About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, June 9, 2018

174. தானாக வந்த பணம்

மருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி, "என்ன ஆச்சு? மாடு இருந்ததா?" என்றாள்.

சோர்வான முகத்துடன் பதில் பேசாமல் மருதமுத்து உள்ளே வந்து ஊஞ்சலில் அமர்ந்ததே மங்கைக்கான பதிலாக இருந்தது.

"கொஞ்சம் தண்ணி கொடேன்!" என்றான் மருதமுத்து. மங்கை நகராமல் நின்றதைப் பார்த்து, "நான் போறதுக்குள்ள மாடு வித்துப் போச்சாம்!" என்றான்.

பதிலை வாங்காமல் நகர மாட்டேன் என்று நின்று கொண்டிருந்தது போல் மங்கை உள்ளே போய்த் தண்ணீர்க் குவளையுடன் வந்தாள்.

"என்ன பொழப்பு இது? மாட்டுத் தரகு பண்றேன்னுட்டு, யாரோ எங்கேயோ மாடு இருக்குன்னு சொன்னதைக் கேட்டுட்டு அஞ்சாறு மைல் நடந்து போய்ப் பார்த்தா அங்க மாடு இருக்காது, இல்ல வித்துப் போயிருக்கும். அப்படியே இருந்தாலும் அதை வாங்கறதுக்கு யார் இருப்பாங்கன்னு ஊர் ஊராத் தேடி அலையணும். அப்படியே வித்துக் கொடுத்தாலும் ஆயிரமோ ரெண்டாயிரமோ கமிஷன் வரும். அதிலயும் சில பேரு கமிஷன் கொடுக்காம ஏமாத்திடுவாங்க!" என்று அலுத்துக் கொண்டாள் மங்கை.

அதற்குள் தண்ணீர் குடித்து முடித்திருந்த மருதமுத்து, "இந்தத் தொழில்தானே நமக்குச் சோறு போடுது?" என்றான்.

"ஆமாம் சோறு போடுது! தினம் விருந்துச் சாப்பாடுதானே சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்! நாம ரெண்டு பேருதாங்கறதனால கடனை உடனை வாங்கி ஏதோ காலத்தை ஒட்டிக்கிட்டிருக்கோம். நாளைக்கே நமக்குப் பிள்ளை குட்டின்னு ஏற்பட்டா என்ன பண்ணப் போறமோ! பேசாம இந்த வீட்டுக்கு பதிலா நிலத்தை வாங்கிக்கிட்டிருந்திருக்கலாம். வாடகை வீட்டில இருந்தாலும் நிலத்திலேருந்து கொஞ்சம் வருமானமாவது வந்துக்கிட்டிருக்கும்!" என்றாள் மங்கை.

ரண்டு வருடங்கள் முன்பு மருதமுத்துவின் தந்தை தாய் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்த பிறகு அவன் தம்பி சரவணன் பாகம் பிரித்துக் கொள்ள விரும்பினான். அவர்களுக்கு இருந்தது சிறிதளவு நிலமும் ஒரு வீடும்தான். இரண்டு சகோதரர்களில் ஒருவர் நிலத்தையும் ஒருவர் வீட்டையும் எடுத்துக் கொள்வது என்று முடிவாகியது.

சரவணன் தன் பங்குக்கு நிலத்தைக் கேட்டான். நிலத்தை விற்று அந்தப் பணத்தில் வெளியூர் சென்று ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்வதாகச் சொன்னான். நிலத்திலிருந்து வரும் வருமானம் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் மருதமுத்துவும் தன் பங்குக்கு வீட்டை வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டான்.

அவர்கள் தந்தை மாட்டுத் தரகராக இருந்து ஓரளவு நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தவர். தந்தை இறந்த பிறகு மருதமுத்துவும் மாட்டுத் தரகுத் தொழில் செய்யத் தொடங்கினான். ஆனால் இதுவரை அந்தத் தொழில் அவனுக்குக் கை கொடுக்கவில்லை. தெடர்ந்து முயற்சி செய்து வந்தால் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மருதமுத்து மனம் தளராமல் தொழிலைத் தொடர்ந்து செய்து வந்தான். ஆனால் மங்கை அவன் தொழிலைப் பற்றி அலுத்துக் கொள்ளாத நாளே இல்லை.

தன் பங்கு நிலத்தை விற்று விட்டுப் பணத்துடன் ஊரை விட்டுச் சென்ற சரவணனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. அவன் திருச்சியில் ஏதோ தொழில் செய்து கொண்டு இருப்பதாகச் செய்தி வந்தது. ஆனால் வேறு விவரம் எதுவும் தெரியவில்லை.

"மருதமுத்து அண்ணே!"

அழைப்புக் குரல் கேட்டு மருதமுத்து வெளியே வந்தான்.

"வாப்பா பொன்னா! எங்கே இவ்வளவு தூரம்? ரெண்டு மூணு வருஷமா எங்கேயோ வெளியூர் போயிட்டு இப்பத்தான் ஊருக்குத் திரும்பி வந்திருக்கே போலிருக்கு! உள்ள வந்து உக்காரு!" என்றான் மருதமுத்து.

உள்ளே வந்த பொன்னன், தன் கையிலிருந்த பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து அதை மருதமுத்துவிடம் கொடுத்தான்.

"என்னப்பா இது?" என்றான் மருதமுத்து.

"மூணு வருஷம் முன்னால சரவணன்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். ரெண்டு வட்டின்னு பேச்சு. ஒரு வருஷம் ஒழுங்கா வட்டி கொடுத்துக்கிட்டிருந்தேன். அப்புறம் ஒரு பிரச்னையில ஊரை விட்டே போயிட்டேன். ரெண்டு வாரம் முன்னாலதான் வந்தேன்னு உங்களுக்கே தெரியும். நான் ஊர்ல இல்லாதபோது, சரவணனும் ஊரை விட்டுப் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். இந்தக் கடன் திரும்பி வராதுன்னு நெனச்சிக்கிட்டிருப்பான்! ரெண்டு வருஷம் வட்டியோடு சேர்த்து 14800 ரூபா வருது. இதில பதினஞ்சாயிரம் ரூபா இருக்கு. வட்டிக்கு வட்டின்னு போட்டா இன்னும் அதிகம் வரும். ஆனா நீங்க அப்படிக் கேக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்" என்றான் பொன்னன்.

"ஏம்ப்பா, சரவணன்கிட்ட வாங்கின பணத்தை எங்கிட்ட ஏன் கொடுக்கறே? அவன் எங்கே இருக்கான்னே எனக்குத் தெரியாதே!" என்றான் மருதமுத்து.

"எனக்கும் அது தெரியாததாலதான் உங்ககிட்ட பணத்தைக் கொடுக்கறேன். நீங்க அவனைப் பாக்கறப்ப அவன்கிட்ட கொடுத்துடுங்க. எனக்கு இந்த ஊர்ல கொஞ்சம் பிரச்னை இருந்ததாலதான் வெளியூர் போனேன். நான் போன இடத்தில எனக்கு ஒரு நல்ல வாய்ப்புக் கிடைச்சு ஓரளவுக்கு பணம் சம்பாதிச்சுட்டேன். ஊர்ல சில பேர்கிட்ட கடன் வாங்கி இருந்தேன். அதைத் திருப்பிக் கொடுத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நான் இனிமே இந்த ஊர்ப்பக்கம் வர மாட்டேன். நான் எங்கே போறேன்னு யார்கிட்டயும் சொல்லப் போறதில்ல. ஆனா வாங்கின கடனையெல்லாம் அடைச்சுட்டுத்தான் போறேன்."

"சரிப்பா. ஆனா இந்தப் பணத்தை நான் வாங்கக் கூடாது."

"இல்லீங்க. சரவணன் இல்லாதபோது, நீங்கதான் வாங்கிக்கணும். நான் வரேன்" என்று சொல்லி விட்டு வெளியேறினான் பொன்னன்.

"என்ன பண்ணப் போறீங்க?" என்றாள் மங்கை.

"அதான் யோசிச்சுக்கிட்டிருக்கேன்" என்றான் மருதமுத்து.

"இதில யோசிக்க என்ன இருக்கு? உங்க தம்பி எங்க இருக்கார்னே தெரியாது. அவர் இனிமே வரவும் மாட்டாரு. அவரு நல்லா சம்பாதிச்சுக்கிட்டு இருக்கார்னுதானே சொல்றாங்க? இந்தப் பணத்தை நாமளே வச்சுக்க வேண்டியதுதான். அப்படி ஒருவேளை உங்க தம்பி திரும்பி வந்து கேட்டா அப்ப பாத்துக்கலாம். இது பாகம் பிரிக்கறதுக்கு முன்னால அவர் கடன் கொடுத்த பணம். பாகம் பிரிக்கறதுக்கு முன்னால, அவர் பணம்னு தனியா ஏது? எல்லாப் பணமும் பொதுப்பணம்தானே! நாம கஷ்டப்படற காலத்தில இது நமக்கு உதவட்டுமே!"

"இல்லை மங்கை. இது சரவணனோட பணம். நாம பட்டினி கிடந்தாலும் இதை நாம எடுத்துக்கக் கூடாது. நம்ப ஊர்க்காரர் ஒருத்தர் திருச்சியில இருக்காரு. அவர்கிட்ட சொல்லி சரவணனைப் பத்தி விசாரிக்கச் சொல்றேன். அவன் விலாசம் தெரிஞ்சதும் அவனுக்குக் கடிதாசு போட்டு பணத்தை வாங்கிக்கிட்டுப் போகச் சொல்லணும். அதுவரையிலும் இது பத்திரமா இருக்கட்டும். இந்தா! இதை பீரோவுக்குள்ள வை!" என்று பணத்தை மனைவியிடம் கொடுத்தான் மருதமுத்து.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 
புன்மையில் காட்சி யவர்.

பொருள்:  
ஐம்புலன்களையும் வென்று குற்றமற்ற சிந்தனையுடன் இருப்பவர் வறுமை நிலையிலும் பிறர் பொருள் மீது ஆசைப்பட மாட்டார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 175 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















No comments:

Post a Comment