சதர்ன் என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகளின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"போன மாசம் அதிகமான தொகைக்கு விற்பனை செய்தவரின் பெயரை இப்போது அறிவிக்கப் போகிறேன்" என்ற விற்பனை மேலாளர், சில வினாடிகள் சஸ்பென்ஸ் கொடுத்து விட்டு, "ஆர். சேகர்" என்றார்.
"இருக்க முடியாது சார். 31ஆம் தேதி நான் அக்கவுண்ட்ஸில கேட்டப்ப நான்தான் அதிகமா விற்பனை பண்ணி இருப்பதாகச் சொன்னாங்களே!" என்றான் மூர்த்தி.
"சேகர் சாயந்திரம் கொஞ்சம் லேட்டா அவரோட சேல்ஸ் இன்வாய்ஸ்களைக் கொண்டு கொடுத்திருக்கார். அதை என்ட்டர் பண்ணினப்பறம் அவர் முதல் இடத்துக்குப் போயிட்டார்" என்றார் விற்பனை மேலாளர்
கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுப்பான குரலில் பேசிக் கொண்டனர்.
"கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்!" என்றார் விற்பனை மேலாளர்.
கைதட்டல் மெலிதாக எழுந்து, சில வினாடிகளிலேயே அடங்கியது.
கூட்டம் முடிந்ததும், விற்பனைப் பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து, தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"இந்த சேகர் எப்பவுமே இது மாதிரி ஏதாவது தில்லுமுல்லு பண்ணிக்கிட்டிருக்கான். அவனை யாராவது மிஞ்சிட்டா, அவனுக்குப் பொறுக்காது. போன மாசம் சந்துரு டாப் பர்ஃபாமரா வந்தபோது சேகரோட மூஞ்சியைப் பாக்கணுமே!"
"ஆனா, இன்னிக்கு நாம எல்லோருமே சேகர் மேலே வெறுப்பா இருந்தப்ப, மீட்டிங் முடிஞ்சப்புறம் சேகரைக் கை கொடுத்துப் பாராட்டினது சந்துரு மட்டும்தான்!"
"சந்துரு ஒரு ஜெம் ஆச்சே! மத்தவங்களை என்கரேஜ் பண்ணி, ஹெல்ப் பண்றவன் ஆச்சே அவன்! சந்துருவும் சேகரும் ரெண்டு துருவங்கள்!"
இரண்டு ஆண்டுகள் கழித்து, விற்பனை மேலாளர் பதவி காலியானபோது, சேகர் அந்தப் பதவிக்கு உயர்த்தப்பட்டான்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, விற்பனை மேலாளர் பதவி காலியானபோது, சேகர் அந்தப் பதவிக்கு உயர்த்தப்பட்டான்.
"என்னப்பா இது அக்கிரமமா இருக்கு! நாம இவ்வளவு பேர் இருக்கோம். சேகருக்கு சேல்ஸ் மானேஜர் புரொமோஷன் கொடுத்திருக்காங்களே! அவன விட நல்லா பர்ஃபாம் பண்ணினவங்க நிறைய பேர் இருக்காங்க. சீனியாரிட்டியை வச்சுப் பாத்தாக் கூட, அவனை விட சீனியர்கள் இருக்காங்களே! சந்துரு கூட அவனுக்கு சீனியர்தான்!"
"யாருக்கு புரொமோஷன் கொடுக்கறதுங்கறது கம்பெனியோட இஷ்டம். ஒருவேளை சேகர் ஜி எம்முக்கு வேண்டியவனா இருக்கலாம்!"
"சந்துருவுக்குக் கொடுத்திருந்தா, எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்போம். அவனுக்குக் கீழே வேலை செய்யறதில, எல்லோருக்குமே சந்தோஷமா இருந்திருக்கும்! மத்தவங்களோட முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாத சேகர் மாதிரி ஆளுங்ககிட்ட எப்படி ஒர்க் பண்றது?"
சில வருடங்களுக்குப் பிறகு, சேகருக்கு இன்னொரு பதவி உயர்வு கிடைத்து, பொது மேலாளர் ஆகி விட்டான். சந்துருவால் சீனியர் சேல்ஸ் எக்சிக்யூட்டிவ் என்ற நிலைக்கு மேல் உயர முடியவில்லை. நிறுவனத்தின் நியாயமற்ற போக்கு பிடிக்காமல், சில விற்பனைப் பிரதிநிதிகள் வேறு நிறுவனங்களுக்கு மாறி விட்டார்கள்.
காலம் ஓடியது.
காலம் ஓடியது.
சந்துரு ஒய்வு பெறும் நாள் வந்தது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விடை கொடுக்கும் விழா'வில் நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் இருந்த அத்தனை ஊழியர்களும் கலந்து கொண்டனர். சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒய்வு பெற்று விட்டான்.
