About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, June 12, 2018

177. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...

ராம்குமாருக்கு நினைவு வந்தபோது தான் மருத்துவமனையில் படுத்திருப்பது தெரிந்தது. உடலில் ஒரு கனமான உணர்வு, அத்துடன் ஒரு ஆழமான வலி.

சற்று நேரம் கழித்து மருத்துவர் வந்து உடலைப் பரிசோதனை செய்து விட்டு, "எப்படி இருக்கீங்க?" என்றார்.

'நான் எப்படி இருக்கிறேன் என்பதை நீங்கள்தானே சொல்ல வேண்டும்!' என்று நினைத்துக் கொண்ட ராம்குமார், "என்ன ஆச்சு எனக்கு?" என்றான்.

"திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க. நௌ யூ ஆர் ஆல்ரைட். நான் மறுபடியும் வந்து பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.

பிறகு அவன் மனைவி கிரிஜாவும், வேறு சில உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்தார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில், அவன் மனைவியும் மற்றவர்களும் சொன்னதிலிருந்தும், சொல்லாமல் விட்டதிலிருந்தும், தன்னுடைய உடல் உணர்வுகளிலிருந்தும் அவன் புரிந்து கொண்டது இது.

மூன்று நாட்களுக்கு முன்பு அவன் திடீரென்று மயங்கி விழுந்து விட்டான். அவனுக்கு வந்திருப்பது ஸ்ட்ரோக். உடலின் வலது பக்கம் முழுவதும் உணர்வு மரத்து விட்டது. இடது பக்கம் முழுவதும் வலி.

"இன்னிக்கு என்ன தேதி?" என்றான் ராம்குமார்.

"ஏப்ரல் இருபது" என்றாள் கிரிஜா.

"மை காட்! 22ஆம் தேதிதானே நாம் ஸ்விட்ஸர்லாந்துக்குக் கிளம்பறதா இருந்தோம்!" என்றான் ராம்குமார்.

கிரிஜாவிடமிருந்து ஒரு விசும்பல் கேட்டது. அதற்குக் காரணம் தன்னுடைய உடல்நிலையா அல்லது ஸ்விட்ஸர்லாந்துப் பயணம் தடைபட்டு விட்டதே என்ற வருத்தமா என்று அவனுக்குப் புரியவில்லை.

ராம்குமார் பொறியியல் படிப்பை முடித்த நேரத்தில் அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் அது.

அவனுடைய அன்றையப் பொருளாதார நிலைக்கு ஏற்ப, குறைந்த முதலீட்டில் ஒரு சிறிய என்ஜினியரிங் தொழிற்சாலையைத் தொடங்கினான். கடினமாக உழைத்து வாடிக்கையாளர்களைப் பிடித்து சில ஆண்டுகளிலேயே தன் நிறுவனத்தைப் பெருமளவுக்கு உயர்த்தி விட்டான்.

அப்போது ஒரு தொழில் ஆலோசகரின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது. தன் நிறுவனத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ச்சி அடையச் செய்ய முடியுமா என்பது குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டான் அவன்.

"ஏன் முடியாது? ஒண்ணுமில்லாதவங்கள்ளாம் வெறும் பேப்பர்களைக் காமிச்சு கம்பெனிகளை புரோமோட் பண்றாங்க. உங்ககிட்ட சாலிடா ஒரு தொழில் இருக்கு. கட்டிடம், இயந்திரங்கள் எல்லாம் இருக்கு. பத்து வருஷத்திலே உங்க தொழில் வேகமா வளர்ந்திருக்கு. விற்பனை, லாபம் எல்லாமே பல மடங்காயிருக்கு. உங்க கம்பெனியை விரிவாக்க ஒரு திட்டம் தயார் பண்ணுங்க. பப்ளிக் இஷ்யூல பங்குகளைப் பொது மக்களுக்கு விற்று உங்க கம்பெனியை ஒரு கார்ப்பரேட் நிறுவனமா மாத்திடலாம்" என்றார் அவர்.

ராம்குமார் உற்சாகத்துடன்,"அப்படியா சொல்றீங்க? எங்கிட்ட பிளான் எல்லாம் இருக்கு. இதுக்கு எவ்வளவு டைம் ஆகும்?" என்றான்.

"ரெண்டு வருஷம்!"

"அவ்வளவு டைம் ஆகுமா?"

"பப்ளிக் இஷ்யூவுக்கு உடனே ஏற்பாடு பண்ணிடலாம். ரெண்டு வருஷம்னு நான் சொன்னது சில அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் எல்லாம் பண்றதுக்கு!"

"என்ன அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்?"

"நீங்க பத்து லட்ச ரூபாய் முதலீடு செஞ்சிருக்கீங்க. இப்ப உங்க நிறுவனத்தோட மதிப்பு ஒரு கோடி ரூபா இல்லியா?"

"ஆமாம்."

"முதல்ல, இந்த மதிப்பை மூணு கோடி ரூபாய்னு ஆக்கணும்."

"ரெண்டு வருஷத்தில அப்படிச் செய்ய முடியாதே!"

"நான் சொல்றது புக் அட்ஜஸ்ட்மெண்ட்ஸ்! ரெண்டு வருஷத்திலே நீங்க புதுசா கட்டிடங்கள், இயந்திரங்கள் இதிலெல்லாம் முதலீடு பண்ணின மாதிரி காட்டி உங்க நிறுவனத்தோட மதிப்பை அதிகரிக்கணும்."

"அது எப்படி முடியும்? முதலீடு பண்ணப் பணம் எப்படி வந்ததுன்னு காட்ட வேண்டாமா?"

"அதைப் பத்தியெல்லாம் நீங்க ஏன் கவலைப்படறீங்க? அதுக்கெல்லாம் நிறைய வழி இருக்கு! இப்ப உங்களுக்குக் கடன் எதுவும் இல்லை. அதனால கொஞ்சம் கடன் வாங்கின மாதிரியும், கொஞ்சம் முதலீடு உங்ககிட்டேருந்து வந்த மாதிரியும் காமிக்கலாம். 

"தேவைப்பட்டா உங்க சொத்துக்கள் மேல பாங்க்கிலே கடன் வாங்கிட்டு அதைத் தொழில்ல முதலீடு செஞ்ச மாதிரியும் காட்டிக்கலாம். அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம் உங்க லாபத்தை அதிகரிச்சுக் காட்டி அதை நீங்க முதலீடு பண்ணின மாதிரி காமிக்கலாம். 

"கம்பெனியில 'புதுசா சேர்ந்த' சொத்துக்கள் மேல டிப்ரீஸியேஷன் நிறைய வரும். அதனால அதிக வருமானம் காட்டினாலும் கூடுதல் வரி கட்ட வேண்டி இருக்காது. இதையெல்லாம் எப்படிப் பண்றதுங்கறதை நான் பாத்துக்கறேன். எனக்குக் கொடுக்கற கன்சல்டேஷன் ஃபீஸ் மட்டும்தான் உங்களுக்குக் கூடுதல் செலவு!" என்று சிரித்தார் ஆலோசகர்.

ஆலோசகர் சொன்னபடியே, இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தின் சொத்து மதிப்பை 3 கோடியாக 'உயர்த்திய' பிறகு, பங்கு விநியோகத்துக்குப் போனார்கள்.

ராம்குமாரின் விரிவாக்கத் திட்ட மதிப்பை 20 கோடியிலிருந்து 25 கோடி என்று உயர்த்தினார் ஆலோசகர். உயர்த்திக் காட்டப்படும் ஐந்து கோடியில் மற்றவர்களுக்கு கமிஷன் எல்லாம் கொடுத்தது போக 4 கோடி ரூபாய் ராம்குமாருக்குப் பல்வேறு வடிவங்களில் வந்து சேரும் என்று உறுதி கூறினார்.

"இதெல்லாம் தப்பு இல்லையா? ஷேர் வாங்கறவங்களை ஏமாத்தறது இல்லியா?" என்றான் ராம்குமார்.

