About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, August 16, 2017

91. சொல்லின் செல்வன்

அது முதியோர்களுக்கான கல்வி வகுப்பு. தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருந்தது.

"ஐயா, 'சொல்லின் செல்வன்' என்பது யாரைக் குறிக்கும்?" என்று கேட்டார் ஒரு மாணவர்.

"அனுமனைக் குறிக்கும்" என்றார் தமிழ் ஆசிரியர்.

"'சொல்லின் செல்வன்' என்றால் என்ன பொருள்?"

"செல்வம் என்றால் உங்களுக்குத் தெரியும். ஒருவர் சொல்லும் சொற்கள் மதிப்புள்ளவையாக இருந்தால் அவரைச் 'சொல்வின் செல்வன்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்."

"அனுமனுக்குச் 'சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தைக் கொடுத்தவர் யார்?"

"கம்பர்தான் அனுமனைச் 'சொல்லின் செல்வன்' என்று வர்ணிக்கிறார். ஆனால் அனுமனுக்கு இந்தப் பட்டத்தை சீதாப்பிராட்டியே வழங்கியிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது."

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"அசோகவனத்தில் சீதையிடம் மூன்று தரப்பினர் உரையாடுகிறார்கள். ஒருவன் ராவணன். இரண்டாவது சீதையைக் காவல் காக்கும் அரக்கிகள். மூன்றாவது அனுமன். இந்த மூவரும் அவரிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்.

"அரக்கிகள் சீதையிடம் இருவிதமாகப் பேசுகிறார்கள். ஒரு புறம், நைச்சியமாகப் பேசி அவரை ராவணனை ஏற்றுக் கொள்ளச் செய்ய முயல்கிறார்கள். இது போன்ற பேச்சில் இனிமை இருந்தாலும் உண்மை இல்லை, வஞ்சகம்தான் இருக்கிறது. இன்னொரு புறம் கடுமையான சொற்களால் அவரை பயமுறுத்துகிறார்கள். ராவணனின் இச்சைக்கு இணங்காவிட்டால் ராவணன் சீதையைக் கொன்று விடுவான் என்று மிரட்டுகிறார்கள்.

"ராவணன் சீதையுடன் பேசும்போதும் இதே அணுகுமுறையைத்தான் பயன்படுத்துகிறான். இந்த இரு தரப்பினர் பேச்சிலும் வஞ்சம் இருக்கிறது, கடுஞ்சொற்கள் இருக்கின்றன. அன்பு இல்லை, உண்மை இல்லை. இனிமையாகப் பேசுவது போல் பேசும்போதும் வஞ்சம் உள்ளிருப்பதால் அங்கே இனிமையும் இல்லை.

"மாறாக அனுமன் பேச்சில் இனிமை இருக்கிறது, உண்மை இருக்கிறது. வஞ்சம், கபடம் எதுவும் இல்லை. அனுமன் பேச்சை சீதை மிகவும் பாராட்டியதாக வால்மீகி, கம்பன் இருவருமே குறிப்பிட்டிருக்கின்றனர். எனவேதான் 'சொல்லின் செல்வன்' என்ற பட்டத்தை சீதையே அனுமனுக்கு அளித்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்."

"ஐயா! நீங்களும் 'சொல்லின் செல்வர்தா'ன்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"நாங்கள் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்டால் கூட, எங்களைக் கடிந்து கொள்ளாமல் பொறுமையாகவும், இனிமையாகவும் பதில் சொல்கிறீர்களே, அதனால்தான் அப்படிச் சொன்னேன்."

"நன்றி. திருவள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்றினால், நாம் எல்லோருமே 'சொல்லின் செல்வர்'களாக ஆகலாம். உங்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் அன்பு நிறைந்தவையாகவும், வஞ்சம் இல்லாதவையாகவும், உண்மையானவையாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!" என்றார் தமிழாசிரியர்.

அறத்துப்பால்
  இல்லறவியல் 
              அதிகாரம் 10             
 இனியவை கூறல்   
குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள்:
ஒருவர் தான் சொல்ல வரும் செய்தியின் உட்பொருளை உணர்ந்து அதை அன்பு கலந்தும், வஞ்சம் இன்றியும் வெளிப்படுத்தினால் அதுவே இன்சொல் ஆகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                             காமத்துப்பால்
























.

3 comments: