About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, February 11, 2018

130. கற்றதும் பெற்றதும்

"ஏம்ப்பா பி.ஈ. படிச்சிருக்கேங்கறே, அடிப்படை அறிவு கூட இல்லியே! உனக்கெல்லாம் இந்தக் கம்பெனியில வேலை கொடுத்திருக்காங்க பாரு, அவங்களைச் சொல்லணும்!"

ஃபோர்மேன் துரைசாமியின் பேச்சு கோபியைச் சுள்ளென்று தாக்கியது. ஆனால் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, 'ஒங்கிட்டல்லாம் நான் பேச்சுக் கேக்க வேண்டியிருக்கு பாரு!' என்று மனதுக்குள் நொந்து கொண்டான்.

துரைசாமி பொறியியலில் டிப்ளமா படித்தவர். பல ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு ஃபோர்மேன் ஆகியிருந்தார். புதிதாக வேலைக்குச் சேர்ந்து பயிற்சி நிலையில் இருக்கும் பொறியியல் பட்டதாரியான கோபியை அவ்வப்போது மட்டம் தட்டித் தன் அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த கோபி போன்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு அந்தத் தொழிற்சாலையின் செயல்முறைகளையும், தொழில் நுட்பத்தையும் புரிந்து கொள்ளச் சிறிது காலம் பிடிக்கும் என்பது துரைசாமிக்குத் தெரியும். 

ஆயினும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'பட்டம் வாங்கிய உன்னை விட டிப்ளமா படித்த நான் அதிகம் அறிந்தவன்' என்று காட்டிக் கொள்வது போல் நடந்து கொண்டார்.

இதுபோல் பலமுறை நடந்து விட்டது. ஆயினும் கோபி அவருடைய விமரிசனங்களை மௌனமாகப் பொறுத்துக் கொண்டிருந்தான்.

துரைசாமி அகன்றதும் அருகில் இருந்த மூர்த்தி, "அவரு அப்படித்தான் சார் பேசுவாரு. நீங்க வருத்தப் படாதீங்க!" என்றான்.

கோபி மூர்த்தியை நன்றியுடன் பார்த்தான். மூர்த்தி ஒரு மெஷின் ஆபரேட்டர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையில் ஒரு உதவியாளனாகச் சேர்ந்து சிறிது சிறிதாக வேலை கற்றுக் கொண்டு மெஷின் ஆபரேட்டர் என்ற நிலைக்கு வந்திருப்பவன். அவனுக்கு இயல்பாக இருந்த தொழில் நுட்ப அறிவினாலும், ஆர்வத்தினாலும், அனுபவத்தினாலும் இயந்திரங்களின் செயல்முறை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். 

அந்தத் தொழிற்சாலையில் எந்த ஒரு இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் மூர்த்தியைத்தான் கூப்பிடுவார்கள்.பெரும்பாலான பிரச்னைகளை அவனே சரி செய்து விடுவான்.

மூர்த்தியைப் பார்த்ததும் கோபிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. "மூர்த்தி! மெஷின்களைப் பத்தி எனக்கு சில சந்தேகங்கள் எல்லாம் இருக்கு. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சில விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுங்க" என்றான்.

"என்ன சார் இது? நீங்க எஞ்சினீரிங் காலேஜில படிச்சுட்டு வந்திருக்கீங்க. நான் படிக்காதவன். நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன இருக்கப் போகுது?" என்றான் மூர்த்தி சங்கடத்துடன்.

"இல்லை மூர்த்தி. உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு. மெஷின்ல வேலை செஞ்சு மெஷின்களைப் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்க கிட்ட நான் நிறையக் கத்துக்கலாம்" என்றான் கோபி.

"அதுக்கென்ன சார்? உங்களுக்கு என்ன தெரியணுமோ கேளுங்க. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டுப் போறேன்" என்றான் மூர்த்தி.

அதற்குப் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கோபி மூர்த்தியிடம் பேசிப் பல நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொண்டான். இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி மூர்த்தி சொன்ன பல விஷயங்களைக் கேட்ட பிறகு கோபிக்குக் கல்லூரியில் தான் கற்றது கால்வாசிதான் இருக்கும் என்று தோன்றியது.

ஆயினும் மூர்த்தி சொன்ன பல விஷயங்களைத் தன் கல்வி அறிவுடன்  பொருத்திப் பார்த்துப் பல விஷயங்களை ஆழமாக அறிந்து கொண்டான் கோபி. சில நாட்கள் கழித்து மூர்த்திக்கே புதிதாகச் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு அவனிடம் முன்னேற்றம் ஏற்பட்டது.

