About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, March 28, 2018

141. தவற விட்ட பஸ்!

கடைசி பஸ் போய் விட்டது!

நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கக் கூடாது.

நிகழ்ச்சி முடியும் வரை உட்கார்ந்திருக்காமல் சற்று முன்பேயாவது கிளம்பி வந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு முட்டாள்தனமான ஆர்வத்திலும், நம்பிக்கையிலும் நிகழ்ச்சி முடியும் வரை உட்கார்ந்திருந்து விட்டாள்.

வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கிருஷ் கேட்டான், "வெளியூருக்குப் போய் நாட்டியக் கச்சேரி பாக்கணுமா?" என்று.

"நம்ம ஊர்ல இது மாதிரி கச்சேரில்லாம் நடக்குமா?" என்றாள் ஸ்ருதி. "நீங்களும் வந்தா நல்லா இருக்குமே!" என்றாள் தொடர்ந்து.

"நாளைக்கு கிளாஸுக்குத் தயார் பண்ணிக்கணுமே! அதோட ரெண்டு மணி நேரம் உக்காந்து டான்ஸ் பாக்கறதெல்லாம் என்னால முடியாது. அதான் பஸ் இருக்கே, ஜாக்கிரதையாப் போயிட்டு வந்துடு. கடைசி பஸ் ஒன்பது பத்துக்கு. மிஸ் பண்ணிடாதே!" என்றான் கிருஷ் .

"அப்படி மிஸ் பண்ணிட்டா, என் ஃபிரண்ட் வீட்டில தங்கிட்டுக் காலையில வந்துடறேன். கச்சேரிக்கே அவளோடதானே போறேன்? ஃபோன் பண்றதுன்னா பிரின்சிபால் வீட்டுக்குத்தான் ஃபோன் பண்ணி உங்களுக்குத் தகவல் சொல்லச் சொல்லணும். அவங்களுக்குத் தொந்தரவா இருக்கும்! அதனால ஃபோன் வரலைன்னு கவலைப்படாதீங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் ஸ்ருதி.

கிருஷ் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தான். நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி இருந்தது அந்தக் கல்லூரி. கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்குக் குடியிருப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் கல்லூரி ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு சிற்றூர் அது. சினிமா, ஷாப்பிங் என்று வார இறுதியில் ஸ்ருதி, கிருஷ் இருவரும்  நகரத்துக்கு வருவார்கள். ஆனால் இப்போதுதான் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஸ்ருதி மட்டும் தனியே கிளம்பி வந்திருக்கிறாள். நகரத்தில் இருந்த அவள் தோழியுடன் நடனக் கச்சேரிக்குப் போய் விட்டுக் கடைசி பஸ்ஸில் ஊருக்குத் திரும்பி விடுவது என்று திட்டம்.

ஆனால் அவள் தோழி அவசரமாக வெளியூர் போய் விட்டாள். நடன நிகழ்ச்சிக்கு அவளை அழைத்துப் போக அவள் வீட்டுக்குப் போனபோதுதான் ஸ்ருதிக்கு இது தெரிந்தது.

எனவே, தோழி வீட்டில் தங்கும் யோசனையும் செல்லாத நோட்டு போல் பயனற்றதாகி விட்டது.

என்ன செய்வது, தனியாக ஏதாவது ஓட்டலில் சென்று தங்குவது உசிதமா என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது, "என்ன ஸ்ருதி, எப்படி இருக்கே!" என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.

சுதாகர்! கல்லூரியில் அவளுடன் படித்தவன்.

"ஊருக்குப் போகணும். பஸ் போயிடுச்சு!" என்றாள் அவள் பதட்டத்துடன்.

"எனக்கும் அதே பிரச்னைதான். கவலைப்படாதே! நான் பாத்துக்கறேன்" என்றான் சுதாகர் சிரித்தபடி.

ஸ்ருதியின் மனதில் பய உணர்வுகள் தோன்றின.

கல்லூரியில் சுதாகர் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்தான். தனக்கு இஷ்டமில்லை என்று ஸ்ருதி பலமுறை சொன்ன பிறகும் கூட அவளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தான். எப்படியும் ஸ்ருதியைத் தன் வசப்படுத்தி விடுவதாகத் தன் நண்பர்கள் சிலரிடம் அவன் சொல்லி வந்ததாக அவளுக்குச் செய்தி கிடைத்தது. 

ஒரு கட்டத்தில், 'போலீசில் புகார் செய்து விடுவேன்' என்று அவள் மிரட்டிய பிறகுதான், அவன் அவளைத் தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொண்டான்.

"என்ன செய்யலாம்?" என்றாள் ஸ்ருதி, கவலையுடன். "பெண்கள் பாதுகாப்பாகத் தங்கறதுக்கு இந்த ஊர்ல நல்ல ஹோட்டல் ஏதாவது இருக்கா?"

"இது சின்ன ஊர். இந்த ஊர்லயே பாதுகாப்பான இடம் இந்த பஸ் ஸ்டாண்ட்தான்! ராத்திரி முழுக்க இங்கேயே உக்காந்துக்கிட்டிருக்கறதுன்னா சொல்லு. நானும் உனக்குக் காவலா இங்கேயே இருக்கேன்" என்றான் சுதாகர்.

இரவு முழுவதும் அங்கே உட்கார்ந்திருக்க முடியுமா என்று யோசித்த ஸ்ருதி, தனது முட்டாள்தனமான செய்கையினால் பஸ்ஸைத் தவற விட்டதை நினைத்து மீண்டும் தன்னை நொந்து கொண்டாள்.

"கவலைப்படாதே. இங்கே எனக்குத் தெரிஞ்சவங்க வீடு இருக்கு. அங்கே உன்னைக் கொண்டு விடறேன். நீ அங்கேயே தங்கிக்கலாம்" என்றான் சுதாகர்.

"நீ?" என்றாள் ஸ்ருதி

"நான் எங்கேயாவது ஒதுங்கிப்பேன். லேட் ஆயிடுச்சு வா!" என்றான் சுதாகர்.

போகலாமா, வேண்டாமா என்று சில நொடிகள் குழம்பிய ஸ்ருதி, அரை மனதுடன் அவனுடன் கிளம்பினாள்.

ஒரு ரிக்‌ஷாவை அழைத்து, ரிக்‌ஷாக்காரரிடம் போக வேண்டிய இடத்தைச் சொன்னான் சுதாகர். இருவரும் ரிக்‌ஷாவில் ஏறிக் கொண்டனர்

சற்று தூரம் முக்கிய சாலையில் சென்ற பின், சட்டென்று ஒரு இருண்ட சந்தில் திரும்பியது  ரிக்‌ஷா. ஸ்ருதியின் மனதில் மீண்டும் அச்சம் எழுந்தது.

காலை ஐந்து மணிக்கு அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த அந்த வயதான பெண்மணி சுதாகரைப் பார்த்துத் தலையசைத்தாள்.

உள்ளே அமர்ந்திருந்த ஸ்ருதி அவனைப் பார்த்ததும் எழுந்தாள். "சீக்கிரமே வந்துட்டியே!" என்றாள்.

"ஆமாம். நீ சீக்கிரம் கிளம்பி ஊருக்குப் போக வேணாமா? கிளம்பு. முதல் பஸ்ஸிலியே ஏத்தி விட்டுடறேன்" என்றான் சுதாகர்.

அந்த வயதான பெண்மணியைப் பார்த்து, "வரேம்மா! ராத்திரி தங்க இடம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!" என்றாள் ஸ்ருதி.

"இது ரொம்பச் சின்ன வீடும்மா. உன்னை மாதிரி வசதியான குடும்பத்துப் பொண்ணு இங்க வந்து ஒரு ராத்திரி தங்கினதுதான் பெரிய விஷயம்" என்றாள் அந்தப் பெண்மணி.

"வேற வழி? இதை விட்டா அவ ராத்திரி பூரா பஸ் ஸ்டாண்டிலதான் உக்காந்திருக்கும்படியா இருந்திருக்கும்!" என்றான் சுதாகர்.

பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, ஸ்ருதி "சாரி, சுதாகர்! காலேஜில் நீ எங்கிட்ட நடந்துக்கிட்டதை நினைச்சு ராத்திரி நான் கொஞ்சம் பயந்தேன். ஆனா நீ இவ்வளவு கண்ணியமா நடந்துக்கிட்டு எனக்கு இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கே. நீ ரொம்ப மாறிட்டே!" என்றாள் ஸ்ருதி.

"நான் மாறல ஸ்ருதி. நீதான் மாறிட்ட!"

"என்ன சொல்றே?"

"அப்ப நீ கல்யாணம் ஆகாத பொண்ணா இருந்தே. இப்ப நீ இன்னொருத்தரோட மனைவியா மாறிட்டே! இன்னொருத்தரோட மனைவிகிட்ட எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நான் நடந்துக்கிட்டேன்" என்றான் சுதாகர்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 141
பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல்.

பொருள்:  
ஒருவரால் பின்பற்றப்பட வேண்டிய அறம் என்ன, தேடப்பட வேண்டிய பொருள் எது ஆகியவற்றை உணர்ந்தவர்களிடம், இன்னொருவருடைய மனைவியை விரும்பும் அறியாமை இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














2 comments:

  1. குறளுக்கேற்றாற் போல் அருமையாகக் கதை எழுதுகின்றீர்கள்

    ReplyDelete
  2. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete