About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, June 18, 2018

180. மாறியது கணக்கு!

"நாம இவ்வளவு வருஷமா மார்க்கெட்ல இருக்கோம். அஞ்சு வருஷம் முன்னால தொழில் ஆரம்பிச்சவங்க இவ்வளவு வேகமா வளர்ந்துட்டாங்களே!" என்றான் ஆனந்த் இன்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் மதன்.

"லட்சுமி என்டர்ப்ரைசஸைத்தானே சொல்றீங்க? அவங்க ஏதோ சின்ன லெவல்ல பண்ணிக்கிட்டிருக்காங்க. நமக்கு அவங்க போட்டியே இல்லியே!" என்றான், நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர்.

"இல்ல சுந்தர். அவங்களைப் பத்தி மார்க்கெட்ல பேச ஆரம்பிச்சுட்டாங்க. இது நல்லது இல்ல. அவங்களை ஒழிச்சுடணும்."

"என்ன சார் பண்ணலாம்?"

"அவங்களைப் பத்தின விவரங்களை சேகரிப்போம். மெயின் ரோட்ல அவங்க தொழிற்சாலை இருக்கறதே எனக்குக் கண்ணை உறுத்துது. அது வாடகை இடம்தான்னு நினைக்கிறேன். அவங்களை அங்கிருந்து முதல்ல வெளியேற்றணும்."

ரண்டு நாட்கள் கழித்து சுந்தர் நல்ல செய்தியுடன் மதனைச் சந்தித்தான்.

"லட்சுமி என்டர்ப்ரைசஸோட ஃபாக்டரியை அஞ்சு வருஷம் லீஸ்ல எடுத்திருக்காங்க. லீஸ் இன்னும் ரெண்டு மாசத்துல முடியப் போகுது. ரெனியூ பண்றத்துக்கான ஏற்பாடுகளைப் பண்ணிக்கிட்டிருக்காங்க."

"அந்த லீஸ் ரெனியூ ஆகக் கூடாது. அந்த இடத்து சொந்தக்காரர் கிட்ட பேசுங்க. தேவைப்பட்டா அந்த இடத்தை நாம வாங்கிடலாம்."

"சார்! நம்பகிட்ட ஏற்கெனவே இருக்கிற இடத்தையே நாம முழுசாப் பயன்படுத்தலியே!"

"பரவாயில்ல. வேற யாருக்காவது வாடகைக்கு விடலாம். இல்ல, சும்மா பூட்டி வச்சிருந்தாலும் பரவாயில்ல. இன்னும் ஆறு மாசத்துல அவங்களை மார்க்கெட்டை விட்டு விரட்டிட்டு அவங்க பிசினஸ் நமக்கு வர மாதிரி பண்ணணும்" என்றான் மதன்.

"அந்த இடத்துக்கு சொந்தக்காரர் அதை விக்க இஷ்டப்படலேன்னா..."

"மார்க்கெட் ரேட்டுக்கு மேல கொடுக்கறதா சொல்லுங்க. கடன் வாங்கியோ அல்லது வேற எப்படியோ தேவைப்படற பணத்தைத் திரட்டிடலாம்."

"என்ன சார் இது? லீஸ் ரெனியூ பண்ற சமயத்தில முடியாதுன்னு சொல்றாங்களே!" என்றான் லட்சுமி என்டர்பிரைசஸின் பொது மேலாளர் சண்முகம்.

"சரி. என்ன செய்ய முடியும்? நம்ப இடத்தில கட்டிக்கிட்டிருக்கிற ஃபேக்டரி கட்டி முடிய ரெண்டு வருஷம் ஆகும். அதுவரையிலும் வாடகைக்கு வேற இடம் பாக்கணும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ல எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தரோட ஃபேக்டரி ஆறு மாசமா பூட்டிக் கிடக்கு. அதை வாடகைக்கு விடணும்னு சொல்லிக்கிட்டிருந்தார். நாம அங்க போயிடலாம். இடம் கொஞ்சம் சின்னதுதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்" என்றான் நிர்வாக இயக்குனர் லட்சுமிநாராயணன்.

"சார்! ஆனந்த் இன்டஸ்ட்ரீஸ்தான் பிரஷர் கொடுத்து இப்படிப் பண்ண வச்சிருக்காங்க. அந்த இடத்தை அவங்களே வாங்கப் போறாங்களாம்."

"அப்படியா? சரி. யார் வாங்கினா என்ன? நமக்கு வேற இடம் கிடைச்சாச்சு. அவ்வளவுதானே!"

"சார்! அவங்களை சும்மா விடக் கூடாது. அவங்களோட டாப் டெக்னிகல் பீப்பிள் ரெண்டு மூணு பேரை இழுத்துடலாம். அவங்க அங்கே சந்தோஷமா இல்லேன்னு கேள்விப்பட்டேன். அதனால அதே சம்பளம் கொடுத்தா கூட நம்மகிட்ட வந்துடுவாங்க. இன்னும் ரெண்டு வருஷத்திலே நாம எக்ஸ்பாண்ட் பண்ணும்போது நமக்கு ஆளுங்க வேண்டி இருக்கும். இது மாதிரி பதிலடி கொடுத்தாத்தான் சார் மதனுக்கு உறைக்கும்."

"அவங்க பிசினஸ் ரொம்பப் பெரிசு. ஆனா நம்பளோட சின்ன பிசினஸை அபகரிக்கணும்னு பாக்கறாங்க. நாமளும் அவங்களோட சீனியர் ஃஸ்டாபை அபகரிக்க நெனைக்கணுமா என்ன? வேண்டாம். நாம நம்ம பிஸினஸ்ல கவனத்தைச் செலுத்தலாம்" என்றான் லட்சுமிநாராயணன்.

"என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறீங்க?" என்றான் மதன்.

"ஆமாம் சார். இன்னிக்கு கவர்ன்மென்ட் ஜி ஓ வருதாம். நாம வாங்கின இடத்தை சாலை விரிவாக்கத்துக்காக எடுத்துக்கப் போறாங்க."

"அது அவ்வளவு சீக்கிரம் நடக்காதே. யாராவது கேஸ் போடுவாங்களே!"

"இல்லை சார். இது அஞ்சு வருஷம் முன்னாடியே வந்த திட்டம். சில பேர் கேஸ் போட்டதாலதான் இத்தனை நாள் பெண்டிங்கில இருந்ததாம். இதை எல்லாரும் மறந்தே போயிட்டாங்க. அதனாலதான் ஆறு மாசம் முன்னால நாம அந்த இடத்தை வாங்கினபோது இந்த விஷயம் நம்ப கவனத்துக்கு வரல. நேத்திக்குத்தான் கோர்ட்ல அரசாங்கத்துக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு. அதனால உடனே வேலையை ஆரம்பிச்சுடுவாங்க."

"காம்பென்சேஷன் கொடுப்பாங்க இல்ல?"

"சார்! கவர்ன்மென்ட் ரேட் எல்லாம் ரொம்பக் கம்மியா இருக்கும். அதுவும் பணம் வரத்துக்குப் பல வருஷங்கள் ஆகும். நாம வேற மார்க்கெட் ரேட்டுக்கு மேல கொடுத்து இடத்தை வாங்கி இருக்கோம். நமக்கு நஷ்டம் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்" என்றான் சுந்தர் தயங்கியபடி.

நஷ்டம் எவ்வளவு இருக்கும், அது எந்த அளவுக்குத் தன் தொழிலை பாதிக்கும் என்று கணக்குப் போடத் தொடங்கினான் மதன்.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் 
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

பொருள்:  
விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் பிறர் பொருளை விரும்பினால், அது அழிவைத் தரும். பிறர் பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 181 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




























No comments:

Post a Comment