About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, May 30, 2018

167. சரோஜாவின் கவலை

"என்னங்க, வனஜா பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம்!" என்றாள் சரோஜா, உற்சாகத்துடன்.

அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த சுபாஷ், "அப்படியா?" என்றான், சுவாரஸ்யம் இல்லாமல்.

"பையன் அமெரிக்காவில வேலை பாக்கறானாம்!" என்றாள் சரோஜா, பெருமிதத்துடன்.

சுபாஷின் முகம் கடுகடுவென்று ஆகியது.

"நான் லட்சக்கணக்கில சம்பாதிக்கிற ஒரு பிசினஸ்மேன். நம்ப பொண்ணையே இந்தியாவில வேலை பாக்கற பையனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கோம். ஒரு சின்ன கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டு, மாசச் சம்பளம் வாங்கிக்கிட்டிருக்கற உன் அக்கா புருஷனுக்கு எப்படி அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சான்?" என்றான் சுபாஷ்.

"இது என்னங்க பேச்சு? நாம அமெரிக்க மாப்பிள்ளை வேணும்னு பாக்கலியே? நல்ல இடம்னுதானே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம்? அவங்களும் அமெரிக்க மாப்பிள்ளைதான் வேணும்னு பாக்கல. அதுவா அமைஞ்சிருக்கு."

"அல்பங்களுக்குத்தான் வாழ்வு வருது!" என்றான் சுபாஷ்.

"என் அக்கா குடும்பத்தைப் பத்திப் பேசறீங்க. அதை ஞாபகம் வச்சுக்கிட்டுப் பேசுங்க!" என்றாள் சரோஜா.

"நான் உண்மையைத்தானே சொல்றேன்? ஒரு சாதாரண மனுஷனான என் சகலைக்கு இப்படி ஒரு சம்பந்தமான்னு நினைச்சுப் பாக்கறதில என்ன தப்பு?"

"நாங்க அக்கா தங்கைங்க மூணு பேர்ல நான்தான் வசதியானவ. மத்த ரெண்டு பேரும் சாதாரணமானவங்கதான். என்னோட ரெண்டு அண்ணங்க கூட சுமாரான வசதியோடதான் இருக்காங்க. நியாயமா, அவங்கதான் நம்மளை பாத்துப் பொறாமைப் படணும். ஆனா, நீங்க என் அக்கா குடும்பத்தைப் பாத்துப் பொறாமைப் படறீங்க! நாளைக்கு என் அண்ணன்களுக்கோ, தங்கைக்கோ ஏதாவது நல்லது நடந்தா, அதைப் பாத்தும் பொறாமைப் படுவீங்க. வேடிக்கையா இருக்கு!" என்று வெறுப்புடன் சொல்லி விட்டு, உள்ளே சென்று விட்டாள் சரோஜா.

ன்னொரு சமயம், சுபாஷின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் தன் மகனை மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பப் போவதைப் பற்றி இப்படித்தான் சரோஜாவிடம் பொரிந்து தள்ளினான் சுபாஷ்.

"எங்கிட்ட சம்பளம் வாங்கற ஒரு குமாஸ்தா அவன். அவன் பையனை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறானாம்! எப்படி இருக்கு பாரு?" என்றான் சுபாஷ்.

"இதில என்னங்க இருக்கு? இப்பதான் வெளிநாட்டுல போய்ப் படிக்கறதுக்கு பாங்க்கில கடன் கொடுக்கறாங்க. வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த எத்தனையோ பிள்ளைங்க வெளிநாட்டுக்குப் போய்ப் படிச்சுட்டு அங்கேயே வேலை தேடிக்கிட்டு செட்டில் ஆயிடறாங்களே!"

"நாம செய்ய முடியாததை நம்மளை விடக் கீழ இருக்கறவங்க செய்யறதைப் பார்த்தா ஆத்திரம் வருமா, வராதா?"

"எதுக்கு வரணும்? அவங்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பை அவங்க அனுபவிக்கறாங்க. அதோட, நமக்கு ஒரே பொண்ணு, அவளை நாம எந்த நாட்டுக்கு வேணும்னாலும் அனுப்பி, எந்தப் படிப்பு வேணும்னாலும் படிக்க வச்சிருக்கலாம். ஆனா அவளுக்குப் படிப்பிலே ஆர்வம் இல்ல. பி ஏ வோட நிறுத்திக்கிட்டா. நாமும் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். மத்தவங்க என்ன வேணும்னா பண்ணிட்டுப் போறாங்க. நீங்க ஏன் அதுக்காக ஆத்திரப்படறீங்க?"

பிறருக்கு நன்மை நடந்தால் அதைப் பொறுக்காத சுபாஷின் குணத்தை மாற்ற முடியாது என்று அறிந்த சரோஜா, அவன் அவ்வப்போது இப்படிப் பொருமுவதை வேறு வழியின்றி சகித்துக் கொண்டாள்.

ருநாள் சுபாஷ், "சரோஜா! நாம இந்த வீட்டை விட்டு வேற வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும். உனக்கு ஒண்ணும் வருத்தம் இருக்காதே அதில?" என்றான்.

"ஏங்க? இது நம்ப சொந்த வீடு. வசதியா இருக்கு. ஏன் இதை விட்டுட்டு இன்னொரு வீட்டுக்குப் போகணும்?" என்றாள் சரோஜா.

"இல்லை சரோஜா. கம்பெனியில கொஞ்சம் பிரச்னை. இந்த வீட்டை அடமானம் வச்சுதான் பேங்க்ல கடன் வாங்கி பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"அது சரி. பிசினஸ் நல்லாத்தானே நடந்துக்கிட்டிருக்கு?"

"இல்ல சரோஜா. ரெண்டு மூணு வருஷமாவே பிசினஸ் சரியாப் போகல. நீ கவலைப்படுவேன்னு உங்கிட்ட சொல்லலே! பிசினஸை சரி பண்றதுக்காக, பாங்க் கடனைத் தவிர, வெளியிலேயும் நிறையக் கடன் வாங்கிட்டேன். ஆனா நஷ்டம் அதிகமாத்தான் ஆகிக்கிட்டிருக்கு. கடன், வட்டி எல்லாம் சேர்ந்து பெரிய தொகையாயிடுச்சு. இந்த வீட்டை வித்துத்தான் கடனையெல்லாம் அடைக்கணும்!"

"அப்ப பிசினஸ்?" என்றாள் சரோஜா, அதிர்ச்சியுடன்.

"பிசினஸை இனிமே நடத்த முடியாது. வீட்டை வித்து வர பணத்தில் கடனையெல்லாம் அடைச்சப்பறம், மீதி இருக்கிற பணத்தை பாங்க்கில போட்டு, அதுல வர வட்டியை வச்சுத்தான் நம்ப மீதிக் காலத்தை ஓட்டணும்."

சுபாஷுக்குத் தொண்டையை அடைத்தது.

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்தபோதே, மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சுபாஷ், இனிமேல் எல்லோரையுமே பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்தாள் சரோஜா.   

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
      அழுக்காறாமை      
குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்.

பொருள்:  
பொறாமை உள்ளவனைத் திருமகள் பொறுக்க மாட்டாள். அவனைத் தன் அக்கா மூதேவியிடம் ஒப்படைத்து விட்டு, அவனிடமிருந்து விலகி விடுவாள்.
பொருட்பால்                                                                                           காமத்துப்பால்












2 comments:

  1. Beautiful, PR, can't wait for the next one !

    ReplyDelete
    Replies
    1. Thanks RR. Everytime I post a story, I await your comment too, which I consider very valuable.

      Delete