About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, February 23, 2018

134. இரண்டு தவறுகள்!

"மிஸ்டர் சேகர்! நீங்க செஞ்சிருக்கிற காரியத்துக்கு உங்களை நாங்க தொடர்ந்து இங்கே வேலை செய்ய அனுமதிக்க முடியாது. நீங்க ரிஸைன் பண்றதுதான் உங்களுக்கு கௌரவமா இருக்கும்" என்றார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் பழனி.

"சார்! தயவு பண்ணி எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. தப்பு பண்றது எல்லோருக்கும் சகஜம்" என்றான் சேகர்.

"முடியாத காரியம்."

"சார்! கடந்த காலத்தில இது மாதிரி சந்தர்ப்பத்திலே மத்தவங்களுக்கு நீங்க இன்னொரு சான்ஸ் குடுத்திருக்கீங்க."

"யாரைச் சொல்றீங்க?"

"கோபாலைத்தான்."

"கோபாலா?" என்ற பழனி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மற்ற இரு உறுப்பினர்களான கல்லூரி முதல்வரையும், நிர்வாகக் குழுவின் செயலாளரையும் பார்த்தார். அவர்கள் இருவரும் மௌனமாகப் புன்னகைத்தனர்.

ந்து வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் அது. கோபால் என்ற விரிவுரையாளர் மீது மாணவர்களிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கின.

"அவர் கிளாஸ் ஒழுங்கா நடத்தறதில்ல."

"நிறைய விஷயங்களை விட்டுடறாரு. புத்தகத்தைப் பாத்தப்பறம்தான் அவர் நிறைய டாபிக்ஸை கவர் பண்ணலைன்னு தெரிஞ்சது."

"சில சமயம் புத்தகத்தைப் பாத்து அப்படியே படிக்கிறார்."

"ஒரு டாபிக்கை விளக்கிக்கிட்டிருக்கச்சே, பாதியில அப்படியே நின்னுடறாரு. மேற்கொண்டு தெரியலையா, மறந்துட்டாரான்னே தெரியல. அப்புறம் அதை அப்படியே விட்டுட்டு வேற டாபிக்குக்குப் போயிடறாரு."

முதல்வர் கோபாலைக் கூப்பிட்டு விசாரித்தார். கோபால் இந்தப் புகார்களெல்லாம் உண்மையில்லை என்று மறுத்தார்.

கோபாலை இரண்டு மூத்த பேராசிரியர்கள் சோதிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

கோபாலைச் சோதித்த பேராசிரியர்கள் கோபாலிடம் அவருடைய சப்ஜெக்ட் பற்றிக் கேட்ட பல கேள்விகளுக்கு அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

கோபால் வகுப்பில் பாடம் நடத்துவதை, பக்கத்து வகுப்பில் நின்று அவருக்குத் தெரியாமல் கேட்டார்கள். புகார்கள் உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தார்கள்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு கோபாலை விசாரித்தது. கோபால் தனது பிரச்னையை ஒப்புக் கொண்டார். பல மாதங்களாக அவர் புத்தகங்களைப் படித்துத் தயார் செய்து கொள்ளாமலேயே வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறார்.

தனக்குத் தெரிந்த சப்ஜெக்ட்தானே என்ற அலட்சியத்தில் புத்தகங்களைப் படிக்காமல் மேலோட்டமாகப் பாடம் நடத்தி வந்ததில் அவர் படித்து அறிந்திருந்த பல விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர் நினைவிலிருந்து அகன்று விட்டன. இதை அவரால் உணர முடியவில்லை.

"ஏதோ ஒரு ஓவர்கான்ஃபிடன்ஸினால அப்படி நடந்துக்கிட்டேன். நான் செஞ்சது தப்புத்தான். இனிமே படிச்சு நல்லாத் தயார் பண்ணிக்கிட்டு வந்து வகுப்பு நடத்தறேன்" என்றார் கோபால்.

ஆனால் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இதை ஏற்கவில்லை. அவரை வேலையில் தொடர அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

"எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. நான் ஒரு வருஷம் லீவ் போட்டுட்டு, என் சப்ஜெக்ட் தொடர்பான எல்லாப் பாடங்களையும் மறுபடியும் முழுசாப் படிச்சுட்டு வரேன். இப்ப என்னை டெஸ்ட் பண்ணின மாதிரி, சீனியர் ப்ரொஃபஸர்கள் மறுபடியும் டெஸ்ட் பண்ணட்டும். அவங்க என்னை அப்ரூவ் பண்ணினா மட்டும் என்னை மறுபடியும் வேலையில சேந்துக்க அனுமதிங்க" என்றார் கோபால்.

அவர் வேண்டுகோளை ஏற்று அவருக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத விடுப்பு கொடுக்கப்பட்டது. கோபால் தான் சொன்னபடியே ஒரு வருடம் பாடங்களை மீண்டும் படித்துத் தன்னை நன்கு தயார் செய்துகொண்டு வந்து பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சிறப்பாக பதில் சொன்னார். அதன் பிறகு, அவரை மீண்டும் வேலையில் தொடர அனுமதித்தார்கள்.

அதைத்தான் சேகர் குறிப்பிட்டுச் சொன்னார்.

ழனி வாய்விட்டுச் சிரித்து விட்டார். "மிஸ்டர் சேகர்! உங்ககிட்ட நாங்க இவ்வளவு தூரம் பேசிக்கிட்டிருக்கிறதே அதிகம். கோபால் பண்ணின தப்பு வேற, நீங்க பண்ணின குற்றம் வேற. 

"அவரு கொஞ்சம் சோம்பேறித்தனமா இருந்து புத்தகங்களைப் படிக்காம அரைகுறையா கிளாஸ் எடுத்து தான் படிச்ச விஷயங்கள்ள நிறைய மறந்து போய், அவர் மேல மாணவர்களுக்கு இருந்த நல்ல அபிப்பிராயத்தைப் போக்கிக்கிட்டாரு. 

"நீங்க உங்க கிளாஸ்ல படிச்ச மாணவியை பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி செஞ்சிருக்கீங்க. காலேஜ் பியூன் பாத்துட்டு ஒடி வந்து உங்களை அடிச்சு விலக்கி விட்டு, அந்தப் பொண்ணைக் காப்பாத்தியிருக்காரு. 

"இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம்னு அந்தப் பொண்ணோட பெற்றோர்கள் கேட்டுக்கிட்டதால உங்க மேல போலீஸ் புகார் குடுக்காம உங்களை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டு அதோட பிரச்னையை முடிச்சு வைக்கலாம்னு பாக்கறோம். நீங்க என்னடான்னா..! சரி. சட்னு சொல்லுங்க. ரிஸைன் பண்ணப் போறீங்களா இல்லை உங்களை டிஸ்மிஸ் பண்ணணுமா?"

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

பொருள்:  
ஒரு அந்தணன் வேதத்தை மறந்து விட்டால், அவனால் அதை மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவன் ஒழுக்கம் தவறி விட்டால் அவனுடைய உயர்ந்த குடிப்பிறப்பையே அவன் இழந்து விடுவான்.

(தற்போதைய காலத்துக்குப் பொருந்தும்படி, 'ஒருவன் தான் கற்ற கல்வியை மறந்து விட்டால், அதை மீண்டும் கற்க முடியும். ஆனால் அவன் ஒழுக்கம் தவறி விட்டால், அவனுடைய மதிப்பு போய் விடும்' என்று இந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.)
பொருட்பால்                                                                                             காமத்துப்பால்




















No comments:

Post a Comment