
"சார்கிட்ட நாங்க வரதா ஃபோன் பண்ணிச் சொல்லி இருந்தோம்" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.
"ஐயா சாதகம் பண்ணிக்கிட்டிருக்காங்க. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க" என்றான் வேலையாள், சுருக்கமாக.
"சாதகமா?" என்ற கேள்வி முகத்தில் குருசாமியைப் பார்த்த சுந்தர், ஸ்ரீதரிடம், "ரிகர்சல்!" என்றார் குருசாமி ரகசியமாக.
"ஓ!" என்று தலையாட்டிய சுந்தர் ஸ்ரீதர், வேலையாளிடம், "சாருக்கு இன்னிக்குக் கச்சேரி ஏதாவது இருக்கா என்ன?"லஎன்றார்.
"இல்லீங்க. இப்பதானே டிசம்பர் சீசன் முடிஞ்சிருக்கு! அதனால, ஒரு மாசத்துக்கு கொஞ்சம் ஓய்வாத்தான் இருப்பாரு" என்றான் வேலையாள்.
"அப்ப எதுக்கு ரிகர்சல்?" என்று சுந்தர் ஸ்ரீதர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, உள்ளிருந்து ராமசுப்ரமணியம் வந்து விட்டார்.
பரஸ்பரம் நலம் விசாரித்த பின், "சொல்லுங்க! என்ன விஷயம்?" என்றார் ராமசுப்ரமணியம்.
"சார்! சங்கராபரணம்னு ஒரு படம் வந்தது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்."
"பாத்திருக்கேன். சொல்லுங்க."
"கர்நாடக சங்கீதத்தை அடிப்படையா வச்சு அது மாதிரி ஒரு படம் அப்புறம் வந்ததில்லை. இப்ப இவர் ஒரு அருமையான கதை வச்சிருக்காரு. அதை வச்சு, சங்கராபரணத்துக்கு இணையா இன்னொரு படம் பண்ணலாம்னு இருக்கோம்."
"நல்ல விஷயம். பண்ணுங்க."
"ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க இந்தக் கதையைக் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்."
"நான் கதையைக் கேட்டு என்ன ஆகப் போகுது? சரி, நீங்க விருப்பப்படறீங்க சொல்லுங்க" என்றார் ராமசுப்ரமணியம்.
"சொல்லுங்க" என்று சுந்தர் ஸ்ரீதர் குருசாமியிடம் சொன்னதும், குருசாமி கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஐந்து நிமிடம் என்று சுந்தர் ஸ்ரீதர் சொன்னாலும், குருசாமிக்குக் கதையைச் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆயிற்று.
"கதை நல்லாத்தான் இருக்கு. ஆனா, எங்கிட்ட எதுக்கு இதைச் சொல்றீங்கன்னுதான் தெரியல!" என்றார் ராமசுப்ரமணியம்.
"சார்! இது ஒரு கர்நாடக சங்கீத வித்வானைப் பத்தின படம். இதில நீங்கதான் சங்கீத வித்வானா நடிக்கணும்னு கேட்டுக்கத்தான் வந்திருக்கோம்" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.
ராமசுப்ரமணியம் பெரிதாகச் சிரித்தார்.
"ஏன் சார் சிரிக்கிறீங்க?"
"சொல்றேன். அதுக்கு முன்னால, என்னை ஏன் இந்த ரோலுக்குத் தேர்ந்தெடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?"
"நீங்க ஒரு முன்னணி சங்கீத வித்வான். உங்களைப் பத்தித் தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது. நீங்க நடிச்சா, படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்."
"ஆனா, எனக்கு நடிக்கத் தெரியாதே!"
"சார்! அதெல்லாம் தேவையில்லை. நீங்க சும்மா வந்து நின்னு, உங்களுக்குத் தெரிஞ்ச அளவில வசனத்தைப் பேசிட்டுப் போனா போதும். உங்களை எல்லோரும் சங்கீத வித்வானாத்தான் பாப்பாங்களே தவிர, உங்க நடிப்பைப் பத்தி யாரும் கண்டுக்க மாட்டாங்க" என்றார் சுந்தர் ஸ்ரீதர்.
"அதான் விஷயம்!" என்றார் ராமசுப்ரமணியம். "நான் சங்கீதம் கத்துக்கிட்டுப் பாட ஆரம்பிக்கவே எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா? நான் மட்டும் இல்ல, இன்னிக்கு நல்லா பாடறவங்கன்னு பேர் வாங்கி இருக்கிறவங்க எல்லாருமேதான். தினம் காலையில 4 மணிக்கு எழுந்து, ரெண்டு மணி நேரம் சாதகம் பண்ணுவேன். இது மாதிரி பல வருஷங்கள் பண்ணினப்பறம்தான், எனக்குப் பாடவே வந்தது.
"பாட ஆரம்பிச்சப்பறமும், தினம் சாதகம் பண்ணி, புதுசா புதுசாப் பல விஷயங்களைப் படிச்சும் கேட்டும் தெரிஞ்சுக்கிட்டு, நல்லாப் பாடறவங்க பல பேரோட கச்சேரிகளைத் திரும்பத் திரும்பக் கேட்டு, இரும்பை உலையில் காய்ச்சி அடிக்கற மாதிரி என்னைப் பண்படுத்திக்கிட்டு, இன்னிக்கு ஒரு முன்னணிப் பாடகன்னு நீங்க நினைக்கிற அளவுக்கு வளந்திருக்கேன்.
"இப்பவும், தினமும் சாதகம் பண்றதையோ, புதுசா எதையாவது கத்துக்கறதையோ நிறுத்தல. கச்சேரி இருந்தாலும் இல்லாட்டாலும், தினமும் காலையில சாதகம் பண்ணாம இருக்க மாட்டேன். ஒரு துறையில முன்னேறணும்னா, இவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு. உங்களுக்கும் இது தெரியும். ஏன்னா, நீங்களும் பெரிய டைரக்டரா, கதாசாரியரா வர எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்பீங்க. அப்படி இருக்கச்சே, ஒண்ணுமே தெரியாம, நான் ஒரு நடிகனா ஆகணும்னு சொல்றீங்களே, அது எப்படி?"
"இல்ல சார்! இது வந்து..."
"மன்னிச்சிடுங்க. ஒரு துறையில இறங்கினா, அதில சிறப்பா வர அளவுக்கு நம்மளைத் தயார்படுத்திக்கணும். சும்மா ஒப்புக்கு நடிக்கறதில எனக்கு விருப்பமில்லை. நீங்க ஒரு நல்ல நடிகரைப் போட்டுப் படம் எடுக்கறதுதான் நல்லதுங்கறது என்னோட கருத்து" என்றார் ராமசுப்ரமணியம்.
சுந்தர் ஸ்ரீதரும், குருசாமியும் மௌனமாகக் கை கூப்பி விடை பெற்றனர்.
இல்லறவியல்
அதிகாரம் 24
புகழ்
குறள் 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பொருள்:
ஒரு துறையில் தாம் இருப்பதைக் காட்டிக் கொள்ள விரும்பினால், புகழ் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment