"என்ன திடீர்னு ஆஃபீஸ்ல ஒரே பரபரப்பு?" என்றான் கோவர்த்தனம். பொதுவாக அவன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவன்.
"ஏதோ மோசடி நடந்திருக்காம்" என்றான் கணேசன். அவன் இப்போதுதான் ஜெனரல் மானேஜர் அறைப்பக்கம் போய் நோட்டம் பார்த்து விட்டு வந்திருந்தான்.
"என்ன மோசடி?"
"நம்ப சப்ளையரோட அக்கவுன்ட்டுக்குப் போக வேண்டிய மூணு லட்ச ரூபாய் வேற ஏதோ அக்கவுன்ட்டுக்குப் போயிருக்கு."
"அது எப்படி முடியும்? சீஃப் அக்கவுன்டன்ட்தானே பாங்க் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் பண்ணுவாரு?"
"யாரோ அவரோட பாஸ்வேர்டைப் பயன்படுத்திப் பணத்தை வேற அக்கவுன்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. சப்ளையருக்கு தொடர்ச்சியா நிறைய பேமெண்ட் நடந்துக்கிட்டிருக்கறதால இந்த ஒரு பேமெண்ட் வரல்லேங்கறதை அவங்க கண்டு பிடிச்சு நம்பகிட்ட கேட்டு, நாம கணக்கெல்லாம் செக் பண்ணி பாங்க்ல போய் விசாரிச்சு இப்படி ஒரு மோசடி நடந்துருக்குங்கறதைக் கண்டு பிடிக்கவே மூணு மாசம் ஆயிடுச்சு. போலீஸ்ல புகார் கொடுத்து ரெண்டு மூணு வாரம் ஆயிடுச்சாம். ஆனா மேனேஜ்மேன்ட்ல விஷயத்தை ரகசியமா வச்சிருந்திருக்காங்க. இன்னிக்குத்தான் ரெண்டு போலீஸ் அதிகாரிங்க நம்ம ஆஃபீசுக்கு வந்திருக்காங்க" என்று விளக்கினான் கணேசன்.
"ஏதோ மோசடி நடந்திருக்காம்" என்றான் கணேசன். அவன் இப்போதுதான் ஜெனரல் மானேஜர் அறைப்பக்கம் போய் நோட்டம் பார்த்து விட்டு வந்திருந்தான்.
"என்ன மோசடி?"
"நம்ப சப்ளையரோட அக்கவுன்ட்டுக்குப் போக வேண்டிய மூணு லட்ச ரூபாய் வேற ஏதோ அக்கவுன்ட்டுக்குப் போயிருக்கு."
"அது எப்படி முடியும்? சீஃப் அக்கவுன்டன்ட்தானே பாங்க் ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் பண்ணுவாரு?"
"யாரோ அவரோட பாஸ்வேர்டைப் பயன்படுத்திப் பணத்தை வேற அக்கவுன்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. சப்ளையருக்கு தொடர்ச்சியா நிறைய பேமெண்ட் நடந்துக்கிட்டிருக்கறதால இந்த ஒரு பேமெண்ட் வரல்லேங்கறதை அவங்க கண்டு பிடிச்சு நம்பகிட்ட கேட்டு, நாம கணக்கெல்லாம் செக் பண்ணி பாங்க்ல போய் விசாரிச்சு இப்படி ஒரு மோசடி நடந்துருக்குங்கறதைக் கண்டு பிடிக்கவே மூணு மாசம் ஆயிடுச்சு. போலீஸ்ல புகார் கொடுத்து ரெண்டு மூணு வாரம் ஆயிடுச்சாம். ஆனா மேனேஜ்மேன்ட்ல விஷயத்தை ரகசியமா வச்சிருந்திருக்காங்க. இன்னிக்குத்தான் ரெண்டு போலீஸ் அதிகாரிங்க நம்ம ஆஃபீசுக்கு வந்திருக்காங்க" என்று விளக்கினான் கணேசன்.
"யார் அக்கவுன்ட்டுக்குப் பணம் போயிருக்குன்னு கண்டு பிடிச்சு அவங்களைப் புடிச்சுடலாமே!" என்றான் கோவர்த்தனம்.
"அது புதுசா ஓப்பன் பண்ணின அக்கவுன்ட்டாம். ரெண்டு மூணு தடவையா பணத்தை வித்ட்ரா பண்ணிட்டு அக்கவுன்ட்டைத் துடைச்சு வச்சுட்டுப் போயிட்டான் போலருக்கு! ஐடி ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப் எல்லாமே போலியாம்!" என்றான் கணேசன்.
