About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, June 26, 2018

184. லஞ்ச் ரூம்

சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர்.

முதல் நாள் இரவு அவரது பேட்டி ஒரு பிசினஸ் தொலைக்காட்சி சேனலில் வெளியாகியிருந்தது. அதற்குத்தான் பாராட்டுக்கள்.

"பிரமாதம் சார்."

"நம்ப கம்பெனியோட இமேஜை நல்லா ப்ரொஜெக்ட் பண்ணினீங்க."

"இன்டர்வியூ செஞ்ச லேடி கேட்ட கேள்விக்கெல்லாம் கையில் ஒரு பேப்பர் கூட வச்சுக்காம சரளமா பதில் சொன்னீங்க."

"அந்த லேடி உங்களை கார்னர் பண்ண ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினாங்க. ஆனா நீங்க சளைக்காம பதில் சொல்லி அவங்களைத் திணற அடிச்சுட்டீங்க."

இது போன்ற பல பாராட்டுக்களை அலுவலகத்தில் அவரவர் நிலைக்கும், அறிவுக்கும் ஏற்ற விதத்தில் வழங்கி விட்டுப் போனார்கள்.

கண்ணன் மட்டும் போகவில்லை.

சிறிது நேரம் கழித்து கண்ணன் அலுவல் தொடர்பாக சி ஈ ஓ வின் அறைக்குப் போனான். அப்போது அறையில் வேறு யாரும் இல்லை.

அலுவல் முடிந்ததும் சீட்டிலிருந்து எழுந்தபடியே, "சார்! நேத்து உங்க இன்டர்வியூ பாத்தேன், நல்லா இருந்தது" என்றான் கண்ணன்.

"உக்காருங்க" என்றார் ராஜாமணி. "உங்களோட மனம் திறந்த கருத்து எனக்கு வேணும்!"

தயக்கத்துடன் அமர்ந்த கண்ணன், "நல்லாத்தான் சார் இருந்தது" என்றான்.

"இல்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க ஒப்புக்காகப் பேசறவர் இல்ல. சொல்லுங்க!" என்றார் ராஜாமணி விடாமல்.

"ஒண்ணுமில்ல. நீங்க இன்னும் கூட நல்லா பண்ணியிருக்கலாம்கறது என்னோட அபிப்பிராயம்."

"அப்படின்னா?"

"தப்பா நெனச்சுக்காதீங்க. நீங்க இன்டர்வியூவுக்கு உங்களைத் தயார் செஞ்சுக்கலைன்னு எனக்குத் தோணிச்சு. உங்களுக்கு நேரம் இல்லாம இருந்திருக்கும். வேற யாரையாவது விவரங்களைத் தயாரிச்சுக் கொடுக்கச் சொல்லி நீங்க அதை எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம். இன்டர்வியூ பண்ணின லேடி நல்லா தயார் பண்ணிக்கிட்டு வந்தாங்க. புள்ளி விவரங்களோடு ரொம்ப ஆழமான கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. நீங்க பல கேள்விகளுக்குப் பொதுப்படையாத்தான் பதில் சொன்னீங்க. உங்ககிட்டயும் புள்ளி விவரங்கள் இருந்திருந்தா உங்க பதில்கள் இன்னும் ஆழமா இருந்திருக்கும்னு எனக்குத் தோணிச்சு. சாரி எகெய்ன்" என்றான் கண்ணன். தான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று அவனுக்குத் தோன்றியது.

"இல்ல, இல்ல. நான் நினச்சதைத்தான் நீங்க சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்னபடி புள்ளி விவரங்களோடு போகாதது தப்புதான். ஏதோ ஒரு நம்பிக்கையில போயிட்டேன். தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃபீட்பேக்" என்றார் ராஜாமணி.

ன்று பிற்பகல் உணவருந்த கண்ணன் லஞ்ச் ரூமுக்குப் போனபோது அவனுடைய சக ஊழியர்கள் சிலர் அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

"நேத்து நம்ம சி ஈ ஓ இன்டர்வியூ எப்படி இருந்தது?" என்று ஆரம்பித்தார் ஒருவர்.

"அதுதான் காலையில எல்லோரும் போய் அவரைப் பார்த்துப் பாராட்டிட்டு வந்துட்டமே!" என்றார் இன்னொருவர்.

"அது ஒரு ஃபார்மாலிட்டிக்காகத்தானே? உண்மையாவே எப்படி இருந்தது?"

"எனக்கென்னவோ அவ்வளவு திருப்திகரமாக இல்ல."

"கையில ஒரு பேப்பர் கூட இல்லாம அரசியல் கட்சிக் கூட்டத்தில பேசப் போற மாதிரி கையை வீசிக்கிட்டுப் போயிருக்காரு. அந்த லேடி எல்லா விவரங்களையும் கலெக்ட் பண்ணி வச்சுக்கிட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுத் திணற அடிச்சுட்டாங்க."

"அதான் ஒரு அளவுக்கு சமாளிச்சுட்டாரே!"

"அவர் செஞ்சது சமாளிப்புதான். டிவி பாத்தவங்களுக்கே தெரிஞ்சிருக்கும், இவர்கிட்ட பதில் இல்ல, ஏதோ சொல்லி மழுப்பறார்னு."

"அந்த லேடி விடாக்கண்டன் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. இவரும் பதில் சொல்லாம மழுப்பிக்கிட்டே இருக்காரு, நல்ல தமாஷ்தான். பிசினஸ் டிவியில என்டர்டெயின்மென்ட் ப்ரோக்ராம் மாதிரி இருந்தது!"

"மொத்தத்தில் சொதப்பல் இன்டர்வியூ. நம்ப கம்பெனி மட்டும் லிஸ்டட் கம்பெனியா இருந்தா, இந்த மாதிரி இன்டர்வியூவுக்கப்பறம் மார்க்கெட்ல ஷேர் விலை இன்னிக்குக் குறைஞ்சிருக்கும்."

"என்ன கண்ணன், நீங்க எதுவுமே சொல்லல?"

"காலையில சி ஈ ஒவைப் பார்த்தபோது இதையெல்லாம் அவர்கிட்ட யாராவது சொன்னீங்களா?" என்றான் கண்ணன், சாதாரணமாகக் கேட்பது போல்.

"அது எப்படிச் சொல்ல முடியும்?"

'நான் சொல்லியிருக்கேனே!' என்று நினைத்துக் கொண்டான் கண்ணன்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.

பொருள்:  
ஒருவரது குறைகளை அவர் முகத்துக்கு நேரே சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பின்விளைவுகளைச் சிந்திக்காமல் ஒருவர் இல்லாதபோது அவரைக் குறை கூறக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




























No comments:

Post a Comment