"ஏண்டா, பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு, இவ்வளவு வருஷம் வேல செஞ்சு, உயர்ந்த பதவிக்கு வந்துட்டு ரிடயர் ஆகி இருக்க. ஹாய்யா வீட்டில உக்காந்துக்கிட்டு, உல்லாசப் பயணம் போய்க்கிட்டு வாழ்க்கையை சுகமா அனுபவிக்காம, எதுக்கு இந்த சமூக சேவை சமாசாரம் எல்லாம்?" என்றார் தங்கராஜின் நண்பர் முருகப்பன்.
"இத்தனை வருஷமா, எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் வாழ்ந்தாச்சு. மீதி இருக்கிற நாட்கள்ள, என்னால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செய்யலாமேன்னுதான்!" என்றார் தங்கராஜ்.
"மத்தவங்களுக்கு உதவணும்னா, நல்ல தொண்டு நிறுவனமாப் பாத்து நன்கொடை கொடு. உன் குடும்ப உறுப்பினர்களிட பிறந்த நாள் அன்னைக்கு ஏதாவது அநாதை இல்லக் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுட்டு, அவங்களோட ஒரு நாள் இருந்துட்டு வா! நீ எதுக்கு ஒரு தொழிலாளி மாதிரி களத்தில இறங்கி வேலை செய்யணும்?
"நமக்கு வசதி இருக்கும்போது, மத்தவங்களுக்குப் பணம் கொடுத்து உதவறது ஒரு விஷயமே இல்ல. நம்ம உடம்பைக் கொஞ்சமாவது வருத்திக்கிட்டு மத்தவங்களுக்கு உதவி செய்யறப்ப கிடைக்கிற மனநிறைவு எவ்வளவு அற்புதமானதுன்னு உணர்ந்து பாத்தாத்தான் தெரியும்."
"என்னவோ, எனக்கு உன் மனப்போக்கே புரியல!"
"ஒரு விஷயம் புரியாம இருக்கறது நல்ல ஆரம்பம்தான். எனக்குக் கூட ரொம்ப நாளா வாழ்க்கையோட அர்த்தம் புரியல. படிக்கறது, நல்ல வேலையில இருக்கறது, பணம் சம்பாதிக்கிறது, நம்ம குடும்பத்தை சந்தோஷமா வச்சுக்கறது இதுதான் வாழ்க்கையா, இல்லை இதுக்கு மேல வாழ்க்கையோட உண்மையான அர்த்தம்னு வேற ஏதாவது இருக்கான்னு எனக்கு அடிக்கடி தோணும்.
"இப்ப நான் ரிடயர் ஆனப்பறம், ஒரு தொண்டு நிறுவனத்தில சேர்ந்து ஏழைகளுக்கும், உடல்நிலை அல்லது மனநிலை சரியில்லாதவங்களுக்கும் அவங்க செய்யற சேவைகள்ள நானும் பங்கேற்க ஆரம்பிச்சப்பறம், வாழ்க்கையோட அர்த்தம்னு வேற ஏதோ இருக்கும்னு தோண ஆரம்பிச்சிருக்கு. அது எனக்கு முழுமையாப் புரியுமான்னு தெரியல. ஒருவேளை, நாளடைவில எனக்கு வாழ்க்கையோட அரத்தம் பரியறதுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமா இருக்கலாம்!" என்று சொல்லிச் சிரித்தார் தங்கராஜ்.
"சரி, வாழ்க்கையோட உண்மையான அர்த்தத்தைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப் போற?"
"தெரியல. இந்தப் பிறவியோட அர்த்தம் தெரிஞ்சா, இனிமே பிறவி இருக்காதுன்னு சில பெரியவங்க சொல்லி இருக்காங்க. அது மாதிரி கூட நடக்கலாம்!"
முருகப்பன் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாகத் தன் நண்பரைப் பார்த்தார்.
No comments:
Post a Comment