"நம் எல்லோருக்கும் ஐந்து புலன்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் திறமை நம்மிடம் இருக்கிறதா? அதைச் சோதிக்கத்தான் இந்தப் போட்டி. இந்தப் போட்டியில் உங்கள் ஐந்து புலன்களுக்கும் சவால்கள் இருக்கும்.
"ஓரு படத்தைக் காட்டி, அதில் இருக்கும் பொருட்களைக் குறிப்பிடச் சொல்வோம். இது சுலபமானதாத் தோன்றலாம். ஆனால், படத்தில் இருக்கும் சில நுணுக்கமான விஷயங்களைக் கூர்மையான பார்வை இருப்பவர்களால்தான் கவனிக்க முடியும்.
அது போல், ஒவ்வொரு புலனுக்கும் தனித் தனியாகப் போட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் ஒருவர் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி, மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் கொடுக்கப்படும்."
நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நிறைவு பெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பரிசு பெற்றவர்களின் பெயர்களை அறிவித்த பின், அறிவிப்பாளர் கூறினார்
"ஒரு முக்கியமான அறிவிப்பு. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு, ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கிறது. எல்லோரும் இருந்து அதைக் கேட்டு விட்டுப் போக வேண்டும்."
பரிசுகள் வழங்கப்பட்ட பிறகு, அறிவிப்பாளர் கூறினார்:
"இந்தப் போட்டியில் இன்னொருவரும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் தன் பெயர் பரிசுக்காகப் பரிசீலிக்கப்பட விரும்பவில்லை. ஆயினும், ஒவ்வொரு புலனுக்கான போட்டியிலும் எல்லோரையும் விட அதிக மதிப்பெண் வாங்கியது அவர்தான். ஒவ்வொரு போட்டியிலுமே அவர் வாங்கிய மதிப்பெண் நூற்றக்கு நூறு! மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறேன்."
எளிமையான தோற்றம் கொண்ட ஒரு மனிதர் மேடைக்கு வந்தார்.
"பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள். பரிசுக்கு என் பெயர் பரிசீலிக்கப்பட வேண்டாம் என்று கூறி விட்டு, நான் ஏன் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற கேள்வி உங்கள் பலர் மனதிலும் எழலாம். நான் இங்கே வந்தது நான் உணர்ந்து கொண்ட ஒரு உண்மையை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
"தங்கள் ஐந்து புலன்களின் கூர்மையான சக்தியை வெளிப்படுத்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் - பரிசு பெற்றவர்கள், பெறாதவர்கள் அனைவருக்கும். புலன்கள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும், அவற்றால் உணரப்படும் விஷயங்கள் இனிமையாக இருந்தால் மட்டுமே அவை நமக்கு இன்பம் அளிக்கும். தொலைதூரத்திலிருந்து ஒலிக்கும் ஒரு நாராசமான ஓசை நம் கூர்மையான செவிப்புலனுக்கு எட்டினாலோ, ஒரு மிக இலேசான துர்நாற்றத்தை துல்லியமான சக்தி கொண்ட நம் நாசி நுகர்ந்தாலோ, அது நமக்கு மகிழ்ச்சி அளிக்குமா?
"நம் ஐம்புலன்களையும் பயன்படுத்தி மெய்ப்பொருளான இறைவனை நாம் உணர்ந்தால், அதுதான் உண்மையான உணர்வாக இருக்கும். இறைவனின் திருவுருவைக் காணும்போதும், இறைவனின் பெருமைகளைக் கேட்கும்போதும், இறைவனின் புகழை நாம் பாடும்போது நம் நாவில் ஊறும் சுவையை உணரும்போதும், இறைவனுக்குச் சூடிய மலர்கள், இறைவனுக்கு அர்ப்பணித்த சந்தனம், கற்பூரம், மலர்கள் போன்றவற்றின் மணத்தை உணரும்போதும், இறைவனின் திருமேனி தொடர்பு பெற்ற மலர்கள், சந்தனம், சடாரி போன்றவை நம் உடலில் படும்போதும் நமக்கு ஏற்படும் உணர்வே உண்மையான உணர்வு என்பது நான் அனுபவித்து உணர்ந்த உண்மை.
"இந்த உணர்வுகளை நாம் அதிகம் அனுபவிக்கும்போது, நாம் யார் என்பது பற்றியும், நாம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியுமான உணர்வு நம்மிடம் வளரும். இதுதான் மெய்யுணர்வு. இந்த உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். நன்றி!" என்று கூறி விட்டு, அவையினருக்கு வணக்கம் செலுத்தி விட்டு மேடையிலிருந்து இறங்கினார் அவர்.
அறத்துப்பால்
குறள் 354 துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வுகளும் முற்றுப் பெற்ற போதிலும் பயன் இல்லை.
குறள் 355
No comments:
Post a Comment