"ஷேர்களில் முதலீடு பண்றவங்கள்லாம் பெரிய லாபம் சம்பாதிக்கணும்கற நோக்கத்திலதான் முதலீடு பண்றாங்க. ஷேர்கள்ள முதலீடு செய்யும்போது லாபமும் வரலாம், நஷ்டமும் வரலாம்னு தெரிஞ்சுதானே முதலீடு பண்றாங்க? அதனால இப்படியெல்லாம் பண்றதுல ஒண்ணும் தப்பு இல்ல. சொல்லப் போனா, முதலீடு பண்றவங்கள்ள ரொம்பப் பேருக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும். தெரிஞ்சுதான், எப்படியும் தங்களுக்கு லாபம் வரும்னு எதிர்பார்த்து முதலீடு பண்றங்க!" என்றார் ஆலோசகர்.

ராம்குமாருக்கு மனம் சமாதானமாகவில்லை. ஏற்கெனவே சொத்து மதிப்பை இரண்டு கோடி ரூபாய் அதிகமாகக் காட்டியாகி விட்டது. மறுபடியும் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பை உயர்த்துகிறோமே என்ற உறுத்தல் இருந்தது. ஆயினும் முயற்சியில் இறங்கிய பின் இது போன்ற தயக்கங்கள் கூடாது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

பப்ளிக் இஷ்யூ பெரும் வெற்றி அடைந்து பங்குகள் விநியோகிக்கப்பட்டு ராம்குமாரின் நிறுவனம் லட்சக்கணக்கான பங்குதாரர்களைக் கொண்ட கார்ப்பரேட் நிறுவனமாகியது.

நிறுவனம் பெரிதாகி விட்டதால், ஆலோசகரின் யோசனைப்படி, நிறுவனத்தை நிர்வகிக்க நிர்வாக இயக்குனர் ஒருவரை நியமித்து விட்டு, தலைவர் என்ற பதவியை ஏற்றுக்கொண்டு அன்றாடப் பணிகளிலிருந்து ஒய்வு பெற்று விட்டான் ராம்குமார்.

முதல் முறையாக, பணம், நேரம் இரண்டையுமே எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம் என்ற வசதி ராம்குமாருக்கு ஏற்பட்டது. மனைவி, மகன், மகள் அனைவருடனும் ஒரு மாதம் ஸ்விட்ஸர்லாந்து சென்று வரத் திட்டமிட்டு, பயணம் போக வேண்டிய சில நாட்களுக்கு முன்தான் அவனுக்கு இந்த ஸ்ட்ரோக் வந்து விட்டது.

றைக்கு வெளியே, அவன் மனைவி கிரிஜா டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தது ராம்குமாரின் காதில் விழுந்தது.

"எப்ப டாக்டர் அவருக்கு முழுசா குணமாகும்?"

"சொல்ல முடியாது மேடம். அவரோட உடம்பில ஒரு பக்கம் செயலிழந்து போயிருக்கு. அது சரியாக எவ்வளவு நாள் ஆகும்னு சொல்ல முடியாது. மாசக்கணக்கில ஆகலாம். வருஷக்கணக்கிலயும் ஆகலாம். அதை விட சீரியஸான விஷயம் அவர் உடம்பில இன்னொரு பக்கத்தில இருக்கற வலி. அந்த வலியோடதான் அவர் வாழ்ந்தாகணும். அவரோட வலி கொஞ்சம் குறைஞ்சாலே நீங்க சந்தோஷப்படணும்" என்றார் டாக்டர்.

 ராம்குமாருக்குத் தன் உடல் வலி பன்மடங்காக அதிகரித்து விட்டது போல் இருந்தது.

இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் 
மாண்டற் கரிதாம் பயன்.

பொருள்:  
பிறர் பொருளை அபகரிப்பதனால் கிடைக்கும் செல்வம் தனக்கு வேண்டாம் என்று கருத வேண்டும். அப்படிப் பெற்ற செல்வத்தின் பயனை அனுபவிக்கும் நேரத்தில், அது நன்மை பயப்பதாக இருக்காது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

                                                                         குறள் 178 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்























No comments:

Post a Comment