
"உங்க டைரக்டர்கிட்டயே போய்க் கேளுங்க!" என்றாள் சுகந்தி.
"கேக்கத்தான் போறேன்!"
"என்ன மிஸ்டர் ராமநாதன் இது? நம்ம இன்ஸ்டிட்யூட்ல ஒருத்தருக்கு பத்மஸ்ரீ கிடைச்சதுக்கு, நீங்க பெருமைப்படணும். அதை விட்டுட்டு, குறை சொல்றீங்களே!" என்றார் டைரக்டர் கமல்நாத்.
"பெருமைப்படலாம் சார்! அவனை விட அனுபவத்திலயும், ரேங்க்கிலயும் நான் சீனியர். என்னை ஓவர்லுக் பண்ணிட்டு, அவனுக்கு பத்மஸ்ரீக்கு நீங்க சிபாரிசு பண்ணியிருக்கீங்க. இது அநியாயம் இல்லையா?"
"நீங்க சீனியர்தான். ஆனா, இது குமரேசனோட ஆராய்ச்சிக்காக அவருக்குக் கிடைச்ச அங்கீகாரம். அவர் செஞ்ச ஆராய்ச்சி ஒரு பிரேக் த்ரூ ரிஸர்ச். இன்டர்நேஷனல் ஜர்னல்ல எல்லாம் அதைப் பத்திப் பேசறாங்க. அதனாலதான், அவருக்கு அங்கீகாரம் கொடுக்கணும்னு நான் அரசாங்கத்துக்கு சிபாரிசு பண்ணினேன். அரசாங்கமும் அவரோட பங்களிப்போட மதிப்பை உணர்ந்து, அவருக்கு பத்மஸ்ரீ கொடுக்க முடிவு செஞ்சிருக்காங்க. இதில, சீனியாரிட்டி எங்கேந்து வந்தது?"
"சார்! இங்கே எல்லா சைன்ட்டிஸ்ட்களும் வேலை செய்யறாங்க. என்னவோ, குமரேசன் மட்டும்தான் பெரிசா செஞ்சுட்ட மாதிரி பேசறீங்க."
"நீங்க சொன்னாலும், சொல்லாட்டாலும் உண்மை அதுதான். இந்த இன்ஸ்டிட்யூட்ல ஆராய்ச்சி செய்ய, அரசாங்கம் நிறைய வசதி செஞ்சு கொடுத்திருக்கு. ஆனா, குமரேசன் மாதிரி ஒரு சில பேர்தான் அதை முழுமையாப் பயன்படுத்திக்கறாங்க."
"அப்ப, நான் ஒண்ணுமே செய்யலேன்னு சொல்றீங்களா?"
"ராமநாதன்! உலகத்தில எவ்வளவோ பேரு ஆராய்ச்சி பண்றாங்க - அரசாங்கத்தில, தனியார் நிறுவனங்கள்ள, சில பேரு தனி நபர்களாகக் கூட. எந்த ஒரு வசதியும் இல்லாம, ஒரு சின்ன ஆராய்ச்சிக் கூடத்தில, தங்களோட சொந்தக் காசைச் செலவழிச்சு, பெரிய வருமான வாய்ப்புகளையெல்லாம் விட்டுட்டு, ராப்பகலா ஆராய்ச்சி பண்றவங்க இருக்காங்க. ஆனா, இங்கே அரசாங்கம் நமக்கெல்லாம் நிறைய சம்பளம் கொடுத்து, குடியிருக்க வீடு கொடுத்து, ஆராய்ச்சி செய்யத் தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்திருக்கு. இன்னும் ஏதாவது கருவிகளோ, வேற வசதிகளோ வேணும்னு கேட்டாக் கூட, உடனே சாங்ஷன் ஆகிடும். ஆனா, இதையெல்லாம் சரியாப் பயன்படுத்திக்கிட்டு சிறப்பா ஆராய்ச்சி செய்யறவங்க எத்தனை பேரு? குமரேசனோட சீனியர்களெல்லாம் அஞ்சு மணிக்கு வீட்டுக்குப் போயிடுவாங்க. ஆனா, குமரேசன் நேரம் பாக்காம உழைச்சு, பெரிய அளவில கான்ட்ரிப்யூட் பண்ணி இருக்காரு. அவரைப் பாராட்டிப் பேசறது உங்களுக்குப் பெருமைதான்னு நான் நினைக்கிறேன்" என்றார் கமல்நாத்.
ராமநாதனுக்கு, தான் ஏன் இது பற்றி டைரக்டரிடம் கேட்டோம் என்று ஆகி விட்டது!
இல்லறவியல்
அதிகாரம் 24
புகழ்
குறள் 237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
பொருள்:
புகழ் பட வாழ முடியாதவர்கள், தங்களை நொந்து கொள்ளாமல், தங்களை இகழ்பவர்களைக் குறை சொல்வது ஏன்?
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment