About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, June 16, 2018

179. தவற விட்ட பணம்!

"என்னய்யா இது, சுவாரசியமான நியூஸ் எதுவுமே இல்லியே! நாளைக்கு பேப்பர் டல்லடிக்கும் போல இருக்கே!" என்றான் 'செய்தி அலைகள்' பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வநாதன்

"சார்! நேத்திக்கு பஸ்ல ஒத்தர் ஒரு பையை விட்டுட்டுப் போயிட்டார். அதில ரெண்டு லட்ச ரூபா பணம் இருந்திருக்கு. அதை ஒரு பயணி கண்டெடுத்து போலீஸ்ல ஒப்படைச்சிருக்கார். இந்த நியூஸை ஃபாலோ பண்ணலாமே!" என்றான் நிருபர் ஆனந்தன்.

"இது மாதிரி அடிக்கடி நடக்குதே! நேர்மையான ஆட்டோ டிரைவர்னு நிறைய நியூஸ் போட்டாச்சே!" என்றான் விஸ்வநாதன், அலுப்புடன்.

"இல்லை சார். ஆட்டோ விஷயம் வேற. பணத்தைத் தொலைச்சவர் புகார் கொடுத்தா, ஆட்டோவை டிரேஸ் பண்ண வாய்ப்பிருக்கு. அதனால பணத்தை எடுத்துக்கிட்டா மாட்டிப்போம்ங்கற பயம் ஆட்டோ டிரைவர்களுக்குக் கொஞ்சமாவது இருக்கும்.  ஆனா, பஸ்ல போனவங்களை டிரேஸ் பண்ணவே முடியாது. அவர் பணத்தை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிருக்கலாம். போலீசால அவரைக் கண்டு பிடிச்சிருக்கவே முடியாது. அதனால, பஸ் பயணி பணத்தைத் திருப்பிக் கொடுத்தது பெரிய விஷயம் இல்லையா? நான் போய் அவரை ஒரு பேட்டி எடுத்துட்டு வரேனே! மக்கள் இதையெல்லாம் ஆர்வமாப் படிப்பாங்க சார்!" என்றான் ஆனந்தன்.

"சரி. செய்யுங்க!" என்றான் விஸ்வநாதன், ஆர்வமில்லாமல்.

காவல் நிலையத்துக்குச் சென்று பணத்தைத் திருப்பிக் கொடுத்த பஸ் பயணியின் விலாசத்தைப் பெற்று, அவர் வீட்டுக்குச் சென்று அவரைப் பேட்டி கண்டு விவரங்களை ஆசிரியரிடம் காட்டினான் ஆனந்தன். 

அவர் பெயர் தண்டபாணி. ஒரு சிறிய தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து ஒய்வு பெற்றவர். ஒய்வு பெற்ற பின், ஒரு நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் வாட்ச்மேனாக இருக்கிறார். 

மகன் பி.ஏ படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறான். பள்ளிப்படிப்பு  மட்டுமே முடித்த மகள் ஒரு தொழிற்சாலையில் உதவித் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். தண்டபாணியின் மனைவியும் வீட்டு வேலை செய்து சம்பாதிக்கிறாள். 

மூன்று பேர் சம்பாதித்தும் பற்றாக்குறைதான். பையனுக்கு வேலை கிடைத்தால் கொஞ்சம் விடிவு பிறக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் தண்டபாணி.      

அன்று தண்டபாணி இரவுப் பணிக்காக பஸ்ஸில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார். அவர் இறங்க வேண்டிய இடம் கடைசி நிறுத்தம் என்பதால் பஸ்ஸில் போகும்போது தூங்கிக் கொண்டே போயிருக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்திருந்தது யார் என்று கூட கவனிக்கவில்லை. 

கடைசி நிறுத்தம் வந்ததும் விழித்துக் கொண்டு இறங்க முற்பட்டபோது, பக்கத்தில் ஒரு சிறிய தோல் பை இருந்ததை கவனித்து, அதைத் திறந்து பார்த்திருக்கிறார். உள்ளே நோட்டுக்கற்றைகள்!

கண்டக்டர் டிரைவர் எல்லோரும் இறங்கிப் போய் விட்டதால், பையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்தில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, அப்புறம் வேலைக்குப் போயிருக்கிறார். அதனால் வேலைக்குப் போவதில் தாமதம் ஏற்பட்டு, திட்டு வாங்கியிருக்கிறார்.

விஸ்வநாதன் இந்த விவரங்களைப் படித்து விட்டு "உப்புச் சப்பில்லாத நியூஸ்" என்று சொல்லி விட்டு அரைமனத்தோடுதான் அதை வெளியிட்டான். 

செய்தி வெளியான இரண்டு நாட்களில் பல வாசகர்களிடமிருந்து தண்டபாணியைப் பாராட்டிப் பல கடிதங்கள் வந்தன. பலர் தண்டபாணிக்கு உதவும் வகையில் பணம் வேறு அனுப்பியிருந்தார்கள். 

'தின அலைகளி'ல் செய்தி வந்ததைத் தொடர்ந்து, மற்ற பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தண்டபாணியைப் பேட்டி கண்டு வெளியிட்டன.

ஒரு சில நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவி சேர்ந்திருந்தது.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையுடன் ஆனந்தன் தண்டபாணியைப் பார்க்கச் சென்றான்.

'தின அலைகளு'க்கும், மற்ற ஊடகங்களுக்கும், தனக்கு உதவ முன்வந்தவர்களுக்கும், தன்னைப் பாராட்டியவர்களுக்கும் நன்றி தெரிவித்த தண்டபாணி. நிதி உதவி எதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

"என்னங்க இது? அந்தப் பணத்தை நான் எடுத்துக்கிட்டிருந்தா அது திருட்டு. திருடாம இருந்ததுக்காக இந்தப் பணத்தை நான் வாங்கிக்கணுமா?" என்றார் தண்டபாணி.

தண்டபாணி நிதி உதவி பெற மறுத்ததை 'தின அலைகள்' முதல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் தண்டபாணிக்கு மேலும் பாராட்டுகள் குவிந்தன.

ஒரு வாரம் கழித்து ஒரு தொழில் அதிபர் தண்டபாணியின் மகனுக்குத் தன் நிறுவனத்தில் வேலை கொடுக்க முன் வந்தார். 

தண்டபாணி அவருக்கும், 'தின அலைகள்' பத்திரிகைக்கும் நன்றி தெரிவித்து விட்டு. அந்த உதவியை ஏற்றுக்கொண்டார்.

   அறத்துப்பால்
     இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை  (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந் தாங்கே திரு

பொருள்:  
அறம் எது என்பதை அறிந்து பிறர் பொருளை நாடாமல் இருக்கும் அறிவுடையவர்களின் தகுதியை அறிந்து திருமகள் அவர்களிடம் சேர்வாள்.


                                                                         குறள் 180 
             குறள் 178
பொருட்பால்                                                                                        காமத்துப்பால்
















No comments:

Post a Comment