About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, March 29, 2018

142. மனம் போன போக்கிலே

முதன் முதலில் ஜெயந்தியைப் பார்த்ததும் குருவுக்குத் தோன்றிய எண்ணம் 'இவள் எனக்கு மனைவியாக வந்திருக்கக் கூடாதா?' என்பதுதான். ஜெயந்தி, குருவின் அலுவலக நண்பன் ஜெகதீஸ்வரனின் மனைவி!

திருமணத்துக்குப் பின் ஜெகதீஸ்வரன் ஜெயந்தியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு, அவனுடைய அலுவலக நண்பர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்துச் சொல்ல அவன் வீட்டுக்குச் சென்றனர். அப்போதுதான் குருவுக்கு இந்த எண்ணம் தோன்றியது. நண்பனின் மனைவியைப் பற்றி இப்படி நினைக்கலாமா என்ற கண்டனம் மனதின் ஒருபுறத்தில் எழுந்தாலும், அந்த எண்ணம் தனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியதை அவன் உணர்ந்தான்.

அவர்கள் அனைவருக்கும் ஜெயந்தி காப்பி கொடுத்தபோது, காப்பிக் கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டை அவன் முன்னே நீட்டிய, வளையல் அணிந்த அவள் கரத்தைப் பற்ற வேண்டும் போலிருந்தது.

அதற்குப் பிறகு நண்பனைப் பார்க்கிற சாக்கில், ஜெயந்தியைப் பார்ப்பதற்கென்றே ஜெகதீஸ்வரன் வீட்டுக்கு மூன்று நான்கு முறை சென்று வந்தான் குரு. தவறான சிந்தனை என்று தெரிந்தும், ஜெயந்தியின் மீது அவனுக்கு ஏற்பட்ட ஈர்ப்பை அவனால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.

லுவலக வேலையாக ஜெகதீஸ்வரன் இரண்டு நாட்கள் வெளியூருக்குப் போக வேண்டி இருந்தது.

"புதுப் பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டா போகப் போறே?" என்றான் குரு.

"ஆமாம். அதனால என்ன? நாங்க இருக்கறது அபார்ட்மெண்ட்தானே? ஏதாவது உதவி வேணும்னா பக்கத்து ஃபிளாட்கள்ள இருக்கறவங்க செய்வாங்க. அதோட, ஜெயந்தி தைரியமான பொண்ணு" என்றான் ஜெகதீஸ்வரன்.

ஜெகதீஸ்வரன் ஊருக்குச் சென்ற அன்று இரவு குருவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஜெயந்தியைப் போய்ப் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. 'சும்மா போய்ப் பார்த்துப் பேசி விட்டு வரலாம். அவளுடன் நட்பை வளர்த்துக் கொண்டால், அவளுக்கும் என் மீது ஈர்ப்பு ஏற்படலாம்' என்று நினைத்தான்.

ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் ஜெயந்தியின் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

ழைப்பு மணி அடித்ததும் ஜெயந்தி வந்து கதவைத் திறந்தாள். அவள் உடுத்தியிருந்த கருப்பு நிறப் புடவையும், விரித்த கூந்தலும் குருவுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தின.

"நீங்களா?" என்றாள் ஜெயந்தி கதவைப் பிடித்தபடி. கதவைத் திறந்து அவனை உள்ளே வரச் சொல்லவில்லை.

"ஆமாம்" என்றான் குரு, அசட்டுச் சிரிப்புடன். "ஜகத் ஊருக்குப் போயிட்டான் இல்ல?"

"அதான் மத்தியானமே போயிட்டாரே!" என்றாள் ஜெயந்தி, நகராமல் நின்றபடி.

ஜெயந்தி என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் வருகையை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறாளா அல்லது சந்தேகப்படுகிறாளா?

அவன் மௌனமாக இருந்ததைப் பார்த்து, "என்ன விஷயம்?" என்றாள் ஜெயந்தி.

என்ன சொல்லப் போகிறோம் என்று நினைத்தபோது, அவன் உடல் குப்பென்று வியர்த்தது.

'என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? இன்னொருவன் மனைவி மீது - அதுவும் நண்பனின் மனைவி மீது - ஆசைப்பட்டு, அவள் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருக்கிறேன்! எவ்வளவு கேவலமான செயல் இது!

'ஜெகதீஸ்வரனுக்கு என் மனதில் இருக்கும் எண்ணம் தெரிந்தால், அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

'ஜெயந்தி என் மீது சந்தேகப்பட்டால் என்ன செய்வாள்? ஒருவேளை சத்தம் போட்டுப் பக்கத்து வீட்டுக்காரர்களை வரவழைப்பாளோ? அப்படிச் செய்தால் அவர்களிடம் நான் என்ன சொல்ல முடியும்?

'நான் தவறான நோக்கத்துடன் இங்கே வந்ததாகக் கருதப்பட்டுப் பலர் முன் நான் அவமானப்பட நேர்ந்தால், என் வாழ்க்கை என்ன ஆகும்?

'அப்படி எதுவும் நடக்காவிட்டாலும், நான் தவறான நோக்கத்துடன் வந்திருப்பதாக ஜெயந்தி நினைத்தால், மறுபடியும் நான் இந்த வீட்டுக்கு வர முடியுமா? ஜெகதீஸ்வரனின் நண்பனாகத் தொடரத்தான் முடியுமா?

'என்ன ஒரு முட்டாள்தனமான காரியம் செய்ய இருந்தேன்!'

குரு ஒரு அடி பின் வைத்துத் தள்ளி நின்றான். "ஜகத் ஊருக்குப் போயிருக்கான். நீங்க தனியா இருக்கீங்க. இங்கே எல்லாம் பாதுகாப்பா இருக்கா, உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்" என்றான்.

"எனக்கு இங்கே ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க என் மேல இத்தனை அக்கறை எடுத்துக்கிட்டு இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்றாள் ஜெயந்தி, புன்னகை செய்தபடி.

அவள் சிரிப்பைப் பார்த்ததும், 'எத்தனை பெரிய இழுக்கிலிருந்து கடைசி நிமிடத்தில் என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்!' என்று நினைத்துக் கொண்டான் குரு.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்.

பொருள்:  
அறவழியைப் பின்பற்றாமல் கீழ்மை அடைந்தவர்களில், இன்னொருவர் மனைவி மீது ஆசை வைத்து அவர் வீட்டு வாயிலில் போய் நின்றவரைப் போன்ற அறிவிலிகள் இல்லை.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


No comments:

Post a Comment