About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, March 19, 2018

139. சீட்டுப் பணம்

"என்னங்க இது? அனாதையாத் திரிஞ்சிக்கிட்டிருந்த பையனுக்கு நீங்க வேலை கொடுத்துப் பிழைப்புக்கு வழி பண்ணினீங்க. அவனும் இத்தனை வருஷமா உங்ககிட்ட வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். இப்ப உங்ககிட்ட சொல்லிக்காம வேலையை விட்டு நின்னுட்டு, உங்களுக்குப் போட்டியா அவனே தொழில் ஆரம்பிச்சிருக்கான். அவனைச் சும்மா விடலாமா?" என்றாள் சுந்தரி.

சபாபதி பதில் சொல்லவில்லை.

"இப்படி நன்றியில்லாம நடந்துக்கிட்டதுக்கு..."

"வேணாம். அவனை சபிக்கிற மாதிரி எதுவும் சொல்லிடாதே! அவன் நல்லா இருந்துட்டுப் போகட்டும்" என்றார் சபாபதி.

"நமக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவங்களை நாலு வார்த்தை சொல்லித் திட்டினாத்தானே மனசு ஆறும்?" என்றாள் சுந்தரி.

"நல்லவங்களா இருக்கறதுக்கு அடையாளம் நல்ல வார்த்தைகளையே பேசறதுதான்" என்றார் சபாபதி.

"என்னங்க நீங்க பேசறது? தப்புப் பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்காம வேணும்னா விட்டுடலாம். ஆனா நம்ப வயித்தெரிச்சல் தீர ரெண்டு வார்த்தை சொல்றது கூடவா தப்பு?"

"தப்புதான்."

"நீங்க சொல்றது விசித்திரமா இருக்கு. சில பேரு தங்களோட கோபத்தைக் காட்ட வசவுச் சொற்களைப் பயன்படுத்துவாங்க. ஆனா கண்ணியமாப் பேசறவங்க இந்த மாதிரி சொற்களைப் பயன்படுத்த மாட்டாங்க. 'அவன் நல்லா இருப்பானா?' 'அவன் நாசமாத்தான் போவான்' என்கிற மாதிரி ஏதாவது சொல்லுவாங்க. இதுதானே உலக வழக்கம்?"

"கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தறது நமக்கு நாமே கொடுத்துக்கற தண்டனை."

"எப்படிச் சொல்றீங்க?"

"முனிவர்கள் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிச்சு கடுமையா தவம் பண்ணி சில சக்திகளைப் பெறுவாங்க. ஆனா அவங்க யாருக்காவது சாபம் கொடுத்தா அவங்க தவ வலிமை குறைஞ்சுடும்னு புராணக் கதைகள்ள படிச்சிருக்கோம். சாபம் கொடுக்கறதுங்கறது மத்தவங்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடிய சொற்களைப் பேசறதுதானே? இது மாதிரி தீய சொற்களை முனிவர்கள் பயன்படுத்தினா அவங்க தவ வலிமை குறைஞ்சிடும்னா என்ன அர்த்தம்? அவங்களோட ஒழுக்கமும், கட்டுப்பாடும் கட்டுக்குலைஞ்சு போச்சுன்னுதானே? இது அவங்க தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கற தண்டனையில்லாம வேற என்ன?"

சுந்தரி பதில் சொல்லவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, மாதாந்திரச் சீட்டு நடத்தி வந்த ஒருவர் சீட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகச் செய்தி வந்தது. சுந்தரியும் அவரிடம் சீட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கட்டியிருந்தாள். செய்தி கேட்டதும் முதலில் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தொடர்ந்து, ஏமாற்றி விட்டு ஓடிப் போனவன் மீது ஆத்திரம் வந்தது. "அவன் நாச..." என்று ஆரம்பித்தவள் "அவன் நல்லா இருக்கட்டும்!" என்று வாக்கியத்தை மாற்றிக் கொண்டாள்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய 
வழுக்கியும் வாயாற் சொலல்.

பொருள்:  
வாய் தவறிக் கூடத் தீய சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களுக்கு ஏற்புடையதல்ல.
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்





















3 comments:

  1. திருக்குறள் கதைகள் - ஆஹா, இப்படி ஒரு அருமையான வலைப்பூவை இவ்வளவு ஆண்டுகள் தவற விட்டுவிட்டேன்.
    மிக அருமையான கதை :) இனி தங்கள் வலைப்பூவை தவறாமல் படிக்கிறேன்.
    தங்களைப் பாராட்ட வயதில்லை, வணங்குகிறேன்.

    ReplyDelete
  2. நன்றி கேசவன் அவர்களே1

    ReplyDelete
  3. Very good - how come I missed it earlier ?

    ReplyDelete