About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, May 13, 2018

159. யாத்ரீகன்

"கணேசன்!"

வேலைக்காரனை அழைப்பது போல் அதிகாரமாக ஒலித்த குரலைக் கேட்டு, கணேசன் வேகமாக வந்து "சொல்லுங்க சார்!" என்றான்.

"என்னத்தைச் சொல்றது? எல்லாமே ரொம்ப மட்டமா இருக்கு!" என்றார் நீலகண்டன், கோபமான குரலில்.

"எதைச் சொல்றீங்க?" என்றான் கணேசன்.

"நான் பணம் கொடுத்துத்தான் இந்த டூர்ல வந்திருக்கேங்கறதை நீ அடிக்கடி மறந்துடறே! நான் வயசானவன். என்னைக் கோவில்ல விட்டுட்டு நீங்க எல்லாரும் வந்துட்டீங்க!"

"இல்லியே! முத்து இருந்து உங்களை அழைச்சுக்கிட்டு வந்தானே!"

"அவன் ஒரு சின்னப் பையன். என்னைத் தரதரன்னு இழுத்துக்கிட்டு வந்தான். கீழ கூட விழுந்திருப்பேன். கால் எல்லாம் ஒரே வலி" என்றார் நீலகண்டன்.

"நேரமாயிடுச்சுன்னு கொஞ்சம் அவசரப்பட்டிருப்பான். இனிமே கொஞ்சம் பாத்து மெதுவா அழைச்சுக்கிட்டு வரணும்னு அவன்கிட்ட சொல்றேன். கால் வலின்னீங்களே! தைலம் ஏதாவது வேணுமா?" என்றான் கணேசன்.

"எல்லாம் எங்கிட்ட இருக்கு. நான் ஒண்ணும் பிச்சைக்காரன் இல்ல. ஒரு வயசானவனைப் பாத்து அழைச்சுக்கிட்டு வரத்துக்குப் பொறுப்பு இல்ல. தைலம் வேணுமான்னு கேக்கற!" என்றார் நீலகண்டன், கோபம் குறையாமல்.

கணேசன் மௌனமாக அங்கிருந்து நகர்ந்தான்.

"இருப்பா! நான் இன்னும் சொல்லி முடிக்கல! ஏஸியை ஆஃப் பண்ணச் சொல்லு. ரொம்பக் குளிரா இருக்கு" என்றார் நீலகண்டன்.

"சார்! இது சம்மர். ஏஸியை ஆஃப் பண்ணினா, மத்தவங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கும்" என்றான் கணேசன்.

"அப்ப, நான் கஷ்டப்பட்டா பரவாயில்லையா?"

"வேணும்னா ஒண்ணு பண்ணலாம். சமையல் சாமான்களோட எங்க ஆளுங்க வேன்ல வராங்க. அந்த வேன்ல முன்னால டிரைவர் பக்கத்தில உக்காந்துக்கங்க. அந்த வேன்ல ஏஸி கிடையாது."

"என்னப்பா பேசறே நீ? நான் டிக்கட்டுக்குப் பணம் கொடுத்திருக்கேன். என்னை சாமான் வண்டில போகச் சொல்ற! என்ன நெனச்சுக்கிட்டிருக்கே நீ?" என்றார் நீலகண்டன், குரலை உயர்த்தி.

"வேண்டாம் சார். நீங்க இந்த பஸ்லியே வாங்க. ஆனா என்னால ஏஸியை ஆஃப் பண்ண முடியாது. மத்தவங்க இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. தயவு பண்ணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க" என்று அவரைக் கைகூப்பிக் கேட்டுக் கொண்டு விட்டு, கணேசன் அங்கிருந்து அகன்றான். 

ணேசன் அந்த யாத்திரையை ஏற்பாடு செய்து நடத்துபவன். இளம் வயதுதான் என்றாலும், நன்கு அனுபவப்பட்டவன் போல் திறமையாகவும், பொறுமையாகவும் எங்கள் குழுவை வழி நடத்தி வந்தான்.

எங்கள் குழுவில் இருந்த எல்லோருமே கணேசனின் ஏற்பாடுகள் குறித்துத் திருப்தியாகத்தான் இருந்தோம் - நீலகண்டனைத் தவிர. அவர் மட்டும் துவக்கத்திலிருந்தே ஏதாவது குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே வந்தார்.

தான் வயதில் பெரியவர் என்ற உரிமையில் நீலகண்டன் கணேசனை 'வா, போ' என்று ஒருமையில் பேசியது மட்டும் இல்லாமல், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால் கணேசன் ஒருமுறை கூடப் பொறுமை இழக்கவில்லை. "கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க" என்று கூடச் சொன்னதில்லை.

வயதானவர்கள் உதவிக்கு யாரையாவது அழைத்து வர வேண்டும் என்று யாத்திரை பற்றிய விளம்பரத்திலேயே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் நீலகண்டன் துணையில்லாமல் தனியாகத்தான் யாத்திரையில் இணைந்து கொண்டார். கணேசன் பலமுறை அவருக்கு உதவி செய்து அவரை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அப்படியும் அவர் அவனைக் குறை கூறிக் கொண்டுதான் இருந்தார்.

"என்னப்பா, சாப்பாடு இவ்வளவு மோசமா இருக்கு?" என்றார் நீலகண்டன், உரத்த குரலில்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர். அனைவருமே சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், நீலகண்டன் இப்படிச் சொன்னது எல்லோருக்குமே வியப்பாகத்தான் இருந்தது.

"என்ன சார்?" என்றான் கணேசன், அவர் அருகில் வந்து.

"சாம்பார்ல இவ்வளவு காரம் போட்டிருக்கியே! இதைச் சாப்பிட்டுட்டு வயிறு கெட்டுப் போய் ரூம்லேயே உக்காந்திருக்க வேண்டியதுதான். எங்கேயும் வர முடியாது" என்றார் நீலகண்டன்.

"இல்லை சார். காரம் ரொம்பக் குறைச்சலாத்தான் போட்டிருக்கோம்" என்றான் கணேசன்.

"நான் என்ன பொய் சொல்றேனா?"

"சார்! சாம்பார்ல பீன்ஸ் போட்டிருக்கு. பீன்ஸுன்னு நினச்சு பச்சை மிளகாயைக் கடிச்சிருப்பீங்க. தண்ணி குடிங்க. சரியாயிடும்."

"சாம்பார்ல பச்சை மிளகாயை அள்ளிப் போட்டுட்டு, காரம் போடலேன்னு சொல்றே! தண்ணி குடின்னு எனக்கு உபதேசம் பண்ற! உன்னை நம்பி இந்த டூர்ல வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்." 

"சாரி சார்! சாம்பார்ல வாசனைக்காக ஒண்ணு ரெண்டு பச்சை மிளகாயைக் கிள்ளிப் போடறது வழக்கம்தான். அதுல ஒரு துண்டு உங்க இலையில விழுந்திருக்கும். சாரி சார். மன்னிச்சுக்கங்க. கொஞ்சம் சர்க்கரை போடறேன். சர்க்கரை நாக்கிலே பட்டா காரம் போயிடும்" என்றான் கணேசன்.

"சாம்பார்ல நிறைய காரத்தைப் போடுவாங்களாம், அப்புறம் சக்கரையைப் போடுவாங்களாம்! மொதல்ல இந்த இடத்தை விட்டுப் போப்பா!" என்று கத்தினார் நீலகண்டன்.

ணேசனிடம் தனிமையில் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவனிடம் கேட்டேன். "என்ன மிஸ்டர் கணேசன்! நீலகண்டன் ரொம்ப ஓவராப் போற மாதிரி இல்ல?" என்றேன்.

"விடுங்க சார்!" என்றான் கணேசன்.

"அவர் ஒத்தரைத் தவிர வேற யாருக்கும் எந்தக் குறையும் இல்லையே! நாங்க எல்லோருமே ரொம்ப திருப்தியோடுதான் இருக்கோம். நீங்க ஏன் அவர் பேசறதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கீங்க?" என்றேன்.

"வயசான மனுஷன். தனியா வந்திருக்காரு. அவரால முடியல. உதவிக்கு யாரும் இல்ல. நாங்க உதவி செஞ்சாலும் அதை அவரால ஏத்துக்க முடியல்ல. அதனால பொறுமையிழந்து கத்தறாரு. இந்த டூர் முடிஞ்சதும் அவர் யாரோ, நான் யாரோ! இந்த ஒரு வாரத்துக்கு அவர் பேசறதைக் கொஞ்சம் பொறுமையாக் கேட்டுக்கிட்டு இருந்துட்டாப் போவுது!" என்றான் கணேசன்.

"கணேசன்! நாங்கள்ளாம் ஏதோ புண்ணியம் கிடைக்கும்னு யாத்திரை போறோம். ஆனா உண்மையான யாத்ரீகன் நீங்கதான்! உங்ககிட்ட இருக்கற பொறுமையையும், மனப்பக்குவத்தையும் பாத்தா, உங்களையே ஒரு நல்ல சந்நியாசின்னுதான் சொல்லணும்!" என்றேன் நான்.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் 
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

பொருள்:  
வரம்பு மீறி நடந்து கொள்பவரின் வாயிலிருந்து வரும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறவியை விடத் தூய்மையானவர்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






































3 comments:

  1. Very nicely portrayed character, which brings out the real meaning of this Kural.

    ReplyDelete
  2. I don't understand what kind of guiding you are seeking. These arestories attempting to explain the meaning of the kurals. If you can elaboirate and let me know specifically what you require, I may be able to help you. Thank you.

    ReplyDelete