About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, February 12, 2018

131. நெருக்கம்

நிர்வாக இயக்குனரின் தனிச் செயலர் என்ற அந்த உயர் பதவிக்கான நேர்முகத்துக்கு வந்திருந்தவர்களிலேயே வயதில் குறைந்தவன் பத்மநாபன்தான். ஆயினும் அவன்தான் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

நேர்முகத் தேர்வை நடத்திய பொது மேலாளர் "இப்ப நீங்க எம் டியைப் பாக்கணும். அவங்க உங்களை ஓகே பண்ணிட்டா உங்க அப்பாயிண்ட்மென்ட் கன்ஃபர்ம்ட்!" என்றார்.

நிர்வாக இயக்குனர் நர்மதா அவனைவிட ஐந்தாறு வயது இளையவளாக இருப்பாள் என்று தோன்றியது. அவள் அவனை அதிகம் எதுவும் கேட்கவில்லை.

அவன் படிப்பு, அனுபவம் பற்றி ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு, அருகிலிருந்த பொது மேலாளரைப் பார்த்துத் தலையசைத்தாள். பொது மேலாளர் "கங்கிராட்ஸ்!" என்று சொல்லி அவன் கையைக் குலுக்க, நர்மதா மெலிதாக ஒரு புன்னகை செய்தாள்.

வேலையில் சேர்ந்த புதிதில், நர்மதா அவனிடம் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அலுவலகத்தில் அவளுடைய எல்லாப் பணிகளும் அவன் மூலமாகத்தான் நடக்க வேண்டும் என்ற நிலையிலும், அவள் தன்னைச் சற்று தூரத்திலேயே வைத்திருப்பதாக பத்மநாபனுக்குத் தோன்றியது.

ஆயினும் சில மாதங்களில் சில படிப்படியான மாறுதல்களை அவன் கவனித்தான். அவன் சிறப்பாகச் செயலாற்றும் முறையை நர்மதா கவனித்து அங்கீகரிக்கத் தொடங்கினாள். 

ஆரம்பத்தில் அவனை ஒரு கீழ்மட்ட உதவியாளன் போல் நடத்தி வந்த நர்மதா, நாளடைவில் பல விஷயங்களை முடிவெடுக்கும் அதிகாரத்தை அவனிடமே அளித்தாள். பொது மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம் கூட அவ்வப்போது "எதுவாயிருந்தாலும் பத்மநாபன் சார் கிட்டக் கேட்டுக்கங்க!" என்று அவனுக்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளித்தாள்.

அவனை அடிக்கடி அழைத்து விவாதிப்பது, அவனிடம் கருத்துக் கேட்பது என்று தொடங்கி, பல முக்கியமான சந்திப்புகளுக்கு அவனையும் அழைத்துச் செல்லத் துவங்கினாள்.

தன் திறமையான செயல்பட்டாலும், உண்மையான ஈடுபாட்டாலும், கடுமையான உழைப்பாலும் நிர்வாக இயக்குனரிடம் நற்பெயரையும் மதிப்பையும், சம்பாதித்து விட்டதை நினைத்து பத்மநாபன் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.

ரு முக்கியமான வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக அவர்கள் இருவரும் அவர்களுடைய நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருந்தனர். வாடிக்கையாளர் தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொல்லி, அவர்களைத் தன் அறையிலேயே காத்திருக்கச் சொல்லி விட்டு வெளியே சென்றார்.

"நான் லாபியில வெயிட் பண்றேன். அவர் வந்ததும் வரேன்" என்று எழுந்த பத்மநாபனை,"உக்காருங்க பத்மநாபன். அவர் வரதுக்குள்ள சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு" என்று சொல்லி அங்கேயே உட்கார வைத்தாள் நர்மதா.

சில நிமிடங்கள் மௌனமாக இருந்த நர்மதா, "பத்மநாபன்! இந்த ஏழெட்டு மாசமா உங்களோட பர்ஃபாமன்ஸைப் பாத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். ஒரு எக்ஸிக்யூடிவ் அசிஸ்டன்ட் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணினபோது பேப்பர் ஒர்க்கிலேருந்து எனக்குக் கொஞ்சம் விடுதலை கிடைக்கும்னுதான் நினச்சேன். ஆனா நீங்க இவ்வளவு இனிஷியேடிவ் எடுத்து, எனக்கு பிராக்டிகலா வேலையே இல்லாம பண்ணிட்டீங்க. ஐ ஆம் வெரி ஹேப்பி" என்றாள் நர்மதா.

தாங்க்ஸ் மேடம்!" என்றான் பத்மநாபன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

"உங்ககிட்ட என்னோட பர்சனல் மேட்டர்ஸ் சிலதைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். நான் எங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு. சின்ன வயசிலியே அம்மா இறந்துட்டாங்க. டிகிரி முடிச்சதும் அப்பாவுக்கு உதவியா கம்பெனியில சேர்ந்தேன். ஓரளவுக்கு வேலையைக் கத்துக்கிட்டேன். ஆனா ரெண்டு வருஷத்திலியே அப்பா போயிட்டாரு. அதுக்கப்பறம் நானே எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு இந்த கம்பெனியை மேனேஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மேடம்! உங்களைப் புகழறதா நினைக்காதீங்க. நீங்க ரொம்ப பிரில்லியண்ட். பிரமாதமா கம்பெனியை நடத்துறீங்கங்கறதுதான் உங்களைப் பத்தி மார்க்கெட்ல இருக்கற இம்ப்ரெஷன். நானே எட்டு மாசமாப் பாத்துக்கிட்டிருக்கேனே!" என்றான் பத்மநாபன்.

"தாங்க்ஸ்! எல்லாம் எங்கப்பாகிட்ட கத்துக்கிட்டதுதான். நீங்க புதுசா இந்த கம்பெனிக்கு வந்து வேலை கத்துக்கிட்டு என்னோட வேலையில பெரும் பகுதியை செஞ்சு முடிச்சுடறீங்களே! அதை விடவா?... ஓகே! நான் சொல்ல வந்த விஷயம்... எனக்குக் கல்யாணத்துல ஈடுபாடு இல்ல. கடைசி வரையிலே தனியா இருந்துடலாம்னுதான் நெனச்சேன்..."

மேலே எப்படித் தொடர்வது என்று தயங்குவது போல் சற்று நிறுத்தி விட்டு, மீண்டும் தொடர்ந்தாள் நர்மதா. 

"நான் நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு உங்க மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுடுச்சு. வெயிட்! நீங்க கல்யாணம் ஆனவர்னு எனக்குத் தெரியும். பட் ஐ வான்ட் யூ. இது காதல் எல்லாம் இல்ல. உங்களோட நெருக்கமா இருக்கணும்னு நினைக்கறேன்."

"மேடம்!" என்றான் பத்மநாபன், அதிர்ச்சியுடன்.

"சீரியஸ் ரிலேஷன்ஷிப் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு ஃபன் மாதிரி அவ்வளவுதான். இது மாதிரி சில இடங்கள்ள சில சமயங்கள்ள நாம நெருக்கமா இருக்கலாம். இது யாருக்கும் தெரியாது. உங்க மனைவிக்கும் தெரியாது. இது நம்ப அஃபீஷியல் ரிலேஷன்ஷிப்பை பாதிக்காது. வாட் டூ யூ ஸே?"

"நான் போய் வெளியில வெயிட் பண்றேன்" என்று எழுந்தான் பத்மநாபன்.

"திங்க் அபவ்ட் இட்.  இதுல தப்பு எதுவும் இல்ல. இது வெளியில தெரிஞ்சா எனக்குத்தான் பாதிப்பு அதிகம். அதனால யாருக்கும் ஒரு சின்ன சந்தேகம் கூட வராம பாத்துக்கறது என் பொறுப்பு."

அவள் பேசிக் கொண்டிருந்தபோதே பத்மநாபன் எழுந்து சென்று விட்டான்.

ரவு அவன் வீட்டில் இருந்தபோது, அவன் கைபேசி அடித்தது. அவன் மனைவி சாரதா, உள்ளே அவர்களுடைய ஐந்து வயது மகன் விக்னேஷிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"சொல்லுங்க மேடம்" என்றான் பத்மநாபன்.

"உங்க ரெஸிக்னேஷன் லெட்டரை ஈமெயில்ல அனுப்பியிருக்கீங்க. உங்களுக்கு இஷ்டம் இல்லேன்னா ஓகே. நீங்க ஏன் ரிஸைன் பண்ணணும்? நான் உங்களை வற்புறுத்தலியே?" என்றாள் நர்மதா.

"இல்லை. இன்னிக்கு நடந்ததோட நிழல் எப்பவும் என் மேல விழுந்துக்கிட்டே இருக்கும். அந்தச் சூழ்நிலையில என்னால சரியா வேலை செய்ய முடியாது. தயவு செஞ்சு என்னோட ராஜினாமாவை ஏத்துக்கிட்டு சீக்கிரம் என்னை ரிலீவ் பண்ணிடுங்க."

அவன் ஃபோனை வைத்தபோது மனைவி அருகில் வந்திருந்தாள். "வேலையை ரிஸைன் பண்ணிட்டீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லியே!" என்றாள்.

"சாப்பாட்டுக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன். வேலை இல்லேன்னா சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டேன்னா?"

"ஜோக் அடிக்கிற நேரமா இது? நல்ல வேலையை விட்டுட்டீங்களே! ஏன்?"

"எனக்கும் என் பாஸுக்கும் ஒத்துப் போகல."

"என்னவோ நிழல்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க?"

"நான் என்ன வேலை செய்யறேன்னு நிழல் மாதிரி கூடவே நின்னு பாத்துக்கிட்டிருந்தா என்னால எப்படி வேலை செய்ய முடியும்? அதைத்தான் சொல்லிக்கிட்டிருந்தேன்."

"உங்க பிரச்னை என்னன்னு எனக்குத் தெரியும்!"

"என்ன?"

"ஒரு பொண்ணு பாஸா இருக்கிறத உங்களால ஏத்துக்க முடியல. அதானே?"

"ஏம்மா! வீட்டில ஒரு பொண்ணை பாஸா ஏத்துக்கிட்டிருக்கிற என்னால ஆஃபீஸ்ல ஒரு பொண்ணை பாஸா ஏத்துக்க முடியாதா?"

"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" என்று சிரித்தாள் சாரதா. அவள் சிரிப்பில் பத்மநாபனும் சேர்ந்து கொண்டபோது, வேறு வேலை தேட வேண்டுமே என்ற கவலை அவனுக்கு ஒரு கணம் மறந்து போயிற்று.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.

பொருள்:  
ஒழுக்கம்தான் ஒருவனுக்கு உயர்வைத் தரும். அதனால் ஒழுக்கத்தை உயிரை விட மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


குறள் 130 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





























No comments:

Post a Comment