"அரசே! சிறந்த நூல்களுக்காக நீங்கள் அறிவித்த பரிசுப் போட்டிக்காக, நூற்றுக்கணக்கான நூல்கள் பரிசீலனைக்காக வந்துள்ளன. அவற்றில் ஐந்து நூல்களை நாங்கள் சிறந்ததென்று கருதித் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இவற்றில் பரிசுக்குரியது எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார் அமைச்சர்.
"சரி. நீங்கள் தேர்ந்தெடுத்த நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்" என்றான் அரசன்.
"முதல் நூல் தங்கள் வீரத்தைப் பற்றியும், அண்டை நாடுகளை நீங்கள் வெற்றி கொண்டது பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய புலவர் மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்."
"வேண்டாம். அடுத்தது?"
"அரசே! நீங்கள் இதைப் படித்துப் பார்த்தால், இது எவ்வளவு உயர்ந்தது என்று புரிந்து கொள்வீர்கள்."
"இருக்கலாம். புலவர்கள் அரசரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதிப் பரிசு பெற்றுப் போவது அடிக்கடி நடக்கிற விஷயம்தானே? இந்தப் பரிசுப் போட்டிக்கு வேறு வகை நூல்களைப் பார்ப்போமே!"
"நல்லது அரசே. இரண்டாவது நூல் ஒரு காதல் காவியம். இதை எழுதியவர் தேனைப் பிழிவது போல் இனிமையைப் பிழிந்திருக்கிறார்."
"சரி. அப்புறம் படித்துப் பார்க்கிறேன். அடுத்தது?"
"இது ஒரு நகைச்சுவை நூல். மனிதர்களின் இயல்பான செயல்களை நகைச்சுவை உணர்வுடன் விவரித்திருக்கிறார் ஆசிரியர்."
"பாராட்டுக்குரிய முயற்சி. நகைச்சுவையில் எனக்கு எப்போதுமே நாட்டமுண்டு. இதுவும் நான் படித்துப் பார்க்க வேண்டிய நூல்தான். நான்காவது?"
"இது ஒரு ஆராய்ச்சி நூல். நம் நாட்டின் பண்பாட்டை வரலாற்றுப் பின்னணியில் ஆதாரங்களுடன் எழுதி இருக்கிறார் இந்த நூலாசிரியர்."
"அற்புதமான முயற்சி. இதையும் நான் விரிவாகப் படிக்க வேண்டும்... ஐந்தாவது நூல்?"
"இது ஒரு வள்ளலைப் பற்றிய நூல். எந்த நிலையிலும் கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்து வரும் ஒரு வள்ளலைப் பற்றிய நூல் இது. இந்த வள்ளல் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த நூல் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும், அரசருக்கு நிகராக இன்னொருவரைப் புகழ்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று..."
"இந்தப் புத்தகம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது என்று கருதுகிறீர்கள் அல்லவா?"
"ஆமாம் அரசே! தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவருமே அப்படித்தான் கருதினோம். ஆயினும்..."
"அப்படியானால், இந்த நூலுக்கே பரிசு கொடுத்து விடுங்கள்!" என்றான் அரசன்.
"அரசே! இந்த நூலை நீங்கள் படிக்கவில்லையே! அத்துடன் மற்ற நூல்களையும் நீங்கள் படிக்க வேண்டும் என்று சொன்னீர்கள்."
"அமைச்சரே! இந்த நூலை நான் படிக்கத்தான் போகிறேன். ஆயினும்,தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இதை ஒரு சிறந்த நூல் என்று கருதுவதால், இதற்குப் பரிசு கொடுப்பதில் தாமதம் தேவையில்லை. நான் படிக்க விரும்பிய மற்ற மூன்று நூல்களையும் கூடப் படிக்கத்தான் போகிறேன். அதற்குப் பிறகு, அவற்றை எழுதியவர்களுக்கும் ஏதாவது பரிசு கொடுத்து விடலாம். இப்போது பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு நூலுக்கு மட்டும் பரிசை அறிவித்து விடுங்கள்."
"அரசே! நாங்கள் தேர்ந்தெடுத்த ஐந்து நூல்களில் நான்கை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். அவற்றில் இந்த நூலுக்குத்தான் பரிசு என்ற முடிவுக்கு வந்ததற்கான காரணத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?" என்றார் அமைச்சர், சற்றுத் தயக்கத்துடன்.
"நிச்சயமாக! உலகில் மக்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இவற்றுக்குள், இல்லையென்று யாசித்தவருக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுத்தவரைப் புகழ்ந்து பேசுவதுதான் சிறப்பான பேச்சு. கொடுப்பவரின் புகழைப் போல், கொடுப்பவரின் மேன்மையைக் கூறும் பேச்சும் என்றும் நிலைத்து நிற்கும். அதனால், இரந்தவருக்கு இல்லையெனாமல் ஈயும் உயர்ந்த மனிதர்களின் புகழ் பேசும் நூல்கள்தான் எல்லா நூல்களுக்குள்ளும் உயர்ந்தவை என்று கருதித்தான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றான் அரசன்.
இல்லறவியல்
அதிகாரம் 24
புகழ்
குறள் 232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
பொருள்:
இவ்வுலகில் சொல்லப்படுபவை எல்லாம் இல்லையென்று கேட்பவர்களுக்குக் கொடுப்பவர்களின் புகழ்தான்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment