About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, February 7, 2018

129. "நினைவிருக்கிறதா?"

முப்பது வருடங்கள் ஒடி விட்டன. சிறுவனாக அந்த ஊரில் வாழ்ந்த நினைவு கூட தண்டபாணிக்கு எப்போதோ கண்ட கனவு போல் மசமசவென்றுதான் இருந்தது.

அவன் பிறப்பதற்கு இரண்டு மாதம் முன்பே அவன் அப்பா போய் விட்டாராம். அப்பாவின் முகம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஒரு புகைப்படம் கூட இல்லை. 

1960ஆம் ஆண்டில் அவர்கள் இருந்த கிராமத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்திருக்கும்! 

திருமணத்தின்போது புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது நகர்ப்புறங்களில் வசித்த வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தான வழக்கமாக இருந்தது.

"ஒம் மூஞ்சியைக் கண்ணாடில பாத்துக்கடா! அதுதான் ஒன் அப்பன் மூஞ்சி!" என்பாள் அவன் பாட்டி- அவன் அப்பாவின் அம்மா.

ஐந்து வயது வரை அந்த ஊரில்தான் இருந்தான் தண்டபாணி. கூட்டுக் குடும்பம் என்பதால் அவன் அப்பாவின் இழப்பு அவன் வளர்ப்பைப் பெரிதாக பாதிக்கவில்லை.

அவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, தீபாவளியன்று அவன் கம்பி மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருந்தபோது அவன் சட்டையில் தீப்பற்றிக் கொண்டது. அதை ஓரிரு நிமிடங்களுக்கு யாரும் கவனிக்கவில்லை. யாரோ கவனித்து அவனைத் தரையில் போட்டுப் புரட்டி நெருப்பை அணைப்பதற்குள் அவன் விலாப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு அவன் தன் அம்மாவுடன் சென்னையில் இருந்த தன் மாமாவின் வீட்டுக்குப் போய் விட்டான். 

படித்து, வேலைக்குப் போய், திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்று காலப் போக்கில் வாழ்க்கையில் நிலைபெற்றும் விட்டான்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்தது. 

ஊரில் இருந்த கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று விடுவதென்று முடிவு செய்து விலை பேசியும் முடித்து விட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அவனும் வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்பதால் அவன் ஊருக்கு வந்தான்

தன் உறவினர் வீட்டில் தங்கியபடி ஊரை வலம் வந்தபோது, தண்டபாணிக்கு  எந்த இடமும் பார்த்துப் பழகிய இடம் போல் இல்லை. இத்தனைக்கும் ஊர் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை என்று சொன்னார்கள். 

அவன் வாழ்ந்த வீட்டுக்குக் கூடப் போய் வந்தான். அங்கே படுத்துப் புரண்டது, ஓடி விளையாடியது எதுவுமே நினைவில்லை.

அந்த வீட்டு வாசலில் நின்று கம்பி மத்தாப்பைக் கையில் பிடித்தபடி நின்றபோது யாரோ நெருப்பு நெருப்பு என்று கத்தியதும், இரண்டு மூன்று பேர் ஓடி வந்து அவனை மண்ணில் தள்ளிப் புரட்டியதும், தன்னை ஏதோ செய்கிறார்களே என்று அவன் பயந்து நடுங்கியதும் மட்டும்தான் நினைவில் தங்கியிருப்பதாகத் தோன்றியது.

வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி இந்த ஊரில்தான் ஆறு வயது வரை வாழ்ந்தோமா என்று வியப்புடன் அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரவம் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.

நெடுநெடுவென்று உயரமாக ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். "என்ன தண்டபாணி! என்னைத் தெரியுதா?" என்றார்.

தண்டபாணி அவரை நிமிர்ந்து பார்த்தான். முப்பது வருடங்களுக்கு முன் பார்த்திருக்கக் கூடிய முகம் இப்போது எப்படி நினைவிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பொறி தட்டியது.

"நீங்க...குலசேகரன் மாமாதானே!"

"அட! ஆச்சரியமா இருக்கே? டக்குனு சொல்லிட்டே! எப்படிடா?" என்றார் குலசேகரன்.

தண்டபாணியின் மனத்திரையில் ஒரு காட்சி வந்தது. திரைப்படக் காட்சி போல் மிகத் தெளிவாக இருந்தது அந்தக் காட்சி. 

தீக்காயம் பட்டு மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை பெற்று வந்த பின் அவன் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது அவனைப் பலர் வந்து பார்த்து விட்டுப் போயினர்.

அவர்களில் ஒருவரை மட்டும் அவனுக்கு நினைவிருந்தது. நெடுநெடுவென்று உயரமாக இருந்த குலசேகரன்! அந்த ஊரில் துடுக்குப் பேச்சுக்குப் பெயர் போனவர். 

"என்னடா பயலே! நெருப்புக் காயம் பட்டும் பொழச்சுக்கிட்டியா? அம்மா வயத்துல இருக்கும்போதே நீ ஒங்கப்பனை முழுங்கிட்டேன்னாலும் அவன்தான் தெய்வமா இருந்து ஒன்னைக் காப்பாத்தி இருக்கான்" என்று அவர் சொன்னபோது, தீக்காயத்தின் வலியை விட மோசமான வலியை அவன் தன் மனதுக்குள் உணர்ந்தான்.

அந்த வலி இப்போது மீண்டும் பீறிட்டு எழுந்தது. தன்னை அறியாமல் நெஞ்சில் கைவைத்துக் கொண்டான் தண்டபாணி.

"உங்களை எப்படி மறக்க முடியும்?" என்றான் தண்டபாணி, சிரித்தபடி. அவன் சிரிப்பின் பின்னிருந்த கசப்பைக் குலசேகரன் உணர்ந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு.

பொருள்:  
நெருப்பினால் ஏற்பட்ட காயத்தின் வடு வெளியில் இருந்தாலும் புண் உள்ளுக்குள் ஆறி விடும். ஆனால் ஒருவர் நாவிலிருந்து வெளிப்பட்ட கடுஞ்சொற்களால் விளைந்த மனப்புண் ஆறவே ஆறாது.
 குறள் 128 
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்















No comments:

Post a Comment