"நம்ப ஸ்டாஃப் யாரையாவது சந்தேகப்படறாங்களா?" என்றான் கோவர்த்தனம்.
கணேசன் இதற்கு பதில் சொல்வதற்குள் பியூன் வந்து கோவர்த்தனத்திடம், "சார்! ஜி.எம் உங்களைக் கூப்பிடறாரு" என்று சொல்ல, கோவர்த்தனம் எழுந்து ஜெனரல் மானேஜரின் அறைக்குச் சென்றான்
ஜி.எம் அறையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். கோவர்த்தனம் உள்ளே போனதும், ஜி.எம் அவனிடம், "கோவர்த்தனம்! பத்து வருஷம் முன்னால விநாயகா என்டர்ப்ரைசஸ்ங்கற கம்பெனியில நீங்க ஒர்க் பண்ணினீங்களா?" என்றார்.
கோவர்த்தனம் அதிர்ச்சி அடைந்தவனாக "ஆமாம் சார்!" என்றான், மென்று விழுங்கியபடி.
"நீங்க இங்க வேலைக்குச் சேர்ந்தபோது கொடுத்த அப்ளிகேஷன்ல அந்த கம்பெனியில வேலை செஞ்சதா சொல்லலியே, ஏன்?" என்றார் அவர்.
"எப்படிச் சொல்லுவான்? அங்கே அவன் ஐம்பதாயிரம் ரூபா கையாடல் பண்ணி மாட்டிக்கிட்டு வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆனதைப் பெருமையாவா சொல்லிக்க முடியும்?" என்றார் போலீஸ் அதிகாரி. உடனேயே அவனைப் பார்த்து "சொல்லுடா! இந்த மூணு லட்ச ரூபா மோசடியைப் பண்ணினது நீதானே?" என்றார்.
கோவர்த்தனத்துக்கு உடல் முழுவதும் குப்பென்று வியர்த்தது. பத்து வருடம் முன்பு, இளம் வயதில் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிறையத் தோற்றுக் கடன் வாங்கி, கடனை அடைக்க முடியாமல் ஏதோ ஒரு வேகத்தில் ஆஃபீஸ் பணத்தை எடுத்து மாட்டிக்கொண்டதும், பிறகு அம்மாவின் நகைகளை விற்றுப் பணத்தைக் கட்டி விட்டதால், அந்த நிறுவனம் போலீசில் புகார் கொடுக்காமல் அவனை வேலையை விட்டு அனுப்பியதும் மனதில் படக்காட்சிகள் போல் வேகமாக வந்து போயின.
"இது எப்படி எங்களுக்குத் தெரியும்னு யோசிக்காதே. இங்கே வேலை செய்யற ஒவ்வொருத்தரோட பின்னணியையும் நாங்க ஆராய்ஞ்சுக்கிட்டிருக்கோம். நீ இங்கே வேலைக்குச் சேர்ந்து பத்து வருஷம் ஆகுது. ஆனா நீ படிப்பை முடிச்சு 12 வருஷம் ஆகுது. ரெண்டு வருஷம் வேலை தேடிக்கிட்டிருந்ததா சொல்லி நீ இவங்களை நம்ப வச்சிருக்கே. ஆனா நாங்க சந்தேகப்பட்டு விசாரிச்சு உன் பழைய வேலை விவரங்களைக் கண்டு புடிச்சுட்டோம். சொல்லு. மூணு லட்ச ரூபாயை என்ன பண்ணினே?" என்றார் அந்த அதிகாரி.
கோவர்த்தனம் ஜி.எம்மைப் பார்த்து, "சார்! நான் ஒரு தடவை தப்பு செஞ்சது உண்மைதான். ஆனா அதுக்கப்பறம் ஒரு சின்னத் தப்புக் கூடச் செய்யக் கூடாதுன்னு வைராக்கியமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இந்த கம்பெனியில இந்தப் பத்து வருஷத்திலே நான் ஒரு தப்பு கூடப் பண்ணினதில்ல சார். இந்த பாங்க் ட்ரான்ஸ்ஃபர் மாதிரி கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரியவும் தெரியாது சார்! என்னை நம்புங்க!" என்றான், கெஞ்சும் குரலில்.
ஜி.எம் பதில் சொல்லாமல் போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தார்.
"இப்ப எங்களுக்கு உன் மேலதான் சந்தேகம். அதனால உன்னை அரெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்" என்றார் போலீஸ் அதிகாரி.
