About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, June 1, 2018

169. உயர்ந்த உள்ளம்

கவிஞர் காசிலிங்கம் ஸ்டூடியோவுக்கு வந்தபோது, தன்னுடன் ஒரு இளைஞனை அழைத்து வந்தார்.

"யாருங்க? உங்க உதவியாளரா?" என்றார் தயாரிப்பாளர்.

"இந்தப் பையன் பேரு இளவரசன். பாட்டெல்லாம் அருமையா எழுதுவான்" என்றார் காசிலிங்கம்.

"எங்க புடிச்சீங்க இவனை?"

"இவன் தன்னோட கவிதையை எல்லாம் எனக்குத் தபால்ல அனுப்பிக்கிட்டிருந்தான். இது மாதிரி எனக்கு நிறைய பேர்கிட்டேருந்து வரும். பெரும்பாலும் அதையெல்லாம் நான் படிக்கிறதில்ல. அப்பப்ப ஒண்ணு ரெண்டைப் பிரிச்சுப் படிப்பேன். அது மாதிரி படிச்சதுதான் இவனோட கவிதைகள். ரொம்ப அருமையா இருந்தது. பாராட்டிக் கடிதம் எழுதினேன். கடிதத்தை எடுத்துக்கிட்டு, ஊர்லேருந்து என்னைப் பாக்க வந்துட்டான்! 'சினிமா சான்ஸ் கேட்டு ஆயிரம் கவிஞருங்க அலைஞ்சுக்கிட்டிருக்காங்க. சான்ஸ் கிடைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லே'ன்னு சொன்னேன். ஆனா, விடாம ஆறு மாசமா தினம் காலையில என் வீட்டு வாசல்ல வந்து நின்னுக்கிட்டிருக்கான். சரி, உங்க படத்தில ஒரு வாய்ப்பு வாங்கித் தரலாம்னு அழைச்சுக்கிட்டு வந்தேன்" என்றார் காசிலிங்கம்.

"தம்பி! கொஞ்சம் வெளியில போயி உக்காந்திரு. கூப்பிடறேன்" என்றார் தயாரிப்பாளர்.

இளவரசன் வெளியில் சென்றதும், "என்னங்க இது? இந்த சினிமா உலகத்தில ஒத்தரை ஒத்தரு முழுங்கலாமான்னு பாத்துக்கிட்டிருக்காங்க. ஆனா நீங்க என்னன்னா, உங்களுக்குப் போட்டியா ஒரு ஆளைக் கூட்டிக்கிட்டு வந்து அவனுக்கு வாய்ப்புக் கேக்கறீங்க!" என்றார் தயாரிப்பாளர்.

"திறமை இருக்கற ஒருத்தனுக்கு உதவி செய்யலாம்னு கூட்டிக்கிட்டு வந்தேன். அவன் முன்னுக்கு வந்து நாளைக்கு என்னை விட மேலே போனா, எனக்கு சந்தோஷம்தான்!" என்றார் காசிலிங்கம்.

"உங்க மனசு யாருக்கும் வராது கவிஞரே! நீங்க சொன்னதுக்காக, இந்தப் படத்தில ஒரு பாட்டு அவனுக்குக் கொடுக்கறேன்" என்றார் தயாரிப்பாளர்.

ளவரசன் எழுதிய முதல் பாடலே அவனுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து விரைவிலேயே பிரபலமானான். முன்னணிக் கதாநாயகர்கள் தங்கள் படங்களுக்கு இளவரசன்தான் பாட்டு எழுத வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்ததும், இளவரசன் யாரும் நெருங்க முடியாத உயரத்துக்குப் போய் விட்டான்.

"அண்ணே! இந்தப் படத்தில மூணு பாட்டு நீங்க எழுதறீங்க. ரெண்டு பாட்டு மணி எழுதறாரு" என்றான் இளவரசனின் உதவியாளன்.

"அதெல்லாம் கிடையாது. இனிமே நான் பாட்டு எழுதற படத்தில எல்லாப் பாட்டும் நான்தான் எழுதுவேன். இதுக்கு ஒத்துக்கிட்டாத்தான் நான் பாட்டு எழுதுவேன்னு புக் பண்ண வரும்போதே தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லிடு" என்றான் இளவரசன்.

"ஏங்க அப்படி?"

"ஒரு படத்தில என் பாட்டை விட இன்னொரு கவிஞன் எழுதின பாட்டு நல்லா அமைஞ்சு போச்சுன்னு வச்சுக்க, அப்புறம் என்னை விட அவன் நல்லா எழுதறான்னு ரெண்டு பேரு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டு இருக்கணுமா?"

'கவிஞர் காசிலிங்கம் இப்படி நினைச்சிருந்தா, உன்னால சினிமாவிலேயே நுழைஞ்சிருக்க முடியாதே!' என்று நினைத்துக் கொண்டான் உதவியாளன்.

இளவரசன் போட்ட நிபந்தனை பல தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், முன்னணி நடிகர்கள் இளவரசன்தான் தங்கள் படங்களுக்குப் பாடல் எழுத வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியின்றி இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

இதனால் மற்ற பாடலாசிரியர்களுக்கு வாய்ப்புக்கள் குறைந்தன.

காசிலிங்கம் ஸ்டூடியோவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, அவருடைய நீண்ட நாள் நண்பர் டைரக்டர் கிட்டு எதிரே வந்தார்.

"என்ன கவிஞரே! எப்படி இருக்கீங்க? உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சு. நானும் படம் டைரக்ட் பண்ணிப் பல வருஷங்கள் ஆயிடுச்சே!" என்றார் கிட்டு.

இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்ட பிறகு, காசிலிங்கம் விடைபெற்றார்.

"காரை எங்கே நிறுத்தி இருக்கீங்க? டிரைவர் காரை எடுத்துக்கிட்டு வரப் போயிருக்காரா?" என்றார் கிட்டு.

"காரும் இல்லை, காரோட்டியும் இல்லை, காசும் இல்லை, காசி மட்டும்தான் இருக்கிறேன்!" என்றார் காசிலிங்கம்.

"என்னங்க இப்படிச் சொல்றீங்க?"

"இளவரசன் வந்ததும், மத்த எல்லாப் பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்புக் குறைஞ்ச மாதிரி, எனக்கும் குறைஞ்சுடுச்சு. இப்ப எனக்கு வர வருமானத்தில் என்னால கார் வச்சுக்க முடியாது. அதனால காரை வித்துட்டேன். பஸ்லதான் போறேன். பஸ் கிடைக்கலேன்னா ஆட்டோ!" என்றார் காசிலிங்கம்.

அப்போது ஒரு ஆடி கார் அவர்களைத் தாண்டிச் சென்றது.

"இளவரசன் போறான்!" என்றார் கிட்டு.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
    அழுக்காறாமை      
குறள் 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்.

பொருள்:  
பொறாமை நிறைந்தவன் செல்வச் செழிப்போடு இருப்பதும், நல்ல மனம் கொண்டவன் துன்பப்படுவதும் ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் (வியப்புக்குரியவை.)

குறிப்பு: முந்தைய குறள்களில், பொறாமை உள்ளவன் செல்வத்தை இழப்பான் என்று கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆனால் உலகில் இதற்கு மாறான நிலை நிலவுவதை நாம் பல சமயங்களில் பார்க்கிறோம். நியாயமாகப் பார்த்தால் இப்படி இருக்கக்கூடாதே, ஏன் இப்படி இருக்கிறது என்று ஆராய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இப்படி ஆராய்ந்துதான் விதி, முன்வினைப் பயன் போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கொள்ளலாம்.
பொருட்பால்                                                                                         காமத்துப்பால்





























No comments:

Post a Comment