About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, March 17, 2018

138. பயிற்சியில் துவங்கிய பழக்கம்

என் நண்பன் முருகேஷ் மதுரையில் ஒரு மருத்துவமனையில் குடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்ததுமே மதுரைக்குச் சென்று அவனைப் பார்க்க விரும்பினேன். ஆயினும் அலுவலகப் பணியினால் உடனே மும்பையிலிருந்து கிளம்பி மதுரைக்குச் செல்ல முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து நான் மதுரைக்குச் சென்றபோது முருகேஷ் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குப் போயிருந்தான். அவன் வீட்டுக்குச் சென்றபோது படுக்கையில் படுத்திருந்த உருவத்தைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

முருகேஷா இவன்? என்னதான் நான் முருகேஷப் பார்த்துச் சில வருடங்கள் ஆகி விட்டன என்றாலும் இப்படியா அடையாளம் தெரியாமல் மாறியிருப்பான்! ஒரு எலும்புக்கூடு படுத்திருப்பது போல் படுத்திருந்த அவன் தோற்றத்தைக் கண்டதும் துக்கம் என் நெஞ்சை அடைத்தது.

நான் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது டில்லியில் உள்ள பயிற்சிக் கல்லூரியில் ஒரு மாதப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டேன். அங்குதான் முருகேஷைத் சந்தித்தேன். சந்தித்த சில நிமிடங்களிலேயே நாங்கள் இருவரும் நெருக்கமாகி விட்டோம்.

பயிற்சியின் இறுதி நாளில் எங்களுக்கு ஒரு உயர்தர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. விருந்துக்கு முன் மது வழங்கப்பட்டது. அதற்கு முன்பே மது அருந்தப் பழகிக் கொண்டவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மதுவருந்தத் தொடங்கினர்.

நான், முருகேஷ் போன்ற மதுப்பழக்கம் இல்லாத ஒரு சிலர் மட்டும் தனித்து நின்றோம். எங்கள் பயிற்சி அதிகாரி, "சும்மா குடிங்க! இது மாதிரி உயர்ந்த சரக்கெல்லாம் வெளியில கிடைக்காது. எப்பவாவது குடிச்சா ஒண்ணும் ஆயிடாது. நான் கூட இது மாதிரி பார்ட்டிகள்ள மட்டும்தான் குடிப்பேன். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?" என்றார்.

அவர் பேச்சைக் கேட்டு மதுவைச் சுவைக்கத் தொடங்கியவர்களில் முருகேஷும் ஒருவன்.

முருகேஷும் நானும் வெவ்வேறு ஊர்களில் பணி செய்து வந்ததால் எங்களால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிந்ததில்லை. ஆயினும் இருவரும் தொடர்பில்தான் இருந்தோம்.

எனக்குப் பதவி உயர்வுகள் கிடைத்துத் துணைப் பொது மேலாளர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டேன். ஆனால் முருகேஷ் இன்னும் ஒரு கீழ்நிலை அதிகாரியாகத்தான் இருந்தான்.

அன்று டில்லி ஓட்டலில் தொடங்கிய மதுப்பழக்கம் முருகேஷை உடும்பு போல் பற்றிக்கொண்டு விட்டது. ஒரு நாள் கூட அவனால் மது அருந்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

நான் அவனை நேரில் பார்க்கும்போதெல்லாம் மதுப்பழக்கத்தை விடச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறாள். ஆனால் அவனால் மதுப் பழக்கத்தை விட முடியவில்லை.

குடிப்பழக்கம் அவன் குடலைச் சிதைத்த நிலையில்தான் அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

"என்னடா இப்படி ஆயிட்டே?" என்றேன்.

பின்புறமிருந்து ஒரு விசும்பல் கேட்டது. முருகேஷின் மனைவி பானுமதி!

"நீங்க, நான், இன்னும் எத்தனையோ பேரு சொல்லியும் கேக்காம இப்படிக் குடிச்சுக் குடிச்சு உடம்பைப் பாழாக்கிக்கிட்டு ஒக்காந்திருக்காரு பாருங்க"  என்றாள் அவள்.

"இனிமேயாவது இந்தப் பழக்கத்தை விடுடா!" என்றேன்.

முருகேஷ் மௌனமாகத் தலையாட்டினான்.

"மறுபடியும் குடிச்சா உயிரே போயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காரு. என் மேல பரிதாபப்பட்டாவது அவரைக் குடிக்காம இருக்கச் சொல்லுங்க" என்றாள் பானுமதி.

"இனிமே குடிக்க மாட்டேன்" என்றான் முருகேஷ்.

"உங்களால முடியுமா?" என்றாள் பானுமதி அவனிடம். தொடர்ந்து, என்னிடம் "எங்களுக்குக் குழந்தைங்க இல்லாதது ஒரு விதத்தில நல்லதுன்னு தோணுது. இவரு குடிக்கு ஆகிற செலவு போக மீதி இருக்கிற பணத்தில நாங்க ரெண்டு பேரு குடித்தனம் நடத்தறதே பெரும்பாடா இருக்கு. இதில குழந்தைங்க வேற இருந்தா அவங்களுக்கு என்னால ரெண்டு வேளை சோறு போடக் கூட முடிஞ்சிருக்காது. அப்புறம் படிக்க வைக்கறதெல்லாம் எங்கே? இன்னொரு விதத்தில பாத்தா, குழந்தைங்க இருந்திருந்தா எனக்குக் கொஞ்சம் ஆதரவா இருந்திருப்பாங்கன்னு தோணுது" என்றாள் வருத்தத்துடன்.

"டேய்! மூணு மாசம் லீவு போட்டுட்டு நீங்க ரெண்டு பெரும் மும்பைக்கு வந்து என்னோட இருங்க. ஒரு மாறுதலா இருக்கும். என்னோட இருந்தா உன் குடிப்பழக்கத்தையும் உன்னால விட முடியும்" என்றேன் நான். என்னால் வேறு என்ன செய்ய முடியும்?
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 
என்றும் இடும்பை தரும்..

பொருள்:  
நல்லொழுக்கம் நன்மைகள் விளைவதற்கு அடிப்படையாக அமையும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைத்தான் தரும்.
 பொருட்பால்                                                                                            காமத்துப்பால்






















2 comments:

  1. Good work Mr. Rengaswami. A story for a kural, sounds like a better way to understand and remember. I'll share your website with my friends!!

    ReplyDelete
  2. Thank you Mr. Gokul. I appreciate your fine gesture. Thanks again.

    ReplyDelete