About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, June 24, 2019

266. ஓய்வுக்குப் பின்...

''ரிடயர் ஆயாச்சு. இனிமே என்ன செய்யப்  போறீங்க?'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? இத்தனை வருஷமா ஒடியாடி வேலை செஞ்சாச்சு. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறது கஷ்டமாத்தான் இருக்கும். பாக்கலாம்'' என்றார் பரமசிவம். 

''நம்ம ஏரியால 'சேவை இன்பம்'னு ஒரு சமூக சேவை அமைப்பு இருக்கில்ல?''

"ஆமாம். நீ கூட அங்கே போய் ஏதோ உதவி செஞ்சுக்கிட்டிருக்கியே?''

''ஆமாம். எனக்குப் படிப்பு அதிகம் இல்ல. நான் ஏதோ என்னால முடிஞ்சதை செஞ்சுக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்களால இன்னும் நல்லபடியா உதவ முடியும்.''

''சரியாப் போச்சு! ரிடயர் ஆனப்பறம் இன்னொரு வேலையா? அதுவும் சம்பளமில்லாம! நான் பணம் வர மாதிரி ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.''

"இனிமே நீங்க எதுக்குப் பணம் சம்பாதிக்கணும்? நம்மகிட்ட இருக்கற பணம் போதாதா? மத்தவங்களுக்கு உதவி செய்யற மாதிரி ஏதாவது செய்யலாமே!''

''நீ செய்!'' என்றார் பரமசிவம் சுருக்கமாக.

'ய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம்' என்ற விளம்பரத்தைப் பார்த்து விட்டு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்துக்குப் போன பரமசிவம், அது ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் என்று அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தாலும், அவர்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்டாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

''உங்களுக்கு எதுக்குங்க இது? உங்களால இது முடியுமா? பொழுதுபோக்கா ஏதாவது செஞ்சாலும் பரவாயில்ல!" என்றாள் விமலா.

''நம்ப சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க கிட்ட கேட்டாலே போதும். கொஞ்சம் பேர் பாலிசி எடுத்துக்கிட்டாக் கூட நல்ல வருமானம் வரும்!'' என்றார் பரமசிவம்.

''அதான் எதுக்குன்னு கேக்கறேன்.''

''நீ 'சேவை இன்ப'த்துக்குப் போறியே, அது எதுக்கு?''

''மத்தவங்களுக்கு உதவி செய்யறதில எனக்கு திருப்தி கிடைக்குது.''

''பணம் சம்பாதிக்கறதில எனக்குத் திருப்தி!'' என்றார் பரமசிவம்.

ரமசிவம் இன்ஷ்யூரன்ஸில் இறங்கி ஆறு மாதம் ஆகி விட்டது. அவர் எதிர்பார்த்தபடி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் அவர் மூலம் இன்ஷ்யூரன்ஷ் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. தேவையில்லாமல் இதில் இறங்கி விட்டோமோ என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.

''உங்க கஸின் வீட்டுக்குப் போகப் போறதா சொன்னீங்களே!'' என்றாள் விமலா.

''போகல. அவன் எங்கேயோ வெளியில போறானாம்'' என்ற பரமசிவம், சற்றுத் தயங்கி விட்டு, ''சும்மாதான் அவனைப் பாத்துட்டு வரலாம்னு நெனச்சேன். நான் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கச் சொல்வேன்னு அவன் பயந்துட்டான் போலருக்கு! அதனாலதான் என்னைத் தவிர்க்கிறான்'' என்றார் சற்று வருத்தத்துடன். 

சற்று மௌனமாக இருந்த விமலா, ''நீங்க வருத்தப்படுவீங்கன்னு நான் உங்ககிட்ட சொல்லல. என் சொந்தக்காரங்க சில பேரு கூட எங்கிட்ட, 'உங்களுக்கு ஏதாவது பணக் கஷ்டமா என்ன? நல்லா சம்பாதிச்சு ரிடயர் ஆனப்பறம் உன் புருஷன் எதுக்கு  பணம் சம்பாதிக்கறதில குறியா இருக்காரு?'ன்னு கேட்டாங்க'' என்றவள், 'யார் அப்படிச் சொன்னது?' என்று பரமசிவம் கோபமாகக் கேட்பாரோ என்று பார்த்தாள். 

ஆனால் பரமசிவம் எதுவும் சொல்லவில்லை.

விமலாவின் கைபேசி அடித்தது. எடுத்துப் பேசினாள். 

பேசி  முடித்ததும் பரமசிவத்திடம், ''என்னங்க, சேவை இன்பத்தில என்னைக் கூப்பிடறாங்க. போயிட்டு வந்துடறேன்" என்றாள்.

பரமசிவம் சிரித்தபடி, ''உன்னை ஃபோன் பண்ணிக் கூப்பிடறாங்க. எனக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்றாங்க!'' என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று விமலா யோசித்துக் கொண்டிருந்தபோது பரமசிவம், ''நானும் உன்னோட வரேன்'' என்றார்.

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

பொருள்:  
தவம் செய்பவரே தங்கள் கடமையைச் செய்பவர். மற்றவர்கள் ஆசை வலையில் அகப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவரே ஆவார்.
 குறள் 267 
குறள் 265
      பொருட்பால்                                                                                   காமத்துப்பால்

No comments:

Post a Comment