About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, June 6, 2018

173. காஞ்சிப் பட்டுடுத்தி...

கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது.

தணிக்கை அதிகாரி சீதாராமன் ரமேஷுக்கு மேலதிகாரி போல் நடந்து கொள்ளாமல் ஒரு மூத்த நண்பன் போலவே நடந்து கொண்டார்.

அவர்கள் தணிக்கைக்குச் சென்ற இடம் காஞ்சிபுரத்தில் இருந்த ஒரு கூட்டுறவுப் பட்டு உற்பத்தி நிறுவனம்.

தணிக்கையின்போது, கணக்குகள், பில்கள் போன்றவற்றை அவர்களுக்குக் கொடுத்து உதவ  அந்த  நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் அவர்களுடனேயே இருந்தார்.

மாலையில் அவர்களைக் காஞ்சியில் உள்ள கோவில்களுக்கு அவர் அழைத்துச் சென்றார்.

"இந்த ஊர்ல நூற்றுத்துக்கணக்கான கோவில்கள் இருக்கு. 108 சிவன் கோவில், 18 விஷ்ணு கோவில், அதைத் தவிர சூரியன், யமன் மாதிரி எல்லா தேவதைகளுக்கும் இங்கே கோவில் உண்டு. ஆழ்வார்கள் பாடின 15 விஷ்ணு கோவில்களும், நாயன்மார்கள் பாடின 11 சிவாலயங்களும் இந்த ஊர்ல இருக்கு. முக்தி அளிக்கிற 7 ஸ்தலங்களில் இதுவும் ஒண்ணு. நகரங்களில் சிறந்தது காஞ்சின்னு காளிதாசன் பாடியிருக்கான். 'நகரேஷு காஞ்சி!' இந்த ரெண்டு மூணு நாள்ள எத்தனை கோயில் காட்ட முடியுமோ அத்தனையையும் நான் உங்களுக்குக் காட்டிடறேன்!" என்றார் அவர்.

இரவு உணவுக்குப் பின் அறைக்குத் திரும்பியதும் சீதாராமனிடம் ரமேஷ் கேட்டான். "சார்! நாம ஆடிட்டுக்கு வந்திருக்கோம். லஞ்ச், டின்னர், காஃபி, டிஃபன்னு நமக்காக ஏகமா செலவு பண்றாங்க. அதைத் தவிர, கார்ல கோவில் கோவிலா அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டறாங்க. இதையெல்லாம் நாம ஏத்துக்கறது தப்பு இல்லியா?"

சீதாராமன் ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்து விட்டு, "நீ சொல்றது சரிதான். ஆனா இது ரொம்ப நல்ல சொசைட்டி. இங்க தில்லுமுல்லு எதுவும் கிடையாது. கணக்கெல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கும். பிரச்னைகள் இருக்கற இடமா இருந்தா நான் இதையெல்லாம் என்கரேஜ் பண்ண மாட்டேன். ஆனா பொதுவா ஒண்ணு ஞாபகம் வச்சுக்க. நாம ஆடிட்டுக்கு வர இடத்தில இது மாதிரி சாப்பாடு, ஊர் சுத்திக் காட்டறதுல்லாம் நடக்கத்தான் நடக்கும். இதையெல்லாம் நாம மறுத்தா நமக்குப் பண்பாடு இல்லைன்னு நெனச்சுப்பாங்க. அதுக்காக அவங்களுக்கு சாதகமா ரிப்போர்ட் எழுதணும்னு அவசியம் இல்ல. தப்பு இருந்தா அதை ரிப்போர்ட்ல எழுதலாம். இங்க செஞ்சோற்றுக் கடனெல்லாம் கிடையாது!" என்றார்.