துரைசாமி அவ்வப்போது அவனை இளக்காரமாகப் பேசிக் கொண்டிருந்தார். கோபி அவர் பேச்சைப் பொருட்படுத்துவதையே விட்டு விட்டான். மூர்த்தியோடு அவன் அதிகம் பேசுவதைப் பற்றியும் துரைசாமி குறை கூறினார். "ஒர்க்கர்ஸ் கிட்டல்லாம் நெருக்கமாப் பழகாதே! அப்புறம் உன்னை மதிக்க மாட்டாங்க" என்று எச்சரித்தார். கோபி அதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ல மாதங்கள் கழித்து, ஒருநாள் கோபி மூர்த்தியிடம் "மூர்த்தி எனக்கு ஒரு ஐடியா. அது சரியா வருமான்னு சொல்லுங்களேன்" என்றான்.

அவனுடைய யோசனை பற்றி அவனும் மூர்த்தியும் பல நாட்கள் விரிவாகப் பேசி விவாதித்தார்கள்.

கோபி புரொடக்‌ஷன் மானேஜரைச் சந்தித்து "சார்! புரொடக்‌ஷன் லைன்ல ஒரு சின்ன மாற்றம் செஞ்சா உற்பத்தியை அதிகரிக்க முடியும்னு நினைக்கறேன். நீங்க ஒரு அரைமணி நேரம் கொடுத்தா அதை விளக்கமா சொல்றேன்" என்றான்.

"சொல்லுங்க" என்றார் புரொடக்‌ஷன் மானேஜர்.

தனது யோசனையை வரைபடங்கள், கணக்குகள் ஆகியவற்றின் உதவியுடன் விளக்கினான் கோபி.

"நீங்க சொல்றது ஒர்க் அவுட் ஆகுமான்னு பார்க்கணும். குவாலிட்டி இம்ப்ரூவ்மென்ட் கமிட்டில இந்த புரோபோசலை ஸ்டடி பண்ணச் சொல்றேன்" என்றார் புரொடக்‌ஷன் மானேஜர்.

கமிட்டியில் விரிவாக விவாதிக்கப்பட்டு கோபியின் யோசனை ஏற்கப்பட்டது.

புரொடக்‌ஷன் மானேஜர் கோபியைத் தன் அறைக்கு அழைத்தார். "கங்கிராட்ஸ் கோபி. ஒங்க புரொபோசலை கமிட்டில கிளியர் பண்ணிட்டாங்க. எம் டிகிட்ட பேசிட்டேன். அவரு இதை இம்ப்ளிமென்ட் பண்ணலாம்னு சொல்லிட்டாரு. கம்பெனியில சேர்ந்து பயிற்சிக் காலம் முடியற ஒரு வருஷத்துக்குள்ள இது மாதிரி ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டை இதுவரை யாரும் புரொபோஸ் பண்ணினதில்ல. ஃபர்ஸ்ட் இயர் அசீவர் என்கிற அவார்டை உங்களுக்குக் கொடுக்கப் போறதா எம் டி சொல்லியிருக்காரு. இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல அவரு ஒங்களைக் கூப்பிட்டுப் பேசுவாரு."

"தாங்க்ஸ் சார்!" என்றான் கோபி. "ஒரு வேண்டுகோள். நீங்க எந்த ரிவார்டு கொடுக்கறதா இருந்தாலும் மூர்த்திங்கற மெஷின் ஆப்ரேட்டருக்கும் சேர்த்துத்தான் கொடுக்கணும். டெக்னிகலா பல விஷயங்களை நான் புரிஞ்சுக்க உதவி பண்ணினவரு அவருதான். அதோட இந்தப் புது சிஸ்டத்தை டெவலப் பண்ணினதிலேயும் அவருக்குப் பங்கு இருக்கு. அவரோட யோசனைகளையெல்லாம் கணக்கில எடுத்துக்கிட்டுத்தான் நான் இந்த புரொபோசலைத் தயார் பண்ணினேன்" என்றான் கோபி.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

பொருள்:  
கோபத்தைக் கட்டுப்படுத்தி, கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கமாகச் செயல்படுபவனை, அறம் தேடிச் சென்று சந்திக்கும்.
 குறள் 129 

   பொருட்பால்                                                                                            காமத்துப்பால்




















No comments:

Post a Comment