"சார்!" என்றான் கோவர்த்தனம், ஜி.எம்மைப் பார்த்து.
ஜி.எம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
கோவர்த்தனம் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கோவர்த்தனம் விடுதலை செய்யப்பட்டான்.
கோவர்த்தனம் விடுதலையாகி இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனத்தின் வீட்டுக்கு அவன் அலுவலக நண்பன் கணேசன் வந்தான். அவன் முகத்தைப் பார்க்கவே கோவர்த்தனத்துக்கு அவமானமாக இருந்தது.
"டேக் இட் ஈஸி! அதுதான் உன் மேல் குத்தம் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சே!" என்றான் கணேசன்.
"பத்து வருஷத்துக்கு முன்னால நான் பண்ணின தப்பு என்னை இன்னும் விரட்டிக்கிட்டு வருதே! எவ்வளவு அவமானம்! உன் மூஞ்சியைப் பார்க்கக் கூட எனக்கு சங்கடமா இருக்கு" என்றான் கோவர்த்தனம்.
"பரவாயில்ல, விடு!" என்றான் கணேசன்.
"நான் அப்படி ஒரு தப்பைப் பண்ணினதாலதானே இப்ப என்னை சந்தேகப்பட்டாங்க? ஒரு தடவை பண்ணின தப்பு இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும் சரிவையும் கொடுத்திருக்கு பாரு! ஆனா எனக்கு ஒரு வருத்தம்."
"என்ன?"
"ஒரு தடவை தப்பு பண்ணினேன். அதுக்கு தண்டனைதான் இந்தப் பழியும் அவமானமும். சரி. ஆனா இந்தப் பத்து வருஷமா நேர்மையா நடந்துக்கிட்டிருக்கேனே, அந்த நேர்மைக்கு ஒரு பலனும் கிடையாதா?"
"ஏன் கிடையாது? நிச்சயமா உண்டு" என்றான் கணேசன்.
"தத்துவம் எல்லாம் வேண்டாம். என் நேர்மைக்கு எனக்கு என்ன பலன் கிடைச்சிருக்கு?"
"கிடைச்சிருக்குப்பா! அதைச் சொல்லத்தான் வந்தேன். ஆனா நீ, நான் வந்தவுடனேயே புலம்ப ஆரம்பிச்சுட்டே! உன் மன பாரம் கொஞ்சம் இறங்கினப்பறம் நான் சொல்ல வந்த நல்ல விஷயத்தைச் சொல்லலாம்னு காத்துக்கிட்டிருக்கேன்."
"என்ன நல்ல விஷயம்?"
"பணத்தைக் கையாடினது நீ இல்லைன்னு தெரிஞ்சுட்டாலும், உன் பழைய வேலையைப் பத்திச் சொல்லாம மறைச்சுட்டேன்னு ஜி.எம் உன் மேல கோபமாத்தான் இருந்தாரு. ஆனா இத்தனை வருஷமா கம்பெனியில நேர்மையா, கடினமா உழைச்ச உனக்கு தண்டனை கொடுக்கக் கூடாதுன்னு நெனச்சு உன்னை மறுபடியும் வேலையில சேத்துக்கறதுன்னு முடிவு பண்ணி இருக்காரு. உன் சஸ்பென்ஷனை ரத்து பண்ணி மறுபடியும் வேலையில சேரச் சொல்லி கம்பெனியிலிருந்து உனக்குக் கடிதம் அனுப்பிச்சுட்டாங்க. அநேகமா நாளைக்கே அந்தக் கடிதம் உனக்கு வரலாம்" என்றான் கணேசன்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 14
ஒழுக்கமுடைமை
குறள் 137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
பொருள்:
ஒழுக்கத்தினால் ஒருவருக்கு மேன்மை கிடைக்கும். ஒழுக்கம் தவறுபவருக்கு வேண்டாத பழி வந்து சேரும்.
நன்றாக இருக்கிறது....உங்கள் கதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறோம்....சில சமயம் கருத்திடாமல் போகிறோம்...தொடர்கிறோம்..
ReplyDeleteகீதா
உங்கள் பாராட்டுக்கும், என் கதைகளைத் தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி. இயன்றபோதெல்லாம் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
ReplyDeleteஐயாவிற்கு என் முதற்கண் வணக்கம். தங்கள் கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் படித்து பயன்பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களையும்
ReplyDeleteஇன்புற செய்கின்றனர்.
நன்றி சிவசங்கர் அவர்களே!
Delete