About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, February 28, 2018

136. வேண்டாம் மேனகை!

"நண்பர்களே! நாம இங்க என்ஜாய் பண்றதுக்காக வந்திருக்கோம். அதனால எல்லாரும் ஃப்ரீயா இருங்க. இங்க எம்.டி, ஜி.எம், அஸிஸ்டன்ட்னு வித்தியாசம்லாம் கிடையாது" என்றார் நிர்வாக இயக்குனர் மணிபாரதி.

"ஆமாம். நாம ஃப்ரீயா இருக்கணும்னுதான் பெண் ஊழியர்கள் இல்லாம ஆண்கள் மட்டும் வந்திருக்கோம்" என்றார் பொது மேலாளர் முருகன்.

அந்த நிறுவன ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பிக்னிக்குக்காக மலைப்பகுதியில் இருக்கும் அந்த ரிஸார்ட்டுக்கு வருவது வழக்கம்.

மாதவன் அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்ததால், அவனுக்கு இதுதான் முதல் முறை. அலுவலகத்தில் பாம்பாகச் சீறும் ஜி எம்மும், அறையை விட்டு வெளியே வராத எம் டியும் கீழ் மட்ட ஊழியர்கள் உட்பட அனைவரிடமும் கைகுலுக்கியும், தோளில் கை போட்டும் பழகியது அவனுக்கு வியப்பாக இருந்தது.

பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது. மாலை தங்கள் அறைகளுக்கு வந்து வந்து சிறிது நேரம் இளைப்பாறியதும் அனைவரும் மைய அறையில் கூடினார்கள்.

அறையின் முகப்பில் இருந்த பெரிய மேஜைகளின் மீது பல்வகை மதுபானங்களும், கண்ணாடித் தம்ளர்களும் வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய பானத்தையோ, கலவையையோ ஊழியர்களிடம் கேட்டுப் பெற்று எடுத்து வந்து நாற்காலிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பானங்களை அருந்தியபடி அரட்டை அடிக்கத் தொடங்கினர்.

மாதவன் மட்டும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அவன் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனிடம் வந்த முகேஷ் "என்னப்பா! டிரிங்க்ஸ் பழக்கம் இல்லியா? முதல்ல கொஞ்சம் பியர் அடிச்சுப்பாரு. அப்புறம் பழகிடும். நான் எடுத்துக்கிட்டு வரட்டுமா?" என்றான்.

முகேஷ் அவனுடைய சீனியர். அலுவலகத்தில் அவனுக்கு நெருக்கமானவனும் கூட.

"வேண்டாம். நான் குடிக்கிறதில்ல" என்றான் மாதவன்.

"நான் கூட வந்த புதுசுல ஒன்னை மாதிரிதான் இருந்தேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு ஆட்டம் பாக்கப் போறோம். அதைப் பாத்தப்பறம் உனக்கே குடிக்கணும்னு ஆசை வந்துடும்" என்றான் முகேஷ்.

"ஆட்டமா?"

"ஆமாம்ப்பா! காபரே டான்ஸ்!"

"காபரேயா?"

"ஆமாம்ப்பா! இந்த ரிஸார்ட்டோட ஸ்பெஷாலிட்டியே காபரேதான். இந்த மாதிரி ஒரு ஆட்டத்தை சிட்டி ஹோட்டல்கள்ள கூடப் பாக்க முடியாது!"

"இல்ல. நான் அதைப் பாக்கப் போறதில்ல. நான் ரூமுக்குப் போயிடறேன்" என்றான் மாதவன்.

"முட்டாளாடா நீ? சிட்டியில, அவனவன் திருட்டுத்தனமா காபரே நடக்கற ஹோட்டல்கள்ள ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கட் வாங்கிக்கிட்டு எப்ப போலீஸ் வந்து எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்களோன்னு பயந்துகிட்டே பாக்கறான். இங்க நம்ப கம்பெனியில என்டர்டெயின்மென்ட் எக்ஸ்பென்ஸ் கணக்கில இது மாதிரி சூப்பர் டான்ஸ் எல்லாம் நமக்கு ஃப்ரீயாவே ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதைப் பாக்க மாட்டேன்னு கண்ணை மூடிக்கிறேங்கறே!"

"வேண்டாம் முகேஷ். இது மாதிரி பழக்கம்லாம் ஆரம்பிச்சா பின்னால அடிக்‌ஷனாப் போயி, வாழ்க்கையே வீணாயிடும். அதனாலதான் இந்த மாதிரி விஷயங்களிலிருந்து விலகி  இருக்கலாம்னு பாக்கறேன்!"

"ஸ்கூல்ல படிச்ச திருக்குறளை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டிருக்க போலருக்கு! குடிக்க மாட்டேன்னு சொன்னே. அது ஓகே. நான் உன்னை வற்புறுத்தல. ஒரு கவர்ச்சி நடனத்தைப் பாக்கறதுனால நீ கெட்டுப் போயிடுவியா என்ன? சினிமாவிலல்லாம் பாக்கலியா?"

"நான் பாக்கற சினிமாவில இது மாதிரி டான்ஸ் அஞ்சு நிமிஷம் வரலாம். ஆனா இது மாதிரி டான்ஸைப் பாக்கணும்கறதுக்காக நான் சினிமாவுக்குப் போறதில்லியே!"

"டேய் சந்நியாசி! நீ என்ன டான்ஸ் ஆடறவங்களோட சல்லாபமா பண்ணப் போற? அவங்க கவர்ச்சியா ஆடறதை சும்மா பாக்கறதினால என்ன ஆயிடப் போகுது? ஒரு டான்ஸைப் பார்த்து யாராவது கெட்டுப் போயிருக்காங்களா? சொல்லு."

"போயிருக்காங்களே, சந்நியாசிகளே கெட்டுப் போயிருக்காங்க!"

"எந்த சந்நியாசி? ஒத்தர் பேரைச் சொல்லு பாக்கலாம்!"

"விசுவாமித்திரர்!" என்றான் மாதவன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:  
ஒழுக்கம் தவறுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்தவர்கள் ஒழுக்கம் தவறாமல் கவனமாக இருப்பார்கள்.
பொருட்பால்                                                                                             காமத்துப்பால்

















No comments:

Post a Comment