எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்ட கல்லூரிப் பேராசிரியருக்கு இந்த கதியா என்று அனைவரும் திகைக்கும் வகையில், கஸ்தூரிரங்கனுக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டன.
பொருளாதாரப் பேராசிரியரான கஸ்தூரிரங்கன், வெளியூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த மாணவர்கள் கருத்தரங்குக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரிரங்கன், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை விமரிசித்துப் பேசினார்.
அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வறுமையில் உள்ளவர்களை இன்னும் கீழே தள்ளும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், இதனால் ஏழை மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் அவர் பேசினார்.
அவருடைய பேச்சை வீடியோ எடுத்த சில மாணவர்கள், அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
கஸ்தூரிரங்கன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரயிலில் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். அவர் ரயிலில் வந்து இறங்கியதும், வீட்டுக்குச் செல்லும் முன்பே, ரயில் நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யும்போது, போலீசார் அவரிடம் காரணம் எதுவும் கூறவில்லை. ஆனால் மறுநாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
ஜாமீனில் வெளி வர முடியாத சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் போடப்பட்டு, அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
கஸ்தூரிரங்கன் கைதுக்கு எதிராகப் பொது மக்களிடையேயும், ஊடகங்களிலும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஆனால், அரசாங்கம் இவற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.
சில ஊடகங்கள் கஸ்தூரிரங்கன் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி, அவர் பல்வேறு தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக அவதூறுச் செய்திகள் வெளியிட்டன.
14 நாட்கள் முடிந்ததும், கஸ்தூரிரங்கனின் காவல் இன்னும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அவர் குடும்பத்தினரும்,சில சமூக ஆர்வலர்களும் அவரது கைதுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தனர்.
வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடந்து வந்தன. அரசின் தரப்பில், இந்த வழக்குகளை முறியடிக்கப் பல நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
இதற்கிடையே, அவர் காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்தது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கஸ்தூரிரங்கனின் உடல்நிலை, சிறைவாசத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
அவரைச் சிறையில் சென்று பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
கஸ்தூரிரங்கன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்தது.
கஸ்தூரிரங்கன் விடுதலையாகிச் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை வரவேற்க அந்த ஊரே திரண்டு வந்திருந்தது.
ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு வரக் கூடிய கூட்டத்தை விட அதிகமான கூட்டம் சிறை வாசலில் கூடியிருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
கஸ்தூரிரங்கன் மூன்று மாத சிறைவாசத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, நடக்கக் கூட இயலாத அளவுக்கு பலவீனமாக இருந்தார்.
அவரைப் பார்த்ததுமே, அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். கஸ்தூரிரங்கன் அனைவரையும் கைகூப்பி வணங்கி விட்டுக் காரில் ஏறித் தன் வீட்டுக்குச் சென்றார்.
கஸ்தூரிரங்கன் தேசத்துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டதைக் காரணம் காட்டி, அவர் வேலை பார்த்து வந்த கல்லூரி அவரைப் பதவி நீக்கம் செய்திருந்தது. இதற்குப் பொதுமக்களிடமிருந்து பெரும் கண்டனம் எழுந்தது.
கஸ்தூரிரங்கனுக்கு வேலை கொடுப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்து வெளிப்படையான அறிவிப்புகள் வந்தன. வெளிநாடுகளிலிருந்து கூட சில வாய்ப்புகள் வந்தன.
உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக கஸ்தூரிரங்கன் வீட்டிலேயே ஓய்வாக இருந்தார். பொதுமக்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட அரசாங்கம், அவரது விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல், சந்தடியின்றி வழக்கைக் கைகழுவியது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஊரின் சில முக்கிய மனிதர்கள் கஸ்தூரிரங்கனை அவர் வீட்டில் வந்து பார்த்தனர்.
அவர் உடல்நலம் பற்றி விசாரித்தபின், அவர்களைத் தலைமையேற்று அழைத்து வந்தவர், "வரப்போற நாடாளுமன்றத் தேர்தல்ல, நம்ப தொகுதியில நீங்க நிக்கணும்னு எல்லோரும் விரும்பறாங்க. நீங்க நிக்கறதா இருந்தா, தங்களோட கட்சி சார்பா யாரையும் நிறுத்தாம, உங்களை ஆதரிக்கறதா எல்லா எதிர்க்கட்சிகளும் அறிவிச்சிருக்காங்க" என்றார்.
இல்லறவியல்
அதிகாரம் 24
புகழ்
குறள் 235நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
பொருள்:
தமக்கு நேரும் கெடுதல்களையும் தங்கள் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகச் செய்வதும், மரணம் கூடத் தங்கள் புகழை மேம்படுத்தச் செய்வதும் அறிவாற்றலில் சிறந்தவர்களைத் தவிர மற்றவர்க்கு அரிதான செயல்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment