About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, January 3, 2018

118. அம்ப்பயரின் முடிவு

பிரகாஷ் நகர் கிரிக்கெட் குழுவுக்கும் அவ்வை நகர் கிரிக்கெட் குழுவுக்கும் இடையே ஐம்பது ஓவர் கிரிக்கெட் மேட்ச் நடத்துவது என்று முடிவு செய்தபின், அம்ப்பயராக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது.

இரண்டு கேப்டன்களும் சேர்ந்து பேசி, மாநில அளவுப் போட்டிகளில் விளையாடிய, ஒய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சேகரை அணுகினர்.

"எனக்கு அம்ப்பயரா இருப்பதில் ஆர்வம் இல்லை. தியாகராஜன்னு என் நண்பர் ஒத்தர் இருக்காரு. வேணும்னா அவர்கிட்ட சொல்றேன்" என்றார் சேகர்.

"நாங்க கேள்விப்பட்டதே இல்லியே! அவர் பெரிய பிளேயரா என்ன?" என்றான் பிரகாஷ் நகர் குழுவின் கேப்டன் முரளி.

"கிரிக்கெட் விளையாடறவங்கதான் நல்ல அம்ப்பயரா இருக்கணும்கறது இல்ல. கிரிக்ட் மேட்ச்சைக் கூர்ந்து பாக்கறவங்க கூட நல்ல அம்ப்பயரா இருக்க முடியும். அவரு அப்படிப்பட்டவர்தான். இது மாதிரி லோக்கல் லெவல் மேட்ச்சுகளுக்கெல்லாம் அவர் அம்ப்பயரா இருந்திருக்காரு. அவருக்கு விதிகள் எல்லாம் அத்துப்படி. கூர்மையா கவனிப்பாரு. அவரோட முடிவுகள் எல்லாம் சரியா இருக்கும். தூரத்திலிருந்து பாத்தே எல் பி டபிள்யு எல்லாம் கரெக்டா  சொல்லிடுவாரு. அவரோட ஜட்ஜ்மென்ட் எப்பவுமே தப்பாப் போனதில்லை."

இரண்டு கேப்டன்களும் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டி விட்டு "அவரையே வச்சுக்கறோம் சார்" என்றனர்.

"இருங்க. இப்பவே அவர்கிட்ட ஃபோன் பண்ணிக் கேக்கறேன்" என்று அவருக்கு ஃபோன் செய்தார்.

ஃபோனில் ஒரு நிமிடம் பேசியபின், "அப்படியா? இருங்க. ஃபோனை ஸ்பீக்கர்ல போடறேன். அவங்களும் கேட்கட்டும்" என்றார் சேகர்.

ஸ்பீக்கரில் அவர் சொன்னதைக் கேட்டதும், அவ்வை நகர் குழுவின் கேப்டன் அரவிந்தன், பிரகாஷ் நகர் கேப்டன் முரளியிடம் "நீதான் சொல்லணும்!" என்றான்.

முரளி ஒரு நிமிடம் யோசித்து விட்டு "அவரே இருக்கட்டும் சார்" என்று சொல்லி அரவிந்தனைப் பார்த்தான்.

"உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்" என்றான் அரவிந்தன்.

மேட்ச் துவங்குவதற்குச் சில நிமிடங்கள் இருந்தபோது, பிரகாஷ் நகர் குழுவைச் சேர்ந்த பத்ரி படபடப்புடன் முரளியிடம் வந்தான் "டேய், என்னடா? இவரை அம்ப்பயராப் போட்டிருக்கீங்க? இவர் யாருன்னு தெரியுமா?" என்றான்.

"தெரியும்!" என்றான் முரளி.

"தெரிஞ்சுமா?"

"பார்க்கலாம். சேகர் சார் இவரைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி இருக்காரு."

" அது சரி....ஆனா.." என்று அரவிந்தன் ஆரம்பித்தபோது, அம்ப்பயரின் விசில் கேட்டது.

"வா போகலாம். டாஸ் போடக் கூப்பிடறாங்க" என்று விரைந்தான் முரளி.

டாஸை வென்று பேட்டிங் செய்த பிரகாஷ் நகர் அணி ஐம்பது ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது.

"நாட் பேட்!" என்றான் முரளி.

"அவ்வை நகர் டீம் பேட்டிங்கில சுமார்தான், நம்ம பௌலர்களை அவங்களால சமாளிக்க முடியாது" என்றான் கோகுல். அவன் 3 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனவன்!

"நீ பேட்டிங்கில சொதப்பின மாதிரி ஃபீல்டிங்கிலையும் சொதப்பாம இருந்தா சரிதான்!" என்றான் சாரதி, எரிச்சலுடன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, அவ்வை நகர் அணியின் இன்னிங்ஸ் துவங்கியது.

30 ஓவர்கள் முடிந்தபோது, அவ்வை நகர் அணி 5 விக்கட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆயினும் மூன்றாவதாகக் களமிறங்கிய சந்துரு 30 ரன்கள் எடுத்து கவனமாக, நிதானமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

"இவன் ரொம்ப டேஞ்ஜரஸ். ஏற்கெனவே ரெண்டு பவுண்டரி, ஒரு  சிக்ஸர் அடிச்சிருக்கான். நின்னு ஆடினா நமக்குக் கஷ்டம்தான்" என்றான் முரளி, தேநீர் இடைவேளையின்போது.

40 ஓவர் முடிவில் ஸ்கோர் 7 விக்கட் இழப்பிற்கு 142ஐ எட்டியிருந்தது. சந்துரு 62 ரன்கள் எடுத்திருந்தான்.

"வலுவாக இருந்த பிரகாஷ் நகர் அணியிடமிருந்து போட்டி நழுவி அவ்வை நகர் பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. 'வெற்றியே, என் பக்கம் வந்துரு!' என்று அழைக்கிறார் சந்துரு" என்றார் வர்ணனையாளர்.

42ஆவது ஓவரில் நிகில் போட்ட பந்து சந்துருவின் பேட்டின் முனையைத் தொட்டது போல் செல்ல, அதைப் பிடித்த விக்கட் கீப்பர் பத்ரி "ஹே'' என்று. கூவிக் கொண்டே கையைத்  தூக்கினான். பேட்டில் பந்து பட்டதா என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமே! பேட்டில் பந்து படவில்லை என்பது போல் சந்துரு புன்னகையுடன் அசையாமல் நின்றான்.

ஒரு சில வினாடிகளில் அம்ப்பயர் கை தூக்கி 'அவுட்' கொடுத்து விட்டார். சந்துரு நம்ப முடியாமல் அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.

முரளியாலேயே நம்ப முடியவில்லை. எதிர்பாராமல் வந்த அதிர்ஷ்டம் போல் இருந்தது. அம்ப்பயரைப் பற்றி சேகர் சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொண்டான்.

சந்துரு வெளியேறிய பிறகு ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது. 47 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து அவ்வை நகர் அணி எல்லா விக்கட்டுகளையும் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் பிரகாஷ் நகர் அணி வென்றது.

"கங்கிராட்ஸ்!" என்று முரளியின் கையைக் குலுக்கினான் அவ்வை நகர் அணியின் கேப்டன் அரவிந்தன். "ஜெயிச்சதுக்கு மட்டும் இல்ல. அம்ப்பயர் விஷயத்தில நீ தைரியமா முடிவு எடுத்ததுக்கும்தான்!" என்றான்.

"ஆமாம். நான் கூட பயந்தேன்" என்றான் பத்ரி.

"என்ன பயம்? என்ன முடிவு எடுத்தே நீ?" என்றான் நிகில்.

"சந்துரு அவுட் ஆனதுதான் மேட்ச்சோட டர்னிங் பாயின்ட். அது ரொம்ப டஃப் டிசிஷன். ஒருவேளை அம்ப்பயர் அவுட் கொடுக்கலைன்னாலும் நாம அவரைக் குத்தம் சொல்லி இருக்க முடியாது" என்றான் முரளி.

"ஆமாம். ஹீ  இஸ் எ கிரேட் அம்ப்பயர், நோ டவுட். ஆனா, இவன் பயந்தேன்னு சொல்றானே, ஏன்?"

"அம்ப்பயர் யாரு தெரியுமா? சந்துருவோட அப்பா!" என்றான் முரளி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 12             
நடுவு நிலைமை     
குறள் 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி,

பொருள்:  
இரண்டு தட்டுக்களையும் சீரான முறையில் எடை போடும் தராசு முள் போல் ஒரு புறமும் சாராமல் நியாயமாக நடந்து கொள்வதே சான்றோர்க்கு அழகாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















2 comments:

  1. கடைசி வரிகள் படித்ததும் சிலிர்த்தேன். குறளுக்கு மிகப் பொருத்தமான அதே நேரத்தில் சுவாரசியமான கதைப் போக்கு அருமை..

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு அரவிந்த் குமார்.

      Delete