About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, February 4, 2018

127. பட்டிமன்றப் பேச்சாளன்

தீபாவளியன்று ஒளிபரப்புவதற்காக அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு சிறப்புப் பட்டிமன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு மாறுதலுக்காக "கண்ணகியின் மணவாழ்வு குலைந்ததற்குப் பொறுப்பு கோவலனா, மாதவியா?" என்று கொஞ்சம் இலக்கியத்தனமான தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பி வழிய, 'கோவலனே' என்று மூவரும், 'மாதவியே' என்று மூவரும் வாதிட்டனர். இரண்டு தரப்பிலும் ஒரு பெண், இரண்டு ஆண்கள் இடம் பெற்றிருந்தனர்.

'கோவலன்தான் பொறுப்பு' என்று வாதிட்ட அணியின் கடைசிப் பேச்சாளர் பரிமளா செல்வகுமார் "மாதவி கோவலனைத் தவிர வேறு யாரையும் மனத்தால் கூட நினைக்கவில்லை. கணிகைக் குலத்தில் பிறந்தும் அவள் ஒரு கற்புக்கரசியாக வாழ்ந்தாள். ஆனால் மணமான கோவலன் மனைவி இருந்தும் மற்றோர் பெண்ணை நாடினான். கண்ணகி, மாதவி இருவருமே கோவலனால் பாதிக்கப்பட்டவர்கள்தான்" என்றாள். அவள் பேசி முடித்ததும் கைதட்டல் அரங்கை அதிர வைத்தது.

நடுவர், "பரிமளா அவர்கள்  தனது ஆணித்தரமான வாதங்களால் கோவலன்தான் பொறுப்பு என்று நிலை நாட்டி விட்டார். அவருடைய வாதங்களை முறியடிப்பது மிகக் கடினம். இளங்குமரன் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்" என்று தனது வழக்கமான பாணியில் பேசிக் கடைசிப் பேச்சாளனான இளங்குமரனைப் பேச அழைத்தார்.

இளங்குமரன் எழுந்ததுமே, பெரும் கைதட்டல் எழுந்தது. பட்டிமன்றங்களில் இளங்குமரன் ஒரு நட்சத்திரப் பேச்சாளன். அந்தத் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் அவனுக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. எப்போதும் கடைசிப் பேச்சாளனாக வரும் அவன் மற்ற அணியினரின் எல்லாக் கருத்துக்களையும் தனது புத்திசாலித்தனமான, நகைச்சுவையான பேச்சினால் மறுத்துப் பேசும் பாங்கு அவனுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்திருந்தது.

அந்தத் தொலைக்காட்சியின் பட்டிமன்றங்களில் அவனுக்குக் கிடைத்த புகழின் விளைவாக பல இலக்கிய, ஆன்மீக மேடைகளில் பேச அவனுக்குத் தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்ததால், தன் வேலையை உதறி விட்டு முழுநேரப் பேச்சாளனாகி விட்டான் அவன். ஆண்டு முழுவதும் பல நாடுகளிலும் அவனுக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடாயின.

இளங்குமரன் பேச ஆரம்பித்தான்.

"எனக்கு முன்பு பேசிய சகோதரி பரிமளா அவர்கள் மாதவியை ஒரு அப்பாவி போல் வர்ணித்தார். மாதவியை ஆதரித்து அந்த அணியைச் சேர்ந்த மூவரும் பேசியது எனக்கு வியப்பாக இருக்கிறது. மாதவி ஒரு விலைமாது. ஒழுக்கம் கெட்டவர்களால்தான் மாதவி போன்ற ஒரு விலைமாதை ஆதரித்துப் பேச முடியும்!"

திடீரென்று அரங்கம் முழுவதும் அமைதியானது. தனது கூர்மையான பேச்சுக்குப் பெரும் கைதட்டல் எழும்பும் என்று எதிர்பார்த்த இளங்குமரன், குழப்பத்துடன் அனைவரையும் பார்த்தான்.

நடுவர் அவனை முறைத்துப் பார்த்தபடி இருந்தார். பரிமளா தலையைக் குனிந்து கொண்டிருந்தாள். அவள் அணியின் மற்ற இருவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் அணித்தலைவர் மெதுவாகத் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டிருக்க, அவன் அணியைச் சேர்ந்த பெண் பேச்சாளர் அவனை எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தான் யோசிக்காமல் தவறாக ஏதாவது பேசி விட்டோமோ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தபோது, நடுவர் மணியை அடித்து விட்டார். 'இப்போதுதானே பேச ஆரம்பித்தோம்?' என்று குழம்பியபடி அவன் நடுவரைப் பார்க்க, அவர் அவனை உட்காருமாறு சைகை செய்தார்.

அவன் அமர்வதற்கு முன்பே நடுவர் அவசரமாகப் பேச ஆரம்பித்தார். "இப்போது தீர்ப்பு சொல்லும் நேரம். முன்பெல்லாம் தமிழ்நாட்டில் 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?' என்று நிறையப் பட்டிமன்றங்கள்  நடக்கும். அதைப் பற்றிக் கவிஞர் வாலி ஒருமுறை சொன்னார். 'கண்ணகி, மாதவி இருவரில் யார் மேல் என்று கேட்டால், இருவருமே மேல் இல்லை, இருவருமே ஃபீமேல்தான்."

அரங்கில் மெலிதான சிரிப்பலை எழுந்தது. பொதுவாக, இது போன்ற நகைச்சுவைத் துணுக்குகள் அரங்கில் பலரிடமிருந்து பெரிய சிரிப்புகளை வரவழைக்கும். ஆனால் இளங்குமரனின் பேச்சு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னும் மீளவில்லை என்று தெரிந்தது. இறுக்கத்தைக் குறைக்க நடுவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.

தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் இளங்குமரனின் அருகில் வந்து அவனை மேடைக்குப் பின்னே அழைத்துச் சென்றார். தொலைக்காட்சி கேமராக்கள் இந்தக் காட்சி ஒளிப்பதிவு ஆகாதபடி, வேறு புறம் திருப்பப்பட்டன. தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒரு காரில் அவன் உடனே வீட்டில் கொண்டு போய் விடப்பட்டான்.  

அன்று இரவு பட்டிமன்ற நடுவர் இளங்குமரனுக்கு ஃபோன் செய்து "என்ன தம்பி, இப்படிப் பேசிட்டீங்க? கவனமா இருந்திருக்க வேண்டாமா?" என்றார்.

"இல்லீங்கய்யா! நான் விளையாட்டா ஏதோ..."

"எது விளையாட்டு? உங்களுக்கு முன்னால அந்தப் பெண் பரிமளா மாதவியை ஆதரிச்சுப் பேசியிருக்காங்க. ஒழுக்கங்கெட்டவங்கதான் மாதவியை ஆதரிப்பாங்கன்னு நீங்க சொன்னா என்ன அர்த்தம்? அந்தப் பொண்ணை சொல்ற மாதிரி இல்ல இருக்கு? டி வி சேனல் டைரக்டர் ரொம்பக் கோவமா இருக்காரு. தீபாவளி அன்னிக்கு நிகழ்ச்சியை ஒளிபரப்பும்போது, நீங்க பேசினதை கட் பண்ணிடுவாங்க. ஆனா ஆயிரம் பேருக்கு மேல இன்னிக்கு நிகழ்ச்சியைப் பாத்திருக்காங்களே! அவங்க சும்மா இருப்பாங்களா? பத்திரிகைக்காரங்க வேற சில பேரு வந்திருப்பாங்க. அவங்க என்ன பண்ணுவாங்களோ?" என்று தன் கவலையைத் தெரிவித்தார் நடுவர்.

தன் பேச்சின் தீவிரத்தை அப்போதுதான் உணர்ந்த இளங்குமரன் உடனே பரிமளாவுக்கு ஃபோன் செய்து வருத்தம் தெரிவிக்க முடிவு செய்தான். அவள் தொலைபேசி எண்ணைக் கேட்டுப் பெற்று, அவளுக்கு ஃபோன் செய்தான். ஆனால் "நான் இளங்குமரன் பேசறேன்" என்று அவன் ஆரம்பித்ததுமே, அவள் இணைப்பைத் துண்டித்து விட்டாள் .

அன்று இரவே, சில தொலைக்காட்சிகளில் இளங்குமரனின் பேச்சு பற்றிய செய்தி வெளியாகியது. நிகழ்ச்சியை நேரில் பார்த்த சிலர் இளங்குமரனின் பேச்சைக் குறிப்பிட்டுத் தாங்கள் அதை நேரில் கேட்டதைப் பதிவு செய்தனர்.

திருட்டுத்தனமாக நிகழ்ச்சியைத் தன் கைபேசியில் பதிவு செய்த ஒருவர் அந்த வீடியோப் பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட, இளங்குமரனின் பேச்சு பற்றிய சர்ச்சை காட்டுத்தீ போல் பரவியது. இளங்குமரன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தும், அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

அடுத்த ஒரு வாரத்துக்கு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இளங்குமரனின் பேச்சு பற்றிய சர்ச்சைதான். அவன் வருத்தம் தெரிவித்து விட்டதால் பிரச்னையை இதோடு விட்டு விட வேண்டும் என்று ஒரு சிலர் கூறியதை யாரும் ஏற்கவில்லை.

அவனைக் கைது செய்ய வேண்டும் என்று சிலர் கூறினர். அவன் மீது நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  பெண் உரிமை இயக்கங்கள் அறிக்கைகள் மூலமும், ஆர்ப்பாட்டங்கள் மூலமும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தீபாவளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பட்டிமன்றத்தில் இளங்குமரன் பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தான். சில சமயம் மேடையில் அவன் அமர்ந்திருந்ததைக் காட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதைத் தவிர, இளங்குமரன் நிகழ்ச்சியில் பங்கேற்பவனாக எந்த ஒரு குறிப்பும் வராத அளவுக்கு நிகழ்ச்சி கவனமாக எடிட் செய்யப்பட்டிருந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு சர்ச்சை ஓய்ந்தபோது, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இளங்குமரன் பங்கேற்க வேண்டிய எல்லா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..

பொருள்:  
ஒருவர் வேறு எதைக்காக்காவிட்டாலும் தன் நாவைக் காக்க வேண்டும். அவ்வாறு காக்கா விட்டால், கடும் சொற்களால் அவமானப்படுத்தப்பட்டுத் துன்புறுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


  குறள் 126 
பொருட்பால்                                                                                                காமத்துப்பால்





















No comments:

Post a Comment