About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, June 28, 2018

186. செண்பகமே, செண்பகமே!

செண்பகமும், ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது நடக்கும். 

கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர்.

பேச்சு, பெரும்பாலும், அவர்கள் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பற்றித்தான் இருக்கும்.

மற்றவர்களின் பிரச்னைகள், அவர்கள் செய்த தவறுகள், முட்டாள்தனமான செயல்கள், அவர்கள் பட்ட அவமானங்கள், அவர்களது நியாயமற்ற செயல்பாடுகள் ஆகியவை பற்றித்தான் இருக்கும்.

சில சமயம், ஒருவருக்குத் தெரிந்த விஷயத்தை இன்னொருவரிடம் சொல்வார்கள். சில சமயம், இருவருக்குமே தெரிந்த விஷயத்தை அலசுவார்கள்.

தினசரி தொலைபேசி உரையாடல் தவிர, வாரம் ஒருமுறை கோவிலில் சந்தித்துக் கொள்வார்கள். கோவிலில் தரிசனம் முடிந்ததும், ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒரு மணி நேரமாவது பேசுவார்கள். 

அந்த வாரம் தொலைபேசியில் பேசிக்கொண்ட விஷயங்களை அசை போடுவது தவிர, புதிய நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அலசுவார்கள்.

மற்றவர்களின் குறைகளைப் பற்றிப் பேசி மகிழ்வதே இவர்கள் நட்பைப் பெரும் அளவில் வளப்படுத்தி வந்தது என்று சொல்லலாம்.

"அப்புறம்?" என்றாள் ஜகது.

"புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய கதைதான்" என்று அலுத்துக் கொண்டாள் செண்பகம்.

"ஜானகி வாசல்ல வந்த புடவைக்காரர்கிட்ட ஒரு மட்டமான புடவையைப் பட்டுப் புடவைன்னு நெனச்சு, ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கி ஏமாந்தாளே, அது அவ புருஷனுக்குத் தெரியுமா?" என்று எடுத்துக் கொடுத்தாள் ஜகது.

"ஆம்பிளைங்களுக்கு இதெல்லாம் என்ன தெரியும்? ஏதோ பொண்டாட்டி சீப்பா புடவை வாங்கிட்டான்னு நெனச்சுக்கிட்டிருப்பாரு. நாளைக்கு வேற ஏதாவது பட்டுப்புடவையைக் காட்டி, இதுதான் நான் குறைஞ்ச விலைக்கு வாங்கினதுன்னு சொன்னா கூட, அவரால கண்டு பிடிக்க முடியாது."

"நல்ல வேளை, அவ வீட்டில மாமியார், நாத்தனார் யாரும் இல்ல. இருந்திருந்தா, அவ சாயம் வெளுத்திருக்கும்!"

"சாயம் வெளுத்தித்திருக்கும்னு நீ சொன்னதும், ஞாபகம் வருது. சுகுணாவோட புருஷன் ரெண்டு மாசமா வேலைக்குப் போகாம, வீட்டிலே உக்காந்துக்கிட்டிருக்காரு இல்ல?"

"ஆமாம். அவ கூட, அவரு ஏதோ பரீட்சை எழுதறதுக்காக, லீவ் போட்டுட்டுப் படிச்சுக்கிட்டிருக்காருன்னு சொன்னாளே!"

"அதெல்லாம் பொய்யின்னு இப்ப தெரிஞ்சு போச்சு. அவரு ஏதோ தில்லுமுல்லு பண்ணிட்டார்னு, அவர் கம்பெனியில அவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாம். திரும்ப எடுத்துப்பாங்களான்னு தெரியல. இதை மறைக்கத்தான், படிக்கிறாரு, பரீட்சை எழுதப் போறாருன்னு கதை விட்டிருக்கா அவ!"

"எப்படிப் புளுகியிருக்கா பாரேன்! நமக்கெல்லாம் இப்படிப் பொய் சொல்ல வருமா?"

இந்த ரீதியில், உரையாடல், இன்னும் சில நிமிடங்கள், இன்னும் சில பெண்களைப் பற்றித் தொடர்ந்தது.

செண்பகத்துக்கு நீண்ட நேரம் ஜகதுவின் கைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. 

'வாடிக்கையாளர் வேறொருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற அறிவிப்புதான் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஒருவேளை, ஜகதுவின் கைபேசியில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்று நினைத்து, செண்பகம் ஜகதுவின் லேண்ட்லைனுக்கு ஃபோன் செய்தாள்.

ஜகதுவின் பெண்தான் ஃபோனை எடுத்தாள். "அம்மா செல்ஃபோன்ல பேசிக்கிட்டிருக்காங்களே. கூப்பிடறேன் இருங்க" என்று சொல்லி விட்டு, ரிசீவரை எடுத்து வைத்து விட்டு, "அம்மா, ஃபோன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

தொலைபேசிக்குச் சற்றுத் தொலைவிலிருந்து ஜகது செல்ஃபோனில் யாரிடமோ பேசுவது செண்பகத்துக்குக் கேட்டது. 

முதலில் அசிரத்தையாகக் காத்திருந்த செண்பகம், ஜகது தன் பெயரைக் குறிப்பிட்டது காதில் விழுந்ததும், கூர்ந்து கவனித்தாள். ஜகது பேசிக் கொண்டே தொலைபேசியை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்ததால், அவள் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் கேட்டது.

"....ஆமாம். நம்ம செண்பகம்தான்! நம்ப முடியல இல்ல? அதான், அவ புருஷனுக்குத் தெரியாம, பணத்தை அங்கே இங்கேன்னு நிறைய ஒளிச்சு வச்சிருக்கா. பழைய 500, 1000 ரூபா நோட்டு செல்லாம போனதும், ஒவ்வொரு டப்பாவாத் தேடி, ஒளிச்சு வச்சிருந்த பணம் இருபதாயிரம் ரூபாயை மாத்திட்டா...அவ புருஷன்கிட்ட சொல்லிட்டுத்தான். அத்தனை பணத்தை அக்கவுன்ட்லதான போடணும்! அவருக்குத் தெரியாம போகுமா?...பின்ன? திட்டாம இருப்பாரா? 'நான் ஆயிரம், ரெண்டாயிரம் ரூபா இல்லாம, எத்தனையோ தடவை கஷ்டப்பட்டிருக்கேன். நீ இருபதாயிரம் ரூபாயைப் பதுக்கி வச்சுக்கிட்டு, எனக்கு நெருக்கடியான நேரங்கள்ள கூட உதவி செய்யாம இருந்திருக்கே!'ன்னு சொல்லி, காச்சு மூச்சுன்னு கத்தி இருக்காரு. எங்கிட்ட சொல்லி அழுதா...வேடிக்கை என்னன்னா, அவளுக்குத் தெரியாம, ஐயாயிரம் ரூபாய்க்கு பழைய நோட்டு வேற ஒரு டப்பால இருந்திருக்கு! அது காலி டப்பா, ரெண்டு நாள் முன்னாலதான் எதேச்சையாத் திறந்து பாத்திருக்கா. அவளுக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு...இப்ப ஒண்ணுமே பண்ண முடியாதே!...புருஷன்கிட்ட எப்படிச் சொல்லுவா? சொன்னா, கிழி கிழின்னு கிழிச்சுட மாட்டாரு?...இப்படியா ஒத்தி இருப்பா?...நாமெல்லாம் செண்பகம் ரொம்ப கெட்டிக்காரின்னு நெனச்சுக்கிட்டிருக்கோம்...இப்படி அசட்டையா இருந்திருக்கா! என்ன பண்றது?...சரி. லேண்ட்லைன்ல யாரோ கூப்பிடறாங்க. நான் அப்புறம் பேசறேன். ...ஹலோ. யாரு?"

செண்பகம் எதுவும் பேசாமல், இணைப்பைத் துண்டித்தாள்.

இல்லறவியல் 
             அதிகாரம் 19         
புறங்கூறாமை  (ஒருவர் கூற்றையோ, குற்றத்தையோ  மற்றவர்களிடம் கூறாதிருத்தல்)

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள்:  
மற்றவர்கள் மீது புறம் கூறுபவனின் குற்றங்களை மற்றவர்கள் அவன் முதுகுக்குப் பின்னால் பேசும் நிலை ஏற்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














No comments:

Post a Comment