About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, June 11, 2018

176. கேள்வி பிறந்தது அன்று, பதில் கிடைத்தது இன்று!

கோவிலில் பூஜைக்காக அனைவரும் கூடியிருந்தனர். ஆனால் குருக்கள் பூஜையை ஆரம்பிக்கவில்லை.

"குருக்கள் ஐயா! நாங்க வெளியூரிலிருந்து வந்திருக்கோம். சீக்கிரம் பூஜையை ஆரம்பிச்சீங்கன்னா, நாங்க ஊருக்குப் போறதுக்கு வசதியா இருக்கும்" என்றார் ஒரு பக்தர்.

"கொஞ்சம் இருங்க. சக்திவேல் ஐயா வந்துடட்டும்" என்றார் குருக்கள்.

அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே. சக்திவேல் வந்து விட்டான்.

"குருக்கள் ஐயா! என்ன இது? எனக்காக ஏன் மத்தவங்களைக் காக்க வைக்கிறீங்க? பூஜையை ஆரம்பிங்க!" என்றான் சக்திவேல்.

பூஜை முடிந்ததும், சக்திவேல் அனைவரையும் பார்த்துக் கைகூப்பி, "கோவில் மண்டபத்தில அன்னதானம் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அன்னதானம்னு சொல்லக் கூடாது. அதிதிகளை உபசரிக்கிறதுன்னு சொல்லுவாங்க. எனக்குப் படிப்பறிவு அதிகம் கிடையாது. அதனால யோசிக்காம அன்னதானம்னு சொல்லிட்டேன். எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டுப் போகணும். இது என்னோட வேண்டுகோள்" என்றான்.

சந்நிதியில் நின்றிருந்தவர்கள் அன்னதானம் நடக்கும் கோவில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"யார் இந்த சக்திவேல்?" என்றார் ஒரு வெளியூர்க்காரர், தன் பக்கத்தில் நடந்து வந்தவரிடம்.

"இந்த ஊர்ல ஒரு பெரிய மனுஷன். எல்லாப் பெரிய மனுஷங்களும் பெரிய மனுஷங்களாவா நடந்துக்கறாங்க? ஆனா, இவரு அப்படியில்ல. நிலம், நீச்சு, பணம், காசுன்னு நிறைய இருந்தாலும், ரொம்ப அடக்கமானவரு. தர்மசிந்தனை உள்ளவரு. கோவிலுக்கு நிறையச் செய்வாரு. தன் கிட்ட உதவி கேட்டு வரவங்க யாராயிருந்தாலும், தன்னால முடிஞ்ச உதவியைச் செய்வாரு" என்றார் உள்ளூர்க்காரரான அவர்.

"பரவாயில்லையே! இப்படியெல்லாம் கூட மனுஷங்க இருக்காங்களே!" என்றார் வெளியூர்க்காரர்.

க்திவேல் வீட்டுக்குச் சென்றதும், அவன் மனைவி வடிவு "உங்க அண்ணிகிட்டேருந்து கடிதம் வந்திருக்கு" என்றாள்.

"என்ன எழுதியிருக்காங்க?" என்றான் சக்திவேல்.

"நீங்க அனுப்பற பணம் அவங்களுக்குப் பத்தலியாம். இன்னும் கொஞ்சம் அனுப்ப முடியுமான்னு கேட்டுருக்காங்க."

"பாக்கலாம்!"

"ஏங்க, எல்லாருக்கும் உதவி பண்றீங்க. உங்க அண்ணிக்குக் கொஞ்சம் அதிகமா பணம் அனுப்பலாமே!" என்றாள் வடிவு.

"அண்ணன் சின்ன வயசிலேயே வெளியூருக்கு வேலைக்குப் போயிட்டாரு. அவருக்கு நிலத்தைப் பத்தி எதுவும் தெரியாது. நான் கொடுத்ததை வாங்கிக்கிட்டிருந்தாரு. இப்ப அண்ணன் போனப்பறம், அண்ணிக்கு அதிகமா பணம் அனுப்பினா, இத்தனை வருஷமா அண்ணனை ஏமாத்தினேன்னு அவங்க நினைக்க மாட்டாங்களா? என்னோட கணக்கு வேற! எப்படியும் கொஞ்ச நாள்ள, அண்ணி 'நிலத்தை வித்துப் பணத்தைக் கொடுத்துடுங்க, அதை நான் பாங்க்கில போட்டு, எப்படியோ குடித்தனம் நடத்திக்கறேன்'னு சொல்லிடுவாங்கன்னு எதிர்பாக்கறேன். அந்த சமயத்தில, அவங்க நிலத்தை நாமே குறைஞ்ச விலைக்கு வாங்கிக்க வேண்டியதுதான்!" என்றான் சக்திவேல்.

"நீங்க இவ்வளவு தர்ம காரியம் பண்றீங்க. ஆனா கடவுள் ஏன் நமக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கலைன்னு எத்தனையோ நாள் யோசிச்சிருக்கேன். இப்பதான் அதுக்கான காரணம் எனக்குப் புரியுது!" என்றாள் வடிவு.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 
குறள் 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் 
பொல்லாத சூழக் கெடும்.

பொருள்:  
அருளை வேண்டி அறவழியில் நடப்பவன் பிறர் பொருளை விரும்பித் தகாத செயல்களில் ஈடுபட்டால், அவன் கெடுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


                                                                          குறள் 177 
              குறள் 175
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















No comments:

Post a Comment