருக்கா என்ன? நீங்க நினைக்கறது சரிதான். பூனை சந்நியாசம் வாங்கினாலும், எலியைப் பாத்தா, அதைப் பிடிக்கப் பாய்ஞ்சு ஓடுமாம். அது மாதிரி நீங்க அரசியலேந்து ஒய்வு பெற்றாலும், ஊழல் பண்ண வாய்ப்புக் கிடைச்சா, அதை கப்புனு பிடிச்சுப்பீங்களாம்!"
"அடப்பாவி! என் மேல யாரும் இதுவரைக்கும் எந்த ஊழல் புகாரும் சொன்னதில்லையே!"
"அதான் தலைவரே, எனக்கு நெஞ்சு கொதிக்குது!"
"எழுதினது யாரு? எந்தப் பத்திரிகையில வந்திருக்கு?"
"'அக்கப்போர்' பத்திரிகையிலதான். 'அறிவுக்கொழுந்து'ன்னு ஒரு அரைவேக்காடு அதில அடிக்கடி எழுதுவானே, அவன்தான் எழுதி இருக்கான்."
"ஓ! அது ஒரு குப்பைப் பத்திரிகை ஆச்சே! சரி. பத்திரிகையைக் கொடு. படிச்சுப் பாக்கறேன்" என்றார் பெரியசாமி.
"உங்களைப் பத்தி ரொம்ப அவதூறா எழுதியிருக்கான்யா. நீங்க ஏகப்பட்ட ஊழல் பண்ணிட்டு, உத்தமர் வேஷம் போடறீங்களாம். வெளிநாட்டு வங்கிகள்ள பணம் வச்சிருக்கறவங்க பட்டியல் அரசாங்கத்துக்கு வந்திருக்காம். அந்தப் பட்டியல்ல உங்க பேரும் இருக்காம்! அது தெரிஞ்சுதான், அரசியல்லேர்ந்து ஒதுங்கி இருந்தீங்கன்னா, உங்க அரசியல் எதிரிங்க உங்களை விட்டுடுவாங்கன்னு நெனச்சு, நீங்க அரசியல்லேர்ந்து விலகிட்டீங்களாம். எப்படிப்பட்ட அவதூறு பாருங்க!" என்று சொல்லியபடியே, அருள்மொழி அவரிடம் பத்திரிகையைக் கொடுத்தான்.
கட்டுரையைப் படித்த பின், பெரியசாமி, "ரொம்பக் கடுமையாத்தான் இருக்கு!" என்றார்.
"நீங்க அரசியல்லேந்து ஒய்வு பெற்றுட்டீங்கங்கறதனால, நீங்க செல்லாக்காசா ஆயிட்டீங்கன்னு நெனச்சு உங்களைச் சீண்டிப் பாத்திருக்கான். சொல்லுங்க. அமைச்சர்கிட்ட சொன்னா, அவனைப் புடிச்சு உள்ள போட்டுருவாரு. 'அக்கப்போர்' பத்திரிகையையும் ரெண்டு மாசம் வர விடாம முடக்கச் சொல்லிடலாம்."
"அதெல்லாம் எதுக்கு? கோர்ட்ல அவன் மேல அவதூறு வழக்குப் போட்டா, அவனால அதைச் சமாளிக்க முடியாது. வக்கீல் வச்சு வாதாடறதுக்குக் கூட அவனுக்கு வசதி இல்லை."
"அப்புறம் என்ன? வக்கீலுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?"
"வேண்டாம்."
"பின்ன?"
"நீயே சொன்னியே, அவன் ஒரு சின்னப்பயன்னு. நமக்கு வலு இருக்குங்கறதை ஒரு சின்னப் பையன்கிட்ட காட்டணுமா?"
"அவன் உங்களைத் தாக்கியிருக்கான்ல? அவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டாமா?"
"சில சமயம் ரோட்டில நடந்து போயிக்கிட்டிருக்கறப்ப, யாரோ ஒரு சின்னப்பையன் ஒரு கல்லை எடுத்து நம்ம மேல போட்டான்னா, அவனைத் திருப்பிக் கல்லால அடிப்போமா, அல்லது அவன் மேல போலீஸ்ல புகார் கொடுப்போமா? வலிச்சா கூட, அடிபட்ட இடத்தைக் கையால தேச்சு விட்டுட்டுப் போயிக்கிட்டே இருப்போம் இல்ல? ஏன்? அந்தச் சின்னப்பையனுக்கு, தான் செய்யற காரியத்தோட தீவிரம் தெரியாதுங்கறதனாலதானே? அது மாதிரிதான், இந்த அறிவுக்கொழுந்தும், தான் எழுதற அவதூறினால தனக்கு என்ன விளைவுகள் ஏற்படும்னே தெரியாம ஏதோ எழுதியிருக்கான்."
"நீங்க என்ன சொல்ல வரீங்க? அவன் இப்படியெல்லாம் அபாண்டமா, எழுதியிருக்கானே?"
"விட்டுத் தள்ளு!" என்றார் பெரியசாமி.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 16
பொறையுடைமை
குறள் 153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.
பொருள்:
வறுமையிலும் கொடிய வறுமை விருந்தினரை உபசரிக்க முடியாதது. அறிவில்லாதவர்கள் செய்த தீங்கைப் பொறுத்துக் கொள்வதுதான் வலிமையிலும் வலிமை ஆகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment