புழுதியை வாரி இறைத்து விட்டு நின்ற பஸ்ஸிலிருந்து கோபி மட்டும் இறங்கினான்.
விலாசம் விசாரித்துக் கொண்டு சக்திவேலின் வீட்டை அடைந்தான்.
வாசற்கதவு திறந்திருந்தது. ரேழி, முற்றம், பின்கட்டு என்று கொல்லைப்புறக் கதவு வரை தெரிந்தது. ஆனால் மனிதர்கள் யாரும் தென்படவில்லை.
"சார்!" என்றான் கோபி.
பலவீனமாக எழுந்த அவன் குரல் உள்ளே இருந்தவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, உள்ளிருந்து ஒரு பெண்மணியின் முகம் வெளிப்பட்டது.
"யாரு வேணும்?"
கோபி பதில் சொல்வதற்குள், உள்ளிருந்து ஒரு நபர் வேகமாக வெளியே வந்தார். அவர்தான் சக்திவேலாக இருக்க வேண்டும்.
"வாங்க, வாங்க! கோபி சார்தானே? உள்ளே வாங்க. ஏன் அங்கேயே நிக்கறீங்க?" என்றபடியே வெளியே வந்து, அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.
"கல்யாண விஷயமா வந்திருக்காரு, நான் சொல்லியிருந்தேனே?" என்றார் சக்திவேல், தன் மனைவியிடம்.
"வாங்க. உக்காருங்க. எனக்கு முதல்ல நீங்க யாருன்னு தெரியல!" என்றாள் அந்தப் பெண்மணி, மன்னிப்புக் கேட்கும் தொனியில்.
கோபி உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், சம்பிரதாயமாகச் சில வார்த்தைகளைப் பேசி விட்டு, "கல்யாண விஷயமாப் பேச நீங்க இவ்வளவு தூரம் வந்தது பெரிய விஷயம்!" என்றார் சக்திவேல்.
"மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நேர்ல பாத்துப் பேசறதுதானே மரியாதை?" என்றான் கோபி. தொடர்ந்து, "நீங்க இந்த ஊர்க்காரர் இல்லேன்னு நினைக்கறேன்?" என்றான்.
"ஆமாம். நான் தஞ்சாவூர். இந்த வி ஏ ஓ வேலை கிடைச்சதனால இந்த கிராமத்துக்கு வந்திருக்கேன்."
"ஓ! முன்னெல்லாம் கணக்குப்பிள்ளை, பட்டாமணியம்னு இருப்பாங்க."
"ஆமாம். அதெல்லாம்தான் எம் ஜி ஆர் காலத்திலேயே போயிடுச்சே. இப்பல்லாம் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீஸர்தான்!"
"இந்த ஊர்ல கடைசியா கணக்குப்பிள்ளையா இருந்தவரை உங்களுக்குத் தெரியுமா?"
"எனக்குத் தெரியாது. எனக்கு முன்னால இருந்த வி ஏ ஓ அவரைப் பத்தி சொல்லியிருக்காரு. ஏன் கேக்கறீங்க?"
"இல்லை. பஸ்லேருந்து இறங்கினதும் உங்க வீட்டைப் பத்தி விசாரிச்சேன். பழைய கணக்குப்பிள்ளை வீட்டுலதான் நீங்க குடியிருக்கிறதாச் சொன்னாங்க. அதுதான் கேட்டேன்!"
"ஓ! இது அவரோட வீடுதான். ஆனா அவர் போனப்பறம் அவங்க மனைவி அதை வித்துட்டாங்களே! வேற ஒத்தரு வாங்கிட்டாரு."
"அந்தக் கணக்குப்பிள்ளைக்கு ஊர்ல அவ்வளவு நல்ல பேரு இல்லேன்னு கேள்விப்பட்டேனே!" என்றான் கோபி.
"ஏது, இந்த ஊருக்கு வரத்துக்கு முன்னாடியே, ஊரைப் பத்தி நிறைய தகவல் திரட்டிக்கிட்டு வந்திருக்கீங்க போல இருக்கே! அது ஒரு பெரிய கதை. நீங்க பாம்பே, டெல்லியில எல்லாம் இருந்திருக்கீங்க. உங்களுக்கு கிராமத்து விஷயங்கள்ளாம் புரியுமோ என்னவோ!
"முன்னெல்லாம் கிராமங்கள்ள இருக்கிற நிலங்களுக்கெல்லாம் ரிக்கார்டு கணக்குப்பிள்ளை கிட்டத்தான் இருக்கும். படிக்காத கிராமத்து ஜனங்க பல பேர்கிட்ட அவங்க சொத்துக்கான பத்திரமெல்லாம் சரியா இருக்காது. இதைப் பயன்படுத்திக்கிட்டு அந்தக் கணக்குப்பிள்ளை நிறைய பேரை ஏமாத்தியிருக்காரு.
"சிலரோட நிலத்தையெல்லாம் புறம்போக்கு நிலம்னு சொல்லி அவங்க பேர்ல இருந்த பட்டாக்களை மாத்தறது, சில பட்டாக்களைத் தன் பேர்ல மாத்தி எழுதிக்கறதுன்னு நிறைய ஏமாத்து வேலையெல்லாம் பண்ணியிருக்காரு."
"அப்படியெல்லாம் பண்ண முடியுமா என்ன?"
"நான் சொல்றது நாப்பது அம்பது வருஷத்துக்கு முந்தின நடப்பு. நீங்களும் நானும் அப்ப பள்ளிக்கூடத்தில் படிச்சுக்கிட்டிருந்திருப்போம். பாதிக்கப்பட்டவங்களைக் கேட்டா கதை கதையாச் சொல்லுவாங்க. தாலுக்கா ஆஃபீஸ்லியே அவருக்கு வேண்டியவங்க இருப்பாங்க. அவங்க மூலமா தாலுக்கா ஆஃபீஸ்லேயே ரிகார்டையெல்லாம் மாத்திடுவாரு.
"தனியார் நிலத்தைப் புறம்போக்கு நிலம்னு சொல்லுவாரு. அதை அவங்ககிட்டேருந்து பிடுங்கிக்கிட்டு, முதல்ல புறம்போக்கு நிலம்னு மாத்திட்டு, அப்புறமா புறம்போக்கு நிலத்தை அவர் மேல பட்டா போட்டுப்பாரு!"
"ம்!"
"திடீர்னு ஒருநாள் கணக்குப்பிள்ளைகளை ஒழிச்சுட்டு வி ஏ ஓக்களைக் கொண்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் அந்தக் கணக்குப்பிள்ளை மேல நிறைய புகார் வந்து, அதையெல்லாம் விசாரிச்சதில, ரெண்டு மூணு கேசில வசமா மாட்டிக்கிட்டாரு."
"கைது பண்ணிட்டாங்களா?"
"இல்ல. போலீஸ் வந்து விசாரிச்சாங்க. கைது பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சதும், அன்னிக்கு ராத்திரியே விஷத்தைக் குடிச்சுட்டாரு."
"ஐயையோ!"
"நீங்க ஏன் பரிதாபப்படறீங்க? மத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு அவங்களை ஏமாத்தினவருக்கு வேற என்ன நடக்கும்?"
"அவரோட குடும்பம்?"
"அவங்கதான் பாவம். அவருக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. பையன் சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடிட்டான். அப்பா பண்ணின அக்கிரமங்களைப் பத்தி மத்தவங்க பேசறதைக் கேட்டுட்டு. அதையெல்லாம் பொறுக்க முடியாமத்தான் ஓடிட்டான்னு பேசிக்கிட்டாங்க."
"அது எப்படி மத்தவங்களுக்குத் தெரியும்?"
"அவனோட அம்மாவே சொன்னாங்களாம்! வீட்டை விட்டுப் போறதுக்கு முன்னாடியே, நிறைய தடவை தன் அம்மாகிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் அவன். அவங்க அதைச் சொல்லிப் புலம்பிக்கிட்டே இருந்திருக்காங்க."
"அவனோட அம்மாவே சொன்னாங்களாம்! வீட்டை விட்டுப் போறதுக்கு முன்னாடியே, நிறைய தடவை தன் அம்மாகிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் அவன். அவங்க அதைச் சொல்லிப் புலம்பிக்கிட்டே இருந்திருக்காங்க."
"அந்த அம்மா என்ன ஆனாங்க?"
"அவங்க பாவம்! அவங்களுக்கு இருந்த சொத்தை வச்சுக்கிட்டு, அவங்க இந்த ஊரிலயே இருந்திருக்கலாம். ஆனா கணக்குப் பிள்ளை செத்தப்பறம் கூட, ஊர் ஜனங்க அவரைப் பத்திப் பேசின பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களால இந்த ஊர்ல இருக்க முடியல. வீடு, நிலம் எல்லாத்தையும் வித்துட்டு, அவங்க அம்மா ஊருக்குப் போயிட்டாங்க. அதை விடுங்க. சம்பந்தம் பேச வந்தவர்கிட்ட ஏதோ பழங்கதையெல்லாம் பேசிக்கிட்டிருக்கேனே!"
அதற்குப் பிறகு, தன் குடும்பம் பற்றியும், சென்னையில் வேலை பார்க்கும் தன் மகன் பற்றியும் சக்திவேல் பேசி விட்டு, "உங்களைப் பத்தி சொல்லுங்க!" என்றார்.
"அதான் லெட்டரிலே சொல்லியிருந்தேனே. நான் பம்பாய், டெல்லின்னு இருந்துட்டு இப்பதான் சென்னைக்கு வந்திருக்கேன். நான் தஞ்சாவூருக்கு ஒரு வேலையா வந்ததால, உங்களைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். என் மனைவியையும் அழைச்சுக்கிட்டு இன்னொரு தடவை வரேன். இப்ப நான் உடனே கிளம்பணும்" என்று எழுந்தான் கோபி.
"பலகாரம் பண்ணிட்டுப் போகலாமே!" என்றாள் உள்ளிருந்து வந்த சக்திவேலின் மனைவி.
"இல்ல. அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா சாப்பிடறேன். வரேன்" என்று கிளம்பினான் கோபி.
'அப்பா மீதிருந்த கோபத்தில் நாற்பது வருஷமாகக் குடும்பத்திலிருந்து ஒதுங்கி இருந்தது பெரிய தவறு! பாட்டியின் ஊரான பந்தநல்லூருக்குப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும்! தங்கைகள் கல்யாணமாகி எந்த ஊரில் இருக்கிறார்களோ?'
கோபி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.
இல்லறவியல்
அதிகாரம் 18
வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை)
குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
பொருள்:
நியாய உணர்வு இன்றிப் பிறர் பொருளை விரும்புபவர்களின் குடி கெடும். அவர்களுக்குப் பெரும் பழியும் வந்து சேரும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment