ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் அவன் செயல்படுத்தியதில்லை.
"எங்கிட்ட மட்டும் ஒரு லட்ச ரூபாய் இருந்தாப் போதும். மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிச்சுக் காட்டுவேன்!" என்று பாலுவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.
சில சமயம் பாலுவைக் கூட முதலீடு செய்யும்படி கேட்டிருக்கிறான். ஆனால் பாலுவிடம் பணமும் இருந்ததில்லை, பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்ததில்லை.
ஆனால் இந்த முறை வெங்கடாசலம் சொன்ன யோசனை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததாகத் தோன்றியது.
"ஐநூறு ரூபாய் இருந்தால் போதும். வீட்டிலிருந்தபடியே மாசம் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்" என்றான் வெங்கடாசலம்.
"எப்படி?" என்றான் பாலு. வெங்கடாசலத்தின் வியாபார யோசனைகளில் பொதுவாக அவனுக்கு அதிகம் ஆர்வம் இருந்ததில்லை என்றாலும், ஐநூறு ரூபாய்தான் முதலீடு என்றதும் அவனுக்குக் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது.
"உங்கிட்ட ஐநூறு ரூபாய் இருக்கா?" என்றான் வெங்கடாசலம்.
"இல்லை. ஆனா புரட்டலாம்!" என்றான் பாலு.
"அது போதும். நீ என்ன செய்யற - ஐநூறு ரூபா கொடுத்து எங்கிட்ட ஒரு புத்தகம் வாங்கற!"
"என்ன புத்தகம் அது?"
"'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' ங்கற புத்தகம்."
"அவ்வளவுதானா?" என்றான் பாலு, ஆர்வம் குறைந்தவனாக.
"என்ன அப்படிச் சொல்லிட்ட? நீ வாங்கப் போறது புத்தகம் இல்ல. நோட்டு அடிக்கற மெஷின்!"
"எப்படி?"
"சொல்றேன் கேட்டுக்க. இந்த ஃபாரத்தைப் பாத்தியா?" என்று ஒரு படிவத்தைக் காட்டினான் வெங்கடாசலம்.
அதில் நான்கு பெயர்களும், அவர்களுடைய முகவரிகளும் இருந்தன. மூன்றாவது இடத்தில் வெங்கடாசலத்தின் பெயர் இருந்தது. நான்காவதாக ஒரு நிறுவனத்தின் பெயர் இருந்தது.
"ஐநூறு ரூபா கொடுத்து ஒரு புத்தகம் வாங்கணும்னு சொன்னேன் இல்ல? அந்த ஐநூறு ரூபாயை நீ நாலு பேருக்குப் பிரிச்சு அனுப்பணும். முதல்ல பேர் இருக்கறவருக்கு 200 ரூபா, ரெண்டாவது நபருக்கு 120 ரூபா, மூணாவது நபருக்கு 100 ரூபா, கம்பெனிக்கு 80 ரூபான்னு, கம்பெனியிலிருந்து உனக்கு ஒரு புத்தகமும், இது மாதிரி ஒரு ஃபாரமும் வரும். அந்த ஃபாரத்தில மூணாவது இடத்தில உன் பேர் இருக்கும்! என் பேர் இரண்டாவது இடத்துக்குப் போயிடும்! ரெண்டாவதா இருக்கறவரு முதல் இடத்துக்குப் போயிடுவாரு. முதல் இடத்தில இருக்கறவரு பேரை எடுத்துடுவாங்க. (அவருதான் அதுக்குள்ளே நிறைய சம்பாதிச்சிருப்பாரே!) நீ இந்த ஃபாரத்தை ஜிராக்ஸ் எடுத்து உனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட காட்டி அவங்களை இதில சேத்து விட்டா போதும். உனக்குப் பணம் வந்துக்கிட்டே இருக்கும்!"
"ரெண்டு லட்ச ரூபா எப்படி வரும்?"
"அதுக்கு மேலயே கூட வரலாம். நீ எத்தனை பேரை சேத்து விடறேங்கறதைப் பொருத்தது அது. நீ 10 பேரை சேக்கற. அவங்க ஒவ்வொத்தரும் 10 பேரை சேக்கறாங்க, அப்புறம் அவங்களும் பத்து பத்து பேரை சேக்கறாங்கன்னு வச்சுக்க! உன் பேர் ஆயிரம் ஃபார்ம்ல முதல் இடத்தில வரும். அப்ப உனக்கு ஆயிரம் இன்டு இருநூறுன்னு ரெண்டு லட்ச ரூபா வருமே! அப்புறம் ரெண்டாவது மூணாவது இடத்து வருமானத்தை எல்லாம் சேத்தா இன்னும் அதிகமாகவே வரும்!"
"இது மணி சர்க்குலேஷன் மாதிரி இருக்கே! இது சட்ட விரோதம்னு சொல்லுவாங்களே?" என்றான் பாலு.
"சட்ட விரோதமா இருந்தா, இதை நடத்த முடியுமா? இது மணி சர்க்குலேஷன் இல்ல. புத்தக விற்பனையில வர பணத்தில ஒரு பகுதியை கமிஷனா மூணு பேருக்குப் பிரிச்சுக் கொடுக்கறாங்க. அவ்வளவுதான்!"
"எனக்கு இது ஒத்து வராதுப்பா. என்னால யாரையும் சேக்க முடியாது!"
"நீ யாரையும் சேக்க வேண்டாம். நான் உங்கிட்ட இதைப்பத்தி விளக்கிச் சொன்ன மாதிரி, நீ நாலு பேருகிட்ட சொல்லு. நிச்சயமா சில பேராவது சேந்துப்பாங்க. இந்த ஃபார்ம்லேயே, பின்பக்கத்தில இந்தத் திட்டத்தை விளக்கியிருக்காங்க. நீ இதை போஸ்ட்ல அனுப்பிச்சா கூடப் போதும். அதிலேயே கொஞ்சம் பேரு சேந்துப்பாங்க. நாலு பேரு சேர்ந்தாலே உனக்கு நானூறு ரூபா வந்துடும். அந்த நாலு பேர்ல ஒத்தர் இன்னொருத்தரை சேத்து விட்டாக் கூடப் போதும். அதுல உனக்கு நூத்தி இருவது ரூபா வரும். அவ்வளவுதான். நீ போட்ட பணம் வந்தாச்சு. அப்புறம் வரதெல்லாம் லாபம்தானே?" என்றான் வெங்கடாசலம்.
'ஐநூறு ரூபாய்தானே, சேர்ந்துதான் பாக்கலாமே!' என்று நினைத்து, பாலு அந்தத் திட்டத்தில் சேர்ந்தான்.
இரண்டு நாட்களில் பாலுவுக்கு 'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகமும், அவன் பெயர் சேர்க்கப்பட்ட படிவமும் தபாலில் வந்த. படிவத்தில் தன் பெயரைப் பார்த்ததுமே, பலரிடமிருந்து பணம் வந்து விட்டது போல் ஒரு உற்சாகம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் புத்தகத்தைப் பார்த்ததும்தான் ஏமாற்றம் ஏற்பட்டது.
அந்தத் திட்டத்தைப் பற்றிய விளக்கமும், எப்படியெல்லாம் மற்றவர்களை இதில் சேர்க்கலாம் என்ற யோசனைகளுமாக மொத்தம் இருபதே புக்கங்கள் கொண்ட புத்தகம் அது! விலை ரூ 500 என்று அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களில் பாலுவுக்கு 'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகமும், அவன் பெயர் சேர்க்கப்பட்ட படிவமும் தபாலில் வந்த. படிவத்தில் தன் பெயரைப் பார்த்ததுமே, பலரிடமிருந்து பணம் வந்து விட்டது போல் ஒரு உற்சாகம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் புத்தகத்தைப் பார்த்ததும்தான் ஏமாற்றம் ஏற்பட்டது.
அந்தத் திட்டத்தைப் பற்றிய விளக்கமும், எப்படியெல்லாம் மற்றவர்களை இதில் சேர்க்கலாம் என்ற யோசனைகளுமாக மொத்தம் இருபதே புக்கங்கள் கொண்ட புத்தகம் அது! விலை ரூ 500 என்று அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது.
வெங்கடாசலம் சொல்லியிருந்தான், 'உன் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவதற்கு எப்படி லிஸ்ட் போடுவாயோ அது மாதிரி போடு' என்று.
பாலு பட்டியல் போட ஆரம்பித்தான். முதலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பிறகு தூரத்து உறவினர்கள், ஓரளவுக்கே பரிச்சயமானவர்கள் என்று ஐம்பது பெயர்களை எழுதினான்.
முதலில் இந்த 50 பேரிடம் முயற்சி செய்வோம். இவர்களில் 5 பேர் சேர்ந்தால் கூட வெங்கடாசலம் சொன்ன கணக்கின்படி தன் முதலீட்டை எடுத்து விடலாம்!
ஒவ்வொருவரிடமும் எப்படி அணுகி, எப்படிப் பேசுவது என்று நினைத்துப் பார்த்தான்.
மனதில் ஏதோ ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது. மற்றவர்களைப் போய்க் கேட்க வேண்டுமே என்ற தயக்கம் என்று முதலில் நினைத்தான். அதற்கும் மேலே ஏதோ என்று தோன்றியது.
வெங்கடாசலம் சொல்லியிருந்தான்- யாரிடமும் போய் உதவி கேட்பது போல் கேட்கக் கூடாதாம். அவர்களுக்கு நன்மை செய்வது போல் பேச வேண்டுமாம்!
'ஐநூறு ரூபாய் முதலீட்டில் நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு. இதைத் தவற விட்டால் உங்களுக்குத்தான் நஷ்டம்!' என்ற ரீதியில் பேச வேண்டுமாம்!
'உண்மையிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் என் நோக்கமா?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான் பாலு. 'இல்லவே இல்லை' என்ற பதில் உள்ளிருந்து வந்தது. மனதில் இருந்த தயக்கத்துக்குக் காரணமும் புரிந்தது!
'நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் என்று பலரிடமும் பணத்தைப் பிடுங்கி என்னை வளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்! நான் சொல்வதை ஏற்று இந்த பிஸினஸில் சேருபவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் என்னைப் போல் மற்றவர்களின் பணத்தைப் பிடுங்க முயற்சி செய்வார்கள். அதிலும் ஒரு பகுதி எனக்கு வரும்! எத்தகைய தகாத செயல் இது! இந்த வகையான வருமானம் எனக்கு வேண்டாம்.
'வெங்கடாசலத்தின் பேச்சில் மயங்கி சபலப்பட்டு நான் ஐநூறு ரூபாயை இழந்தது என்னோடு போகட்டும். மற்றவர்களுக்கும் இது போன்ற இழப்பை ஏற்படுத்தி அவர்கள் பணத்தைப் பறித்து நான் பயன் பெற வேண்டாம்.'
படிவத்தையும் புத்தகத்தையும் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான் பாலு. பணத்தை இழந்த நிலையிலும், அவன் மனதில் ஒரு நிம்மதி தோன்றியது.
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 18
வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை)
குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
பொருள்:
நியாயமில்லாத செயல்களைச் செய்வது குறித்து வெட்கப்படுபவர்கள் தமக்குப் பயன் கிடைக்கும் என்பதற்காகத் தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
குறள் விளக்க நடைமுறை/உண்மை கதை!. நல்ல முயற்சி
ReplyDeleteநன்றி திரு ரமேஷ்!
Delete