About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, July 31, 2017

78. சேதுவின் கோபம்

சேது ஒரு தனிமரம் - பெண்டாட்டி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தும்! பணம், வசதிகள், உறவுகள் எல்லாம் இருந்தும்!

வனஜா அவனைக் கல்யாணம் செய்து கொண்டபோது, தான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் என்று நினைத்தாள். வசதியான இடம், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. வேறு என்ன வேண்டும் என்று நினைத்தாள்.

திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்கு வந்ததுமே மாமியார் அவளிடம் தனியே கிசுகிசுத்தாள். "இங்க பாரும்மா. சேது கொஞ்சம் கோவக்காரன். நீதான் அனுசரிச்சு நடந்துக்கணும்."

இது பொதுவாகச் சொல்லப்படுவது என்றுதான் வனஜா முதலில் நினைத்தாள். அப்படியே கோபக்காரராக இருந்தால்தான் என்ன? தன்னால் சமாளிக்க முடியாதா?

முடியவில்லை.

மாமியார் சொன்னபடி 'கொஞ்சம்' கோபக்காரனாக இருந்திருந்தால் சமாளித்திருப்பாள். நிறையக் கோபம் இருந்திருந்தாலும் கஷ்டப்பட்டாவது சமாளித்திருப்பாள். கோபத்தைத் தவிர வேறு உணர்ச்சிகளே இல்லாதவனை எப்படிச் சமாளிப்பாள்?

"என்ன அத்தை இவரு இப்படி இருக்காரு? எதுக்கு கோவப்படறாருன்னு தெரியாம எல்லாத்துக்கும் கோவப்பட்டா நான் என்னதான் செய்யறது?"

மாமியாரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. "என்கிட்டயும் இப்படித்தான் எரிஞ்சு விழுவான். என்ன எதிர்பாக்கறான்னே புரியாது. முன்னெல்லாம் அவங்க அப்பாகிட்ட கொஞ்சம் பயப்படுவான். இப்ப அவரையும் தூக்கி எறிஞ்சு பேச ஆரம்பிச்சுட்டான். அவரு அவன்கிட்ட பேசறதையே விட்டுட்டாரு."

'இப்படிப்பட்ட மனிதனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைத்தீர்கள்?' என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள்.

வாழ்க்கை எப்படியோ ஓடி மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இரண்டு பையன்கள், கடைசியாக ஒரு பெண்.

குழந்தைகள் பிறந்த பின்பாவது சேது மாறுவான் என்று நினைத்தாள் வனஜா. ஆனால் குழந்தைகளிடமும் அதே சிடுசிடுப்புத்தான். குழந்தைகளாக இருந்தபோதே அவர்களைத் தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லை சேது. அவர்கள் ஏதோ பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்பது போல் கண்டும் காணாமல் இருப்பான்.

குழந்தைகள் வளர்ந்ததும் தந்தையின் கோபத்தை உணர்ந்து அவன் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மனிதன் என்று விரைவிலேயே புரிந்து கொண்டார்கள். இதனாலேயே மூவருக்கும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசம் ஏற்பட்டு  விட்டது.

கால ஓட்டத்தில் சேதுவின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். சேதுவுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "வயசானா, போகத்தான் வேணும்! உனக்கும் எனக்கும் கூட இதே கதிதானே?" என்று வனஜாவிடம் தத்துவ ஞானி போல் பேசினான்.

குழந்தைகள் வேகமாக வளர்ந்து வந்தனர்.

பெரியவன் படித்து முடித்ததும் அவனுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது. வனஜா அவனிடம், "நாங்க மூணு பேரும் ஒன்னோடயே வந்துடறோம். ஒன் தம்பியும், தங்கையும் அங்கே வந்து படிக்கட்டும்"  என்றாள்.

"அப்பா?" என்றான் மகன்.

"அவரு இங்கியே இருக்கட்டும். அவர்கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கணும்னுதானே நாம நாலு பேரும் தனியாப்  போயிடலாம்னு சொல்றேன்."

"ஹை ஜாலி!" என்றாள் கடைக்குட்டியான அவள் பெண்.

சேதுவிடம் வனஜா தன் முடிவைச் சொன்னபோது, "எதுக்கு?" என்றான்.

