விற்பனைப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பின் கடைசி தினம்.
பயிற்சியாளர் மார்க்கண்டேயன் திருப்தியுடன் பயிற்சி பெற்றவர்களைப் பார்த்தார்.
"நீங்கள் எல்லாம் நல்ல விற்பனைப் பிரதிநிதிகளாக வருவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம்..." என்றார்.
"பயிற்சி இடைவேளையின்போது, நீங்க உங்களுக்குள்ள பேசிக்கிறதை கவனிச்சேன். உங்கள்ள சில பேர் சில வசைச் சொற்களைப் பயன்படுத்தறதை கவனிச்சேன்" என்றவர், சற்று நிறுத்தி விட்டு, "உதாரணமா 'பாஸ்...,' 'எஸ் ஓ பி' மாதிரி வார்த்தைகள். இது மாதிரி வார்த்தைகள் தப்பித் தவறி கூட உங்க வாயிலேந்து வராம பாத்துக்கணும்."
"ஏன் சார்?" என்றார் ஒருவர்.
மெல்லிய சிரிப்பொலி எழுந்தது.
"வசைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னு சொன்னா, ஏன் பயன்படுத்தக் கூடாதுன்னு கேக்கற அளவுக்கு இந்த வார்த்தைகள் உங்க வொக்காப்புலரியில இணைஞ்சிருக்கு!" என்றார் மார்க்கண்டேயன், சிரித்தபடி.
"அதில்லை சார். இந்த வார்த்தைகளை எல்லாரும் சகஜமாப் பயன்படுத்தறாங்களேன்னு சொன்னேன்" என்றார் கேள்வி கேட்டவர், மன்னிப்புக் கேட்கும் குரலில்.
"நீங்க வெளிப்படையாக் கேட்டதைப் பாராட்டறேன். நிறைய பேர் பயன்படுத்தறாங்கங்கறதாலயே, வசைச் சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைன்னு அர்த்தம் இல்ல. முதல்ல, அவற்றோட அர்த்தத்தைப் பாக்கணும். ஒத்தரை 'பாஸ்...,' 'எஸ் ஓ பி'ன்னு சொல்லும்போது, நீங்க அவரோட அம்மா மேல அவதூறு சொல்றீங்க. இது நியாயமா? இதைப் பத்தி நாம யோசிக்கறது கூட இல்ல."
"தட் இஸ் தி பாயிண்ட் சார். இது மாதிரி வாத்தையை காஷுவலா பயன்படுத்தறச்சே, அதோட அர்த்தத்தை மனசில வச்சு நாம பயன்படுத்தல. அதனாலேயே, இதையெல்லாம் ஹாம்லெஸ்னு நாம எடுத்துக்கலாமே!"
"ஹாம்லெஸ்ஸா சில பேரு எடுத்துக்கலாம். உங்க நண்பனைப் பாத்து முட்டாள்னு சொன்னா, அவன் கோவிச்சுக்க மாட்டான். ஆனா, வேற ஒத்தரைப் பாத்து அப்படிச் சொல்ல முடியுமா?"
அவர் மேலே சொல்வதைக் கேட்க அனைவரும் ஆவலாக இருந்தனர்.
"தீய சொற்கள், தீய செயல்களை விட அபாயமானவை. ஏன்னா, ஒரு தீய செயலைச் செய்யறப்ப, அதோட விளைவுகளை யோசிப்போம். ஆனா, தீய சொற்களை ரொம்ப காஷுவலா பயன்படுத்தறோம். பல பேருக்கு பிற மொழிகள் தெரியாட்டா கூட, அந்த மொழிகள்ள உள்ள கெட்ட வார்த்தைகள் தெரிஞ்சிருக்கும்! இந்த விஷயத்தில, நமக்கு மொழி வெறுப்பெல்லாம் கிடையாது! இதில அபாயம் என்னன்னா, பலருக்கு வசவுச் சொற்களைப் பயன்படுத்தறதில ஒரு த்ரில் இருக்கு.
"படிச்சவங்க, கண்ணியமானவங்க கூட இது மாதிரி வசைச் சொல்லை பயன்படுத்தறதில ஒரு த்ரில் இருக்கறதா நினைக்கிறாங்க. நெருப்புக் குச்சியையோ, சிகரெட் துண்டையோ அணைக்காம போடக் கூடாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, நிறைய பேரு அணைக்காமத்தான் கீழே போடுவாங்க. அதைக் கீழ போட்டுட்டு, அந்த நெருப்பை ரசிச்சுப் பாக்கறவங்களை நான் பாத்திருக்கேன். ஆனா, எப்பவாவது ஒரு தடவை தீப்பிடிக்கும்போதுதான். அதோட தீவிரம் தெரியும்."
"இந்த விஷயத்தைப் பத்தி ஏன் சார் நீங்க இவ்வளவு ஸ்ட்ராங்கா ஃபீல் பண்றீங்க?" என்றார் ஒருவர்.
"காரணம் இருக்கு" என்றார் மார்க்கண்டேயன். "நான் ஆரம்பத்தில ஒரு சின்ன நிறுவனத்துலவேலை செஞ்சேன். வேலைக்குச் சேந்த புதிசிலே, சில வாடிக்கையாளர்கள் கிட்ட பணம் வசூலிக்க என் பாஸோட போயிருந்தேன். நான் பாஸ்னு சொல்றது என்னோட முதலாளியை. ஒரு கஸ்டமர்கிட்டேந்து பல மாசமா பணம் வரல. அதனால, என்னோட முதலாளி ரொம்பக் கோவமா இருந்தாரு.
"நாங்க போன பல நேரங்கள்ள கஸ்டமர் இருக்கவே மாட்டாரு. அன்னிக்கு, கஸ்டமரோட மனைவி இருந்தாங்க. அவங்க சரியா பதில் சொல்லாம அலட்சியமாப் பேசினாங்க. என் முதலாளிக்கு ரொம்பக் கோவம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்ப, ஒரு வசவுச் சொல்லை அவரை அறியாம பயன்படுத்திட்டாரு. பொதுவா, ஒரு பெண் முன்னால பயன்படுத்தக் கூடாத வார்த்தை அது. அது என்ன வார்த்தைன்னு கேட்டுடாதீங்க!
"உடனே, அந்தப் பொண்ணு அதைப் புடிச்சுக்கிட்டாங்க. ஒரு பெண்கிட்ட தப்பான வார்த்தை பேசினதா சொல்லி சத்தம் போட்டு, பக்கத்தில இருந்தவங்களையெல்லாம் கூட்டிட்டாங்க.
"என் முதலாளி வெலவெலத்துப் போயிட்டாரு. தான் அப்படி சொல்லவேயில்லைன்னு சாதிச்சுட்டாரு. நானும் வேற வழியில்லாம, அவருக்கு ஆதரவாப் பேசினேன். 'அவரு அப்படி சொல்லல. நீங்க தப்பாக் கேட்டிருக்கீங்க'ன்னு சொன்னேன்.
"ஒரு வழியா, அங்கேந்து வந்தோம். அதுக்கப்பறம், என் முதலாளி அங்கே போகவே இல்லை. என்னைத்தான் அனுப்பிச்சாரு. நான் எப்ப போனாலும், என் முதலாளி தப்பாப் பேசினதைப் பத்தியே பேசி, பணம் கொடுக்காம இழுத்தடிச்சாங்க.
"அவசரப்பட்டு ஒரு வார்த்தை சொன்னதால, வசூலிக்க வேண்டிய பணத்தையே வசூலிக்க முடியலையேன்னு என் முதலாளி ரொம்ப வருத்தப்பட்டார். அதுக்கப்பறம், இது மாதிரி வசவுச் சொற்களை பயன்படுத்தறதையே அவர் நிறுத்திட்டாரு.
"எனக்கும் இது ஒரு பாடம். எந்த சந்தர்ப்பத்திலும், தப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு அன்னிக்கே முடிவு செஞ்சுட்டேன். இன்னிக்கு இதைப் பத்தி இவ்வளவு தூரம் பேசறதுக்குக் காரணம், தீய சொற்கள் கூட தீய செயல்கள் போல்தான்னு உங்களுக்கு அறிவுறுத்தத்தான். நெருப்புக்கு பயப்படற மாதிரி, தீய சொற்களுக்கும் நாம பயப்படணும்."
"நீங்கதான் சார் உண்மையான பாஸ்!" என்றார் ஒருவர்.
"நல்ல வேளை, 'பாஸ் என்கிற'ன்னு சொல்லாம இருந்தீங்களே!" என்றார் மார்க்கண்டேயன், சிரித்துக் கொண்டே.
இல்லறவியல்
அதிகாரம் 21
தீவினையச்சம்
குறள் 202தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பொருள்:
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் என்பதால், தீய செயல்களைத் தீயை விடக் கொடியதாகக் கருதி, அவற்றுக்கு அஞ்ச வேண்டும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment