About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, June 27, 2018

185. உதவும் கரங்கள்

சேகர் தன் புதிய தொழிலில் முதலீடு செய்யப் பொருத்தமான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் அவனுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

அவரை நேரில் சந்திக்கும் முன் தன் நண்பன் ரகுவிடம் கலந்தாலோசித்தான்.

"உனக்கு சங்கரலிங்கத்தைப் பத்தி என்ன தெரியும்?" என்றான் ரகு.

"அவர் நாலஞ்சு கம்பெனிகள்ள பார்ட்னரா இருக்காரு. நல்ல தொழிலா இருந்தா, அதில பங்குதாரரா சேருவாரு. பிசினஸ் எப்படி நடக்குதுன்னு கவனிப்பாரு. ஆனா நிர்வாகத்தில தலையிட மாட்டாரு. தர்ம சிந்தனை உள்ளவர். நிறைய நல்ல காரியங்களுக்கு உதவி செஞ்சிருக்காரு. பணம் இல்லாத சில பேருக்குத் தொழில் தொடங்க உதவி இருக்காரு" என்றான் சேகர்.

"இவ்வளவு நல்லவர் உன்னோட பார்ட்னரா இருக்க ஒத்துக்கணுமேடா!" என்றான் ரகு.

"கிண்டல் இருக்கட்டும். உங்கிட்ட கலந்து பேசாம நான் எதுவுமே செய்யறதில்லன்னு உனக்குத் தெரியும். நீ சில விஷயங்களைக் கூர்ந்து கவனிப்ப. சங்கரலிங்கத்தைப் பாத்துப் பேசலாம்னு இருக்கேன். நீயும் என் கூட வரணும்."

"முன்பின் தெரியாத உன்னை அவர் சந்திக்க ஒத்துக்கணுமே?"

"சங்கரலிங்கத்தை எனக்கு சிபாரிசு செஞ்சவரே, நான் அவரைச் சந்திக்கறதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கார்."

"அப்புறம் என்ன? அவர் வீட்டுக்குப் போய் ஒரு காப்பி குடிச்சுட்டு வந்துடலாம். காப்பி கொடுப்பார் இல்ல?" என்றான் ரகு.

"காப்பி கொடுக்காட்டாப் பரவாயில்ல. பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாப் போதும்!"

"எவ்வளவு தாராள மனசுடா உனக்கு!"

ண்பர்கள் இருவரும் சங்கரலிங்கத்தை சந்திக்கச் சென்றனர். சங்கரலிங்கம் மிகவும் எளிமையானவராகத் தெரிந்தார். சேகர் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்டார். அவனுடைய ப்ராஜக்ட் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு, தன் ஆலோசகரிடம் கலந்தாலோசித்து ஒரு வாரத்தில் தன் முடிவைச் சொல்வதாகச் சொன்னார்.

அவர்கள் கிளம்ப யத்தனித்தபோது, "என்ன அவசரம்? வேலை முடிஞ்சதும் கிளம்பிடணுமா? கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டுப் போகலாமே" என்றார்.

"உங்க நேரத்தை வீணாக்க வேணாம்னுட்டுதான்..." என்றான் சேகர்.
.
"வீணாக்கப்படறதுக்குன்னே படைக்கப்பட்ட ஒரு விஷயம் நேரம்தான்!" என்ற சங்கரலிங்கம் தொடர்ந்து அவர்களிடம் அரசியல், சினிமா, ஆன்மீகம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். சில பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களைப் பற்றியும் பேசினார்.

தன்னுடன் பங்குதாரராகச் சேருவது என்று முடிவு செய்து விட்டாரோ என்று தோன்றியது சேகருக்கு.

"உங்களை எங்கிட்ட அனுப்பினானே ஜெகதீசன், அவனை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் சங்கரலிங்கம்.

"அவரை ஒரு மீட்டிங்கில் பாத்தேன். சும்மா பேசிக்கிட்டிருக்கச்சே என்னோட திட்டத்தைப் பத்திச் சொன்னேன். அப்ப அவரு உங்களைப் பத்திச் சொன்னாரு. நான் உங்களைச் சந்திக்கணும்னு சொன்னேன். அப்புறம்தான் அவர் உங்ககிட்ட பேசி அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தாரு. மத்தபடி அதிகப் பழக்கமில்லை" என்றான் சேகர். 

சொன்ன பிறகுதான், ஜெகதீசனுக்கு நெருக்கமில்லாதவன் என்றபோது தனக்கு ஏன் உதவ வேண்டும் என்று சங்கரலிங்கம் நினைப்பாரோ என்று தோன்றியது.

"அவனைப் பத்தின உண்மைகளைச் சொன்னா தப்பா நெனச்சுப்பீங்களோன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். அவன் எனக்கு ரொம்ப வேண்டியவன்தான். பாக்கறதுக்குப் பரம யோக்கியன் மாதிரி இருப்பான். ஆனா, தினமும் தண்ணி போடணும் அவனுக்கு. இல்லாட்டா தூக்கம் வராது. சின்ன வீடு வேற வச்சிருக்கான். ஒரு நாளைக்கு 'இவதான் என் நம்பர் டூ'ன்னு அவளை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கறான்!"

சேகர் மௌனமாக இருந்தான். "நீங்க அவனுக்கு நெருக்கமானவங்க  இல்லேங்கறதாலதான் இதை உங்ககிட்ட சொன்னேன். நான் சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதீங்க!" என்றார் சங்கரலிங்கம்.

"சேச்சே! நான் ஏன் சார் அவர்கிட்ட இதைப் போய் சொல்லப் போறேன்?" என்றான் சேகர்.

சற்று நேரம் கழித்து இருவரும் விடைபெற்றனர்.

"ரொம்ப எளிமையானவரா இருக்காரு இல்ல? அவர் ஒத்துக்கிட்டா, எனக்கு அதிர்ஷ்டம்தான்!" என்றான் சேகர்.

ரகு மௌனமாக இருந்தான்.

"என்னடா யோசிக்கிறே?"

"இல்ல. அவரு எந்த அளவுக்கு நல்லவரா இருப்பார்னு யோசிக்கிறேன்."

"ஏன் உனக்கு இந்த சந்தேகம்? அவரைப் பத்தி வெளியில நல்லபடியாதானே  சொல்றாங்க?"

"அவரு தன்னை ரொம்ப நேர்மையானவரா காமிச்சுக்கறாரு. ஆனா உண்மையிலே அப்படி இருப்பாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு."

"அதான் ஏன்னு கேட்டேன்."

"தேவையில்லாம மத்தவங்களைப் பத்தி அவதூறு பேசினாரு! அதுவும் உன்னை அவர்கிட்ட அனுப்பின ஜெகதீசனைப் பத்தி உன்கிட்டயே தப்பாப் பேசினாரு. அதுக்கு என்ன அவசியம்? இப்படியெல்லாம் மத்தவங்களைப் பத்தி அவங்க முதுகுக்குப் பின்னால அவதூறாப் பேசறவங்க நேர்மையா நடந்துப்பாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!"

"நான் அப்படி நினைக்கல. இது மாதிரி அக்கப்போர் பேசறதெல்லாம் மனித இயல்பு. இதை வச்சு ஒத்தரோட நேர்மையை எடைபோட முடியுமா?" என்றான் சேகர்.

"சரி. முதல்ல, அவர் தன்னோட முடிவைச் சொல்லட்டும். ஆனா நீ அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதே!"

த்து நாட்கள் கழித்து சேகர் ரகுவுக்கு ஃபோன் செய்தான். "டேய்! சங்கரலிங்கம் என் பிசினஸில் முதலீடு பண்ண ஒத்துக்கிட்டாரு" என்றான்.

"ம்" என்றான் ரகு.

"ஆனா நான் அவரோட சேர்ந்து தொழில் பண்ணப் போறதில்ல."

"ஏன், நான் சொன்னதுக்காகவா?"

"நீ சொன்னபோது அதை நான் ஏத்துக்கல. ஆனா ரெண்டு நாள் முன்னாடி, தற்செயலா நான் ஒத்தரை சந்திச்சேன். அவர் மாடுலர் கிச்சன் எல்லாம் டிசைன் பண்ணி, உருவாக்கறதில அனுபவம் உள்ளவர். அவர் சங்கரலிங்கத்துக்கிட்ட உதவி கேட்டு, அவரும் முதலீடு பண்ண ஒத்துக்கிட்டிருக்காரு. ஆர்டர் பிடிக்கறதிலிருந்து, டிசைன் பண்ணி, ஃபேப்ரிகேட் பண்ணி, இன்ஸ்டால் பண்றது வரை எல்லாம் அவர்தான் செஞ்சிருக்கார். லாபத்தில் பாதின்னு பேச்சு. ஆனா வரவு செலவெல்லாம் சங்கரலிங்கத்தோட பாங்க் அக்கவுண்ட் மூலமாத்தான் நடந்திருக்கு. சங்கரலிங்கம் பொய்க் கணக்கெல்லாம் காட்டி, இவரை நிறைய ஏமாத்திட்டாராம். ஒரு வருஷம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாம இவரு விலகி வந்துட்டாராம். அவர் சொன்னதைக் கேட்டதும்,  நான் போய் மாட்டிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்."

"கங்கிராசுலேஷன்ஸ்! நல்ல வேளை நீ தப்பிப் பிழைச்சுட்டே!"

"மத்தவங்க முதுகுக்குப் பின்னால அவங்களைப் பத்தி மட்டமாப் பேசறவங்க நேர்மையானவங்களா இருக்க மாட்டாங்கங்கற உன்னோட தியரி சரின்னு நிரூபணம் ஆயிடுச்சு" என்றான் சேகர்.

"இது என்னோட தியரி இல்ல. திருவள்ளுவரோட தியரி!" என்றான் ரகு.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப் படும்

பொருள்:  
ஒருவன் புறம் சொல்லும் இயல்பு உடையவனாக இருந்தால், அவன் அறத்தைப் பற்றிப் பேசினாலும், அவன் அறவழியில் நடப்பவனாக இருக்க மாட்டான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்


No comments:

Post a Comment