About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, June 25, 2018

183. ஆள்காட்டி!

அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது.

அன்று மதிய உணவு இடைவேளையில், நான்கு தொழிலாளிகள் தொழிற்சாலைக்கு வெளியே சாலையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் மணி மட்டும் நிரந்தரமாக்கப் படாதவன்.

"இந்த மாசக் கடைசியில எல்லாரையும் பர்மனண்ட் பண்ணிடுவாங்கன்னு மானேஜர் சொல்லியிருக்காரே!" என்றான் செல்வம்.

"எனக்கு நம்பிக்கை இல்ல. அந்த மானேஜர் ஒரு ஏமாத்துப் பேர்வழி. முதலாளி சரின்னு சொன்னா கூட அவன் எதையாவது சொல்லிக் கெடுத்துடுவான்" என்றான் மணி.

"நம்மளால என்ன பண்ண முடியும்? இது ஒரு சின்ன ஃபேக்டரி. நமக்கு யூனியன் கூடக் கிடையாது. இங்கே அவங்க வச்சதுதான் சட்டம்" என்றான் முருகன்.

"எனக்கு இந்த மானேஜர் சரவணன் மேலதான் கடுப்பு. சரவணன்ங்கற பேருக்கு பதிலா, ராவணன்னு பேரு வச்சிருக்கலாம். இந்த மாசம் மட்டும் எங்களை பர்மனண்ட் பண்ணாம இருக்கட்டும். நேரா லேபர் ஆஃபீசுக்குப் போய் இங்கே நடக்கற அக்கிரமத்தையெல்லாம் சொல்லத்தான் போறேன்!" என்றான் மணி.

அதன் பிறகு சற்று நேரம் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி மானேஜர் சரவணனின் அக்கிரமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து எழுந்தபோதுதான் அவர்கள் உட்கார்ந்திருந்த மரத்தடிக்குப் பின்புறத்திலிருந்து சூப்பர்வைசர்கள் சங்கரும், மூர்த்தியும் வேகமாகப் போய்க் கொண்டிருந்ததை கவனித்தனர்.

"இவங்க ரெண்டு பேரும் மரத்துக்குப் பின்னால நின்னுக்கிட்டு சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்திருக்காங்க போலிருக்கு. நாம பேசறதைக் கேட்டிருப்பாங்களோ? மானேஜர் கிட்ட போய் வத்தி வச்சிடுவாங்களோ?" என்றான் மணி.

"பார்க்கலாம். இப்ப நாம என்ன பண்ண முடியும்?" என்றான் முருகன்.

ந்த மாத இறுதியில் தற்காலிக ஊழியர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் நிரந்தரமாக்கப் பட்டனர். மணி மட்டும் நிரந்தரமாக்கப்படவில்லை.

"என்னண்ணே இப்படிப் பண்ணிட்டாங்க? என்னை மட்டும் ஒதுக்கிட்டாங்களே!" என்றான் மணி அதிர்ச்சியுடன்.

"அன்னிக்கு நாம பேசினதைக் கேட்ட சூப்பர்வைசர் ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தன் மானேஜர் கிட்ட போட்டுக் கொடுத்திருக்கான். நாங்க மூணு பேரும் பர்மனன்ட்டுங்கறதால எங்களை ஒண்ணும் பண்ண முடியல. உன்னை மட்டும் பழி வாங்கிட்டான் மானேஜர் சரவணன்" என்றான் முருகன்.

"ரெண்டு பேர்ல யார் சொல்லியிருப்பாங்க? ரெண்டு பேருமே சொல்லியிருப்பாங்களோ?" என்றான் மணி.

"சங்கர் நம்மகிட்டல்லாம் நல்லா பழகறவரு. ஜாலியான ஆளு. அவரு சொல்லியிருக்க மாட்டாரு. மூர்த்திதான் பெரிய ஆஃபீசர் மாதிரி ராங்கியா இருப்பான். நம்பளை மதிச்சுப் பேச மாட்டான். வேலையில குத்தம் இருந்தா மட்டும்தான் கேப்பான். அவன்தான் ஆள்காட்டியா இருந்திருப்பான்."

"அவனை நான் சும்மா விடப் போறதில்ல" என்றான் மணி ஆத்திரத்துடன்.

"அவசரப்பட்டு எதையாவது பண்ணி மாட்டிக்காதே. மூர்த்திக்கு ஏதாவது ஆனா, முதல்ல உன் மேலதான் சந்தேகம் வரும். எனக்குத் தெரிஞ்ச ஒரு வெளி ஆளை வச்சு நான் அவனை ரெண்டு தட்டு தட்டச் சொல்றேன்" என்றான் முருகன்.

"வேணாம் விடுங்கண்ணே!" என்றான் மணி.

"பாத்தியா, பயந்துட்டியே? ரெண்டு நாள் லீவு போட்டுட்டு நீ ஊருக்குப் போயிட்டு வா. அந்த சமயத்தில மூர்த்தியை 'கவனிக்க' நான் ஏற்பாடு பண்றேன். நீ ஊர்ல இல்லாததால உன் மேல சந்தேகம் வராது" என்றான் முருகன்.

ரவு பத்து மணி ஷிஃப்ட் முடிந்து மூர்த்தி ஸ்கூட்டரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது இருவர் அவனை வழி மறித்துக் கீழே தள்ளி உருட்டுக் கட்டைகளால் அடித்துப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

மூர்த்தி குணமாகி மீண்டும் வேலைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அவனை அடித்தது யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதலில் தொழிலாளர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் மூர்த்திக்கு நினைவு திரும்பியதும், தொழிலாளிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்காது என்று சொல்லி விட்டான். 

மூர்த்தியைத் தாக்க யாருக்கும் எந்த நோக்கமும் இல்லாததால் போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சில மாதங்கள் கழித்து முருகன் மணியிடம் சொன்னான். "தப்புப் பண்ணிட்டோம்னு தோணுதுடா."

"என்னண்ணே சொல்றீங்க?"

"மூர்த்திதான் நாம பேசினதை மானேஜர் கிட்ட சொல்லியிருப்பாருன்னு நெனச்சு, அவரை ஆள் வச்சு அடிச்சோம். ஆனா, இப்ப சங்கருக்கு அசிஸ்டன்ட் மேனேஜரா புரொமோஷன் கொடுத்திருக்காங்க. மூர்த்திதான் சீனியர். அவருக்குத்தான் முதல்ல புரொமோஷன் கொடுத்திருக்கணும். சங்கர் ஆள்காட்டி வேலை செஞ்சதாலதான் மானேஜர் சரவணன் சிபாரிசு பண்ணி, அவனுக்கு புரொமோஷன் வாங்கிக் கொடுத்திருப்பான்னு நினைக்கறேன்."

"இப்ப என்ன செய்யறது?" என்றான் மணி.

"உண்மை என்னன்னு மூர்த்தி கிட்டயே கேட்டுட வேண்டியதுதான்."

ரவு ஷிஃப்டில் மூர்த்தி தனியாக இருந்தபோது, அவனிடம் முருகனும், மணியும் வந்தனர்.

"சார் உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்" என்றான் முருகன்.

"கேளு" என்றான் மூர்த்தி.

"நாலஞ்சு மாசம் முன்னே லஞ்ச் டயத்தில நானும் இவனும், இன்னும் ரெண்டு பேரும் மரத்தடியில உட்கார்ந்து டெம்பரரி ஒர்க்கர்ஸை பர்மனண்ட் ஆக்காம இழுத்தடிக்கிறாருன்னு மானேஜரைக் குறை சொல்லிப் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப நீங்களும், சங்கர் சாரும் மரத்தடிக்குப் பின்னால நின்னு சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்தீங்க. நாங்க பேசினது கண்டிப்பா உங்க காதில விழுந்திருக்கும்."

"அதுக்கென்ன இப்ப?"

"அதை நீங்க மானேஜர் கிட்ட போய் சொன்னீங்களா?"

"சே, சே! நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கறவன் நான். உங்ககிட்டல்லாம் கூட வேலை சம்பந்தமா பேசறதைத் தவிர வேற எதுவும் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியும். நான் ஏன் இப்படிப்பட்ட கேவலான காரியங்கள் எல்லாம் செய்யப் போறேன்? அதுவும், பாவம், பர்மனன்ட் ஆகலேங்கற வருத்தத்தில, இவன் ஏதோ சொல்லி இருப்பான். அதைப் போய், கோள் சொல்ற மாதிரி சொல்றது கொடுமை இல்ல? என்னைப் பத்தி இவ்வளவு மோசமாவா நெனைச்சுட்டீங்க?" என்று பொரிந்து தள்ளினான் மூர்த்தி.

மணிக்கு அழுகை வரும் போல் இருந்தது. முருகன் என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று யோசித்து விட்டு, "சரி. நீங்க சொல்லலேன்னா, சங்கர்தானே சொல்லியிருக்கணும்?" என்றான்.

"அது எனக்குத் தெரியாது" என்றான் மூர்த்தி.

"தெரியாதா, இல்ல சொல்ல மாட்டீங்களா?" என்றான் முருகன் விடாமல்.

மூர்த்தி உடனே பதில் சொல்லவில்லை.

"சொல்லுங்க சார். நான் பாதிக்கப்பட்டிருக்கேன். என்னைக் கெடுத்துட்டு அவர் புரொமோஷன் வாங்கிட்டு சந்தோஷமா இருக்காரு!" என்றான் மணி.

"இங்க பாருங்கப்பா. நீங்க பேசினதை நான் போய் மானேஜர் கிட்ட சொல்லல. அது மாதிரி மானேஜர் கிட்ட சங்கரோ, வேற யாரோ ஏதாவது சொல்லி அது எனக்குத் தெரிஞ்சிருந்தா அதை உங்ககிட்ட சொல்றதும் தப்புதானே? அவ்வளவுதான் சொல்ல முடியும். கவலைப்படாதே மணி. அநேகமா அடுத்த மாசம் உன்னையும் பர்மனண்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன்" என்றான் மூர்த்தி.

ஒரு நல்ல மனிதனை ஆள் வைத்து அடித்து விட்டோமே என்று நினைத்து வருந்திய முருகன், "உங்க உடம்பு எப்படி சார் இருக்கு?" என்றான்.

"காயமெல்லாம் ஆறிடுச்சு. இருந்தாலும் அப்பப்ப அங்கங்க வலிக்குது. யாரு, எதுக்காக என்னை அடிச்சாங்கன்னே தெரியல" என்ற மூர்த்தி "அப்பா!" என்று வலியில் முனகியபடியே உடலை வளைத்துக் கொண்டான்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

பொருள்:  
புறம் கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்வதை விட இறந்து போவது, அற நூல்கள் காட்டும் உயர்ந்த நிலையை அளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்











No comments:

Post a Comment