About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, June 10, 2018

175. ஆராய்ச்சிக் கட்டுரை

"கைலாசம் உனக்கு கைடாகக் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்!"

கைலாசத்தை வழிகாட்டியாகக் கொண்டு ராகவன் பி.எச்.டிக்குப் பதிவு செய்து கொண்டபோது பலரும் அவனிடம் சொன்னது இது.

கைலாசம் ஒரு புகழ் பெற்ற பேராசிரியர். அவருடைய அறிவு, விஷய ஞானம், புதிய சிந்தனைகள் போன்றவை அடிக்கடி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பேசப்பட்டு வந்த விஷயங்கள்.
அவர் ஒரு செமினாரிலோ, கல்வி அரங்கிலோ பேசினால், அரங்கு நிரம்பி வழியும். அவர் பேசுகிற விஷயம் பற்றி அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட அவர் பேச்சைக் கேட்க வருவார்கள். அவர் பேச்சு அவ்வளவு எளிமையாகவும், பொருள் பொதிந்ததாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.

பல்கலைக் கழகங்களில் மட்டும் அவர் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார் என்று சொல்வார்கள். இவை தவிர பல்வேறு பத்திரிகைகள், ஆராய்ச்சி அரங்குகள் ஆகியவற்றில் அவர் பகிர்ந்து கொண்ட ஆராய்ச்சிகள் பல.

ராகவன் அவ்வப்போது கைலாசத்தைச் சந்தித்துத் தனது ஆராய்ச்சியில் தான் அடைந்த முன்னேற்றங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டான். அவர் அவனைப் பாராட்டியும், ஊக்குவித்தும், யோசனைகள் சொல்லியும் அவனுடைய முயற்சிக்குத் துணை புரிந்தார்.

ராகவனின் பி.எச்.டி படிப்பு முடியும் சமயம் வந்து விட்டது. அவன் தனது ஆராய்ச்சியை முடித்து விட்டான். அவனுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைக் கைலாசம் படித்து ஒப்புதல் அளித்து விட்டால், அவன் அதற்கு இறுதி வடிவம் கொடுத்துப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து விடுவான்.

ராகவனின் ஆராய்ச்சிக் கட்டுரையை வாங்கிக் கொண்ட கைலாசம், அதைப் படித்துப் பார்ப்பதாகச் சொல்லி அவனை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார்.

ஒரு வாரம் கழித்து ராகவன் கைலாசத்தைப் பார்க்கச் சென்றான்.

ராகவன் உள்ளே நுழைந்ததுமே தன் கையை நீட்டி அவனுடன் கை குலுக்கிய கைலாசம்,"கங்கிராசுலேஷன்ஸ் ராகவன். எக்சலண்ட் ஜாப். பேப்பர் ரொம்ப நல்லா வந்திருக்கு!" என்றார்.

"ரொம்ப நன்றி சார்!" என்றான் ராகவன் பெருமிதத்துடன்.

"உட்காரு. ஐ ஹேவ் எ ஸஜஷன் ஃபார் யூ!"

"சொல்லுங்க சார்!"

"உன்னோட பேப்பர் ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கு. இன் ஃபேக்ட், இதை ரெண்டு பேப்பராப் பிரிக்கலாம்."

"ஆமாம் சார். இந்த ஆராய்ச்சியை ஒரு ஸ்டேஜில நிறுத்தியிருக்கலாம். ஆனா நான் கொஞ்சம் அதிக ஆர்வம் எடுத்துக்கிட்டு அதை அடுத்த ஸ்டேஜுக்கு எடுத்துக்கிட்டுப் போனேன். நீங்க சொல்ற மாதிரி நான் இதை ரெண்டு பேப்பராப் பண்ணி ரெண்டு பி எச் டி கூட வாங்கி இருக்கலாம்!" என்றான் ராகவன் சிரித்துக் கொண்டே.

"நான் சொல்ல வந்தது அதுதான். இதோட முதல் பகுதியை மட்டும் இப்ப சப்மிட் பண்ணு. ரெண்டாவது பகுதியை ஆறு மாசம் கழிச்சு சப்மிட் பண்ணி இன்னொரு பி எச் டி வாங்கிக்க!" என்றார் கைலாசம்.

"அப்படிப் பண்ண முடியுமா சார்?"

"பண்ணலாம். நான் பாத்துக்கறேன் அதை."

"ரொம்ப நன்றி சார்!" என்றான் ராகவன்.

அடுத்த மாதம் வந்த பல்கலைக்கழக கெஜட்டில் புதிய ஆராய்ச்சி பேப்பர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ராகவனின் ஆராய்ச்சிக் கட்டுரை பற்றிய விவரங்கள் இருந்தன. அத்துடன் அவன் கட்டுரையின் இரண்டாம் பகுதியின் விவரங்களும் வெளியிடப்பட்டு, அது கைலாசத்தின் புதிய ஆராய்ச்சி பேப்பர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது!

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின்.

பொருள்:  
மற்றவரின் பொருளைக் கவர விரும்பி ஒருவர் தவறான செயல்களில் ஈடுபடுவாரானால், அவருக்குப் பரந்த அறிவு இருந்து என்ன பயன்?

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                          குறள் 176 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
































2 comments:

  1. சிறப்பான பதிவு. கதையின் முடிவை கொஞ்சம் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். திருக்குறள் எல்லோருக்கும் வழிகாட்டி. சிறப்பு.

    நமது வலைத்தளம் : பயணங்கள் பலவிதம் - 08 #கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம்

    ReplyDelete