"எங்களால ஒங்க கோவத்தையும், அதட்டல் மிரட்டலையும் தாங்கிக்கிட்டு இருக்க முடியல!"

"அப்புறம் எனக்கு யாரு வடிச்சுக் கொட்டுவா?"

"செல்லியிடம் சொல்லிட்டுப் போறேன். அவ சமைச்சுப் போடுவா. ஆனா எங்கிட்ட நடந்துக்கற மாதிரி அவகிட்டயும் சிடுசிடுத்தீங்கன்னா அவ போயிடுவா. சம்பளம் எவ்வளவுன்னு நீங்களே பேசிக்கங்க."

னஜாவும் குழந்தைகளும் போய் மூன்று வருடங்கள் ஆகி விட்டன. வனஜா மாதம் ஒருமுறை கடிதம் போடத்  தவறுவதில்லை.

சேது கடிதங்களைப் படித்து விட்டுக் கிழித்துப் போட்டு விடுவான். ஒருமுறை கூட பதில் போட்டதில்லை.

சின்னவனும் படித்து வேலைக்குப் போய் விட்டானாம். பெண்ணுக்கும் படிப்பு முடியப் போகிறதாம். அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.

சேது எரிச்சலுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். தெருவில் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்து சேதுவின் வீட்டுக்குள் போய் விழுந்தது.

ஒரு சிறுவன் ஒடி வந்து "தாத்தா! பந்து வீட்டுக்குள்ள விழுந்துடுச்சு. போய் எடுத்துக்கலாமா?" என்றான்.

"அதெல்லாம் முடியாது. போங்கடா!" என்று எரிந்து விழுந்தான் சேது. "பந்தை ரோட்டில வெளையாடணும். என் வீட்டுக்குள்ள ஏன் தூக்கிப் போட்டீங்க?"

சிறுவர்கள் சற்று நேரம் கெஞ்சி விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார்.

ஒரு சிறுவன் தெருவில் இருந்த ஒரு சிறிய கூழாங்கல்லை எடுத்து சேது மேல் வீசினான்.

வலித்தது.


அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 8
அன்புடைமை 
குறள் 78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் 
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்:
மனத்தில் அன்பு இல்லாதவனுடைய வாழ்க்கை பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்தது போல் பயனற்றதாகும். (இந்தக் குறளின் பொருள் சற்று நெருடலானது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தால் நல்லதுதானே என்று தோன்றும். இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருட்கள்  (எனக்கு) சற்றுக்  குழப்பமாகவே இருக்கின்றன.  பாலைவனத்தில் அந்த மரம் வளர்ந்து பலனளிக்க முடியாது. அதுபோல்தான் மனதில் அன்பில்லாதவரின் வாழ்க்கையும் பயனற்றதாகி விடும் என்று நான் பொருள் கொள்கிறேன். திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணம் சற்றே விசித்திரமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது!)

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















2 comments:

  1. குறள் சரியான பொருளில்தான் அமைந்துள்ளது. இரண்டுவகையான பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    1.சோறு போடுகிறேன் என்று மூடிய பால்கனியில் சாப்பாடு வைத்தால் என்ன பிரயோசனம்? வலிய வெறும் மணலால் சூழ்ந்த பாலை நிலத்தில் பட்ட மரம் ஒன்று தளிர்த்தால் என்ன பிரயோசனம்? அது யாருக்கும் பிரயோசனப் படாது. எந்த ஒன்றினாலும் பிறர் பயனுறுமாறு இருந்தால்தான் அது உபயோகம். அது போல், அன்பில்லாதவனால் யாருக்கும் உபயோகம் இல்லை. அவன் வாழ்வது பயனற்றது, யாரும் செல்லாத கொடும் பாலைவனத்தில் தளிர்த்த பட்டமரம் போல்.

    2. பழைய உரையாசிரியர்கள், 'வன்பாற்கண்' என்பதற்கு வலிய பாறையில் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். பாறையில் இருக்கும் பட்ட மரம் தளிர்த்தாற்போல். அதாவது பட்ட மரம், அதுவும் பாறையில் இருக்கும் மரம் தளிர்க்குமா? தளிர்க்கவே தளிர்க்காது. அதுபோல அன்பில்லாதனின் வாழ்வு சிறக்குமா? சிறக்காது என்று பொருள்.

    ReplyDelete