நான்கு நாட்களில் தணிக்கை முடிந்து விட்டது. சீதாராமன் சொன்னது போல் அங்கே முறைகேடுகள் எதுவும் இல்லை. ஒரு சில சிறிய தவறுகள்தான் இருந்தன. கடைசி நாளில் நிர்வாக இயக்குநரைச் சந்தித்தபோது, அந்தத் தவறுகளை அவரிடம் குறிப்பிட்ட சீதாராமன் அவற்றைத் தன் அறிக்கையில் எழுதப் போவதாகவும், அவற்றை அவர்கள் சரி செய்து விட்டால் பிரச்னை எதுவும் இருக்காது என்றும் அவரிடம் தெரிவித்தார்.

அவர்கள் கிளம்பும்போது, நிர்வாக இயக்குனர் சீதாராமனிடம் இரண்டு பார்சல்களைக் கொடுத்தார். "தாங்க்ஸ்" என்றபடியே அவற்றைப் பெற்றுக் கொண்டார் சீதாராமன்.

அறைக்கு வந்ததும், சீதாராமன் ரமேஷிடம் ஒரு பார்சலைக் கொடுத்தார்.

"என்ன சார் இது?" என்றான் ரமேஷ்.

"கிஃப்ட்!" என்றார் சீதாராமன்.

"என்ன கிஃப்ட்? எதுக்கு சார் இது?"

"பட்டுப் புடவை தயாரிக்கிற கம்பெனியில என்ன கிஃப்ட் கொடுக்கப் போறாங்க? பட்டுப் புடவையாத்தான் இருக்கும்! பிரிச்சுப் பாத்துடலாமே!"

தன் கையிலிருந்த பார்சலைப் பிரிக்கத் தொடங்கினார் சீதாராமன். "தனித்தனியாப் பேர் எழுதித்தான் கொடுத்திருக்காங்க. உன்னோடது வேற, என்னோடது வேற போலிருக்கு!"

பிரித்துப் பார்த்தார். விலை உயர்ந்த பட்டுப்புடவை! விலை ரூ 21,375 என்று எழுதப்பட்ட காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது.

"கிஃப்டோட மதிப்பு நமக்குத் தெரியணும்கறதுக்காக விலைச்சீட்டைக் கிழிக்காமயே கொடுத்திருக்காங்க! உன்னோடதைப் பிரிச்சுப் பாக்கலாமா, இல்ல வீட்டில போய்ப் பிரிச்சுக்கிறியா?" என்றார் சீதாராமன்.

"எனக்கு இது வேண்டாம் சார்!"

"முதல்ல பிரிச்சுப் பாக்கலாம்" என்றபடியே ரமேஷ் என்று பெயர் எழுதப்பட்டிருந்த பார்சலைப் பிரித்தார். அதிலும் ஒரு விலை உயர்ந்த பட்டுப்புடவை இருந்தது. விலைச்சீட்டில் ரூ 10,725 என்று எழுதப்பட்டிருந்தது.

"என்ன சார் இவ்வளவு விலை உயர்ந்த புடவையைக் கொடுத்திருக்காங்க!" என்றான் ரமேஷ்.

"ஏம்ப்பா! எனக்குக் கொடுத்த கிஃப்டை விட உனக்குக் கொடுத்த கிஃப்ட் விலை குறைச்சலா இருக்கேன்னு நினைப்பியோன்னு பாத்தா, இப்படிச் சொல்றியே!"

ரமேஷின் மனைவி கீதாவுக்குப் புடவைகள் மீது ஆசை உண்டு. கடைக்குப் போனால் விலையுயர்ந்த புடவைகளை எடுத்துப் பார்ப்பாள். ஆனால் அவற்றை வாங்க மாட்டாள். விலை குறைவாக இருக்கும் புடவையைத்தான் வாங்குவாள். "புடவைக்கு ஏன் இவ்வளவு செலவழிக்கணும்? அந்தப் பணத்தை மிச்சம் பிடிச்சா நாளைக்கு நம்ப குழந்தைகளுக்குச் செலவழிக்கலாமே!" என்று பிறக்கப் போகிற குழந்தைகளுக்காகச் சேமிக்க நினைப்பாள்.

அவளிடம் கல்யாணத்துக்கு வாங்கிய பட்டுப்புடவையைத் தவிர வேறு பட்டுப்புடவை இல்லை. "லட்ச ரூபாய்க்கெல்லாம் பட்டுப்புடவை இருக்காமே! அவ்வளவு விலை இல்லேன்னாலும் ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கணும்" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள் அவள்.

ஆனால் தங்கள் பொருளாதார நிலைக்கு அத்தகைய செலவுகள் சற்று அதிகப்படி என்று நினைத்துத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமல் இருந்தாள் கீதா. துணிக்கடைக்குப் போகும்போதெல்லாம் விலையுயர்ந்த புடவைகளை எடுத்துப் போடச் சொல்லி அவற்றைக் கைகளினால் தொட்டுப் பார்த்து மகிழ்வதோடு தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள்.

இந்தப் பட்டுப்புடவையைக் கொண்டு கொடுத்தால் கீதா மிகவும் மகிழ்ச்சி அடைவாள். பரிசாக வந்ததால் கணவனுக்குச் செலவு வைக்காமலேயே தன் ஆசை நிறைவேறி விட்டது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவாள்.

ஆனாலும்...

"தப்பா நெனச்சுக்காதீங்க சார்! இதைத் திருப்பிக் கொடுத்துட முடியுமா?"

"ஏம்ப்பா! இதெல்லாம் ரொம்ப சின்ன விஷயம். நாம ஒண்ணும் அவங்களுக்கு சாதகமா ரிப்போர்ட் எழுதிட்டு அதுக்காக லஞ்சம் வாங்கல. இதை வீட்டில கொண்டு போய்க் கொடுத்தா உன் மனைவி சந்தோஷப்பட மாட்டாங்க?"

"நிச்சயமா சந்தோஷப்படுவா சார்! சொல்லப் போனா, பட்டுப்புடவை மேல அவளுக்கு ஆசை உண்டு. அவளோட சின்ன ஆசையை நிறைவேத்தினதுக்காக, நானும் சந்தோஷப்படுவேன். ஆனா இந்தச் சின்ன சந்தோஷத்துக்காக என்னோட பெரிய சந்தோஷத்தை நான் இழக்க விரும்பல சார்!"

"அது என்னப்பா பெரிய சந்தோஷம்?"

"மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாம, நேர்மையா நடந்துக்கிட்டு, நமக்கு நியாயமாக் கிடைக்கறதை வச்சுக்கிட்டு வாழறதுதான் சார் பெரிய சந்தோஷம். நீங்க தப்பா நினைக்காதீங்க. என்னோட விருப்பம் அப்படி!" என்றான் ரமேஷ்.

"நான் தப்பா நினக்கலைப்பா. நானும் என்னை நேர்மையானவன்னுதான் நினச்சுக்கிட்டிருக்கேன்! ஆனா உன்னோட ஸ்டாண்டர்ட் ரொம்ப மேல இருக்கு. கீப் இட் அப்! இந்தப் புடவையையும் நானே எடுத்துக்கலாம். ஆனா நீ இந்த கிஃப்டை வாங்கிக்கலைங்கறது கம்பெனிக்குத் தெரியணும். அவங்களுக்கு ஃபோன் பண்ணி இங்க வந்து இதை எடுத்துக்கிட்டுப் போகச் சொல்றேன்" என்றார் சீதாராமன்.

"என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்!" என்றான் ரமேஷ்.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை)

குறள் 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே 
மற்றின்பம் வேண்டு பவர்.

பொருள்:  
அறவழியில் நடப்பதால் கிடைக்கும் பேரின்பத்தை விரும்புபவர் சிறிய இன்பத்தில் ஆசை கொண்டு அறத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 174 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






























No comments:

Post a Comment