விழா முடிந்ததும், சந்துருவின் நண்பன் கார்த்திக் "இன்னிக்கு நானே உன்னை வீட்டில கொண்டு விட்டுடறேன்" என்றான்.
காரில் போகும்போது, கார்த்திக், "பொதுவா நான் கார் ஓட்டும்போது பேசறதில்ல. ஆனா என் மனசில தோணின ஒரு எண்ணத்தை உங்கிட்ட உடனே சொல்லணும் போல இருக்கு!" என்றான்.
"சொல்லுடா!" என்றான் சந்துரு.
"30 வருஷமா நான் உன்னோட இந்த கம்பெனியில வேலை செய்யறேன். உன்னோட நல்ல மனசைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். அது மாதிரி சேகரோட பொறாமை, அல்பத்தனம் இதையெல்லாம் பற்றியும் எல்லாருக்கும் தெரியும். ஆனா சேகர் மேல போயிட்டான். நீ அதிக உயரத்துக்குப் போக முடியல. இதைப் பத்தி நம்ப கம்பெனியில எல்லாருக்குமே வருத்தம் உண்டு. ஏன் இப்படி நடக்கணும்னு இத்தனை வருஷமா யோசிச்சிருக்கேன். இன்னிக்குத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது" என்றான் கார்த்திக்.
"என்ன புரிஞ்சுது?"
"உன் மேல இத்தனை பேருக்கும் இருக்கற அன்பையும், மதிப்பையும், நல்லெண்ணத்தையும் இன்னிக்கு விழாவிலே பார்த்தேன். ரெண்டு மாசம் முன்னாடி, சேகருக்கு இதே மாதிரி ஒரு விழா நடந்தபோது, பத்து பேர்தான் வந்திருந்தாங்க. எல்லாருமே ஒப்புக்கு வந்து, உக்காந்துட்டுப் போனாங்க. ஆனா, இன்னிக்கு உனக்காக அத்தனை பேரும் எப்படி ஃபீல் பண்ணினாங்கன்னு பாத்தப்பதான் எனக்குப் புரிஞ்சது. வாழ்க்கையில உயர்வதுங்கறது பெரிய பதவிக்கு வரதோ, பணம் சம்பாதிக்கறதோ மட்டும்தானா? மத்தவங்களோட அன்பு, நல்லெண்ணம் இதையெல்லாம் சம்பாதிச்சு வச்சிருக்கறது பெரிய விஷயம் இல்லையா? இன் ஃபேக்ட், நம்மைச் சுத்தி இருக்கறவங்க மனசில ஒரு உயர்வான இடத்தைப் பிடிக்கிறதை விட உயர்வு வேற என்ன இருக்க முடியும்?"
"நீ சொல்றது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியாது. ஆனா உங்க எல்லாரோட அன்பு எனக்குக் கிடைச்சது வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச பெரிய ரிவார்டுன்னுதான் நான் எப்பவுமே நினைச்சிருக்கேன்" என்றான் சந்துரு.
அதிகாரம் 17
அழுக்காறாமை
குறள் 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொருள்:
பொறாமை கொண்டவர்கள் உயர்ந்த நிலை அடைவதில்லை. பொறாமை குணம் இல்லாதவர்கள் உயர்வை அடையாமல் போவதும் இல்லை.
புரிந்து கொள்ள சற்றுக் கடினமான குறள்களில் இதுவும் ஒன்று. எளிமையான கதை நடையில் அழுத்தமாக புரிய வைத்தீர்கள்.
ReplyDeleteவாக்கிய அமைப்பில் சின்ன திருத்தம் :
"ரெண்டு மாசம் முன்னாடி கார்த்திக்குக்கு இதே மாதிரி ஒரு விழா நடந்தபோது பத்து பேர்தான் வந்திருந்தாங்க."
- இந்த இடம் "சேகருக்கு" என வந்திருக்கவேண்டும்.
உங்கள் கருத்துக்கும், தவறைச் சுட்டிக் காட்டியதற்கும் நன்றி. தவறைத் திருத்தி விட்டேன். உங்களைப் போன்ற கூர்மையான வாசகர்கள் என் எழுத்துக்கு வளம் (பலம்) சேர்க்கிறார்கள். உங்கள் கருத்தை ஏழு மாதம் கழித்துத்தான் பார்த்தேன். இந்த தாமதத்தால் இழப்பு எனக்குத்தான். மீண்டும் என் மனமார்ந்த நன்றி. என் பல கதைகளைப் பற்றி நீங்கள் கருத்துக் கூறி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வாருங்கள். நன்றி, நல்வாழ்த்துக்கள்.
Delete