About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, June 24, 2018

182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்

பிரியா வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தபோது, அவள் அம்மா வள்ளியைப் பார்க்க சாரதா வந்தாள்.

வழக்கம் போல், இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவற்றில் சில பிரியாவின் காதில் விழுந்தன. 

அவள் வீட்டுப்பாடத்தில் கவனமாக இருந்தாலும், காதில் விழுந்த உரையாடல்களில் சில அவள் கவனத்தை ஈர்த்தன.

முதலில் தங்கள் இருவரின் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள், பிறகு அக்கம்பக்கத்தில் இருந்த வேறு சிலர் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

"இந்தத் தங்கம் இருக்காளே, அவளை மாதிரி ஒரு பொம்பளையை நான் பார்த்ததில்லை" என்றாள் பிரியாவின் அம்மா வள்ளி.

"எனக்கு அவங்களை அவ்வளவாப் பழக்கம் கிடையாது. ஆனா, கொஞ்சம் திமிர் பிடிச்சவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் சாரதா.

"திமிர்னா சாதாரணத் திமிரா? அடேங்கப்பா! இத்தனைக்கும், அவ ஒரு சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவதான். அவ அப்பா இப்பவும் ஒரு கடையில கணக்கு எழுதித்தான் பொழப்பு நடத்திக்கிட்டிருக்காரு. அவ புருஷனும் சாதாரணமா இருந்தவர்தான். திடீர்னு ஏதோ யோகம் அடிச்சு, அவரு வியாபாரம் பெரிசா வளந்துடுச்சு. இவளைப் புடிக்கவே முடியல. ஏதோ பிறவிப் பணக்காரி மாதிரி அவ போடற ஆட்டம் இருக்கே..." என்றாள் வள்ளி.

"உன் வீட்டுக்கு அப்பப்ப வருவாங்க போலருக்கே!" என்றாள் சாரதா.

"ஆமாம் வருவா. தன் பெருமையை யார் கிட்டயாவது அளக்கணுமே அவளுக்கு!"

"அப்ப, என்னை மாதிரி அவங்களும் உனக்கு ஒரு சிநேகிதின்னு சொல்லு" என்றாள் சாரதா.

"அப்படி ஒண்ணும் இல்ல. பிரியாவோட அப்பா அவ புருஷனுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு..."

தன் பெயர் அடிபட்டதும், பிரியா பாடத்திலிருந்து கவனத்தைத் திருப்பி அம்மாவின் பேச்சை கவனித்தாள். அப்பாவைப் பற்றிக் குறிப்பிடத்தான் அம்மா தன் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறாள் என்று தெரிந்தது. தொடர்ந்து வீட்டுப்பாடம், அம்மாவின் பேச்சு என்று மாறி மாறி அவள் கவனம் சென்று கொண்டிருந்தது.

"...தங்கத்தோட புருஷனுக்கு இவர் கிட்ட நிறைய நன்றி உண்டு. அதனாலதான் தங்கமும் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் என்னை மதிச்சுப் பேசிக்கிட்டிருக்கா! அவளுக்கு ஜால்ரா போடறத்துக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு. எப்பவும் அந்தக் கூட்டத்திலதான் இருப்பா. என்னோட பழகறதெல்லாம் அவ புருஷனுக்காகத்தான்."

"ஆமாம், அவங்களுக்கு மாமனார் மாமியார் இருக்காங்க போலருக்கே!"

"அந்தக் கொடுமையை ஏன் கேக்கற? அவங்களைப் பெட்டிப் பாம்பா அடக்கி வச்சிருக்கா. அவங்க ரெண்டு பேரும் அவ போடற சோத்தைத் தின்னுட்டு கப்சிப்னு வீட்டோட அடங்கிக் கிடக்காங்க."

பிரியாவுக்கு இந்தப் பேச்சு தொந்தரவாக இருந்தது. ஆனால் அது காதில் விழாமல் போய் உட்கார அவர்கள் வீட்டில் தனியான இடம் இல்லை. பாடத்திலிருந்து அவ்வப்போது விலகியிருப்பது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

சற்று நேரம் பேசி விட்டு சாரதா போய் விட்டாள்.

சாரதா போய் சற்று நேரம் கழித்து, வாசல் கதவு தட்டப்பட்டது. பிரியாதான் போய்க் கதவைத் திறந்தாள்.

தங்கம் ஆன்ட்டி!

'இவர்களைப் பற்றித்தானே, அம்மா இத்தனை நேரம் சாரதா ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்!'

"வாங்க ஆன்ட்டி" என்றாள் பிரியா. இதற்குள் வள்ளி உள்ளிருந்து வந்து விட்டாள்.

"அடேடே, தங்கமா! வா வா, இதென்ன அத்தி பூத்த மாதிரி!" என்று அவளை  வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் வள்ளி.

வீட்டுப்பாடத்தைத் தொடர முடியாமல், மறுபடியும் வள்ளி-தங்கம் உரையாடல் பிரியாவின் கவனத்தைத் திசை திருப்பியது.

தங்கம் மெல்லிய குரலில் பேசியதால், அவள் பேசியதில் பெரும் பகுதி பிரியாவுக்குக் கேட்கவில்லை. வள்ளியை அடிக்கொரு முறை 'அக்கா அக்கா' என்று அவள் அழைத்தது மட்டும் கேட்டது.

வள்ளி பேசியது மட்டும் தெளிவாகக் கேட்டது.

"...இப்பதான் சாரதாகிட்ட உன்னைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். தங்கம் மாதிரி அடக்கமான பெண்ணைப் பார்க்க முடியுமான்னு. உன்னைக் கட்டிக்கிட்ட அதிர்ஷ்டம், உன் புருஷன் வியாபாரம் ஓகோன்னு வளர்ந்து ஊர்லயே பெரிய ஆளாயிட்டாரு. ஆனாலும், புருஷனும் பொண்டாட்டியும் ஊர்ல எல்லாரையும் மதிச்சு, எப்படி அடக்கமா, அன்பா, பண்பா நடந்துக்கறாங்க பாருன்னு சொல்லிக் கிட்டிருந்தேன்."

"எப்பவும் இருக்கற மாதிரி இருக்கோம் அக்கா. இதில என்ன இருக்கு?" என்றாள் தங்கம், மெல்லிய குரலில். அவள் பேசியதில் சில வார்த்தைகளை பிரியா ஊகிக்க வேண்டியிருந்தது.

"அதோட, மாமனார் மாமியாரை வீட்டோட வச்சு, அலுங்காம நலுங்காம கவனிச்சுக்கிட்டிருக்கே! இந்தக் காலத்தில, அரைகுறையாப் படிச்ச பெண்களே ஆட்டம் போடறாங்க. நீ காலேஜில படிச்சும் கூட, கிராமத்துப் பொண்ணு மாதிரி பதவிசா இருக்கே!"

சற்று நேரம் பேசி விட்டுத் தங்கம் விடைபெற்றாள்.

தங்கம் சென்றதும், பிரியா வள்ளியிடம், "ஏம்மா! இப்பதான் சாரதா ஆன்ட்டிகிட்ட இவங்களைப் பத்தி குறை சொல்லிக்கிட்டிருந்தே. அவங்க நேர்ல வந்ததும், இப்படிப் புகழற!" என்றாள்.

"பின்னே? ஒருத்தர் மூஞ்சிக்கு நேரா, அவங்களைப் பத்தித் தப்பா சொல்ல முடியுமா? உயர்த்திப் பேசறதுதான் முறை!" என்றாள் வள்ளி.

"அப்ப எதுக்கு, அவங்க இல்லாதபோது அவங்களைப் பத்தி தப்பாப் பேசணும்?அப்படிப் பேசாம இருந்திருக்கலாமே! இத்தனைக்கும், அவங்களோட உனக்கு சண்டை எதுவும் இல்லியே! நல்லாத்தானே பழகிக்கிட்டிருக்கே! அவங்களைப் பத்தி, மத்தவங்க கிட்ட இப்படியெல்லாம் பேசறது தப்பு இல்ல?" என்றாள் பிரியா.

"போடி! இதெல்லாம் உனக்குப் புரியாது. போய் உன் ஹோம்வொர்க்கை முடிக்கிற வழியைப் பாரு!" என்றாள் வள்ளி.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை.

பொருள்:  
அறம் என்று எதுவும் இல்லை என்று கூறி, அறத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்வதை விட, ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசி, அவர் முகத்துக்கு நேரே பொய்யாகச் சிரித்துப் பேசுவது கொடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


                                                                         குறள் 183
            குறள் 181
பொருட்பால்                                                                                         காமத்துப்பால்
































1 comment: