"அலமாரி நிரம்பி இருக்கே! புதுசா எதுவும் வைக்க முடியாது போலருக்கே!" என்றான்.
"எப்படிங்க இடம் இருக்கும்? ஒண்ணு, அடகு வச்சவங்க கடனை அடைச்சுட்டுப் பொருட்களை மீட்டுக்கிட்டுப் போகணும், இல்லை, நாமாவது மீட்டுக்கிட்டுப் போகாத பொருட்களை ஏலம் போடணும். இங்கதான் ரெண்டுமே நடக்கறதில்லியே!" என்றான் கணக்காளன் குமரவேல்.
வஜ்ரவேலு சிரித்தான். "யாரும் கடனை அடைக்காமலா பத்து வருஷமா கடையை நடத்திக்கிட்டிருக்கோம்? எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து, என் குடும்பச் செலவுக்கும் காணற அளவுக்கு வருமானம் வந்துக்கிட்டுத்தானே இருக்கு?"
"என்னங்க நீங்க, ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறீங்க? இந்த அடகுத் தொழிலை நடத்தறவங்க யாருமே உங்களை மாதிரி அடகு வச்ச பொருட்களை ஏலம் போடாம வச்சுக்கிட்டிருக்க மாட்டாங்க!" என்றான் குமரவேல்.
அப்போது ஒரு வாடிக்கையாளர் வரவே, அவரிடம் கவனத்தைச் செலுத்தினான் குமரவேல். பேரேட்டை எடுத்துப் பார்த்து விட்டு, கால்குலேட்டரில் ஏதோ கணக்குப் போட்டு விட்டு, அவர் செலுத்த வேண்டிய தொகையை அவரிடம் சொன்னான். அவர் பணத்தைக் கொடுத்ததும், அதை எண்ணிப் பெட்டியில் வைத்து விட்டு, அலமாரியில் இருந்த ஒரு வெள்ளிக் குத்துவிளக்கை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான்.
அவர் வஜ்ரவேலுவைப் பார்த்துக் கைகூப்பி விட்டுச் சென்றார்.
"புரோநோட்டு காலாவதி ஆகி ஆறு மாசம் ஆச்சு. புதுசா புரோநோட்டு எழுதி வாங்கறதுக்காக, நம்ம ஆறுமுகம் ஆறு மாசமா அவரு பின்னால அலைஞ்சுக்கிட்டிருக்காரு. ஆளையே பிடிக்க முடியல. இப்ப வந்து பணத்தைக் கட்டிட்டு, அடகு வச்ச வெள்ளிக் குத்து விளக்கை வாங்கிக்கிட்டுப் போறாரு. நாம பொருளை ஏலம் போட்டுடுவோமோங்கற பயம் கொஞ்சம் கூட இல்லாம இருந்திருக்காரு!" என்றான் குமரவேல்.
வஜ்ரவேலு சிரித்தான்.
"நீங்க எப்படி இவ்வளவு நம்பிக்கையா இருக்கீங்கன்னு எனக்குப் புரியலீங்க!" என்றான் குமரவேல்.
"புரியறதுக்கு என்ன இருக்கு? நாம வட்டிக்குக் கடன் கொடுக்கற தொழிலை நடத்திக்கிட்டிருக்கோம். நம்மகிட்ட கடன் வாங்கிட்டுப் போறவங்க குறிப்பட்ட காலத்துக்குள்ள கடனைத் திருப்பிக் கொடுக்கலேன்னா, அவங்க அடகு வச்ச பொருளை நாம ஏலம் விட்டு, நமக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக்கலாம். அதுக்கு சட்டப்படி நமக்கு உரிமை இருக்கு. ஆனா நான் அப்படிச் செய்ய விரும்பல. நம்மகிட்ட அடகு வச்சிருந்தாலும், அது, அவங்களோட பொருள்தான். அதை நாம எடுத்து வித்து, நம்ம கடனை வசூலிக்க எனக்கு இஷ்டமில்லை. எப்படியும் பொருளை அடகு வச்சவங்க அதை மீட்கணும்னுதானே நினைப்பாங்க? அதனால கொஞ்ச நாள் ஆனாலும், பணத்தைக் கட்டிப் பொருளை மீட்டுப்பாங்கன்னு நினைச்சு, நாம பொருளை ஏலம் போடாம வச்சிருக்கோம்."
"சில பேரால கடனைத் திருப்பிக் கட்ட முடியாமயே போயிடுமே!"
"அது மாதிரி நடந்திருக்கு. நீங்க வேலைக்கு வந்தப்பறம் அப்படி நடக்காததால, உங்களுக்குத் தெரியல. ரொம்ப நாள் ஆச்சுன்னா, நானே அவங்களைக் கூப்பிட்டு, அவங்க அடகு வச்ச பொருளை அவங்க கிட்ட கொடுத்து, அதை வித்துப் பணத்தைக் கட்டச் சொல்லுவேன். அது மாதிரி சில சமயம் நடந்திருக்கு."
"அப்ப எதுக்கு அடகுப் பொருளை வாங்கணும்? அடகுப் பொருள் இல்லாமயே கடன் கொடுக்கலாமே!"
"கடன் வாங்கறவங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கணுமே, அதுக்குத்தான் அடகுப் பொருள் வாங்கறது."
"அப்ப, ஏலம் போடறதில என்ன தப்பு?"
"சட்டப்படி தப்பு இல்லதான். மத்தவங்க பொருளை நாம ஏலம் போடறதை விட, அவங்களையே வித்துக் கொடுக்கச் சொல்றது நியாயமா இருக்கற மாதிரி எனக்குத் தோணுது."
"ஐயா! உங்களுக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி நான் இந்த ஊர்ல இருக்கற இன்னொரு அடகுக் கடையில வேலை செஞ்சேன். குறிப்பிட்ட காலத்துக்குள்ள கடனைக் கட்டலேன்னா, அவரு நோட்டீஸ் கொடுத்துட்டுப் பொருளை ஏலம் போட்டுடுவாரு. அவருக்கு நிறைய லாபம் வரதை நான் பாத்திருக்கேன். நாமும் லாபத்துக்காகத்தானே தொழில் நடத்தறோம்?"
"அந்தக் கடையை விட்டு ஏன் வந்தீங்க?"
"அதான் சேரும்போதே சொன்னேனே சார்! அங்கே சம்பளம் கொடுக்க ரொம்ப லேட் பண்ணினாங்க. மூணு மாச சம்பளம் பாக்கி. அதனாலதான் அந்த வேலையை விட்டுட்டேன்."
"ஏன் அவங்களால சம்பளம் சரியாக் கொடுக்க முடியல?"
"என்னவோ தெரியலீங்க. லாபம் நிறைய வந்தா கூட, அங்கே எப்பவுமே பணத் தட்டுப்பாடுதான். புதுசாக் கடன் கேக்கறவங்களுக்குக் கொடுக்கக் கூடப் பல சமயம் பணம் இருக்காது. அடகு வச்ச பொருளை ஏலம் போட்டதை எதிர்த்து சில பேரு கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க. அந்தக் கேஸ்களை வாதாட வக்கீல்களுக்கு வேற அப்பப்ப பணம் கொடுக்கணும்."
"அவங்க நிறைய லாபம் சம்பாதிக்கறதா சொல்றீங்க. ஆனா, அங்கே பணத் தட்டுப்பாடு இருக்கு. நான் அதிகம் லாபம் சம்பாதிக்காம இருக்கலாம். ஆனா நான் போட்ட முதல் அழியாம அப்படியேதான் இருக்கு. எப்பவுமே கடன் கேட்டு வரவங்களுக்குக் கொடுக்கப் பணம் இல்லாம போனதில்லை. ஓரளவுக்கு வசதியா வாழற அளவுக்கு எனக்கு இந்தத் தொழில்லேருந்து வருமானம் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. மத்தவங்களுக்குக் கடன் கொடுத்து, அவங்ககிட்டேருந்து வர வட்டிதான் என் வருமானம். ஆனா, அவங்க அடகு வச்ச பொருளை என் பொருளா நினைக்காம அவங்களோட பொருளாகவே நினைச்சுக்கிட்டுத்தான் இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு வரேன்."
அப்போது இன்னொரு வாடிக்கையாளர் அங்கே வந்தார். "ரெண்டு மாசம் முன்னால என் பெண்டாட்டியோட சங்கிலியை அடகு வச்சுப் பணம் வாங்கிக்கிட்டுப் போனேன்" என்றார்.
"பணத்தைக் கட்டி அதை மீட்கப் போறீங்களா?" என்றான் குமரவேல்.
"இல்லை" என்று சற்றுத் தயங்கியவர், வஜ்ரவேலுவைப் பார்த்து, "தப்பா நினைச்சுக்காதீங்க. நாளைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போகணும். என் பெண்டாட்டிக்குக் கழுத்துல போட்டுக்க வேற நகை இல்ல. அந்த சங்கிலியைக் கொடுத்தீங்கன்னா, நாளன்னைக்குத் திரும்பக் கொண்டு வந்து வச்சுடறேன்" என்றார்.
"ஏங்க, இது என்ன அடகுக்கடையா, பாங்க் லாக்கரா?" என்றான் குமரவேல்.
"சங்கிலியைக் கொடுத்தா, அதுக்கு பதிலா வேற பொருளை அடகு வைக்க முடியுமா?" என்றான் வஜ்ரவேலு.
"வேற எதுவும் இல்லியே! டிவி பொட்டியை வேணும்னா வச்சுட்டுப் போறேன்."
"பரவாயில்ல. உங்களை நம்பறேன். நகையை வாங்கிக்கிட்டுப் போங்க. சொன்னபடி நாளன்னைக்குத் திரும்பக் கொண்டு வந்து வச்சுடணும்" என்ற வஜ்ரவேலு, குமரவேலிடம் திரும்பி "கையெழுத்து வாங்கிக்கிட்டு அவரோட நகையைக் கொடுங்க!" என்றான்.
"சந்தேகமே இல்ல. பாங்க் லாக்கர்தான் இது!" என்று முணுமுணுத்தான் குமரவேல்.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 18
வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை)
குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.
பொருள்:
செல்வம் குறையாமல் இருப்பதற்கான வழி மற்றவர்களின் பொருளை விரும்பாமல் இருப்பதேயாகும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
Wow... Superb...
ReplyDeleteThanks a lot!
Deleteஅருமை
ReplyDeleteThank you.
Delete