
தன் பெயர் விஸ்வநாதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், டெல்லியில் ஒரு நிறுவனத்திலிருந்து ஒய்வு பெற்று, சென்னைக்கு வந்திருப்பதாகச் சொன்னார்.
அடுத்து நிகழ்ந்த சில சந்திப்புகளில், இருவரும் தங்களைப் பற்றி மேலும் விவரங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
விஸ்வநாதன் பணி செய்த நிறுவனத்தில் கண்ணனின் நண்பன் ஒருவனின் உறவினர் உயர் பதவியில் இருப்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
"உங்களுக்கு பாலகிருஷ்ணனைத் தெரியுமா?" என்றான் கண்ணன்.
"தெரியாம என்ன? அவனோட சேர்ந்துதானே இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கேன்?" என்ற விஸ்வநாதன், "உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்? சொந்தமா?" என்றார், எச்சரிக்கை உணர்வுடன்.
"எனக்கு சொந்தம் இல்லை. என் நண்பர் ஒத்தருக்கு தூரத்து சொந்தம். ஒரு நிகழ்ச்சியில என் நண்பர் அவரை அறிமுகப்படுத்தி வச்சார். அப்ப பாத்ததுதான். உங்க கம்பெனி பேர் சொன்னதும், அவர் ஞாபகம் வந்தது. அதான் கேட்டேன்" என்றான் கண்ணன்.
"உங்களுக்கு நெருக்கமானவனா இருப்பானோன்னு நெனச்சுதான் கேட்டேன்" என்ற விஸ்வநாதன், "அவன் என்னை விட வயசிலும் அனுபவத்திலும் சின்னவன். நான் வேற ஒரு கம்பெனியிலிருந்து எங்க கம்பெனிக்கு வந்து சேர்ந்தேன். அதனால, கம்பெனியில அவன் எனக்கு சீனியராயிட்டான். வேலையெல்லாம் அவ்வளவாத் தெரியாது. பல சமயம் என்கிட்டத்தான் சந்தேகம் கேட்டுப்பான். ஆனா, மேல இருக்கறவங்களுக்கு நல்லா ஜால்ரா போடுவான். இந்தியில சம்சாகிரின்னு சொல்லுவாங்க. அவனுக்கே ஆஃபீஸ்ல சம்சான்னு ஒரு பேரு உண்டு. அதனால, மள மளன்னு பிரமோஷன் வாங்கிக்கிட்டு மேல போயிட்டான். இப்ப ஜெனரல் மானேஜரா இருக்கான். என்னால அசிஸ்டன்ட் ஜெனரல் மானேஜருக்கு மேல உயர முடியல. படிப்பு, அறிவு, திறமை, கடின உழைப்பு இதுக்கெல்லாம் எங்க மதிப்பு இருக்கு?" என்றார்.
சில வாரங்கள் கழித்து, சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்த பாலகிருஷ்ணன், விஸ்வநாதனைப் பார்க்க அவர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது, விஸ்வநாதன் பாலகிருஷ்ணனைக் கண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். "கண்ணன் சார்! பாலகிருஷ்ணனை உங்களுக்குத் தெரியும்னு சொன்னீங்களே, அதான் அழைச்சுக்கிட்டு வந்தேன்" என்று சொல்லி விட்டு, "நீங்க பேசிக்கிட்டிருங்க" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
"எப்பவோ ஒரு தடவை பாத்ததை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே! விஸ்வநாதன் சொன்னதும், எனக்கு ரொம்ப ஆச்சரியம். உண்மையில, உங்களை எனக்கு சட்னு ஞாபகம் வரல. அப்புறம்தான், நீங்க ரவிச்சந்திரனோட நண்பர்னு நினைவு வந்தது" என்றார் பாலகிருஷ்ணன்.
சற்று நேரம் கழித்து, பேச்சு விஸ்வநாதன் பற்றித் திரும்பியது.
"விஸ்வநாதனை உங்களுக்கு ரொம்ப நாளாத் தெரியுமா?" என்றான் கண்ணன், ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக.
"அவன் எங்க கம்பெனியில சேர்ந்ததிலிருந்தே தெரியும். விஸ்வநாதனும், நானும் கொலீக்ஸ். ரெண்டு பேரும் ஒரே லெவல்லதான் இருந்தோம். அவன் சென்னையிலிருந்து டெல்லிக்கு வந்து எங்க கம்பெனியில சேந்தப்ப, கொஞ்ச நாள் வீடு கிடைக்காம கஷ்டப்பட்டான். சென்னையில இருந்த வீட்டை வேற காலி பண்ணிட்டான். அப்ப என் வீட்ல ஒரு எக்ஸ்டரா பெட்ரூம் இருந்தது. அதனால அவனுக்கு வீடு கிடைக்கிற வரை, குடும்பத்தோட என் வீட்டில இருக்கச் சொன்னேன். ரெண்டு மாசம் அவன் குடும்பம் என் வீட்டிலதான் இருந்தது. அதனால, முதலிலிருந்தே எங்க ரெண்டு குடும்பத்துக்கிடையில நல்ல நட்பு ஏற்பட்டுப் போச்சு. அவனுக்கு பிரமோஷன் எல்லாம் கொஞ்சம் லேட்டாக் கிடைச்சது. அது அவனுக்கு ஒரு குறைதான். எனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. அதனால, நான் கொஞ்சம் சீக்கிரம் மேல போயிட்டேன்!" என்றார் பாலகிருஷ்ணன், சிரித்தபடி.
பாலகிருஷ்ணன் விடைபெற்றுச் சென்றதும், கண்ணனின் மனைவி புஷ்பா கண்ணனிடம், "ஏங்க, முன்பின் தெரியாதவரைக் குடும்பத்தோட தன் வீட்டில தங்க வச்சிருக்காரு இவரு. ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில நிறைய வருஷம் வேலை செஞ்சுக்கிட்டு, நண்பர்களா இருந்திருக்காங்க. இவரைப் பத்தியே உங்ககிட்ட குறை சொல்லிப் பேசி இருக்காரு விஸ்வநாதன். நாளைக்கு நம்பளைப் பத்தி, யார்கிட்ட என்ன பேசுவாரா தெரியாது. அவர்கிட்ட அதிகம் பழக்கம் வச்சுக்காதீங்க!" என்றாள்.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 19
புறங்கூறாமை (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)
குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
பொருள்:
நெருங்கிப் பழகியவர்களின் குற்றம் குறைகளைக் கூடப் புறம் கூறித் தூற்றும் இயல்பு உடையவர்கள், மற்றவர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ!
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
pls add google follower gadget
ReplyDeleteDone. Thank you.
Deleteநம்மிடம் மற்றவர்களைப் பற்றி பேசுபவர்கள், மற்றவர்களிடம் நம்மைப்பற்றி இதே போல பேசுவார் என்பதை பலர் உணர்வதே இல்லை.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். நன்றி.
Delete