About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, July 31, 2017

78. சேதுவின் கோபம்

சேது ஒரு தனிமரம் - பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தும்! பணம், வசதிகள், உறவுகள் எல்லாம் இருந்தும்!

வனஜா அவனைக் கல்யாணம் செய்து கொண்டபோது, தான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைத்தாள். வசதியான இடம், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. வேறு என்ன வேண்டும் என்று நினைத்தாள்.

திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்கு வந்ததுமே மாமியார் அவளிடம் தனியே கிசுகிசுத்தாள். "இங்க பாரும்மா. சேது கொஞ்சம் கோவக்காரன். நீதான் அனுசரிச்சு நடந்துக்கணும்."

இது பொதுவாகச் சொல்லப்படுவது என்றுதான் வனஜா முதலில் நினைத்தாள். அப்படியே கோபக்காரராக இருந்தால்தான் என்ன? தன்னால் சமாளிக்க முடியாதா?

முடியவில்லை.

மாமியார் சொன்னபடி 'கொஞ்சம்' கோபக்காரனாக இருந்திருந்தால் சமாளித்திருப்பாள். நிறையக் கோபம் இருந்திருந்தாலும் கஷ்டப்பட்டாவது சமாளித்திருப்பாள். கோபத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளே இல்லாதவனை எப்படிச் சமாளிப்பாள்?

"என்ன அத்தை இவரு இப்படி இருக்காரு? எதுக்கு கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது?"

மாமியாரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. "என்கிட்டயும் இப்படித்தான் எரிஞ்சு விழுவான். என்ன எதிர்பாக்கறான்னே புரியாது. முன்னெல்லாம் அவங்க அப்பாகிட்ட கொஞ்சம் பயப்படுவான். இப்ப அவரையும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான். அவரு அவன்கிட்ட பேசறதையே விட்டுட்டாரு."

'இப்படிப்பட்ட மனிதனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்?' என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள்.

வாழ்க்கை எப்படியோ ஓடி மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இரண்டு பையன்கள், கடைசியாக ஒரு பெண்.

குழந்தைகள் பிறந்த பின்பாவது சேது மாறுவான் என்று நினைத்தாள் வனஜா. ஆனால் குழந்தைகளிடமும் அதே சிடுசிடுப்புத்தான். குழந்தைகளாக இருந்தபோதே அவர்களைத் தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லை சேது. அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்பது போல் கண்டும் காணாமல் இருப்பான்.

குழந்தைகள் வளர்ந்ததும் தந்தையின் கோபத்தை உணர்ந்து அவன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதன் என்று விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். இதனாலேயே மூவருக்கும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசம் ஏற்பட்டு  விட்டது.

கால ஓட்டத்தில் சேதுவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். சேதுவுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "வயசானா, போகத்தான் வேணும்! உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே?" என்று வனஜாவிடம் தத்துவ ஞானி போல் பேசினான்.

குழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தனர்.

பெரியவன் படித்து முடித்ததும் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வனஜா அவனிடம், "நாங்க மூணு பேரும் ஒன்னோடயே வந்துடறோம். ஒன் தம்பியும், தங்கையும் அங்கே வந்து படிக்கட்டும்"  என்றாள்.

"அப்பா?" என்றான் மகன்.

"அவரு இங்கியே இருக்கட்டும். அவர்கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கணும்னுதானே நாம நாலு பேரும் தனியாப்  போயிடலாம்னு சொல்றேன்."

"ஹை ஜாலி!" என்றாள் கடைக்குட்டியான அவள் பெண்.

சேதுவிடம் வனஜா தன் முடிவைச் சொன்னபோது, "எதுக்கு?" என்றான்.

"எங்களால ஒங்க கோவத்தையும், அதட்டல் மிரட்டலையும் தாங்கிக்கிட்டு இருக்க முடியல!"

"அப்புறம் எனக்கு யாரு வடிச்சுக் கொட்டுவா?"

"செல்லியிடம் சொல்லிட்டுப் போறேன். அவ சமைச்சுப் போடுவா. ஆனா எங்கிட்ட நடந்துக்கற மாதிரி அவகிட்டயும் சிடுசிடுத்தீங்கன்னா அவ போயிடுவா. சம்பளம் எவ்வளவுன்னு நீங்களே பேசிக்கங்க."

னஜாவும் குழந்தைகளும் போய் மூன்று வருடங்கள் ஆகி விட்டன. வனஜா மாதம் ஒருமுறை கடிதம் போடத்  தவறுவதில்லை.

சேது கடிதங்களைப் படித்து விட்டுக் கிழித்துப் போட்டு விடுவான். ஒருமுறை கூட பதில் போட்டதில்லை.

சின்னவனும் படித்து வேலைக்குப் போய் விட்டானாம். பெண்ணுக்கும் படிப்பு முடியப் போகிறதாம். அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.

சேது எரிச்சலுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். தெருவில் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து சேதுவின் வீட்டுக்குள் போய் விழுந்தது.

ஒரு சிறுவன் ஒடி வந்து "தாத்தா! பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா?" என்றான்.

"அதெல்லாம் முடியாது. போங்கடா!" என்று எரிந்து விழுந்தான் சேது. "பந்தை ரோட்டில வெளையாடணும். என் வீட்டுக்குள்ள ஏன் தூக்கிப் போட்டீங்க?"

சிறுவர்கள் சற்று நேரம் கெஞ்சி விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஒரு சிறுவன் தெருவில் இருந்த ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து சேது மேல் வீசினான்.

வலித்தது.


அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்:
மனத்தில் அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்தது போல் பயனற்றதாகும். (இந்தக் குறளின் பொருள் சற்று நெருடலானது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தால் நல்லதுதானே என்று தோன்றும். இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருட்கள்  (எனக்கு) சற்றுக்  குழப்பமாகவே இருக்கின்றன.  பாலைவனத்தில் அந்த மரம் வளர்ந்து பலனளிக்க முடியாது. அதுபோல்தான் மனதில் அன்பில்லாதவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும் என்று நான் பொருள் கொள்கிறேன். திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணம் சற்றே விசித்திரமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















Saturday, July 29, 2017

77. மங்கள விலாஸ் ஓட்டல்

வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடிவதில்லை. பல வருடங்கள் ஆனாலும் வீடியோ பதிவு போல் மனத்துக்குள் பதிந்து விடும் நிகழ்வுகள் உண்டு.

நான் ஒரு அரசு ஊழியன் என்ற முறையில் கிராம, நகர, பஞ்சாயத்து அமைப்புகளைத் தணிக்கை செய்யப் பல ஊர்களுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் சில ஊர்களுக்குச் சென்ற நினைவுகள்தான் நீண்ட நாள் நினைவில் நிற்கின்றன.

அப்படி ஒரு சம்பவம் ஒரு சிறிய ஊரில் நடந்தது. அந்த ஊரில் எனக்கு மூன்று நாட்கள் வேலை இருந்தது. அந்த ஊர் நகரப் பஞ்சாயத்தின் (பேரூராட்சி என்று சொல்ல வேண்டும். ஆனால் என் போன்ற சிலருக்கு கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து என்றே சொல்லிப் பழகி விட்டது!) கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.

அது சிறிய ஊர். அந்த நாட்களில், பெரிய நகரங்களிலேயே ஓரிரு லாட்ஜுகள்தான் இருக்கும். அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் என்னைத் தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். நான் அதை மறுத்து விட்டு, பஞ்சாயத்து அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டேன்.

பகலில் தணிக்கை இரவில் அங்கேயே மர பெஞ்ச்சில் படுக்கை. சாப்பாட்டுக்கு மட்டும் வெளியே போக வேண்டும். அந்த ஊரில் ஓடிய ஆற்றில் குளியல். அதிர்ஷ்டவசமாக அப்போது ஆற்றில் தண்ணீர் இருந்தது.

அந்த ஊரில் நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு கோயில் இருந்தது. ஆயினும் அது ஒரு பிரபலமான கோயில் இல்லை. அவ்வப்போது கோயிலுக்குப்  பல ஊர்களிலிருந்தும் யாத்திரிகர்கள் வருவார்கள்.

சில சமயம் டூரிஸ்ட் பஸ்கள் வரும். அதனால்தானோ என்னவோ அந்த ஊரில் ஒரு சுமாரான ஓட்டல் இருந்தது. மங்கள விலாஸ் என்று பெயர். சிறிய ஓட்டலாக இருந்தாலும், சுத்தமாக இருக்கும். சாப்பாடு, டிஃபன் ஓரளவுக்கு நன்றாகவும் இருக்கும்.

மூன்று நாட்களும், மூன்று வேளையும் எனக்கு அங்கேதான் சாப்பாடு. பஞ்சாயத்துத் தலைவர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் வீட்டுக்குச் சாப்பிடச் செல்ல நான் மறுத்து விட்டேன்.

பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒரே ஒரு ஊழியர்தான் உண்டு. அவர் பெயர் ராமலிங்கம். நான் தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளை அவர்தான் எனக்குக் காட்டுவார். ஓட்டலுக்கு என்னுடன் வருவார். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.

பஞ்சாயத்துத் தலைவர், ராமலிங்கத்திடம் பணம் கொடுத்து என் சாப்பாட்டுச் செலவைப் பார்த்துக்கொள்ளும்படி அவரிடம் சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரை என் சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க நான் அனுமதிப்பதில்லை. அதனால் அவருக்கு என் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது. (அவருடைய முந்தைய அனுபவங்கள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்!)

அந்த ஓட்டலில் கல்லாவில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அவருடைய மகன் ஆட்களை வேலை வாங்கிக்கொண்டிருப்பான். அவனுக்கு முப்பது வயது இருக்கலாம். குட்டையாக, பருமனாக, திரைப்படங்களில் வரும் வில்லனின் அடியாள் போல் இருப்பான். ஓட்டல் ஊழியர்களிடம் அவன் கடுமையாகப் பேசுவதை முதல் நாளே கவனித்தேன். சாப்பிட வருபவர்களிடம் மட்டும் சிரித்துக்கொண்டே குழைந்து குழைந்து பேசுவான்.

மூன்றாம் நாள் மதியம் நான் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு உள்ளே பார்த்தேன். ஒரு கிளீனர் பையன் - அவனுக்குப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் - 'வேணாம் முதலாளி' என்று கதறிக் கொண்டிருக்க, முதலாளியின் மகன் அந்த கிளீனர் பையன் வைத்திருந்த துடைப்பத்தையே வாங்கி அவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். ஏழெட்டு அடிகள் அடித்து விட்டுத் துடைப்பத்தைக் கீழே போட்டதும், கிளீனர் பையன் அழுதுகொண்டே துடைப்பத்தை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளி நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 'அடிக்காதே' என்றோ 'அடித்தது போதும்' என்றோ ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் - அவர்களில் பலர் அந்த ஊர்க்காரர்கள் - எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"என்ன சார் இது அக்கிரமம்?" என்றேன் என் பக்கத்தில் இருந்த ராமலிங்கத்திடம்.

"இது அடிக்கடி நடக்கறதுதான் சார். அந்தப் பையன் பாவம் ஒரு அநாதை. இவன்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படறான்" என்றார் அவர்.

அன்று மாலை என் வேலை முடிந்து விட்டது. நான் அன்று இரவே அந்த ஊரிலிருந்து கிளம்பி விட்டேன்.

எத்தனையோ வருடங்கள் ஆகியும். அந்தச் சிறுவனின் பரிதாபமான ஓலமும், முதலாளியின் மகனின் இரக்கமற்ற செயலும் என் கண் முன் அடிக்கடி வந்து போய் எனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கழித்து மீண்டும் அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. வேலை விஷயமாக இல்லை. நான் வேலையிலிருந்து ஒய்வு பெற்றுச் சில வருடங்கள் ஆகி விட்டன. அந்த ஊரில் இருந்த கோயில் பற்றி ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைப் படித்து விட்டு, என் மனைவி அங்கே செல்ல விரும்பினாள்.

முன்பு அலுவலக வேலையாக அந்த ஊருக்குப் போனபோது அந்தக் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் இப்போது போக வேண்டும் என்று தோன்றியது.

என் உள்மனதில் 'அந்த மங்கள விலாஸ் ஓட்டல் இன்னும் இருக்குமா, அந்தச் சிறுவன் இப்போது எப்படி இருப்பான், முதலாளி இன்னும் உயிரோடு இருப்பாரோ (வாய்ப்பில்லை!), முதலாளியின் மகன் - சிறுவனைப் போட்டு அடித்த அந்த முரடன்- எப்படி இருப்பான்' என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கலாம்!

இத்தனை வருடங்களில் ஊர் அதிகம் மாறிவிடவில்லை. கோயிலுக்கு வரும் யாத்திரிகர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று அதிகமாகி இருப்பதாகத் தோன்றியது.

கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்ததும் மங்கள விலாஸ் ஓட்டல் பற்றி யாரிடமாவது விசாரிக்கலாமா என்று யோசித்தேன்.

ராமலிங்கத்தின்  நினைவு வந்தது. அவர் இந்த ஊர்க்காரர்தானே? என்னுடன் மூன்று நாட்கள் உடன் இருந்த அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்காமல், அற்பத்தனமான ஆர்வத்தால் மங்கள விலாஸ் ஒட்டலையும், அங்கிருந்த மனிதர்களையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததை எண்ணிச் சற்று அவமானமாக உணர்ந்தேன். அர்த்தமில்லாத ஆர்வங்கள் நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன!

அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வீடு அருகில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். தேடிக்கொண்டு போனேன். என் மனைவிக்கு இதில் சற்றும் விருப்பமில்லை. "அவர் என்ன உங்களுக்கு நண்பரா? சாமி தரிசனம் முடிஞ்சு போச்சு. பஸ்ஸைப்  பிடிச்சு ஊருக்குப் போகிற வழியைப் பார்க்காமல்..." என்று தன் அதிருப்தியைத் தெரிவித்தாள்.

வீட்டில் ஒரு முதியவர் இருந்தார். அவரிடம் ராமலிங்கத்தைப் பற்றி விசாரித்ததும், "சார் நீங்களா? வாங்க!" என்று உற்சாகமாக வரவேற்றார். அட! இவர்தான் ராமலிங்கமா! அடையாளமே தெரியவில்லையே!

"எனக்கு உங்களை அடையாளம் தெரியலியே! உங்களுக்கு என்னை எப்படி ஞாபகம் இருக்கு?" என்றேன்.

"நான் பார்த்த இருபது, முப்பது ஆடிட்டர்களில் நாங்கள் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதைக் கூட ஏத்துக்காத ஒரே ஆள் நீங்கதான். என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு என் வீட்டைத் தேடி வந்திருக்கீங்களே!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

சற்று நேரம் பொதுவாகப் பேசி விட்டு, "ஆமாம் மங்கள விலாஸ் ஓட்டல் எப்படி இருக்கு?" என்றேன்.

"அதை மூடிட்டாங்களே!" என்றார் சுருக்கமாக.

"அங்கே ஒரு சின்னப் பையன் இருந்தானே, அந்த முதலாளி மகன் கூட அவனைத் துடைப்பக் கட்டையால அடிச்சானே..."

"அவனா? கொஞ்ச நாள்ள அந்தப் பையன் எங்கியோ ஓடிட்டான். அப்புறம் அவங்களுக்குச் சரியான ஆள் கிடைக்கலே! பெரியவர் போய்ச் சேர்ந்துட்டாரு. சண்முகத்தால - அதான் கட்டையா குட்டையா இருப்பானே, பெரியவரோட பையன்-  ஓட்டலை நடத்த முடியல. புதுசா இன்னொரு ஓட்டல் வேற வந்துடுச்சு. நஷ்டத்தைத் தாங்க முடியாம ஓட்டலை மூடிட்டான்."

"அப்புறம்?"

'இந்தக் கதையெல்லாம் உங்களுக்கு எதற்கு?' என்ற பாவனையுடன் என் மனைவி என்னை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். "பஸ்  போயிடப் போகுது!" என்றாள் சூசகமாக.

"பஸ் நிறைய இருக்கு, கவலைப்படாதீங்க" என்றார் ராமலிங்கம்.

"அப்புறம் சண்முகம் ரொம்பக் கஷ்டப்பட்டான். கூலி வேலை செஞ்சுதான் பொழப்பை நடத்த வேண்டியிருந்தது. முதலாளியா இருந்து ஆளுங்களை அதட்டி மிரட்டிக்கிட்டிருந்தவன் மொதலாளிங்க கிட்டப் பணிஞ்சு நடக்க வேண்டிய நிலைமை! அவனுக்கு ரெண்டு பசங்க. அவங்க பெரியவங்களானதும் ஓட்டல் இருந்த இடத்தை வித்துட்டு அந்தப் பணத்தில் தொழில் செய்யப் போறோம்னு சொன்னாங்க.

"சண்முகமும் நிலத்தை வித்து அவங்களுக்குப் பணத்தைக் கொடுத்தான். பணத்தை வாங்கிக்கிட்டுப் போனவங்கதான்! பெத்தவங்க எப்படி இருக்காங்கன்னு கூடக் கவலைப்படல. சண்முகத்தோட பொண்டாட்டியும் போய்ச் சேந்துட்டா. இப்ப வேலை செய்ய உடம்புல தெம்பு இல்லாம, வீடு வாசல் இல்லாம, கோயில் வாசல்ல உக்காந்துக்கிட்டுப் பிச்சை எடுத்துக்கிட்டு, அங்கியே படுத்துத் தூங்கிக்கிட்டிருக்கான்."

"அடப்பாவமே!" என்றேன் நான்.

ராமலிங்கத்திடம் விடைபெற்றுக் கிளம்பினோம். வெளியே வந்ததும் "அந்த சண்முகம் கோயில்ல இருக்கானான்னு பாக்கறதுக்காக மறுபடியும் கோயிலுக்குப் போகணும்னு கெளம்பாதீங்க. என்னால நடக்க முடியாது. பஸ்ஸுக்கும் நேரமாயிடுச்சு!" என்றாள் என் மனைவி.

முரடனாக, அதிகாரம் செய்து கொண்டு இருந்தவனாக நான் பார்த்த சண்முகத்தை, 'ஐயா சாமி!' என்று கெஞ்சும் பிச்சைக்காரனாகப் பார்க்க எனக்கும் விருப்பமில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 77
என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.

பொருள்:
எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெய்யில் வாட்டுவது போல், அன்பு இல்லாதவர்களை அறம் வாட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்