About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, May 26, 2018

166. பிரியாவின் குறை!

"ஏம்மா, வேற சட்டையே இல்லியா?" என்றாள் பிரியா.

"இருக்கறத்துக்குள்ள நல்லதா ஒண்ணை எடுத்துக் போட்டுக்கடி!" என்றாள் தங்கம்.

"புதுசா ஒண்ணு கூட இல்லியேம்மா!" என்றாள் பிரியா, அழும் தொனியில்.

"ஆஃபீஸ்ல அட்வான்ஸ் வாங்கி, நாளைக்கே உனக்குப் புது டிரஸ் வாங்கித் தரேன்!" என்றாள் தங்கம்.

"ஸ்கூல்ல இன்னிக்கு ஃபங்ஷன். நாளைக்கு வாங்கிக் கொடுத்து என்ன பிரயோசனம்?" என்றாள் பிரியா, சிணுங்கிக் கொண்டே.

தங்கத்துக்குத் தொண்டையை அடைத்தது. இப்படியா ரகுராமன் தன்னையும் பிரியாவையும் தவிக்க விட்டு விட்டுப் போக வேண்டும்?

"ஏம்மா! நாம ஏழைங்களா, பணக்காரங்களா?" என்றாள் பிரியா.

"ரெண்டும் இல்லை. ரெண்டுங்கெட்டான்!" என்றாள் தங்கம்.  தங்களை ஏழை என்று ஒத்துக் கொள்ள முடியாதவர்கள் நடுத்தர வர்க்கம் என்று சொல்லிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களோ என்று அவளுக்குத் தோன்றியது.

"அப்பா இருந்திருந்தா, நாம பணக்காரங்களா இருந்திருப்போமா?"

தங்கம் பதில் சொல்லவில்லை. அவள் மனம் பழைய நினைவுகளைப் புரட்டிப் போடத் தொடங்கியது.

குராமன் அவன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை. அவனுடைய ஒரே தம்பி கேசவன். கேசவன் சிறுவனாக இருந்தபோது, அவர்களுடைய தூரத்து உறவினர் ஒருவர் அவனை சுவீகாரம் கேட்டார். அவருக்கு மனைவி இல்லை. அருகிலிருந்த ஒரு ஊரில் அவர் தனியே வசித்து வந்தார். ஓரளவுக்கு வசதியானவர். 

கேசவன் அவன் பெற்றோருடனேயே இருக்கலாம். ஆனால் அவன் படிப்பு, திருமணம், வேலை எல்லாம் அவன் சுவீகாரத் தந்தையின் பொறுப்பு. அவன் சுவீகாரத் தந்தை அவ்வப்போது அவனை வந்து பார்த்து விட்டுப் போவார். அவர் இறந்ததும் கேசவன் கொள்ளி போட வேண்டும். அதன் பிறகு அவருடைய சொத்துக்கள் கேசவனுக்கு வந்து சேரும்.

இவைதான் அவர் விவரித்த ஏற்பாடுகள்.

மகனைப் பிரிய வேண்டியதில்லை என்பதாலும், பிற்காலத்தில் அவனுக்கு வசதியான வாழ்க்கை அமையும் என்பதாலும் கேசவனின் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார்.

ரகுராமனின் படிப்பு பள்ளி இறுதித் தேர்வுடன் முடிந்து விட்டது. அவர்கள் ஊரில் கல்லூரி எதுவும் இல்லை. வெளியூரில் ஒரு கல்லூரியில் அவனைச் சேர்த்து, விடுதியில் தங்க வைத்துப் படிக்க வைக்கும் அளவுக்கு ரகுராமனின் பெற்றோருக்கு வசதி இல்லை.

ஆனால் அடுத்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வை முடித்த கேசவனை அவன் சுவீகாரத் தந்தை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

தான் மேலே படிக்க இயலாதபோது தம்பிக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது ரகுராமனுக்கு உறுத்தலாக இருந்தது.

"ஏம்ப்பா! கேசவனோட அப்பா கிட்டதான் நிறையப் பணம் இருக்கே, அவரு என்னையும் படிக்க வச்சிருக்கலாம் இல்ல?" என்றான் ரகுராமன், தன் தந்தையிடம்.

"அதையெல்லாம் நாம எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றார் அவன் அப்பா.

ரகுராமனுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. 

அடுத்த சில ஆண்டுகளில் கேசவன் படிப்பை முடித்து சென்னையில் ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டான். ரகுராமனும் சென்னையில் அவன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையில் சேர்ந்து விட்டான். 

ரகுராமனுக்கும் தங்கத்துக்கும் திருமணம் முடித்த சில மாதங்களில் அவன் பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர். அதற்குப் பிறகு கேசவன் அவன் சுவீகாரத் தந்தையுடன் அவர் அவனுக்காக சென்னையில் வாங்கிய வீட்டுக்குப் போய் விட்டான். அவன் சுவீகாரத் தந்தை அவனுக்கு ஒரு வசதியான இடத்தில் திருமணமும் செய்து வைத்து விட்டார்.

ரகுராமனுக்கும், கேசவனுக்கும் தொடர்பு கிட்டத்தட்ட அடியோடு விட்டுப் போய் விட்டது. கேசவனின் சுவீகாரத் தந்தை இறந்ததற்குக் கூட ரகுராமன் போகவில்லை.

கேசவனோடு தொடர்பைத் துண்டித்து விட்டாலும், கேசவனையும் அவன் வளர்ப்புத் தந்தையையும் நாள் தவறாமல் தங்கத்திடம் வசைபாடிக் கொண்டிருப்பான் ரகுராமன்.

"இப்படி ஒரு அநியாயம் உலகத்தில நடக்குமா? அண்ணன்  தம்பின்னு நாங்க ரெண்டு பேரு இருந்தோம். என் தம்பியை சுவீகாரம் எடுத்து, அவனுக்கு மட்டும் எல்லா உதவியையும் செஞ்சாரே அந்தப் பெரிய மனுஷன், இது அடுக்குமா?" என்பான் ஒருநாள்.

"யாரோ ஒருத்தர் வந்து உதவி செஞ்சா, அதை இவன் எப்படி ஏத்துக்கலாம்? எனக்கு என் அப்பா அம்மாதான் முக்கியம்னு இருக்க வேண்டியதுதானே?" என்பான் இன்னொரு நாள்.

"என் தம்பி என்னை விட நல்லா படிச்சு, சொந்த முயற்சியில முன்னுக்கு வந்திருந்தா நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ போட்ட பிச்சையில பெருமையா வாழ்ந்துக்கிட்டிருக்கான்! இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று சில நாள் புலம்புவான்.

"இப்படியெல்லாம் மத்தவங்களைப் பத்திப் பேசாதீங்க. நாம முன்னேற என்ன வழின்னு யோசிங்க" என்று தங்கம் பலமுறை சொல்லியும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

திடீரென்று ஒருநாள் மாரடைப்பு ஏற்பட்டு ரகுராமனின் உயிர் பிரிந்து விட்டது. கேசவன் வந்து பார்த்து விட்டுப் போனான். அதோடு சரி.

அதற்குப் பிறகு தங்கம் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, தன்னையும் தன் மகள் பிரியாவையும் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

"சாப்பிட வாடி!" என்றாள் தங்கம்.

"வீட்டுச் சாப்பாடு போரடிக்குதும்மா. ஓட்டலுக்குப் போகலாம்மா!" என்றாள் பிரியா.

"உனக்குத்தான் தெரியுமே! மாசத்துல ஒரு நாள் - சம்பளம் வாங்கினப்பறம் ஒரு தடவைதான் - என்னால உன்னை ஓட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியும்"

"போம்மா! என் ஃபிரண்ட்ஸ்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஓட்டலுக்குப் போய் சாப்பிடறாங்க. ஸ்கூலுக்குப் போட்டுக்கிட்டுப் போக நல்ல டிரஸ் இல்ல, ஜாலியா ஓட்டலுக்குப் போய் சாப்பிட முடியல. ஏம்மா இப்படி?" என்றாள் பிரியா.

"தெரியலியே!" என்றாள் தங்கம்.  

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
     அழுக்காறாமை      
குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்:  
பிறருக்குக் கிடைக்கும் உதவி குறித்துப் பொறாமை கொள்பவனின் குடும்பம் உணவு, உடை கூடக் கிடைக்காத நிலைக்கு ஆளாகும்.
                                                                   குறள் 167
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்














2 comments: